Jan 25, 2009

தொழுகையின் கடமை மற்றும் வாஜிபுகள்!

தொழுகையின் ருகுன்கள் (முதல் நிலைக் கடமைகள்): -

1) சக்தியுள்ளவன் நின்று தொழுவது

2) தக்பீரத்துல் இஹ்ராம் என்ற ஆரம்ப தக்பீர் கூறுவது

3) ஒவ்வொரு ரக்அத்திலும் சூரத்துல் பாத்திஹா ஓதுதல்

4) ருகூவு செய்தல்

5) ருகூவுக்குப் பின் நேராக நிற்பது

6) ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு ஸஜ்தா செய்தல்

7) ஸஜ்தாவிலிருந்து எழுவது

8.) இரண்டு ஸஜ்தாக்களிடையில் அமர்தல்

9) அனைத்து செயல்களையும் நிதானமாக செய்தல்

10) கடைசி அத்தஹிய்யாத்திற்காக அமர்வது

11) கடைசி இருப்பில் அத்தஹிய்யாத்து ஓதுதல்

12) கடைசி இருப்பில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து ஓதுதல்

13) இரண்டு ஸலாம்கள் கூறுவது

14) கடமைகளை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக செய்தல்

தொழுகையின் வாஜிபுகள் (இரண்டாம் நிலைக் கடமைகள்): -

1) தக்பீர் தஹ்ரிமா தவிர உள்ள ஏனைய தக்பீர்கள்

2) இமாமும், தனித்து தொழுபவரும் “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதாஹ்” கூறுவது

3) ருகூவிலிருந்து எழுந்ததும் “ரப்பனா லகல் ஹம்து” கூறுவது.

4) ருகூவில் “ஸுப்ஹான ரப்பியல் அளீம்” கூறுவது

5) சுஜுதில் “சுப்ஹான ரப்பியல் அஃலா” கூறுவது

6) இரு ஸஜ்தாக்களிடையில் “ரப்பிஃக்ஃபிர்லி” கூறுதல்

7) நடு இருப்பில் அத்தஹிய்யாத் ஓதுதல்

8.) நடு இருப்பு இருத்தல்

ஸஜ்தா திலாவத் செய்தல்!

அல்-குர்ஆனில் ஸஜ்தாவுடைய வசனங்களை ஓதும் போது ஸுஜுது செய்வது சுன்னத்தாகும். தொழுகையின் போதும், தொழுகையல்லாத இடங்களிலும் ஸ்தாவுடைய வசனங்களை ஓதும் போது நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா திலாவத் செய்திக்கிறார்கள்.

தொழுகையில் ஸஜ்தாவுடைய வசனங்களை ஓதும் போது அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூறியவாறு ஸுஜுதுக்கு சென்றுவிட வேண்டும். பின்னர் மீண்டும் தக்பீர் கூறி எழுந்து நின்று விட்ட இடத்திலிருந்து குர்ஆனை ஓதவேண்டும். ஜமாத்தாக தொழும் போது இமாம் ஸஜ்தா திலாவத் செய்யும் போது அவருடன் நாமும் செய்ய வேண்டும்.

தனியாக குர்ஆன் ஓதும்போது ஸஜ்தாவுடைய வசனங்கள் வந்தால் அப்படியே “அல்லாஹு அக்பர்” என்று கூறி ஸுஜுதுக்கு சென்று விடவேண்டும். ஸுஜுதிலிருந்து எழும்போது தக்பீர் கூறவேண்டிய அவசியம் இல்லை. மேலும் பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்துப்படி ஸஜ்தா திலாவத் செய்வதற்கு உளூவுடன் இருக்கவேண்டிய அவசியமில்லை.

ஸஜ்தா திலாத்தின் போது நாம் வழக்கமாக ஸுஜுதில் ஓதக் கூடிய துஆக்களையே ஓதலாம்.

Jan 18, 2009

பாவமன்னிப்பு தேடல்!

எல்லோரும் தவறு செய்பவர்களே!

‘எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே! தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்பு தேடுபவர்களே!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரரம் : திர்மிதி.

பாவமன்னிப்பு தேடினால் வெற்றியாளராகலாம்: -

அல்லாஹ் கூறுகிறான்: -

முஃமின்களே! நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்-குர்ஆன் 24:31)

கலப்பற்ற மனதோடு பாவமன்னிப்பு தேடினால் சுவனச்சோலை பரிசாக கிட்டும்!

