Jul 30, 2008

அன்னை மேரி மற்றும் இயேசு நாதர் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?

அன்னை மேரி (அலை) உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட மேன்மையானவர்: -

(நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள் (Angels); மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்’ (என்று கூறினர்) (அல்-குர்ஆன் 3:42)

ஆண் துணையின்றி குழந்தை இயேசுவை பெற்றெடுத்த அற்புத அன்னை மேரி (அலை): -

மலக்குகள் கூறினார்கள்; ‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

‘மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.’

(அச்சமயம் மர்யம்) கூறினார்: ‘என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும் போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?’ (அதற்கு) அவன் கூறினான்: ‘அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் ‘ஆகுக’ எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.’

இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான். (அல்-குர்ஆன் 3:45-48)

இயேசு நாதர் (அலை) அவர்கள் செய்த அற்புதங்கள்: -

இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) ‘நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது’ (என்று கூறினார்). (அல்-குர்ஆன் 3:49)

அப்பொழுது அல்லாஹ் கூறுவான்: ‘மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும்; பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்); இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்); அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், ‘இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை’ என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும். (அல்-குர்ஆன் 5:110)

இயேசு நாதர் (அலை) அனுப்பப்பட்டதன் நோக்கம்: -

இயேசு நாதர் (அலை) இஸ்ரவேலர்களைப் பார்த்துக் கூறினார்: -

‘எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.’

‘நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்; ஆகவே அவனையே வணங்குங்கள் இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்.’ (அல்-குர்ஆன் 3:50-51)

இயேசு நாதர் (அலை) அவர்களின் சீடர்கள் அல்லாஹ்வை ஈமான் கொண்ட முஸ்லிம்களாவார்கள்: -

அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது: ‘அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?’ என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: ‘நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்’ எனக் கூறினர்.

‘எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!’ (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.) (அல்-குர்ஆன் 3:52-53)

தோராவையும் இன்ஜீலையும் வழங்கியவன் அல்லாஹ்வே!

இறைவன் கூறுகிறான்: -

நிச்சயமாக நாம் தாம் ‘தவ்ராத்’தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்; முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.

அவர்களுக்கு நாம் அதில், ‘உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;’ எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே!

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது. (அல்-குர்ஆன் 5:44-46)

இயேசு நாதர் (அலை) அவர்கள் கொல்லப்படவும் இல்லை, சிலுவையில் அறையப்படவும் இல்லை அல்லாஹ் அவரை உயர்த்திக் கொண்டான்: -

இறைவன் கூறுகிறான்: -

(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.

‘ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்’ என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! (அல்-குர்ஆன் 3:54-55)

மேலும் அவர்கள் தம் நிராகரிப்பி(ல் எல்லை மீறிவிட்டத)னாலும் மர்யம் மீது பெரியதொரு அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வுடைய தூதரும் மர்யமின் மகனுமான ஈஸா – மஸீஹை நாங்கள் தாம் கொன்றோம். என அவர்கள் கூறியதாலும் (அவர்களை நாம் சபித்தோம்). – உண்மையில் அவர்கள் அவரைக் கொலை செய்யவுமில்லை, அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. மாறாக, அவருடைய நிலைமை அவர்களுக்குச் சந்தேகத்துக்குரியதாக ஆக்கப்பட்டு விட்டது. மேலும், எவர்கள் ஈஸா விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அவர்கள் இதுபற்றி சந்தேகத்திலே இருக்கின்றார்கள். யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர இதுபற்றி வேறு எந்த அறிவும் அவர்களிடத்தில் இல்லை. நிச்சயமாக அவர்கள் அவரை – மஸீஹை - கொலை செய்யவேயில்லை. மாறாக அல்லாஹ் அவரைத் தன்பக்கம் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வலிமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாய் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 4:157-158)

அன்னை மேரியின் (அலை) மகன் இயேசு நாதர் (அலை) அல்லாஹ்வின் அடியரே அன்றி வேறில்லை: -

அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை; அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம். (அல்-குர்ஆன் 43:59)

இயேசு நாதர் (அலை) அவர்கள் திரும்பவும் இவ்வுலகிற்கு வருவார்கள்: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மகன் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.) செல்வம் (பெரும்) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (நெற்றி நிலத்தில் பட அல்லாஹ்வை வணங்குவது) இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாக (மக்களின் பார்வையில்) ஆகி விடும்.

இந்த நபிமொழியை அறிவித்துவிட்டு அபூ ஹுரைரா(ரலி), வேதம் அருளப்பட்டவர்களில் யாரும் அவர் (ஈஸா) மரணமாவதற்கு முன்னால் அவர் மீது நம்பிக்கை கொள்ளாமலிருக்க மாட்டார்கள். மேலும், மறுமை நாளில் அவர்களுக்கு எதிராக அவர் சாட்சி சொல்பவராய் இருப்பார்’ (திருக்குர்ஆன் 04:159) என்னும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். ஆதாரம்: பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3448

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

எனக்கும் அவருக்கும் இடையில் வேறு எந்த நபியும் இல்லை; அதாவது ஈஸா (அலை) அவர் (வானத்திலிருந்து பூமிக்கு) இறங்குவார். அவரை நீங்கள் பார்க்கும் போது நீங்கள் (அவர் தான் ஈஸா {அலை} என) உணர்ந்து கொள்வீர்கள். (அவர்) நடுத்தர உயரத்திலும், செந்நிறமுடையவராகவும், இரண்டு இலேசான மஞ்சள் நிறமுள்ள ஆடையணிந்தவராகவும், ஈரமில்லாமல் இருப்பினும் நெற்றியிலிருந்து (வியர்வைத்) துளிகள் வழிவதைப்போன்றும் (காணப்படுவார்). அவர் இஸ்லாத்திற்காக மக்களிடையே போரிடுவார். சிலுவையை உடைத்தெறிவார்; பன்றிகளைக் கொல்லூர்; ஜிஸ்யா (என்னும் வரியை) நீக்குவார். அல்லாஹ் இஸ்லாத்தைத் தவிர அனைத்து மார்க்கங்களையும் அழித்து விடுவான். அவர் தஜ்ஜாலைக் கொல்லுவார்; இந்த உலகத்தில் நாற்பது வருடங்கள் வாழ்ந்து பின்னர் மரணமடைவார். முஸ்லிம்கள் அவருக்கு தொழுவிப்பார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: ஸூனன் அபூதாவுத்.

நியாயத் தீர்ப்பு நாளில் இறைவனுக்கும் இயேசு நாதருக்கும் (அலை) நடக்கவிருக்கும் உரையாடல்: -

‘இன்னும் ‘மர்யமுடைய மகன் ஈஸாவே ‘அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும் போது அவர் ‘நீ மிகவும் தூய்மையானவன் எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை அவ்வாறு நான் கூறியிருந்தால் நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய் என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய் உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன் நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன் என்று அவர் கூறுவார்’

{மேலும் ஈஸா (அலை) கூறுவார்} ‘நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி) ‘என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை மேலும் நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன் அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய் (என்றும் கூறுவார்.)’ (அல் குர்ஆன் 5:116-117)

Jul 28, 2008

இஸ்லாம் கூறும் தனி மனித சுதந்திரம்!

இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை (freedom-of-Religion): -

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 2:256)

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.’ (அல்-குர்ஆன் 109:6)

(நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்க வேண்டாம்; இன்னும்: நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேர்வழியில் இருக்கின்றீர். (நபியே!) பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்: ‘நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்’ என்று (அவர்களிடம்) கூறுவீராக. ‘நீங்கள் எ(வ் விஷயத்)தில் முரண்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அதைப்பற்றி அல்லாஹ் கியாம நாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்.’ (அல்-குர்ஆன் 22:67-69)

எனவே, (நபியே! நேர்வழியின் பக்கம் அவர்களை) நீர் அழைத்துக் கொண்டே இருப்பீராக; மேலும், நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியுடன் நிற்பீராக! அவர்களுடைய (இழிவான) மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்; இன்னும், ‘அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; அன்றியும் உங்களிடையே நீதி வழங்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனாவான்; அவனே உங்களுடைய இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு; உங்கள் செயல்கள் உங்களுக்கு; எங்களுக்கும் உங்களுக்குமிடையே தர்க்கம் வேண்டாம் - அல்லாஹ் நம்மிடையே (மறுமையில்) ஒன்று சேர்ப்பான், அவன் பாலே நாம் மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது’ என்றும் கூறுவீராக. (அல்-குர்ஆன் 42:15)

உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக. (அல்-குர்ஆன் 10:41)

அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் எங்களிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான்; எங்கள் செய்கைகளின் (பலன்) எங்களுக்கு; உங்கள் செய்கைகளின் (பலன்) உங்களுக்கு; மேலும் நாங்கள் அவனுக்கே கலப்பற்ற (ஈமான் உடைய)வர்களாக இருக்கின்றோம்’ என்று (நபியே! அவர்களுக்கு) நீர் கூறுவீராக. (அல்-குர்ஆன் 2:139)

அவனையன்றி(த் தங்களுக்கு வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களே அவர்களை அல்லாஹ் கவனித்தவனாகவே இருக்கின்றான்; நீர் அவர்கள் மேல் பொறுப்பாளர் அல்லர். (அல்-குர்ஆன் 42:6)

இஸ்லாம் கூறும் மத சுதந்திரம் (freedom-of-Faith): -

(நபியே!) நீர் கூறுவீராக: ‘மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்திய(வேத)ம் வந்துவிட்டது; எனவே யார் (அதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறாரோ அவர் தம் நன்மைக்காகவே அந்நேர்வழியில் செல்கின்றார்; எவர் (அதை ஏற்க மறுத்து) வழி தவறினாரோ, நிச்சயமாக அவர் தமக்குக் கேடான வழியிலே செல்கிறார்; நான் (உங்களைக் கட்டாயப்படுத்தி) உங்கள் காரியங்களை நிர்வகிக்க அதிகாரம் பெற்றவனல்லன்.’ (அல்-குர்ஆன் 10:108 )

நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன; எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும், எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் ‘நான் உங்களைக் காப்பவன் அல்ல’ (என்று நபியே! நீர் கூறும்). (அல்-குர்ஆன் 6:104)

மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? (அல்-குர்ஆன் 10:99)

நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது); எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார்; அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர். (அல்-குர்ஆன் 39:41)

நம்பிக்கை கொள்ளாதவர்களிடம் (நபியே!) நீர் கூறுவீராக: ‘நீங்கள் உங்கள் போக்கில் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக நாங்களும் (எங்கள் போக்கில்) செயல்படுகிறோம்.’ (அல்-குர்ஆன் 11:121)

நிச்சயமாக இது நினைவூட்டும் நல்லுபதேசமாகும்; ஆகவே எவர் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவனிடம் (செல்லும் இவ்)வழியை எடுத்துக் கொள்வாராக. (அல்-குர்ஆன் 73:19)

‘என் இறைவா! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளா சமூகத்தாராக இருக்கிறார்கள்’ என்று (நபி) கூறுவதையும் (இறைவன் அறிகிறான்). ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து ‘ஸலாமுன்’ என்று கூறிவிடும். (அல்-குர்ஆன் 43:88-89)

நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்; எனவே யார் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவன் பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராக. (அல்-குர்ஆன் 76:29)

(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: ‘இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது;’ ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் . அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். (அல்-குர்ஆன் 18:29)

Jul 27, 2008

தொழுது முடித்ததும் ஓத வேண்டிய திக்ருகள்!