அல்லாஹ் கூறுகிறான்: -

ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான். (அல்-குர்ஆன் 66:8)

நாளொன்றுக்கு நூறு முறை பாவமன்னிப்பு தேடிய நபி (ஸல்) அவர்கள்!

‘மனிதர்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள். நான் ஒவ்வொரு நாளும் அல்லாஹ்விடம் நூறு முறை பாவமன்னிப்புத் தேடுகிறேன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அஃகர்ரு பின் யஸார் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்களே நாளொன்றுக்கு நூறு முறை பாவமன்னிப்பு தேடினார்கள் என்றால் நாம் எவ்வாறு தேட வேண்டும் என சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

இறைவனின் மகிழ்ச்சி!

‘உங்களில் ஒருவர் வனாந்தரத்தில் தனது ஒட்டகத்தை தவறவிட்ட பிறகு திடீரென அது கிடைக்கப்பெற்ற நிலையில் அவர் அடைகின்ற மகிழ்ச்சியை விட அதிகமாக அல்லாஹ், தனது அடியான் பாவமன்னிப்புத் தேடும் போது மகிழ்ச்சி அடைகிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

பாவமன்னிப்பு தேடுவதை தாமதிக்க கூடாது!

‘உயிர் தொண்டைக் குழியை அடைவதற்கு முன்பு வரை ஒரு அடியானின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உமர் (ரலி)

சூரியன் மேற்கில் உதிக்குமுன்…

‘அல்லாஹ் இரவில் தன் கையை நீட்டுகிறான் பகலில் பாவம் செய்தவர் மன்னிப்பு கேட்பதற்காக. பகலில் தன் கையை நீட்டுகிறான் இரவில் பாவம் செய்தவன் மன்னிப்புக் கோருவதற்காக. சூரியன் மேற்கில் உதிக்கும் வரை இவ்வாறு செய்கிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

தொடர்புடைய ஆக்கம்:

பாவமன்னிப்பு தேடுவது எவ்வாறு?

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பகுதி-1

இழப்புக்குள்ளாக்கப் படும் அருட் செல்வங்கள்: -

“மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)

உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்தது: -

‘சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும். காலையில் சிறிது நேரம் அல்லது மாலையில் சிறிது நேரம் இறைவழியில் செல்வது உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), ஆதாரம் : புகாரி

வழிப்போக்கனைப் போல இவ்வுலகில் வாழ வேண்டும்: -

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு’ என்றார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு’ என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள். (ஆதாரம் : புகாரி)

முதியவரின் இளமை: -

“முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும். 1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

மனிதர்களோடு வளரும் ஆசைகள்: -

“மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன: 1. பொருளாசை. 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி

நரகம் தடை செய்யப்படக் காரணமான வார்த்தை: -

இத்பான் இப்னு மாலிக் அல்அன்சாரி (ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொல்ல கேட்டேன். “(ஒருநாள்) அதிகாலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்திருந்தபோது ‘அல்லாஹ்வின் திருப்தியை நாடி ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறியவாறு மறுமை நாளில் ஓர் அடியார் வந்தால் அவரின் மீது நரகத்தை அல்லாஹ் தடை செய்யாமல் இருப்பதில்லை”‘ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஹ்மூத் இப்னு ரபீஉ (ரலி), ஆதாரம் : புகாரி

பொறுமைக்குப் பிரதிபலன் சொர்க்கம்: -

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்”. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

மறுமையை மறக்கடிக்கும் உலகத்தின் செல்வம்: -

‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, அது (மறுமையின் எண்ணத்திலிருந்து) அவர்களின் கவனத்தைத் திருப்பிவிட்டதைப் போன்று உங்களின் கவனத்தையும் அ(ந்த உலகாசையான)து திருப்பிவிடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி), ஆதாரம் : புகாரி

செல்வத்துக்கு அடிமையானவன் துர்பாக்கியவான் ஆவான்: -

“பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

“ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : புகாரி

நம்முடைய செல்வம் எது?

“(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் ‘உங்களில் யாருக்காவது தம் செல்வத்தை விடத் தம் வாரிசுகளின் செல்வம் விருப்பமானதாக இருக்குமா?’ என்று கேட்டார்கள். தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் அனைவருக்குமே (வாரிசுகளின் செல்வத்தை விட) எங்களின் செல்வமே விருப்பமானதாகும்’ என்று பதிலளித்தார்கள். ‘அவ்வாறாயின், ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) செலவிட்டதே அவரின் செல்வமாகும். (இறக்கும் போது) விட்டுச் செல்வது அவரின் வாரிசுகளின் செல்வமாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி

மறுமையில் நற்பலன் குன்றியவர்கள்: -

‘(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்; ஒரு சிலரைத் தவிர, அவர்களுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர்கள் தம் வலப் பக்கமும் இடப் பக்கமும் தம் முன் பக்கமும் பின் பக்கமும் வாரி வழங்கி அச்செல்வத்தால் நன்மை புரிகிறார்கள். (இவர்களைத் தவிர)’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி), ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி).

போதுமென்ற மனமே உண்மையான செல்வமாகும்: -

“(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

தொடர்ந்து செய்யப்படும் நற்செயலே அல்லாஹ்வுக்கு விருப்பமானது!

‘நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே’ என்று விடையளித்தார்கள். மேலும், ‘நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்’ என்றும் கூறினார்கள். . அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி

நன்றியுள்ள அடியாரின் செயல்: -

நபி(ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு அல்லது புடைக்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?’ என்று கேட்பார்கள். அறிவிப்பவர்: முஃகீரா இப்னு ஷ{அபா(ரலி), ஆதாரம் : புகாரி

விசாலமான அருட்கொடை எது?

அன்சாரிகளில் சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவ்வாறு கேட்ட யாருக்குமே நபி(ஸல்) அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்துவிட்டது. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு அந்த அன்சாரிகளிடம் நபி(ஸல்)அவர்கள் ‘என்னிடம் உள்ள எச்செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப் போவதில்லை. (இருப்பினும்) சுயமரியாதையோடு நடப்பவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச் செய்வான். (இன்னல்களைச்) சம்ப்பவருக்கு அல்லாஹ் மேலும் சம்ப்புத் தன்மையை வழங்குவான். பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருப்பவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை (வேறெதும்) உங்களுக்கு வழங்கப்படவில்லை’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி), ஆதாரம் : புகாரி

விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்பவர்கள்!

“என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில், ஓதிப்பார்க்க மாட்டார்கள். பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள். தம் இறைவ(ன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவ)னையே சார்ந்திருப்பார்கள்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி

சொர்க்கத்திற்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டவர்கள்!

“தம் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ளத(hன நாவி)ற்கும், தம் இரண்டு கால்களுக்கு இடையே உள்ளத(hன மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருககு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) , ஆதாரம் : புகாரி

அண்டை வீட்டாருக்கு தொல்லை தராதே!

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய் மூடி இருக்கட்டும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹ¤ரைரா (ரலி) , ஆதாரம் : புகாரி

விருந்தினரைக் கண்ணியப்படுத்துங்கள்!

நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை என் காதுகள் செவியேற்றன்; என் உள்ளம் அதை மனனமிட்டது. விருந்துபசாரம் மூன்று நாள்களாகும். (அவற்றில்) ‘அவரின் கொடையும் அடங்கும் அப்போது அவரின் கொடை என்ன?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘(அவரின் கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பு) ஆகும்’ என்று கூறிவிட்டு, ‘அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். மேலும், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்’ என்றார்கள். அறிவிப்பவர்:அபூ ஷ{ரைஹ் அல்அதவீ அல்குஸாஈ(ரலி), ஆதாரம் : புகாரி

பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் பேசினால்?

“ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

“ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழல் யாருக்கு கிடைக்கும்?

“(தன்னுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில்) ஏழு போருக்கு அல்லாஹ் தன்னுடைய (அரியாசத்தின்) நிழலில் அடைக்கலம் அளிக்கிறான். (தனிமையில்) அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடிப்பவர் (அவர்களில் ஒருவராவார்.). என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

இறையச்சத்தால் குறைவாக சிரி! நிறைய அழு!

“நான் அறிவதை நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் குறைவாகச் சிரிப்பீர்கள். அதிகமாக அழுவீர்கள்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

சொர்க்கம், நரகம்!

“மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

செல்வத்தில் கீழானவர்களை நினைத்துப்பார்: -

“செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

நன்மையான காரியத்தை செய்ய நினைத்தாலே நன்மை எழுதப்படுகின்றது: -

“(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : புகாரி

சொர்க்க வாசியா அல்லது நரகவாசியா என தீர்மானிப்பது எது?