‘அஸ்தஃக்பிருல்லாஹ், அஸ்தஃக்பிருல்லாஹ், அஸ்தஃக்பிருல்லாஹ். அல்லாஹும்ம அன்தஸ்ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்”

(பொருள் : அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். இறைவா நீ எல்லாக் குறைகளை விட்டும் பாதுகாப்பு பெற்றவன். உன்னிடமிருந்தே பாதுகாப்பு ஏற்படுகின்றது. மதிப்பும் மகத்துவமும் மிக்கவனே! நீ உயர்ந்து விட்டாய்!)

“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு லஹுல்முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃதைத்த வலா முஃதிய லிமா மனஃத வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின் கல் ஜத்”

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. ஆட்சியும் அவனுக்கே! புகழும் அவனுக்கே! அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா நீ கொடுப்பதைத் தடுப்பவர் எவருமில்லை. நீ தடுப்தைக் கொடுப்பவர் எவருமில்லை. மதிப்புடைய எவரும் எந்தப் பயனும் அளிக்கமாட்டார். மதிப்பு உன்னிடமே உள்ளது)

“லாஹவ்ல லாகுவ்வத்த இல்லா பில்லாஹ். லாயிலாஹ இல்லல்லாஹு வலா நஃபுது இல்லா இய்யாஹு லஹுன் நிஃமது வலஹுல் ஃபழ்லு வலஹுல் ஸனாவுல் ஹஸனு லாயிலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ்கரீஹல் காஃபிரூன்”

(பொருள் : அல்லாஹ்வின் துணையின்றி நல்லவற்றைச் செய்யவோ தீயவற்றிலிருந்து விலகவோ இயலாது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவனைத் தவிர வேறு எவரையும் நாங்கள் வணங்க மாட்டோம். அருட்கொடை அவனுக்குரியது. பேருபகாரமும் அவனுக்குரியது. அழகிய புகழும் அவனுக்குரியது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை. நிராகரிப்போர் விரும்பாவிட்டாலும் வணக்கங்களை அவனுக்கு மட்டுமே கலப்பற்ற முறையில் செய்வோம்)

“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீது வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்”

- இதை மஃரிபுக்குப் பிறகும், பஜ்ருக்குப் பிறகும் பத்து தடவை ஓதுவது விரும்பத்தக்கதாகும்.

(பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சி அதிகாரம் அவனுக்குரியதே! அவனுக்கே எல்லாப் புகழும். அவனே வாழ்வும் மரணமும் அளிக்கின்றான். அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்)

பிறகு,

“சுப்ஹானல்லாஹ்” - 33 தடவைகள்

“அல்ஹம்துலில்லாஹ்” - 33 தடவைகள்

“அல்லாஹு அக்பர்” - 33 தடவைகள்

பிறகு,

“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்” - ஒரு தடவை ஓத வேண்டும்.

ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும்,

ஆயத்துல் குர்ஸி,

குல் ஹுவல்லாஹு அஹத்,

குல் அவூது பிரப்பில் ஃபலக்,

குல் அவூது பிரப்பின்னாஸ் ஓத வேண்டும்.

இந்த மூன்று சூராக்களையும் மஃரிபுக்குப் பிறகும், பஜ்ருக்குப் பிறகும் மூன்று தடவை ஓதுவது விரும்பத்தக்கதாகும்.

Jul 26, 2008

தொழுகையின் முன் பின் சுன்னத்துகள்!

தானாக மனமுவந்து தொழக் கூடிய தொழுகை. நபி (ஸல்) அவர்கள் இந்தத் தொழுகையைத் தொழுது வந்ததால் அவர்களைப் பின்பற்றி நாமும் தொழுது வருவது சிறந்ததாக இருக்கும். ஒருவர் இந்தத் தொழுகைகளை தொழுது வந்தால் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் நற்கூலி கிடைக்கும். ஒருவர் தொழவில்லை எனில் அவர் மீது குற்றமில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்கள் தொழுது வந்த இந்த சுன்னத் தொழுகைகளை தொழாதவர் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் நற்கூலியை அடையக் கூடிய பாக்கியத்தை இழந்தவராவார்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் முன் பின் சுன்னத்துக்களாக 12 ரக்அத்துகளைத் தொழுது வந்திருக்கிறார்கள். ஒருவர் பிரயாணத்தில் இல்லாமல் ஊரில் இருந்தால் இந்த 12 ரக்அத்துக்களையும் முறைப்படி பேணி தொழுது வருவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் விரும்பத்தக்கதாகும்.

தொழுகையின் முன் பின் சுன்னத்துகள்: -

ஃபஜ்ர் முன் சுன்னத்து - 2 ரக்அத்துகள்

லுஹர் முன் சுன்னத்து - 4 ரக்அத்துகள் (2+2)

லுஹர் பின் சுன்னத்து - 2 ரக்அத்துகள்

மஃரிப் பின் சுன்னத்து - 2 ரக்அத்துகள்

இஷா பின் சுன்னத்து - 2 ரக்அத்துகள்

லுஹருடைய முன் சுன்னத்து நான்கு ரக்அத்துகளை இரண்டிரண்டு ரக்அத்துகளாக தொழ வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

“ஒரு நாளைக்கு 12 ரக்அத்துகள் நஃபிலாக (உபரியாக) யார் தொழுது வருகிறாரோ அவருக்கு சுவனத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படும்”.

வித்ரு தொழுகை:-

இஷா தொழுகைக்கு பின் வித்ரு தொழுவது ஒரு முஸ்லிமுக்கு சுன்னத்தாகும்.

நபி (ஸல்) அவர்கள் ஊரில் இருந்தாலும் சரி அல்லது பிரயாணத்தில் இருந்தாலும் சரி, வித்ருடைய தொழுகையை, பஜ்ருடைய தொழுகை - இவ்விரண்டையும் விடாமல் தொழுது வந்திருக்கிறார்கள்.

இகாமத் சொல்லப்பட்டு விட்டால்: -

பர்லு தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் சுன்னத்தான தொழுகையைத் தொழக் கூடாது. ஏனெனில் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகை கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

Jul 22, 2008

இஸ்லாம் - கேள்வி, பதில்கள் :அல்-குர்ஆன் (For learners) பகுதி 2

Q51) பெண்கள் எதற்காக பர்தா அணிய வேண்டுமென இறைவன் கூறுகிறான்?

“அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்”. (33:59)

Q52) அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு தீர்ப்பளிக்காதவர்கள் யார் என குர்ஆன் கூறுகிறது?

“எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொணடு தீர்ப்பளிக்க வில்லையோ, அவர்கள் நிச்சயமாக காபிர்கள் தாம்” அல் மாயிதா(5:44)

Q53) மார்க்கத்தில் பல பிரிவுகள் குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

“இறைவனின் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும் யார் தங்களுக்குள் பிரிவையுண்டு பண்ணிக் கொண்டு மாறுபாடாகி விடடார்களோ அவர்களைப் போன்று ஆகிவிடாதீர்கள். அத்தகையோருக்கு கடுமையான வேதனையுண்டு” ஆல இம்ரான்(3:105)

Q54) கருக்கலைப்பு, குடும்பக்கட்டுப்பாடு குறித்து இறைவன் கூறுவது என்ன?

“வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொலைச் செய்யாதீர்கள்: நாமே உங்களுக்கும் ஆகாரமளிக்கின்றோம்: அவர்களுக்கும் அளிப்போம்” அல் அன் ஆம்(6:151) மற்றும் பனீ இஸ்ராயீல்(17:31)

Q55) வானவர்களுக்கு இறக்கைகள் உண்டா?

வானவர்களுக்கு இறக்கைகள் உண்டு. 35:1 (அல் ஃபாத்திர்)

Q56) ஏழு இரவுகள் எட்டு பகல்களும் தொடர்ந்தார்போல் எந்த சமூகத்திற்கு வேதனை இறக்கப்பட்டது?

ஆது சமுகத்தாருக்கு. (69:6,7) (அல் ஹாக்கா)

Q57) முஃமினான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது குறித்து குர்ஆன் என்ன கூறுகிறது?

‘எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள பேதைப் பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்: இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு’ அந் நூர்(24:23)

Q58) இறைவனால் பெயர் சூட்டப்படட நபிமார்கள் யாவர்?

யஹ்யா (அலை). மர்யம்(19:7), ஆல இம்ரான்(3:39) மற்றும் ஈஸா (அலை) (3:45)

Q59) குர்ஆனில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வரும் வானவர்கள் பெயர் என்ன?

மாலிக் (அலை) அஜ் ஜுக்ருஃப்(43:77) மற்றும் மீக்காயீல் (அலை) அல்பகரா(2:98)

Q60) ஹுதமா என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்?

ஹுதமா-எரிந்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பு: அது உடலில் பட்டதும் இதயங்களில் பாயும்: ஹுமஜா (104-4,5,6,7)

Q61) ஹாவியா என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்?

ஹாவியா-அது சுட்டு எரிக்கும் நரகத்தின் தீக்கிடங்காகும். அல் காரிஆ(102-8,9,10,11)

Q62) ஜக்கூம் என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்?

ஜக்கூம்-இது நரகத்தில் உள்ள கள்ளி மரமாகும்: நரகவாசிகளின் விருந்தாகும்: அம்மரம் நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும்: அதன் பாளைகள் சைத்தான்களின் தலைகளைப் போல் இருக்கும். அஸ் ஸாஃப்ஃபாத்(37:61-66) மற்றும் அத் துகான்(44:43-46), 56:52

Q63) திருக்குர்ஆனில் உள்ள மிகப்பெரிய ஆயத்து எது?

அல்பகரா(2:282)

Q64) சிலந்திப் பூச்சிக்கு உதாரணமாக அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்? ஏன்?

சிலந்திப் பூச்சிக்கு உதாரணமாக அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குப் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்பவர்களை குர்ஆனில் கூறுகிறான். மேலும் இந்த வசனத்தில் சிலந்திப் பூச்சியின் வீடு வீடுகளில் எல்லாம் மிக மிக பலஹீனமாகயிருப்பதைப் போல், இவர்கள் தங்களுக்கு பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்கள் (அவுலியாக்கள், ஷைய்கு மார்கள், பீர் மார்கள், மஸ்தான்கள்) போன்றவர்களும் உங்களுக்கு உதவ முடியாத அளவுக்கு மிக மிக பலஹீனமானவர்களே! என்பதை தெளிவு படுத்துகிறான்.(அன் கபூத்(29:41)

Q65) கழுதைக்கு உதாரணமாக அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்?

கழுதைக்கு உதாரணமாக, தவ்ராத் வேதம் கொடுக்கப் பெற்றும் அதன்படி நடக்காதவர்களை குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான். (அல் குர்ஆன் ஜும்ஆ(62:5). மேலும் வெறுக்கத்தக்க குரல் வளம் உடையோருக்கும் கழுதையைஉதாரணமாக கூறுகிறான். (31:19)

Q66) தீமையான செயல் புரிபவர்கள் மரண தருவாயில் பாவ மன்னிப்பு கோருவது குறித்து இறைவன் கூறுவது என்ன?

“இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, ‘நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்’ என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். ” 4:18 (அந் நிஸா)

Q67) உங்களுக்கு தெரியாத ஐந்து விஷயங்கள் என்று சூரத்துல் லுக்மான் முலம் இறைவன் குறிப்பிடுபவை எவை?

1) கியாம நாள் 2) மழை இறங்குவது 3) கர்பங்களில் உள்ளவை 4) நாளைய தினம் தான் சம்பாதிப்பதை 5) எந்த பூமியில் தாம் இறப்போம். லுக்மான்(31:34)

Q68) அஸ்ஸப்ஃவுல் மஸானி என அழைக்கப்படும் சூரா எது?

நபி (ஸல்) அவர்கள் சூரத்துல் பாத்திஹாவிற்கு அஸ்ஸப்ஃவுல் மஸானி (திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்) எனப் பெயரிட்டுள்ளார்கள் (ஆதாரம் :புகாரி)

Q69) குர்ஆனின் இதயம் என சிறப்பிக்கப்பட்ட சூரா எது?