“(கைபர் போரின் போது) நபி(ஸல்) அவர்கள் (யூத) இணைவைப்பாளர்களிடம் போரிட்டுக் கொண்டிருந்த (குஸ்மான் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதரைப் பார்த்தார்கள். அவர் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தான (பங்காற்றுப)வராக இருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகிறவர் இவரைப் பார்த்துக் கொள்ளலாம்’) என்று (குஸ்மான் எனும் அந்த மனிதரைக் குறித்துக்) கூறினார்கள். (அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்று அறிந்து கொள்வதற்காக) உடனே அவரை இன்னொரு மனிதர் பின்தொடர்ந்தார். (குஸ்மான் என்ற) அந்த மனிதரோ (எதிரிகளுடன் கடுமையாகப்) போராடிக் கொண்டு இருந்தார். இறுதியில் அந்த மனிதர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துவிட விரும்பி, தன்னுடைய வாளின் (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து, (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து, அதன்) கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கிடையே வைத்து, அந்த வாளின் மீது உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து) கொண்டார். வாள் அவரின் தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது.

அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘ஓர் அடியார் மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் நற்செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். (இதைப் போன்றே) ஓர் அடியார் மக்களின் பார்வையில் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துவருவார். (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன’ என்றார்கள்” அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி), ஆதாரம் : புகாரி

Jan 17, 2009

பொய்யில் ஊறித்திளைக்கும் யூதர்கள்!

பாலஸ்தீனிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தையே தீவிரவாத அரசாங்கம் என்று சொல்லி அப்பாவி பாலஸ்தீனிய மக்களைக் கொன்று குவித்தது போதாதென்று இன்று அராஜகத்தின் உச்சக்கட்டத்திற்கே சென்று அப்பாவி பொது மக்களின் மீது குண்டு மழை பொழிந்து பச்சிளங் குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவிக்கும் யூதர்கள் வழமையாக ‘நாங்கள் தீவிரவாதிகளின் இலக்குகளை மட்டுமே தாக்குகிறோம்’ என்று வழமையான தங்களின் பொய் மூட்டைகளை உலகிற்கு அவிழ்த்து விட்டு மேற்குலகவாதிகளை நம்ப வைத்து அவர்கள் மௌனம் காக்க வைத்து ஒரு மாபெரும் இன அழிவையே நடத்துகின்றனர்.

இப்போது மட்டுமல்ல காலங்காலமாகவே யூதர்கள் பொய்யர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர் என்பதற்கு நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று ஸஹீஹ் புகாரியில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்: -

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி (யூத மதத்தில் இருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்களுக்கு எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து சில விஷயங்களைக் குறித்துக் கேட்டார். ‘தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்’ என்று கூறினார். பிறகு, ‘1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையின் சாயலிலோ, தன் தாயின் சாயலிலோ இருப்பது எதனால்?’ என்று கேட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘சற்று முன்பு தான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்’ என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், ‘ஜிப்ரீல் தான் வானவர்களிலேயே யூதர்களுக்குப் பகைவராயிற்றே!’ என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்றுதிரட்டும். சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்பயான சதையாகும். குழந்தை(யிடம் காணப்படும் தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது’ என்று பதிலளித்தார்கள். (உடனே) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், தாங்கள் இறைத்தூதர் தாம் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்’ என்று கூறினார்கள்.

பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். எனவே, நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட செய்தியை அவர்கள் அறிவதற்கு முன்னால் தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்’ என்று கூறினார்கள்.

அப்போது யூதர்கள் (நபி - ஸல் - அவர்களிடம்) வந்தார்கள். (உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) வீட்டினுள் புகுந்து (மறைந்து) கொண்டார்கள்.) நபி(ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), ‘உங்களில் அப்துல்லாஹ் இப்னு சலாம் எத்தகைய மனிதர்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘அவர் எங்களில் நல்லவரும், எங்களில் நல்லவரின் மகனும் ஆவார்; எங்களில் சிறந்தவரும், சிறந்தவரின் மகனும் ஆவார்’ என்று பதிலளித்தார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு சலாம்) இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!’ என்று கூறினார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் முன்பு போன்றே கேட்டார்கள். அதற்கு அவர்கள் முன்பு போன்றே பதிலளித்தார்கள். உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் வெளியே வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்’ என்று கூறினார்கள். உடனே யூதர்கள், ‘இவர் எங்களில் கெட்ட வரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்’என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) குறை கூறலானார்கள். (அவற்றைக் கேட்ட) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், ‘இதைத் தான் நான் அஞ்சிக் கொண்டிருந்தேன், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள்.