சூரத்துல் யாசின் (36 வது அத்தியாயம்)

Q70) பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டா?

“பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்” அந் நிஸா (4:7)

Q71) தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஜக்காத் கொடுக்காதவர் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது?

“எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!. (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) ‘இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்’ (என்று கூறப்படும்). தவ்பா (9:34,35)

Q72) லுக்மான (அலை) அவர்கள் தம் புதல்வருக்கு அறிவுரை கூறுகையில் எந்த செயலை செய்தால் அது மிகப்பெரும் அநியாயமாகும் என்று கூறினார்கள்?

இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக). (31:13)

Q73) ஈமான் கொண்டவர்களை சோதிப்பதாக அல்லாஹ் கூறுபவற்றுல் சிலதைக் கூறுக!

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக (2:155)

Q74) நன்மையான மற்றும் தீமையான காரியங்களுக்கு சிபாரிசு செய்பவர்களுக்கு கிடைக்கும் கூலி என்ன?

எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். (4:85)

Q75) கலந்தாலோசனை செய்வது குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

ஈமான் கொண்ட முஃமின்கள் தங்கள் காரியங்களை தங்களிடையே கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும். ஆதாரம் :(42:36-38) மற்றும் 3:159

Q76) கேலி செய்தல் (பரிகாசம் செய்தல், கிண்டல் செய்தல்) குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

கேலி செய்தல் (பரிகசிப்பது, கின்டல் செய்வது) அறிவீனர்களின் செயல். ஆதாரம் : (2:67)

Q77) யஃகூபு (அலை) தம் குமாரர்களுக்கு செய்த வஸிய்யத்து (உபதேசம்) என்ன?

”என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.’ யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்; ‘எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?’ எனக் கேட்டதற்கு, ‘உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம்; அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்’ எனக் கூறினர். (2:132-133)

Q78) ஈஸா (அலை) அவர்களின் சீடர்களான ஹவாரிய்யூன்கள் செய்த பிரார்த்தனை என்ன?

“எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.) (3:53)

Q79) பெற்றோருக்காக என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் என குர்ஆன் கூறுகிறது?

இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (17:24)

Q80) ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழையமாட்டார்கள் என எவர்களைக் குறித்து இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்?

எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம். (7:40)

Q81) நரகத்திற்கு எத்தனை வாசல்கள் இருப்பதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்?

“அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்” (15:44)

Q82) சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் உவமைகளாக இறைவன் தன் திருமறையில் எதைக் கூறுகின்றான்?

அவன்தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன அவ்வெள்ளம் நுரையை மேலே சமந்து செல்கிறது (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் அதைப் போல் நுரை உண்டாகின்றது இவ்வாறு சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான்; அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்துபோய் விடுகிறது ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது இவ்வாறே அல்லாஹ் உமமைகளைக் கூறுகிறான். (13:17)

Q83) இறைவன் மன்னிக்காத மிகப்பெரும் பாவம் எது என அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்?

ஷிர்க் (இணைவைத்தல்) (4:116)

Q84) அஹ்ஸாப் போரின் போது நாற்புறமும் பல்லாயிரக்கணக்கான எதிரிகளால் சுழப்பட்டிருந்த முஸ்லிம்களை எவ்வாறு காப்பாற்றியதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்?

முஃமின்களே! உங்கள் மீதும் அல்லாஹ் புரிந்திருக்கும் அருட் கொடையை நினைத்துப் பாருங்கள்; உங்களிடம் (எதிரிகளின்) படைகள் வந்த போது (புயல்) காற்றையும், நீங்கள் (கண்களால்) பார்க்கவியலா (வானவர்களின்) படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம்; மேலும், நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கிறான். (33:9)

Q85) ஷைத்தான்களின் சகோதரர்கள் என யாரைக் குறித்து குர்ஆன் கூறுகிறது?

நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். (17:27)

Q86) புண்ணியம் என்றால் என்ன என்பதற்கு இறைவன் தன் திருமறையில் கூறும் விளக்கம் என்ன?

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்). (2:177)

Q87) யூனூஸ் நபி (அலை) அவர்கள் மீன் வயிற்றினுள் இருக்கும் போது இறைவனிடம் செய்த பிரார்த்தனையைக் கூறுக.

அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து ‘உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்’ என்று பிரார்த்தித்தார்.

Q88) தீயோர்களின் பதிவேடு குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது. ‘ஸிஜ்ஜீன்’ என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்? அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும். பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள். வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார். நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், ‘அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே’ என்று கூறுகின்றான். அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன. (தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள். பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள். ‘எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது’ என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும். (83:7-17)

Q89) நல்லோர்களின் பதிவேடு குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

“நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் ‘இல்லிய்யீ’னில் இருக்கிறது. ‘இல்லிய்யுன்’ என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்? (அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும். (அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள். நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) ‘நயீம்’ என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள். அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர். (பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான(போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். அதன் முத்திரை கஸ்தூரியாகும்; எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும். இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுமுள்ளதாகும். அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முர்புகள் அருந்துவார்கள். (18-28)

Q90) வட்டி வாங்குபவர்களுக்கான தண்டனை குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

“யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (2:275)

Q91) கல்வி ஞானம் கொடுக்கப்பட்டவர்களின் இதயத்தில் குர்ஆன் பாதுகாக்கப்படுகிறது என இறைவன் கூறும் வசனம் எது?

“எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது” (29:49)

Q92) அபூபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தில் எந்த ஸஹாபியின் பொறுப்பில் எழுத்து வடிவில் முழுமையான குர்ஆனாக தொகுக்கும் பணி ஓப்படைக்கப்பட்டது?

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் முழு குர்ஆனையும் எழுத்து வடிவில் தொகுக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.

அவ்வப்போது அல்லாஹ் இறக்கியருளும் வஹியை நபி (ஸல்) அவர்கள் உடனே எழுதி வைத்துக் கொள்ளுமாறு தம் தோழர்களுக்கு கட்டளையிடுவார்கள். இவ்வாறு இறைச்செய்தியை எழுதுவதற்காக நபி (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்டவர்களில் அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி ரலி), முஆவியா (ரலி), அபான் பின் ஸயீத் (ரலி), காலித் பின் வலித் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி) மற்றும் ஸாபித் பின் கைஸ் (ரலி) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தோல்பட்டைகளிலும், மரப்பட்டைகளிலும், எலும்புகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும் குர்ஆன் எழுதி வைத்து பாதுகாக்கப்பட்டது. இவ்வாறு எழுதி வைத்து பாதுகாக்கப்பட்டவைகள் நபி(ஸல்) அவர்களின் வீட்டில் வைத்து பாதுகாக்ப்பட்டிருந்தது. அபூபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தில் முழு குர்ஆனையும் மனனம் செய்திருந்த ஸைத் பின் ஸாபித் (ரலி) பொறுப்பில் எழுத்து வடிவில் முழுமையான குர்ஆனாக தொகுக்கும் பணி ஓப்படைக்கப்பட்டு, அவர்கள் அப்பணியை செவ்வனே நிறைவேற்றினார்கள். (ஆதாரம் : புகாரி)

Q93) ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களால் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்ட முழு குர்ஆன், உஸ்மான் (ரலி) அவர்களால் தற்போதுள்ள அமைப்பில் தொகுக்ப்படும் வரையிலும் யார் யார் பொறுப்பில் இருந்தது?

முதலில் அபூபக்கர் (ரலி) அவர்கள் பொறுப்பிலும், அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அது உமர் (ரலி) அவர்களின் பொறுப்பிலும், அவர்களின் மரணத்திற்குப் பின்னர் உமர் (ரலி) அவர்களின் மகளும், நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான ஹப்ஸா (ரலி) அவர்களிடத்திலும் இருந்தது.

பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஹப்ஸா (ரலி) அவர்களிடத்தில் இருந்த அந்த மூலப்பிரதியிலிருந்து பல பிரதிகளைத் தொகுத்து உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்கள். அவற்றுல் ஒன்று தான் ரஷ்யாவின் தாஸ்கண்ட் நகரத்திலும் மற்றொன்று துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திலும் இருக்கும் அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Q94) உஸ்மான் (ரலி) அவர்களால் பல பிரதிகளாக குர்ஆன் தொகுக்ப்படுவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றவர்கள் யாவர்?

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தோல்பட்டைகளிலும், மரப்பட்டைகளிலும், எலும்புகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும் குர்ஆன் எழுதி வைத்து பாதுகாக்கப்பட்ட குர்ஆனை அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் எழுத்து வடிவில் முழுமையான குர்ஆனாக அமைப்பதற்காக பொறுப்பேற்ற ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களே உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் பல பிரதிகளாக குர்ஆன் தொகுக்ப்படுவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் தலைமை வகித்தார்கள்.

இவருடைய தலைமையிலான இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த மற்ற நபித்தோழர்கள் அப்துல்லாஹ் பின் ஜூபைர் (ரலி), ஸயித் பின் அல் ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அல் ஹாரிஸ் (ரலி) போன்றோர்களாவார்கள்.

Q95) ‘குர்ஆனின் தாய்’ என நபி (ஸல்) அவர்களால் பெயரிடப்பட்ட சூரா எது?

அல்-பாத்திஹா

Q96) நபி (ஸல்) அவர்களுக்கு கட்டுப்படுவதன் அவசியம் குறித்து குர்ஆன் கூறும் வசனங்களில் மூன்றைக் கூறுக:

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள். (47:33)

“(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்” (59:7)

(நபியே!) நீர் கூறும்: ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (3:31)

Q97) இஸ்லாம் அல்லாத மற்ற மார்க்கங்களைப் பின்பற்றுவது குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (3:85)

Q98) அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களை (ஷிர்க் செய்பவர்களை) திருமணம் செய்வது குறித்து குர்ஆன் கூறும் அறிவுரை என்ன?

(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (2:221)

Q99) ஸலாம் கூறப்பட்டால் அதற்கு பதில் கூறவேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தும் குர்ஆன் வசனம் எது?

உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். (4:86)

Q100) செய்த தருமங்களைச் சொல்லிக்காட்டுவதற்கு குர்ஆன் கூறும் உவமை என்ன?

“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை. (2:264)

Jul 20, 2008

நபி (ஸல்) அவர்கள் உளூ செய்த முறை!

அல்லாஹ் கூறுகிறான்: -

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான். (அல்-குர்ஆன் 5:6)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

‘எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களில் எவரது தொழுகையையும் நீங்கள் ஒலூச் செய்தால் தவிர, அசுத்தத்துடன் ஏற்றுக் கொள்ள மாட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவுத்

நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம்: -

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: -

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)

எனவே நாம் தொழுகைக்கான உளூ செய்யும் போது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு செய்தார்களோ அவ்வாறே நாமும் செய்ய வேண்டும்.

உளூ செய்யும் முறை: - (ஆடியோ/வீடியோ)

உளூவிற்கான நிய்யத் செய்தல்: - உளூ செய்வதாக மனதில் எண்ணிக் கொண்டு (வாயால் மொழிவது அல்ல).

‘பிஸ்மில்லாஹ்’ கூறுதல்: - மனதால் நிய்யத் செய்த பிறகு ‘பிஸ’மில்லாஹ்’ கூறி உளூ செய்யத் துவங்க வேண்டும்.

இரு மணிக்கட்டுகளை கழுவுதல்: - இரு கைகளையும் மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவிக் கொள்ளவேண்டும்.

வாய் கொப்பளித்தல்: - மூன்று முறை வாய் கொப்பளிக்க வேண்டும்.