சபித்தல் முஃமின்களின் பண்பு அல்ல!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.

நம்மில் சிலருக்கு கோபம் ஏற்படும் சில நேரங்களில் உடனே அவ்வாறு கோபம் ஏற்படுவதற்கு காரணமாணவர்களைச் சபித்து விடுகின்றனர். உதாரணமாக தமக்கு உபகாரம் செய்யாத பிள்ளைகளைப் பெற்றோர்களும், துரோகம் இழைத்தவர்களை பிறரும் சபிப்பதைப் காணமுடிகிறது. இன்னும் சிலர் சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் மண்ணை வாறியிறைத்து சாபமிடும் பழக்கமுடையவராயிருப்பதைக் காணலாம்.

இத்தகைய பண்புகள் உண்மையான முஃமின்களுக்கு உரிய பண்பு இல்லை. முஃமின்களைச் சபிப்பது குறித்து நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

‘ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : திர்மிதீ.

மேலும் நபி (ஸல்) அவர்கள், ‘அதிகம் சபிப்பது உண்மையானவர்களுக்கு அழகல்ல’ என்று கூறியிருக்கிறார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

சபித்தவனையே சூழும் சாபம்:-

‘ஒரு அடியான் எதாவது ஒரு பொருளை சபித்தால் அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும். அப்போது வானத்தின் வாசல்கள் அடைக்கப்படும். பிறகு அந்த சாபம் பூமியை நோக்கி இறங்கும். அப்போது பூமியின் வாசல்களும் அடைக்கப்படும். பிறகு அது வலது இடது புறங்களின் பக்கம் திரும்பும். அங்கும் வழி கிடைக்காததால் யார் மீது சபிக்கப்பட்டதோ அவரின்பக்கம் திரும்பிச் செல்லும். அவர் அதற்கு தகுதியற்றவராக இருந்தால் சொன்னவரிடமே திரும்பிச் சென்றுவிடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி), ஆதாரம் : அபூதாவுத்.

ஒரு முஃமினை சபிப்பது அவனை கொலை செய்வதற்கு ஒப்பாகும்!

ஒரு முஃமினை சபிப்பது அவனை கொலை செய்வதைப் போன்றதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஜைத் (ரலி), ஆதாரம் : புகாரி.

நாவைப் பேணுவோம்!

அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

படைப்பினங்களிலே மிகச் சிறந்த படைப்பாக அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மனிதன் தன்னுடைய சிறிய நாவினால் சில நேரங்களில் மேன்மையடைகின்றான். ஆனால் பல நேரங்களில் சிறுமையடைந்து விடுகிறான்.

உலகில் நிகழும் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம் இந்த நாவு தான் என்றால் அது மிகையாகாது. இந்த நாவின் மூலம் பல சமூகங்களுக்கிடையே பெரும் போர்களும் அழிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. அதே போல் மிகப் பெரும் சமுதாய எழுச்சிகளும், புரட்சிகளும் ஏற்பட்டிருக்கின்றன. எனவே நாம் இந்த நாவைப் பயன்படுத்துவதைப் பொறுத்து அதன் வினைவு ஆக்கப் பூர்வமானதாகவோ அல்லது அழிவைத் தரக்கூடியதாகவோ அது அமைகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

‘ஒரு அடியான் அல்லாஹ் திருப்தியுறும் வார்த்தையைக் கூறுகிறார். (ஆனால்) அதனுடைய சக்தியைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. இதன் காரணமாக அல்லாஹ் அவனுடைய அந்தஸ்த்தை உயர்த்துகிறான். இன்னொரு மனிதன் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய வார்த்தையை பேசுகிறான். (ஆனால்) அவன் அதனுடைய சக்தியை எண்ணிப் பார்ப்பதில்லை. இதன் காரணமாக அல்லாஹ் அவனை நரகத்தில் எறிகிறான்’ அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் :புகாரி.