நாசிக்கு (மூக்கிற்கு) நீர் செலுத்தி சுத்தம் செய்தல்: - மூக்கிற்குள் வலது கையால் தண்ணீர் செலுத்தி இடது கையால் மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும்.

முகம் கழுவுதல்: - ஒரு காதிலிருந்து மறு காதுவரையும், நெற்றியின் ஆரம்பப் பகுதியிலிருந்து கீழ் தாடை வரையும் முகத்தை மூன்று முறை கழுவவேண்டும்.

இரு கைகளை முழங்கை வரை கழுவுதல்: - இரண்டு கைகளையும் விரல் நுனிகளிலிருந்து முழங்கை உட்பட மூன்று முறை கழுவவேண்டும். முதலில் வலது கையையும் பிறகு இடது கையையும் கழுவவேண்டும்.

மஸஹ் செய்தல்: - இரண்டு கைகளையும் தண்ணீரில் நனைத்து தலையின் முற்பகுதியிலிருந்து பிற்பகுதி வரை கொண்டு சென்று மீண்டும் அதனை முற்பகுதிக்கு கொண்டு வரவேண்டும். பிறகு ஆட்காட்டி விரலை காதின் உட்பகுதியையும், பெருவிரலால் காதின் வெளிப்பகுதியையும் தடவ வேண்டும்.

தலையில் மஸஹ் ஒரு முறை தான் செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைகளையும் தலையின் முன்பாகத்தில் வைத்து பிடரி வரை தடவி மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கைகளைக் கொண்டு வந்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவுது, இப்னுமாஜா, அஹ்மது

நம்மில் சிலர் பிடரியில் மஸஹ் செய்கின்றனர். இதற்கு நபிவழியில் எவ்வித ஆதாரமும் இல்லை. (ஆடியோ)

இரு கால்களையும் கழுவுதல்: - இரண்டு கால்களையும் விரல் நுனிகளிலிருந்து கணுக்கால் வரையில் முதலில் வலது காலையும் பிறகு இடது காலையும் மூன்று முறை கழுவவேண்டும்.

ஒரு மனிதரின் காலில் நகம் அளவுக்கு தண்ணீர் படாததைக்கண்ட நபியவர்கள் திரும்பிச் சென்று உம் உளுவை அழகாகச்செய் என்றார்கள். அறிவிப்பவர்:அனஸ் (ரலி) ஆதாரம் : நஸயீ, அபூதாவூது.

குதிகால்களை நன்றாகக் கழுவாதவர்களுக்கு நரகம்தான் என்றும் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா, ஆதாரம் : புகாரி. (ஆடியோ)

காலுறை அணிந்தவர் உளூ செய்யும் முறை: -

ஒருவர் உளு செய்து விட்டு காலுறை (ஸாக்ஸ்) அணிந்து, பிறகு உளு முறிந்து விட்டால் திரும்ப உளு செய்யும் போது அவர்; காலுறையை கழற்ற வேண்டிய அவசியமில்லை. காலை கழுவ வேண்டிய நேரத்தில் காலுறையின் மேல்பகுதியில் மட்டும் மஸஹ் செய்தால் போதும். கடமையான குளிப்பிற்கு கட்டாயம் கழற்றவேண்டும்.

காலுறையில் மஸஹ் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவைகள்: -

காலுறை அணியும் போது உளூவுடன் இருந்திருக்க வேண்டும். அதன் பிறகு உளூ முறிந்தால் தான் காலுறையைக் கழற்றாமலேயே அதன் மீது மஸஹ் செய்து கொள்ளலாம்.

காலுறையின் மேல் பகுதியில் தான் மஸஹ் செய்ய வேண்டும். சிலர் செய்வது போல் கீழ் பகுதியில் அல்ல.

மஸஹ் செய்வதற்கான காலக் கெடு: -

ஊரில் இருப்பவர்களுக்கு ஒரு நாள் (ஐந்து நேரத் தொழுகைகள்). பிரயாணத்தில் இருப்பவர்களுக்கு மூன்று நாட்கள் ஆகும். [Al-Majmoo’ (1/487), Al-Musannaf (1/209/807)]

இந்த காலக்கட்டத்திற்கு மேற்படும் போது காலுறையை கழற்றிவிட்டு முறைப்படி உளுச் செய்ய வேண்டும்.

உளூ செய்யும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவைகள்: -

- கை கால்களைக் கழுவும் போது முதலில் வலது புறத்திலிருந்து ஆரம்பம் செய்ய வேண்டும்.

- நபி (ஸல்) அவர்கள் கை, முகம்,கால்களைக் கழுவும் போதும், வாய்கொப்பளிக்கும் போதும் பெரும்பாலான சந்தர்பங்களில் மூன்று முறை செய்துள்ளார்கள். இரண்டு முறையும் ஒரு முறையும் கூட செய்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான சந்தர்பங்களில் மூன்று முறை செய்திருப்பதால் நாமும் மூன்று செய்வதே சிறந்தது என அறிஞர்கள் கூறுகின்றனர்.

- உளுவை இடைவெளியில்லாமல் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். (ஒரு உறுப்பு காய்வதற்குள் மற்ற உறுப்பை கழுவவேண்டும்.)

உளூ செய்து முடித்தவுடன் ஓதும் துஆ: -

“அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹ்” என்று கூறவேண்டும்.

‘உங்களில் ஒருவர் உலூச் செய்யும் போது அவ்வுலூவை அழகுறச் செய்து, அவர் அதை நிறைவு செய்யும் போது அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹுவஹ்தஹு லாஷரீக லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹுவரசூலுஹு (வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் தவிர யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணையில்லை என்று நான் சான்று பகர்கின்றேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும், திருத்தூதரும் ஆவார்கள் என்றும் சான்று பகர்கின்றேன்) என்று கூறினால் அவருக்காக எட்டு சுவனங்களின் வாயில்கள் திறக்கப்பட்டு விடும். அவற்றில் அவர் விரும்பிய எதிலும் நுழையலாம். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) ஆதாரம் : அபூதாவுத்

உளூ செய்து முடித்ததும் ஓதக் கூடிய மற்றொரு துஆ: -

‘அல்லாஹூம்மஜ்அல்னீ மினத்தவ்வாபீ(B) வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன்’

உளுவை முறிக்கும் செயல்கள்: -

சில செயல்களால் உளு முறிந்து விடும். இவைகளில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்து விட்டால் மீண்டும் உளு செய்த பிறகே தொழவேண்டும். அவைகள்:

- மல ஜலம் கழித்தல்

- காற்று பிரிதல்

உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது தனது வயிற்றுக்குள் இறைச்சலை உணர்ந்து தான் ஹதஸ் ஆகிவிட்டோமா அல்லது ஹதஸ் ஆகவில்லையா என்று சந்தேகம் கொண்டால் அவர் சப்தத்தை கேட்கின்ற வரை அல்லது நாற்றத்தை உணர்கின்ற வரை தொழுகையை முறிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். ஆதாரம் : அபூதாவுத் (ஆடியோ)


- இச்சை நீர் வெளிப்படல்

- அயர்ந்து தூங்குதல்

- ஒட்டக மாமிசம் உண்ணுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டக இறைச்சியைச் சாப்பிட்டால் உளு செய்ய வேண்டுமா? எனக் கேட்ட போது ஆம் என்றார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்

- ஆட்டிறைச்சி சாப்பிட்டால் உளூ முறியாது: -

‘நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் ஆட்டுத் தொடை இறைச்சியைச் சாப்பிட்டார்கள். பின்னர் (அதற்காக) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்” என மைமூனா(ரலி) அறிவித்தார்

- இன உறுப்பை இச்சையுடன் தொட்டால் உளூ முறிந்து விடும்: -

உங்களில் ஒருவர் தனது மர்ம பாகத்தைத் தொட்டுவிட்டால் அவசியம் அவர் உளு செய்து கொள்ளவும். அறிவிப்பவர்: புஷ்ரா பின்த் ஸஃப்வான் (ரலி), ஆதாரம் : அபூதாவூது

- இச்சையில்லாமல் இன உறுப்பை தொட்டால் உளூ முறியாது.

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையில் ஒரு ஆடவர் தன் ஆண்குறியைத் தொட்டு விடுகிறார். அவரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எனக் கேட்டபோது அதுவும் உனது உடலிலுள்ள ஒரு சதைத்துண்டே தவிர வேறில்லை அல்லது உன்னிலுள்ள சதைத்துண்டுதானே! எனக் கூறினர்.

அறிவிப்பவர்: தல்கு பின் அலி (ரலி), ஆதாரம் :இப்னுமாஜா

மேற்கண்ட ஸஹீஹான ஹதீஸ்களிலிருந்து, ஒருவர் இச்சையோடு மர்ம உறுப்பை தொட்டால் உளு முறிந்து விடும். இச்சையுடன் இல்லாமல் ஏதேச்சையாக தொட்டால் உளூ முறியாது எனவும் மீண்டும் உளு செய்ய வேண்டியதில்லை என்பதையும் அறியலாம். (ஆடியோ)

தயம்மும்: -

உளு செய்யவோ, குளிக்கவோ தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் அல்லது தண்ணீர் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நோய் போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் உளு மற்றும் குளிப்புக்கு

பகரமாக தயம்மும் செய்து தொழுகையை நிறை வேற்றலாம். ஏனென்றால் எக்காரணத்தைக் கொண்டும் தொழுகையை விடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

தயம்மும் செய்யும் முறை: -

தூய்மையான மண்ணில் இரண்டு உள்ளங்கைகளையும் ஒரு முறை அடித்து அதனை முகத்தில் தடவிவிட்டு பிறகு அதனைக் கொண்டு இரண்டு முன்னங்கையில் தடவவேண்டும். இதுவே தயம்மும் செய்யும் முறையாகும்.

Jul 16, 2008

இஸ்லாம் - கேள்வி, பதில்கள் : அல்-குர்ஆன் (For Children and Beginners) பகுதி 1

1) குர்ஆன் என்பதற்கு என்ன பொருள்?

ஓதுதல்! (that which is recited; or that which is dictated in memory form)

2) குர்ஆன் யாரால் அருளப்பட்டது?

அகிலங்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்டது

3) குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?

லைலத்துல் கத்ர் இரவில்

4) குர்ஆன் யார் மூலமாக அருளப்பட்டது

கண்ணியமிக்க வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலமாக.

5) குர்ஆன் எந்த தூதருக்கு அருளப்பட்டது?

இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு.

6) முதன் முதலாக குர்ஆன் எந்த இடத்தில் வைத்து அருளப்பட்டது?

மக்காவிலுள்ள ஹிரா குகையில் அருளப்பட்டது

7) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது?

அபூபக்கர் (ரலி) அவர்களின்ஆட்சிக்காலத்தில்

8.) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் முதன் முதலாக பிரதியெடுக்கப்பட்டது?

உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்.

9) கலிபா உதுமான் அவர்களின் காலத்தில் பிரதியெடுக்கப்பட்ட குர்ஆன் தற்போது எங்கிருக்கிறது?

ஒன்று தாஸ்கண்டிலும், மற்றொன்று துர்கியின் இஸ்தான்புல் அருங்காட்சியகத்தில் உள்ளது.

11) அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் யார் என குர்ஆன் கூறுகிறது?

தக்வா (இறையச்சம்) உடையவர்கள்

12) குர்ஆனில் மிகப்பெரிய அத்தியாயம் எது?

சூரத்துல் பகரா (இரண்டாவது அத்தியாயம்)

13) குர்ஆனில் மிகச் சிறிய அத்தியாயம் எது?

சூரத்துல் கவ்ஸர் (108 வது அத்தியாயம்)

14) குர்ஆனை பாதுகாப்பது யார் பொறுப்பில் உள்ளது?

அதை இறக்கிய இறைவனே அதன் பாதுகாவலன் ஆவான்.

15) நபி (ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் முதன் முதலாக குர்ஆன் அருளப்பட்டது?

40 ஆவது வயதில்

16) குர்ஆனுக்கு இருக்கும் மற்ற பெயர்களில் சிலவற்றைக் கூறுக:

அல்-ஃபுர்கான், அல்-கிதாப், அத்-திக்ர், அல்-நூர், அல்-ஹூதா

17) இறைவன் நம்மோடு இருக்கிறான் என கூறிய நபி யார்?

முஹம்மது (ஸல்) அத் தவ்பா(9:40)

18) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?

ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாது. அஸ் ஸபா(34:14) மற்றும் அல் ஜின்னு(72:10)

19) குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி என சிறப்பித்துக் கூறப்பட்ட சூரா எது?

சூரத்துல் இக்லாஸ் (112 வது அத்தியாயம்)

20) குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் இருக்கிறது?

114 அத்தியாயங்கள்

21) நபி முஸா (அலை) அவர்களோடு இறைவன் பேசிய பள்ளத்தாக்கின் பெயர் என்ன?

துவா பள்ளத்தாக்கு. அந் நாஜிஆத்(79:16), தாஹா(20:12). இது தூர் மலையின் அடிவாரத்தில் உள்ளது. (19:52)

22) அல்-குர்ஆனை மனனம் செய்த முதல் மனிதர் யார்?

முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

23) நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் குர்ஆனில் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது?

முஹம்மது (ஸல்) என நான்கு முறையும், அஹ்மது என ஒரு முறையும் இடம் பெற்றுள்ளது.

24) இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் இறையில்லம் எது என குர்ஆன் கூறுகிறது?

கஃபா

25) எதிர்கால சந்ததியினருக்கு அத்தாட்சியாக விட்டு வைக்கப்பட்டுள்ளவற்றில் இரண்டைக் கூறுக:

நூஹ் (அலை) அவர்களின் கப்பல் (54:15), மற்றும் பிர்அவ்னின் உடல் (10:92)

26) நூஹ் நபியின் கப்பல் எங்கு ஒதுங்கியது என குர்ஆன் கூறுகிறது?

ஜூதி மலையில் (11:44 )

27) குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே ஒரு ஸஹாபியின் பெயர் என்ன?

ஜைத் பின் ஹாரித் (ரலி) அஹ்ஜாப் (33:37)

28) ஷைத்தான் எந்த இனத்தைச் சேர்ந்தவன் என குர்ஆன் குறிப்பிடுகிறது?

ஜின் இனம்

29) இஸ்ராயிலின் வழித்தோன்றல்களுக்கு கடமையாக்கப்பட்ட வணக்கங்கள் என குர்ஆன் குறிப்பிடுபவை எவைகளை?

தொழுகை மற்றும் ஜக்காத்

30) ‘பிஸ்மில்லாஹ்’ கூறி ஆரம்பம் செய்யப்படாத சூரா எது?

சூரத்துத் தவ்பா

31) ‘பிஸ்மில்லாஹ்’ இரண்டு முறை வரும் சூரா எது?

சூரத்துந் நம்ல் -எறும்புகள் (27:30)

32) குர்ஆன் முழுவதுவதுமாக இறக்கியருளப்பட எத்தனை வருடங்கள் ஆனது?

23 வருடங்கள்

33) தொழுகையில் அவசியம் ஓதப்பட வேண்டிய சூரா எது?

அல்-பாத்திஹா

34) துஆ (பிரார்த்தனை) என குறிப்பிடப்படும் சூரா எது?

அல்-பாத்திஹா

35) திருமறையின் தோற்றுவாய் என குறிப்பிடப்படும் சூரா எது?

அல்-பாத்திஹா

36) குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரே ஒரு பெண்மணி யார்?

மர்யம் (அலை)

37) நபிமார்களின் பெயரால் எத்தனை சூராக்கள் இருக்கின்றன?

6 சூராக்கள் (யூனுஸ், ஹூத், யூசுப், இப்ராஹீம், நூஹ், முஹம்மது (ஸல்))

38) ஆயத்துல் குர்ஸி குர்ஆனில் எந்த பாகத்தில், சூராவில் உள்ளது?

மூன்றாவாது பாகத்தின் ஆரம்பத்தில், இரண்டாவது அத்தியாயத்தின் 255 ஆவது வசனம்.

39) அல்-குர்ஆனில் இறைவனின் திருநாமங்களாக எத்தனை பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது?

99 பெயர்கள்

40) மதினா வேறெந்த பெயரில் குர்ஆனில் குறிப்பிடப்படுகிறது?

யத்ரிப் (33:13)

41) பனி இஸ்ராயில் என யாரை குர்ஆன் குறிப்பிடுகிறது?

யாகூப் (அலை) அவர்களின் சந்ததியினர்களை

42) ஈமான் கொணடவர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் தன் திருமறையில் கூறும் இரு பெணமணிகள் யாவர்?

பிர்அவ்னின் மனைவி (66:11), இம்ரானின் புதல்வி மர்யம் (அலை) (66:12)

43) காபிர்களுக்கு உதாரணமாக இறைவன் தன் திருமறையில் கூறும் இரு பெண்கள் யாவர்?

நூஹ் (அலை) அவாகளின் மனைவி (66:10), லூத் (அலை) அவர்களின் மனைவி (66:10)

அல்லாஹ் நூஹ் நபியின் மனைவியை காபிர் என்று கூறியிருக்க, நம்மவர்கள் திருமண துஆக்களில் நூஹ் நபியின் மனைவி போல் வாழ்க என்று வாழ்த்துகிறார்கள். நூஹ் நபிக்கு பாரிஸா என்று நல்ல மனைவியும் இருந்ததாக இதற்கு ஒரு கடடுக் கதையையும் கூறுகிறார்கள். இது குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஆதாரமில்லாத வெறும் யூதக் கடடுக்கதைகளாகும்.

44) உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்?

அல்லாஹ்வை நினைவு கூறுவதன் முலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன. (13:28)

45) நபி ஈஸா (அலை) அவாகள் செய்ததாக இறைவன் குறிப்பிடும் அற்புதங்கள் யாவை?

1) குழந்தையில் பேசியது, 2) களிமண்ணினால் பறவையை செய்து, இறைவனின் அனுமதியைக் கொண்டு உயிர் கொடுத்தல், 3) பிறவிக் குருடனுக்குப் பார்வையளித்தல், 4) வெண்குஷ்ட ரோகியைக் குணப்படுத்துதல், 5) இறந்தவரை அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு உயிர் பெறச் செய்தல் (5:110), 6) பிறா உண்பதை வீடடில் உள்ளவற்றை பார்க்காமலே அறிவித்தல் (3:49)

46) சுவனத்தில் இருக்காது என்று இறைவன் குறிப்பிடுவது எவை?

1) பசி, 2) நிர்வானம், 3) தாகம், 4) வெயில் (20:118,119)

47) வீரமுள்ள செயல் என குர்ஆன் எதைக் கூறுகிறது?

எவரேனும் (பிறர் செய்யும் தீங்கை) பொறுத்துக் கொண்டு மன்னித்து விடடால் அது மிக உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (42:43), (31:17), (3:186)

48) நபி முஸா (அலை) அவர்கள் கற்பாறையில் அடித்த போது எத்தனை நீர் ஊற்றுக்கள் பீறிட்டு எழுந்ததாக இறைவன் கூறுகிறான்?

பன்னிரணடு நீர் ஊற்றுகள் பீறிடடு எழுந்தது. (2:60) & (7:160)

49) தொழாதவர்களுக்காக இறைவன் சித்தப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயர் என்ன?

ஸகர் என்ற நரகம். அல் முத்தஸ்ஸிர்(74:41,42,43)

50) இறைவன் என்னோடு இருக்கிறான் என்று கூறிய நபி யார்?

முஸா (அலை) அஷ் ஷுஃரா(26:62)

சகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு அசாதாரண நிகழ்ச்சி!

யர்மூக் யுத்தத்தின் போது நான் என்னுடைய உறவினர் ஒருவரை கண்டுபிடிப்பதற்காகச் சென்றேன். என்னுடன் ஒரு தோல் பையில் தண்ணீர் மட்டும் இருந்தது. என்னுடைய உறவினர் உயிருடன் இருந்தால் இந்த தண்ணீரைக் கொண்டு அவருடைய தாகத்தைத் தனிக்கலாம் என்றும் மேலும் அவருடைய முகத்தில் உள்ள புழுதியைக் கழுவலாம் என்றும் நான் எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

அப்போது திடீரென நான் அவரை கண்டுகொண்டேன். அந்த சமயத்தில் அவர் சுய நினைவை இழந்தவராகவும் பின்னர் சுய நினைவை மீண்டவராகவும் இருந்தார். நான் உங்களுக்கு தண்ணீர் புகட்டட்டுமா? என்று அவரிடம் கேட்ட போது அவர் தலையை ஆட்டினார். திடீரென வேறு ஒருவர் தன்னுடைய காயத்தின் காரணமாக வலியினால் கூப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது வலியால் துடித்துக்கொண்டிருந்த என் உறவினர் மற்றவரை கவனிக்குமாறு எனக்கு சைகை காட்டினார். நான் அவரிடம் சென்றபோது அவர் அம்ர் பின் ஆஸின் சகோதரர் ஹிஸாம் என்பதை பார்த்தேன். நான் உங்களுக்கு தண்ணீர் புகட்டட்டுமா என்று கேட்டேன். அப்போது திடீரென்று வேறு ஒருவர் அவருடைய காயத்தின் வலியின் காரணமாக கூப்பிட்டுக் கொண்டிருந்ததை நாங்கள் கேட்டோம். ஆகையால் அவரை சென்று கவனிக்குமாறு அவர் என்னிடம் சைகை செய்தார்.

நான் அவரிடம் சென்ற போது அவர் இறந்திருந்தார். நான் ஹிஸாமிடம் திரும்பிச் சென்ற போது அவரும் இறந்திருந்தார். பின்னர் நான் என் உறவினரிடம் சென்ற போது அவரும் இறந்திருந்ததைப் பார்த்தேன்.

ஆகையால் அனைவருமே ஒருவர் மற்றவரின் மேல் உள்ள அன்பின் காரணமாக தன்னுடைய தாகத்தை தணிக்காமலேயே மரணமடைந்து விட்டனர். இது தான் மனித வரலாற்றில் ஓர் ஈடு இணையற்ற தியாகம் மற்றும் சகோதரத்துவத்தின் ஆதாரமாக இருக்கிறது.

இந்த அற்புத சரித்திர நிகழ்ச்சி இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் ‘அல்-இஸாபாஹ்’ என்ற நூலிலும், இப்னு அல்-முபாரக் (ரஹ்) அவர்களின் ‘அல்-ஜிஹாத்’ என்ற நூலிலும், அப்துல்லா பின் அல்-முபாரக் (ரஹ்) அவர்களின் ‘அஜ்-ஜூஹத்’ என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர்கள் அனைவருமே நம்பகமானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

நன்றி : www.turntoislam.com

Jul 13, 2008

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி!

கட்டுரைப் பற்றிய சிறு குறிப்பு: - இது முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோ தொகுப்பிலிருந்து எழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும்.

வீடியோ வெளியீட்டாளர் : Truth Vision World wide

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono

நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.

பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த “Liaision Maria” என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். Maria என்பது ஈஸா (அலை) அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களைக் குறிக்கும். இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் “Stray Sheeps” என்று சொல்லப்படக் கூடிய “காணாமல் போன ஆடுகளை” தேடுவதாகும். “காணாமல் போன ஆடுகள்” என்று அவர்கள் குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்ல. மாறாக “காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, “கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை”. அதாவது இந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற முஸ்லிம்களை அவர்கள் “காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள். நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக் கொண்டிருக்கிறது.