நம் வாயிலிருந்து உச்சரிக்கும் அனைத்து வார்த்தைகளும் பதிவு செய்யப்படுகின்றது: -

முதலில் நாம் ஒன்றை கவனமாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். இறைவனால் நியமிக்கப்பட்டிருக்கும் வானவர்கள் கன நேரம் கூட தவறாமல் நம்மைக் கண்கானித்துக் கொண்டு நம்முடைய அனைத்துச் செயல்களையும் பதிவு செய்கின்றனர். மேலும் நம் வாயிலிருந்து உதிரும் அனைத்து வார்த்தைகளையும் ஒன்று கூட விடாமல் பதிவு செய்கின்றனர். அல்லாஹ் மறுமையில் இவை குறித்து நிச்சயமாக நம்மிடம் கேள்வி கேட்பான் என்பதை முஸ்லிமான ஒவ்வொருவரும் நன்கு நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:

“கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை” (அல்-குர்ஆன் 50:18)

சிந்திக்காமல் பேசுவதால் ஏற்படும் விபரீதம்: -

ஒரு அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப்பற்றி (நல்லதா அல்லது கெட்டதா என்று) சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடைப்பட்ட தூரமளவிற்கு நரகத்தின் (அடிப்பாகத்திற்கு) வீழ்ந்து விடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

முஸலிம்களில் சிறந்தவர்: -

‘முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ‘எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களே அவரே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), ஆதாரம் : புகாரி.

நல்லதைப் பேசு! அல்லது வாய் மூடி இரு!

‘எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும்! அல்லது வாய் மூடி இருக்கட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

சுவர்க்கம் செல்ல எளிய வழி: -

‘எவர் தமது தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாகப் பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி), ஆதாரம் : புகாரி.

Jan 11, 2009

படைப்பாளனின் இறுதிவேதம்!

படைப்பாளன் நீங்களா? இறைவனா? உங்களைப் படைப்பவன் அல்லாஹ்வே!

அகிலங்களின் இறைவனான அல்லாஹ் கூறுகிறான்:

நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல). முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா? (அல்-குர்ஆன் 56:57-62)

உங்களின் உணவுகளான பயிர்களை முளைப்பிக்கச் செய்பவன் அல்லாஹ்வே!

(இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா? அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா? நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். ‘நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம். ‘மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்’ (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்). (அல்-குர்ஆன் 56:63-67)

உங்களின் குடிநீரை உருவாக்குபவனும் அல்லாஹ்வே!

அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? (அல்-குர்ஆன் 56:68-70)

நெருப்பை உண்டு பண்ணுபவனும் அல்லாஹ்வே!

நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா? அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா? நாம் அதனை நினைவூட்டுதாகவும், பயணிகளுக்கு பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம். ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக. (அல்-குர்ஆன் 56:71-74)

அல்குர்ஆன் அகிலங்களின் படைப்பாளனாகிய அல்லாஹ்வின் இறுதிவேதமாகும்: -

நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன். நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான பிரமாணமாகும். நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது. தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள். அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது. அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா? நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா? (அல்-குர்ஆன் 56:75-82)

வரி (Tax) கட்டினால் ஜக்காத் கொடுக்கத் தேவையில்லையா?

அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

நம்முடைய முஸ்லிம் சகோதர, சகோதரிகளில் சிலர் ஜக்காத் மற்றும் வரிகள் (Tax) பற்றிய போதிய தெளிவின்மையில் இருப்பதாக அறிய முடிகிறது. அவர்களின் எண்ணம் என்னவெனில் “தாங்கள் தங்களின் வருமானத்தில் குறிப்பிடத் தக்க பெரும் தொகையினை தாங்கள் வசிக்கும் நாட்டிற்கு வரியாகச் செலுத்துகிறோம். அந்நாட்டில் உள்ள ஏழைகள் மற்றும் அந்நாட்டின் மேம்பாட்டிற்காக அந்தப் பணம் அரசாங்கம் மூலமாக செலவிடப்படுகின்றது. ஜக்காத் பணமும் அதற்காகத் தானே செலவிடப்படுகின்றது. எனவே அரசாங்கம் மூலமாக நாமும் அதே பணியைச் செய்வதால் ஜக்காத் கொடுக்க வேண்டியதில்லை” என்பது அவர்களின் எண்ணமாகும்.