ஒரு வருடம் கழித்த பிறகு நான், இந்தோனேசியாவில் மிக அதிக அளவில் றுப்பினர்களையுடைய ஒரு கிறிஸ்தவ அமைப்பின் தலைவியானேன். பின்னர் கன்னியாஸ்திரி ஆவதற்காக ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் சேர்ந்தேன்.

சகோதர சகோதரிகளே! நான் ஒரு முஸ்லிம் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. நான் கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியது. கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியதிலிருந்து, அல்லாஹ் அவனுடைய அடிமையாகிய எனக்கு நேர்வழி காட்டத் துவங்கினான்.

பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள் படிக்கும் மேற்படிப்பாகிய மதங்கள் மற்றும் தத்துவங்களைப் பற்றிய (Theology & Philosophy) உயர்ந்த படிப்பைப் படிப்பதற்காக நான் அனுப்பப்பட்டேன். அங்கு நான் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு (Comparative Religion) பாடங்களைப் படித்தேன். இஸ்லாத்தைப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டேன். ஆனால் உண்மையான இஸ்லாத்தைப் பற்றி அல்ல! இஸ்லாம் என்பது மிக மோசமான மதம் என்று பயிற்றுவிக்கப்பட்டேன்.

“இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் இந்தோனேசியாவிலுள்ள முஸ்லிம்களைப் பாருங்கள்” என்று எங்களுக்கு விளக்கினார்கள்.

இந்தோனேசியாவில்,

- ஏழைகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

- முட்டாள்களாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

- வெள்ளிக் கிழமை தொழுகையின் போது தங்களின் காலனிகளை தொலைக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

- ஒற்றுமையாக இருப்பதற்கு மறுக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

- தீவிரவாதிகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

இவர்களுடைய இத்தகைய தவறான போதனையினால் என்னுடைய நன்பர்கள் அனைவரும் “இஸ்லாம் என்பது ஒரு மிக மோசமான மதம்” என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். ஆனால் அதே சமயத்தில் நான் அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவு உண்மைக்கு புறம்பானது என்றும் தவறானது என்றும் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களிடம், “நாம் இந்தோனேசியாவை மட்டும் பார்க்கக் கூடாது, மற்ற நாடுகளில் உள்ள நிலவரங்களையும் நாம் பார்க்க வேண்டும்” என்று கூறினேன்.

உதாரணமாக,

பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏழைகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களுடைய மதம் இஸ்லாம் அல்ல!.அவர்களெல்லாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

மெக்ஸிகோ ஒரு ஏழை நாடு. அந்நாட்டில், குற்றவாளிகளாகவும், திருடர்களாகவும், குடிகாரர்களாகவும், கற்பழிப்பு செய்பவர்களாகவும், சூதாட்டக்காரர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்!

அயர்லாந்து குடியரசு நாடு. இந்த நாடு வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கிடையே தீர்க்க இயலாத உள் நாட்டு பிரச்சனையில், சச்சரவில் சக்கித் தவிக்கும் ஒரு நாடு. இந்தப் சச்சரவில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இந்தப் சச்சரவு நடப்பது கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கிடையில் தான். அவர்கள் தமக்குள்ளாகவே சன்டையிட்டுக் கொண்டு கொலை செய்கின்றார்கள். ஐரோப்பிய சமூகம் அவர்களை “அயர்லாந்தின் தீவிரவாதிகள்” என்று கருதுகிறது. அவர்கள் “ஐரோப்பிய தீவிரவாதிகள்” என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.

இத்தாலியைப் பாருங்கள்! போதைப் பொருள் கடத்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் - இவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அனைத்து மாஃபிய்யாக் கும்பல்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

அப்போது நான் என்னுடைய மேலதிகாரியான பாதிரியாரிடம், “இஸ்லாம் ஒரு மோசமான மதம் என்று நிரூபிக்கப்படவில்லையே” கூறினேன். அப்போது நான், இஸ்லாத்தை, இஸ்லாமியர்களிடமிருந்தே படிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். அதற்கு, “நான் இஸ்லாத்தின் பலவீனங்களைப் பற்றி மட்டும் படிக்க வேண்டும்” என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டென்.

நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக “இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான்” என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற “திரித்துவக் கடவுள் கொள்கைக்கு” (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. ஆனால் இரவில் நான் குர்ஆனைப் படித்தபோது (சூரா இக்லாஸ்), இறைவன் ஒருவனே! என்றிருக்கிறது. ஆனால் அன்று காலையிலோ தேவாலயத்தில் மதங்களைப் பற்றிய பாடத்தை ரெவ. பாதிரியார் அவர்கள் போதித்த போது “கடவுள் ஒருவரே! ஆனால் மூவரில் இருக்கிறார் (திரித்துவம் - Trinity) என்று போதித்தார். அதனால் அந்த இரவில் ஒரு சக்தி என்னை மேலும் குர்ஆனைப் படிக்க உந்தியது. என் ஆழமான உள் மனது “இறைவன் ஒருவனே! என்றும் மேலும் இது (குர்ஆன்) உண்மையானது தான்” என்றும் கூறிற்று.

மறு நாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடைய பாதிரியாரிடம், விவாதித்தேன்.

“கடவுளின் திரித்துவக் கொள்கை” (Trinity of God) என்பது பற்றி எனக்கு சரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன்.

கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான் இதுவரைக்கும் கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம் பெறாமல் இருக்கமுடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும் ஆச்சரியமடைந்தார்.

அந்தப் பாதிரியார் முன் வந்து ஒரு முக்கோனத்தை வரைந்தார். பின்னர் அவர், ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் (three corners) இருப்பதைப் போல, ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறினார்.

அதற்கு நான், உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும். எனவே கடவுள் மூவரை வைத்து சமாளிப்பது என்பது கடினம். எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடைவராக இருக்க சாத்தியக்கூறு இருக்கிறதல்லவா? இது சாத்தியம் தானே? என்று கேட்டேன்

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் ”இதற்கு சாத்தியமே இல்லை” என்று கூறினார். அதற்கு நான், இது சாத்தியமானதே! கூறி முன்னாள் வந்து, ஒரு சதுரத்தை வரைந்தேன். முக்கோனத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப் போன்று சதுரத்திற்கு நான்கு மூலைகள் (Four corners) இருக்கின்றனவே என்று கூறினேன்.

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார், ‘முடியாது’ என்று கூறினார். முன்பு ‘இதற்கு சாத்தியமே இல்லை’ என்று கூறிய அவர், தற்போது ‘முடியாது’ என்று மட்டும் கூறினார்.

நான் கேட்டேன், ஏன்?

அதற்கு பாதியார், ‘இது நம்பிக்கை’. நீ புரிந்துக் கொண்டாயோ இல்லையோ அப்படியே ஏற்றுக்கொள், அப்படியே இதை விழுங்கிவிடு. இதைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! இதைப் பற்றி சந்தேகப்பட்டு கேள்வி கேட்டால் நீ பாவம் செய்தவளாகி விடுவாய்! என்று கூறினார்.

இந்த மாதிரியான பதில் எனக்கு கிடைக்கப் பெற்றும் அன்று இரவு குர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற உறுதியான ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஏகத்துவம் குறித்த கடவுள் கொள்கையைக் குறித்து கற்றறிந்த என்னுடைய பாதிரியாருடன் விவாதம் செய்ய விரும்பினேன்.

ஒரு சமயம் நான் என்னுடைய பாதிரியாரிடம், ‘இந்த மேசைகளை உருவாக்கியது யார் என்று கேட்டேன். அதற்கு பாதிரியார் பதிலளிக்க விரும்பாமல் என்னையே பதிலளிக்குமாறு கூறினார்.

அதற்கு நான் ‘ இந்த மேசைகளை உருவாக்கியது “தச்சர்கள்” (Carpenters) என்றேன்.

ஏன்? - பாதிரியார் கேட்டார்.

அதற்கு நான் இந்த மேசைகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவோ அல்லது நூறு வருடத்திற்கு முன்பாகவோ உருவாக்கப்பட்டவைகள். இவைகள் இன்னமும் மேசைகளாகவே இருக்கின்றன. இந்த மேசைகள் எப்போதும் “தச்சார்களாக” (Carpenters) மாறமுடியாது. மேலும் ஒரே ஒரு மேசை கூட தச்சராக (Carpenter) மாறுவதற்கு ஒருபோதும் முடியாது.

நீ என்ன சொல்ல வருகிறாய்? - பாதிரியார் கேட்டார்.

அதற்கு நான், இந்த பிரபஞ்சத்திலே உள்ள மனிதன் உட்பட உயிருள்ள மற்றும் உயிரற்ற ஒவ்வொன்றையும் கடவுளே படைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னாள் ஒரு மனிதன் பிறந்தால் அடுத்து வரக் கூடிய நூறு வருடங்களாயினும் அவன் மனிதனாகவே இருப்பான். உலக முடிவு நாள் வரைக்கும் கூட அவன் மனிதனாகவே தான் இருப்பான். ஒரே ஒரு மனிதன் கூட கடவுளாக அவதாரம் எடுக்க முடியாது! மேலும் கடவுளை மனிதனோடு ஒப்பிட முடியாது.

அதற்கு நான் ஒரு உதாரணமும் கூறினேன். ஒரு இராணுவத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை தேர்தெடுத்து அவரை தங்களின் “ஜெனரலாக” தேர்தெடுத்தால் அந்த தேர்வு செல்லாததாகிவிடும். ஏன் அவர்களில் 99 சதவிகிதத்தினர் அவரை தேர்வு செய்திருப்பினும் சரியே!

நீ என்ன சொல்ல வருகியாய்? - பாதிரியார்

அதற்கு நான், “மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கடவுள் படைத்தார். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை கடவுளாக ஆக்கினால் அந்த தேர்வு செல்லாதது” என்று நான் அந்த பாதிரியாரிடம் விளக்கினேன்.

பின்னர் நான் தொடர்ந்து படித்து வந்தேன். ஒருநாள் நான் என்னுடைய பாதிரியாரிடம், “என்னுடைய ஆராய்ச்சிகளின் படியும், மதங்களைப் பற்றிப் வகுப்புகளில் படித்ததிலிருந்தும் கி.பி. 325 ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக இயேசு கடவுளாக கருதப்பட்டார்” என்று கூறினேன்.

இவ்வாறு இந்த கன்னிகாஸ்திரி அவர்கள் பலவிதங்களில் அந்த பாதிரியாரிடம் விவாதம் புரிந்ததாகக் கூறினார்கள்.

பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தாம் இஸ்லாமே ஏகத்துவத்தை வலியுத்தும் உண்மையான மார்க்கம் என்றறிந்து இஸ்லாத்தை தழுவிய இந்த முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கன்னிகாஸ்திரி Irena Handono அவர்கள் தற்போது இந்தோனேசியாவில் இருக்கும் Central Muslim Women Movement என்ற அமைப்பின் தலைவியாக இருந்துக் கொண்டு இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செய்து கொண்டுவருகிறார்.

அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாகவும்.

வீடியோ இணைப்பு : நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கன்னிகாஸ்திரி Irena Handono.

சுன்னத் மற்றும் நபில் தொழுகையின் முக்கியத்துவம்!

தொழுகை என்பது இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஏகத்துவக் கலிமாவிற்கு அடுத்தபடியாக தலையாய கடமையாக இருக்கிறது. தொழுகையின் முக்கியத்துவம் எத்தகையதெனில், “ஒரு முஸ்லிமுக்கும் இறை நிராகரிப்பாளக்கும் (காஃபிர்) இடையிலுள்ள வித்தியாசமே தொழுகை தான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த சிறிய தொகுப்பில் பர்லு, நபில் மற்றும் சுன்னத் தொழுகை பற்றிய சிறு குறிப்புகளைப் பார்ப்போம்.