இவ்வாறு எண்ணம் கொள்வதற்கு ஜக்காத் பற்றிய போதிய அடிப்படை அறிவு இல்லாமையே காரணம் ஆகும். ஜக்காத் என்பது அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வால் முஃமின்களின் மீது விதிக்கப்பட்ட கடமையாகும். வரி (Tax) என்பது ஒரு நாட்டை நிர்வகித்து அதை மேம்படுத்துவதற்காக அந்நாட்டு அரசாங்கத்தால் அதன் மக்களின் மீது விதிக்கப்ட்ட ஒரு கட்டணமாகும்.

இத்தகைய வரிப்பணங்கள் ஒரு நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் பலன் அளிக்கிறது என்பதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. ஆனால் ஜக்காத் என்பது இறைவனால் விதிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே செலவிடப்படவேண்டிய தொகை என வலியுறத்தப்பட்ட ஒன்றாகும்.

ஒருவன் வரிகட்டுகிறான் என்றால் அவன் அந்த நாட்டில் தங்கியிருக்க வேண்டுமே என்று கட்டுகிறானேத் தவிர அல்லாஹ்வின் அன்பையும் உவப்பையும் பெறுவதற்காக அந்த வரியை கட்டுவதில்லை. ஆனால் முறையான இஸ்லாமிய நாடாக இருக்குமானால் அது இவ்வாறு வரிவிதிக்காமல் ஜக்காத்தை வசூலித்து அதை அதற்குரிய முறையில் இறைவனின் கட்டளைப்படி செலவு செய்யும்.

எனவே ஒருவன் ஜக்காத் செலுத்துவது என்பது இறைவனின் அன்பையும் உவப்பையும் பெறுவதற்காக இது இறை கட்டளை என்றுணர்ந்து இறைவன் காட்டித்தந்த வழியில் இறைவனுக்காகவே அதை செலவு செய்வதாகும். அந்த ஜக்காத் தொகையினை யார் யாருக்கு மட்டும் கொடுக்க வேண்டும் என இறைவன் கட்டளையிட்டிருக்கின்றானோ அவர்களுக்காக
மட்டுமே செலவிடப்பட வேண்டிய தொகையாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: -

ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார். (அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார். மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும். மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்). (அல்-குர்ஆன் 92:17-21)

ஜக்காத் யாருக்கு கொடுக்க வேண்டும்?

அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே யார் யாரெல்லாம் ஜக்காத் பெற தகுதியுடையோர் என பட்டியலிட்டு எட்டு வகையினரைக் கூறுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: -

(ஜகாத் என்னும்) தானங்கள்

தரித்திரர்களுக்கும்,
ஏழைகளுக்கும்,
தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்,
இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும்,
அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும்,
கடன் பட்டிருப்பவர்களுக்கும்,
அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்),
வழிப்போக்கர்களுக்குமே
உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல்-குர்ஆன் 9:60)

இவர்களே ஜக்காத் பெற தகுதியுடையவர்கள் என்று அல்லாஹ் கூறியிருக்கிறான். ஆனால் நம்மில் சிலர் அறியாமையினால் பள்ளிவாசல் கட்டுதல், பள்ளிக் கூடங்கள் கட்டுதல் மற்றும் இன்ன பிற பொது சேவைகளுக்காகவும் மற்றும் இறைவன் கூறிய எட்டு வகையினரல்லாத பிறருக்கும் தமது ஜக்காத் தொகையிலிருந்து செலவழித்து விட்டு தாம் ஜக்காத் கொடுத்துவிட்டதாக எண்ணுகின்றனர். இவர்கள் மேற்கண்ட இறைவசனத்திலிருந்து தெளிவு பெற கடமைப்பட்டுள்ளார்கள்.

Jan 8, 2009

பெற்றோர் மற்றும் உறவினர்களின் உரிமைகள்!

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், ‘என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!’ என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல்-குர்ஆன் 17:23-24)

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே ‘நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.’ (அல்-குர்ஆன் 31:14)

இறைவனுக்காக நிறைவேற்ற வேண்டிய கடமைகளுக்கு அடுத்தபடியாக இஸ்லாத்தில் மனித சமுதாயத்தின் மீது உள்ள மிகப்பெரிய மிக முக்கியமான கடமை என்னவெனில் அவர்கள் தங்களின் பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளாகும். பெற்றோருக்கு அடுத்தடியடியாக நெருங்கிய உறவினர்களுக்கும், தூரத்து உறவினர்களுக்கும், அண்டை வீட்டார்களுக்கும், முஸ்லிம் சகோதரர்களுக்கும் செய்ய வேண்டிய கடமையாகும். இஸ்லாத்தில் அவரவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை முறைப்படி செய்யவேண்டும். இதில் எந்தவொரு பாரபட்சமும் காட்டக்கூடாது. ஒருசாராருக்கு செய்யவேண்டிய கடமை மூலம் மற்றொரு சாராருக்கு செய்ய வேண்டிய கடமை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது.

உதாரணமாக, ஒருவர் தம்முடைய பெற்றோரின் உரிமைகளை (அதாவது அவர்களுக்காக செய்ய வேண்டிய கடமைகளை) பறித்து தம்முடைய மனைவி மக்களுக்காகச் செய்தல் அல்லது மனைவி மக்களின் உரிமைகளை பறித்து பெற்றோருக்காக மட்டும் செய்தல் போன்றவையாகும். அல்லாஹ்வையும் மறுமையையும் உறுதியாக நம்பும் ஒரு முஸ்லிம் இதில் நீதியுடன் செயல்பட்டு எந்த ஒரு சாராரின் உரிமையும் பாதிக்கப்பட்டுவிடாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: -

இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக; மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர். நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்-குர்ஆன் 17:26-27)

மேலும் நாம் இவ்வுலக வாழ்க்கையில் பெற்றோருக்கு பணிவிடை செய்து அவர்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வது இறைன் நம் மீது விதித்திருக்கின்ற இன்றியமையாத கடமையாகும். ஆனால் அவர்கள் இறைவனுக்கு மாறுசெய்வதற்கு தூண்டினால் அதற்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டிய அவசியமில்லை.

அல்லாஹ் கூறுகிறான்: -

ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.’ (அல்-குர்ஆன் 31:15 )

இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், ‘அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்’ என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள். (அல்-குர்ஆன் 2:83)

(பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்பு கோருகிறாரோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான். (அல்-குர்ஆன் 17:25 )

இஸ்லாத்தின் பார்வையில் அவதூறு கூறுதல்!

அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

சமூக சீர்கேட்டை விளைவிக்கும் வெள்ளித் திரை சினிமாக்களாலும் சின்னத்திரை சீரியல்களாலும் மக்களின் சிந்திக்கும் அறிவு மழுங்கிவிட்ட இக்காலக் கட்டத்தில் பிறர் மீது அவதூறு கூறுவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இத்தகைய அவதூறுகளினால் பாதிக்கப்பட்டோர் எத்தகைய அவதிக்குள்ளாகிறார்கள் என்பதைப் பற்றி துளிகூட அக்கரையில்லாமல் தங்களின் வாய்க்கு வந்தபடியெல்லாம் தமக்கு வேண்டாதவர் மீது அவதூறு கூறி சேற்றை வாரியிறைக்கின்றனர்.

ஒரு பெண் விசயத்தில் கூறப்படும் அவதூறானது அவளின் வாழ்க்கையையே சின்னாபின்னமாக சிதைத்து ஒரு மீளமுடியாத நிரந்தர ஊனத்தை ஏற்படுத்தும். அதுவும் திருமணமாகாத பெண்கள் என்றால் அவளுக்கு மணவாழ்க்கை என்பதே கேள்விக்குறியாகிவிடும்.

இத்தகைய கொடுமையான செயலான அவதூறு கூறுவதை இஸ்லாம் தடை செய்திருப்பதோடல்லாமல் அவதூறு கூறுபவர்களுக்கு கடுமையான தண்டனை இருக்கின்றது என்றும் எச்சரிக்கின்றது.

அவதூறு கூறுபவர்களுக்கான எச்சரிக்கைகள்: -

அல்லாஹ் கூறுகிறான்: -

எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். (அல்-குர்ஆன் 24:4)

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் 24:23)

‘அழிக்கக் கூடிய ஏழு விஷயங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது நாங்கள் அவை என்னென்ன? என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், நியாயமாகவேயன்றி அல்லாஹ் ஹராமாக்கிய உயிரை கொலை செய்தல், வட்டியின் மூலம் சாப்பிடுதல், அனாதைகளின் பொருளை சாப்பிடுதல், போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுதல், கற்புள்ள பேதைப் பெண்களின் மீது அவதூறு கூறுதல்’ என்று பதிலளித்தார்கள்.