பர்லு தொழுகை: -

இது ஒவ்வொரு நாளும் நேரம் குறிக்கப்பட்ட ஐந்து நேர கட்டாய தொழுகையாகும். ஒருவர் இந்த தொழுகைகளை முறைப்படி சரியாக தொழுது வந்தால் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் நற்கூலியை பெறுவார். ஒருவர் இவற்றை தொழவில்லையெனில் கேள்வி கணக்கு கேட்கப்பட்டு தண்டணை அளிக்கப்படுவார்கள்.

நபில் தொழுகை: -

இவைகள் அதிகப்படியான (உபரியான) தொழுகை. ஒருவர் இவற்றை தொழுதால் அல்லாஹ்விடத்தில் மிகப் பெரும் நற்கூலி கிடைக்கும். ஒருவர் இந்த தொழுகைகளைத் தொழவில்லை எனில் அவர் மீது பாவமில்லை.

சுன்னத் தொழுகை: -

தானாக மனமுவந்து தொழக் கூடிய தொழுகை. நபி (ஸல்) அவர்கள் இந்தத் தொழுகையைத் தொழுது வந்ததால் அவர்களைப் பின்பற்றி நாமும் தொழுது வருவது சிறந்ததாக இருக்கும். ஒருவர் இந்தத் தொழுகைகளை தொழுது வந்தால் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் நற்கூலி கிடைக்கும். ஒருவர் தொழவில்லை எனில் அவர் மீது குற்றமில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்கள் தொழுது வந்த இந்த சுன்னத் தொழுகைகளை தொழாதவர் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் நற்கூலியை அடையக் கூடிய பாக்கியத்தை இழந்தவராவார்.

மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப்படும் போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : அபூதாவுத்.

சுன்னத் மற்றும் நபில் தொழுகையின் முக்கியத்துவம்:-

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

மறுமை நாளில் தொழுகையைப் பற்றித்தான் மக்கள் முதன்முதலாக விசாரிக்கப்படுவார்கள். மலக்குகளிடத்தில் நம்முடைய இறைவன், தான் நன்றாக அறிந்திருந்த போதிலும், சொல்லுவான், “என்னுடைய இந்த அடியானின் தொழுகையை (பர்லு), அவன் அதை சரியாக நிறைவேற்றி உள்ளானா அல்லது அதைவிட்டும் பாராமுகமாகி இருந்திருக்கிறானா என்று பாருங்கள். அவன் அதை சரியாக செய்திருந்தால் அதற்குரிய வரவு எழுதப்பட்டுவிடும். அதை விட்டும் அவன் தவிர்ந்திருந்தால் ஏதாவது அதிகப்படியான (நபில், சுன்னத்) தொழுகைகளை தொழுதிருக்கிறாரா என்று பார்க்கும்படி அல்லாஹ் கூறுவான். “அவர் அதிகப்படியான தொழுகையை தொழுதிருந்தால் அவர் விட்டு விட்ட கட்டாய தொழுகையை அவரின் அதிகப்படியான தொழுகையைக் கொண்டு ஈடுசெய்யுங்கள்” என்று அல்லாஹ் கூறுவான். அதற்குப் பிறகு அவருடைய அனைத்து செயல்களும் இவ்வாறே முடிவு செய்யப்படும். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத்.

எனவே சகோதர சகோதரிகளே! இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தான தொழுகைகளையும் உபரியான நபில் தொழுகைகளையும் முறைப்படி பேணி தொழுது வருவோமாக. அல்லாஹ் நமக்கு அதற்கு அருள் புரிவானாகவும்.

Jul 7, 2008

கிறிஸ்தவம் Vs இஸ்லாம் - பெண்ணுரிமை பகுதி : 4 பெண் கல்வியின் முக்கியத்தும்

தங்களின் மதத்தைப் பரப்புகிறோம் எனக் கூறிக்கொண்டு தங்களின் மதத்தின் மேன்மைகளைப் பற்றிக் கூறுவதை விட்டு விட்டு இஸ்லாமிய மார்க்கத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசி வருகின்றனர் கிறிஸ்தவ மிஷனரிகள். இவ்வாறு இவர்களால் புனைந்துரைக்கப்பட்ட அவதூறுகளில் முக்கியமானது ‘இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி கொடுமைப் படுத்துகிறது’ என்பதாகும். இது குறித்து நாம் இந்தக் கட்டுரையின் முந்தைய இரு பகுதிகளில் விளக்கி வந்தோம். இதன் தொடர்ச்சியாக மிஷனரிகளின் கூற்றுக்கு மறுப்பு அளிக்கும் விதத்திலும் அதே நேரத்தில் மக்களுக்கு பெண்களின் உரிமைகள் குறித்து பைபிள் என்ன கூறுகிறது என தெளிவு படுத்துவதற்காகவும் இதனை விளக்குகிறோம்.

பெண்கள் கல்வி கற்பது குறித்து பைபிள்: -

சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது. அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே. (பைபிள் புதிய ஏற்பாடு, I கொரிந்தியர், 14 வது அதிகாரம், வசனங்கள் 34-35)

அதாவது,

- சபைகளில் பெண்கள் பேசக் கூடாது! அதற்கு அவர்களுக்கு அதிகாரமும் இல்லை.

- பெண்கள் எந்த ஒன்றைக் கற்றுக் கொள்ள விரும்பினாலும் தத்தம் வீட்டில் தம் புருஷருடத்தில் மட்டும் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

பெண்கள் கல்வி குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

“கல்வியைக் கற்பது முஸ்லிமான ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்”. அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக், ஆதாரம் சுனன் திர்மிதி, ஹதீஸ் எண் : 218

இஸ்லாமிய மார்க்கத்திலே கல்வியைப் பயில்வதிலே ஆண்களுக்கென்று ஒரு சட்டமும் பெண்களுக்கென்று ஒரு சட்டமும் இல்லை. ஆண் பெண் இரு பாலாரும் கல்வியைக் கற்க வேண்டியது கடமை என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.

பல பேர் அடங்கியிருக்கக் கூடிய சபைகளில் பெண்கள் நபி (ஸல்)அவர்களிடம் கேள்விகள் பல கேட்டு நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்த எத்தனையோ ஹதீஸ்கள் இருக்கின்றது. மேலும் இன்றளவும் நடைபெறும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளின் இறுதியில் நடைபெறும் கேள்வி-பதில் நிகழ்ச்சிகளில் முஸ்லிமான பெண்களுக்கு மட்டுமல்லாமல் கிறிஸ்தவ பெண்கள் உட்பட அனைத்து மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டு அவர்களுக்கு பதில் அளிப்பதன் மூலம் அவர்களுடைய அறிவு தாகமும் தீர்த்து வைக்கப்படுகின்றது.

ஆனால் ‘இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வீட்டிலேயே முடக்கி வைத்திருக்கிறது’ என்று குற்றம் சுமத்துகின்ற கிறிஸ்தவ மிஷனரிகள், இயற்கை நடைமுறைக்கு ஒத்துவராத, பின்பற்றி நடப்பதற்கு தகுதியில்லாத, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக ‘சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்’ என்று தங்களுடைய பைபிள் குறிப்பிடுவதை ஏனோ மறந்து விடுகின்றனர்.

தொழுகையில் சஜ்தாவின் போது தமிழில் துஆ கேட்கலாமா? - Audio/Video

உரை : மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

வாராந்திர பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி)

நாள் : 11-06-2008

நிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர்

Link : Audio/Video

Jul 6, 2008

சஜ்தா ஸஹவு எப்போது, எப்படி செய்ய வேண்டும்?-Audio/Video

உரை : மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

வாராந்திர பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி)

நாள் : 11-06-2008

நிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர்

Link : Audio/Video

தொழுகையின் நேரம் தவறிவிட்டால் என்ன செய்வது?- Audio/Video

உரை : மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

வாராந்திர பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி)

நாள் : 11-06-2008

நிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர்

Link : Audio/Video

Jul 4, 2008

இணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) - அன்றும், இன்றும்!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

தற்காலத்தில் வாழும் கப்ரு வணக்க முறைகளை ஆதரிப்போர்களிடம், “ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகளைப் போல நீங்களும் கப்ருகளை வணங்குகிறீர்களே” என்று கேட்டால் அவர்கள் கூறக்கூடிய பதில் என்னவென்றால்,

ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் நாங்களோ எந்த சிலைகளையும் வணங்கவில்லை. இறைநேச செல்வர்களின் கப்ருகளுக்கு சென்று அவர்களிடம் தானே பிரார்த்திக்கின்றோம் (துஆச் செய்கின்றோம்). அந்த இறை நேச செல்வர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்து கண்ணியப்படுத்துகிறோம். எங்களுக்காக இறைவனிடம் மன்றாடி எங்களின் கோரிக்கைகளைப் பெற்றுத் தருமாறு அவர்களிடம் பிரார்த்திக்கின்றோம். ஆனால் நாங்கள் அவர்களை வணங்கவில்லை” என்று கூறுகின்றனர்.

இங்கு நாம் மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி நன்கு தெரிந்துக் கொள்ள வேண்டும். வணக்கம் என்றால் என்ன? என்று அவர்களிடம் கேட்டால், உடனே அவர்கள் “தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் ஆகியவை வணக்கமாகும்” என்று பதில் கூறுவார்கள். வணக்கம் என்பது மேற் கூறியவைகள் மட்டுமன்று. பிரார்த்தனை, வேண்டுதல், நேர்ச்சை செய்தல் , அறுத்துப் பலியிடுதல், உதவி கோருதல், பாதுகாவல் தேடுதல் இவைகள் அனைத்துமே வணக்கமாகும். இவைகள் அனைத்தையும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்ய வேண்டும். (மேலதிக விபரங்களுக்கு…)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

“பிராத்தனையும் (துஆவும்) வணக்கமாகும்” (அபூதாவூத்)

ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகளின் கடவுள் நம்பிக்கை எவ்வாறிருந்தது எனில், இவ்வுலகத்தையும் அதில் உள்ளவர்கள் அனைவரையும் படைத்துப் பரிபாலிப்பவன் அல்லாஹ் என்றே அறிந்து வைத்திருந்தனர். இதை இறைவனுடைய திருமறையும் பின்வருமாறு கூறுகிறது.

‘உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?’ என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் ‘அல்லாஹ்’ என பதிலளிப்பார்கள் ‘அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?’ என்று நீர் கேட்பீராக. (அல்-குர்ஆன் 10:31)

மேலும் பார்க்கவும் அல்-குர்ஆனின் வசனங்கள் 43:87 மற்றும் 29:63.

ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்தவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொணடிருந்தார்களே! பிறகு எதற்காக இறைவன் அவர்களை “முஷ்ரிக்குகள்” என்ற அழைக்க வேண்டும்? காரணம் என்னவெனில் அவர்கள் முன் சென்ற நபிமார்கள் மற்றும் நல்லடியார்களின் உருவங்களை சிலைகளாக வடித்து அந்த சிலைகளிடம் தங்களின் தேவைகளை முறையிட்டு வந்தனர். அந்த சிலைகளிடமே உதவி தேடினர். ஆபத்து காலங்களில் பாதுகாவலும் தேடி வந்தனர்.

படைத்தவனிருக்க அவனை விட்டு விட்டு ஏன் இந்த சிலைகளிடம் பிரார்த்திக்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்கப்பட்ட போது அவர்கள் அளித்த பதில், “எங்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக எங்களை அல்லாஹ்வின் பால் நெருக்கமாக்கிவைப்பதற்காகவே நாங்கள் அந்த சிலைகளை வணங்குகிறோம்” என்று கூறினர். இதை அல்லாஹ்வும் தனது திருமறையில் கூறுகிறான்.

அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ‘அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை’ (என்கின்றனர்). (அல்-குர்ஆன் 39:3)

ஜாஹிலிய்யாக் கால முஷ்ரிக்குகளின் செயல்களோடு தற்போது கப்ரு வணக்க முறைகளை ஆதரிப்போர்களின் செயல்களை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால், இவைகளிலிருந்து நாம் பெறும் தெளிவு என்னவெனில்,

அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள் இந்த அகில உலகங்களையும் படைத்து பரிபாலித்து ஆட்சி செலுத்தி வருபவன் அல்லாஹ் ஒருவனே என்று நம்பியிருந்தார்கள்.

இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள் நபிமார்கள், இறந்த நல்லடியார்கள் ஆகியோர்களிடம் தங்களின் தேவைகளையும் கேட்டும், ஆபத்து காலங்களில் பாதுகாவல் தேடியும் வந்தனர்.

இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் இறந்த நல்லடியார்கள், இறைநேசர்களிடமும் ஷெய்கு மார்களிடமும் தங்களின் கோரிக்கைகளையும் பிரார்தனைகளையும் செய்கின்றனர். அவர்களிடம் ஆபத்து காலங்களில் அவர்களிடம் பாதுகாவலும் தேடுகின்றனர்.

அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள் இறந்து போன அந்த நல்லடியார்களின் உருவங்களைச் சிலைகளாக வடித்து, அவற்றை பூஜித்து வந்தனர்.

இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் இறந்த நல்லடியார்கள், இறைநேசர்கள் என சொல்லப்படுவோர் இறந்தவுடன் அவர்களுடைய கல்லறைகளில் கட்டடங்கள் (தர்ஹா) எழுப்பி அவர்களுடைய கப்றுகளை உயரமாக எழுப்பி, அவற்றிற்கு சந்தனம் பூசி, போர்வைகள் போர்த்தி, பூமாலைகள் அணிவித்து பூஜை புணஸ்காரங்கள் செய்கின்றனர்.

அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள் அந்த சிலைவடிவத்தில் உள்ள நல்லடியார்களுக்காக நேர்ச்சை செய்து அவர்களுக்காக காணிக்கை செய்து அறுத்துப் பலியிட்டனர்.

இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் கப்ருகளில் அடக்கமாகியிருக்கும் இறந்த நல்லடியார்கள், இறைநேசர்கள் என சொல்லப்படுவோர்களுக்காக நேர்ச்சைகள் செய்தும் அறுத்துப் பலியிட்டும் வருகின்றனர்.

அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள், நல்லடியார்களின் உருவத்தில் உள்ள சிலைகளை தவாபு செய்து அவர்களிடம் மன்றாட்டம் செய்து வந்தனர்.

இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் நல்லடியார்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மன்றாடுகின்றனர்.

அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகளிடம் படைத்த இறைவனை விட்டு விட்டு நீங்கள் ஏன் இந்த சிலைகளை இப்படி வழிபடுகறீர்கள் என்று கேட்டால், “நாங்கள் இந்த சிலைவடிவத்தில் இருக்கின்ற நல்லடியார்களிடம் பிரார்த்தித்தால், அவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்து எங்களுடைய கோரிக்கைகளை பெற்றுத்தருவார்கள்” என்று கூறினர்.

இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளிடம், அதே போல் கேட்டால் “நாங்கள் இந்த கப்றுகளில் அடக்கமாகியிருக்கும் இறை நேசர்களிடம் பிரார்த்தித்தால், அவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்து எங்களுடைய கோரிக்கைகளை பெற்றுத்தருவார்கள்” என்று கூறுகிறார்கள்.

என தருமை சகோதர சகோதரிகளே! சற்று சிந்தனை செய்து பாருங்கள். ஜாஹிலிய்யாக் கால முஷ்ரிக்குகளுக்கும் இன்றைய காலக் கட்டத்தில் வாழும் கப்று வணக்க முறைகளை ஆதரிப்போருக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் செய்தவற்றையே தான் இவர்களும் செய்கின்றார்கள். அவர்கள் கூறிய காரணத்தையே இவர்களும் கூறுகின்றார்கள்.

சிலருக்கு கோபம் வரலாம். நாங்கள் கப்ருகளை வணங்கவில்லையே! எங்களை ஏன் கப்று வணங்கி என்று திட்டுகிறீர்கள் என்று?

ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்தவர்கள் நல்லடியார்களின் வடிவத்தில் இருந்த உருவச்சிலைகளை வலம் வந்து, அந்த சிலைகளுக்கு மரியாதை செலுத்திஅதன் மூலம் அந்த நல்லடியார்களிடம் பிரார்த்தனை செய்தனர். அதனால் அவர்களை சிலை வணங்கிகள் என்கிறோம்.

மாற்று மதத்தவர்கள் தங்களின் கடவுள் உருவத்தில் இருப்பதாக அவர்கள் கருதுகின்ற அந்த சிலைகளுக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்து, அந்த சிலைகளுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் அந்த தெய்வங்களை வணங்குவதால் அவர்களையும் சிலை வணங்கிகள் என்கிறோம்.

ஆனால் இறைநேசர்கள் அடக்கமாகியிருக்கும் கப்ருகளை வலம் வந்து, அதற்கு பூசி, மெலுகி, போர்வை போர்த்தி, நெய் விளக்கு ஏற்றி, சந்தனம் பூசி, பத்தி கொழுத்தி, பூமாலை அணிவித்து அந்த சிலைகளை வணங்குவோர் என்னென்ன காரியங்களை அந்த சிலைகளுக்கு செய்கிறார்களோ அவையனைத்தையும் அந்த நல்லடியாரின் கப்றுகளுக்கு செய்பவரை கப்று வணங்கி என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது?

அல்லாஹ்விடம் நேரடியாக கேட்பதை விட்டு விட்டு அந்த நல்லடியார்களின் சிலைகளிடம் இவர்கள் கேட்ட காரணத்தால் அவர்களை அல்லாஹ் “முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்)” என்றான். அதே செயல்களையே செய்யும் தற்காலத்தவர்களை என்ன சொல்வது? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே!

அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே ஒருவர் எவ்வளவு தான் பாவங்கள் செய்திருந்தாலும் தான் நாடினால் மன்னித்து விடுவேன் என்று கூறுகிறான். ஆனால் ஒரே ஒரு பாவத்தை மட்டும் மன்னிக்கவே மாட்டேன் என்று கூறுகிறான். இறைவனால் மன்னிப்பே கிடைக்காத அத்தகைய படுபயங்கரமான பாவம் என்னவெனில் “இறைவனுக்கு இணை வைத்தலாகும்”. அதாவது எந்த தேவைகளையும் இறைவனிடம் நேரடியாக கேட்டுப் பெறாமல் இடைத்தரகர் (அவுலியா, இறை நேசர் போன்றவர்கள்) மூலம் கேட்டு பெறுவது இத்தகைய இணைவைப்பாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)

அல்லாஹ் நம் முஸ்லிமான நம் அனைவரையும் காப்பாற்றி நமக்கு அவனுடைய நேர்வழியை காட்டுவானாகவும்.

தொழுகையில் ருகூவின் போது எந்த துஆவை ஓதவேண்டும்?- Audio/Video

உரை : மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

வாராந்திர பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி)

நாள் : 11-06-2008

நிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர்

Link : Audio/Video

Jul 1, 2008

ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?

அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

‘இல்முல் கை(g)ப்’ எனப்படும் ‘மறைவான ஞானம்’ அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் மறைவான விஷயங்கள் தெரியாது. நபிமார்களுக்கு அவன் அறிவித்துக் கொடுத்ததைத் தவிர எதுவும் தெரியாது. அதை அல்லாஹ்வும் தன்னுடைய திருமறையில் நபி (ஸல்) அவர்களைக் கூறுமாறு பணித்திருக்கிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: -

(நபியே!) நீர் கூறும்: ‘என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.’ இன்னும் நீர் கூறும்: ‘குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்-குர்ஆன் 6:50)

(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.’ (அல்-குர்ஆன் 7:188)

தம்மை முஸ்லிம்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர், ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியும். நான் ஜின்களை வசப்படுத்தி வைத்திருக்கிறேன். அதன் மூலம் எனக்கும் மறைவான விஷயங்கள் தெரியும் என வாதிடுகின்றனர்.

இவர்கள் மார்க்கம் அறியா பாமர மக்களிடம்,

- காணாமல் போன பொருட்களை கண்டுபிடித்து தருவதாகவும்,

- கண்களுக்கு தெரியாமல் மறைத்து செய்யப்பட்டிருக்கும் செய்வினை, சூன்யம், தட்டு, தகடு போன்றவைகளை நீக்குவதாகவும்,

- ஜின்களுக்கு தெரிந்த வைத்திய முறைகளைக் கொண்டு நோய்களைத் தீர்ப்பதாகவும்

கூறிக்கொண்டு மார்க்க அறிவில்லா பாமர மக்களை ஏமாற்றி அவர்களின் கடின உழைப்பில் தங்களின் வயிறுகளை வளர்த்து வருகின்றனர்.

நிச்சயமாக இவர்கள் பொய்யான வழிகேடர்களே! ஏனென்றால் அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே மறைவான விஷயங்கள் ஜின்களுக்குத் தெரியாது என்று கூறியிருக்க இவர்கள் தெரியும் என்று வாதிடுகின்றனர். மேலும் அல்லாஹ் சுலைமான் (அலை) அவர்களுக்கு மட்டும் தந்த ஜின்களை வசப்படுத்தும் ஆற்றல் தங்களுக்கும் இருக்கும் என வாதிடுகின்றனர்.

அல்லாஹ் கூறுகின்றான்: -

34:12 (அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது; மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்).

34:13 அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. ‘தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே’ (என்று கூறினோம்).

34:14 அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை; அவர் கீழே விழவே; ‘தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிருந்திருக்க வேண்டியதில்லை’ என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது. (அல்-குர்ஆன் 34:12-14)

மேற்கண்ட வசனத்தில்,

சுலைமான் (அலை) அவர்களுக்கு ஜின்களை வசப்படுத்தி தந்நதாகவும், அவைகள் சிரமமான பல பணிகளை சுலைமான் (அலை) அவர்களுக்காகச் செய்ததாகவும் அல்லாஹ் கூறுகிறான்.
சுலைமான் (அலை) அவர்கள் இறந்தது கூடத் தெரியாமல் ஜின்கள் வேலை செய்து கொண்டிருந்தது. அப்போது அவர் சாய்திருந்த தடியை கரையான் அரித்தவுடன் அவர் கீழே விழவே ஜின்களுக்கு சுலைமான் (அலை) அவர்கள் இறந்த விஷயம் தெரியலாயிற்று. அப்போது ஜின்களின் மனநிலையை, ”தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிருந்திருக்க வேண்டியதில்லை’ என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது’ என்று அல்லாஹ் விளக்குகிறான்.

எனவே, முஃமினான சகோதர, சகோதரிகளே! மேற்கண்ட வசனங்களிலிருந்து தெளிவு பெற்றவர்களாய், தாங்கள் ஜின்களை வசப்படுத்தி வைத்திருப்பதாக் கொண்டு திரியும் போலிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறோம்.

ஏனென்றால் நிச்சயமாக அவர்களால் அந்த ஜின்களை வசப்படுத்த முடியாது. ஒரு வாதத்திற்காக அவர்கள் ஜின்களை வசப்படுத்துவதாக வைத்துக்கொண்டாலும் மேற்கண்ட வசனத்தின் படி ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாது என்பது தெளிவான உண்மையாகும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் மார்க்கத்தில் தெளிவைக் கொடுத்து நேரான வழியைக் காட்டுவானாகவும்.