Aug 18, 2008

தற்பெருமையும் ஆணவமும்!

உள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ளவன் சுவனம் செல்ல முடியாது: -

இப்னு மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ‘எவனுடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்கிறதோ அவன் சொர்க்கம் செல்ல முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அப்போது ஒரு மனிதர் என்னுடைய உடைகளும் என் காலணிகளும் அழகாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புவது பெருமையா? என்று கேட்டார். அதற்கு இறைதூதர் (ஸல்) அவர்கள் இறைவன் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறைப்பதும், மக்களை இழிவாகக் கருதுவதுமாகும்’ என விளக்கினார்கள். (ஆதாரம் : முஸ்லிம், திர்மிதி)

ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் சுவனபதியில் நுழையாதவர்கள்: -

அல்லாஹ் கூறுகிறான்: -

‘எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா. மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்’ (அல்குர்ஆன்: 7:40)

மிக்க பாக்கியம் பெற்ற மறுமையின் வீடு பெருமையடித்தவர்களுக்கு அல்ல!

அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு. (அல்-குர்ஆன் 28:83)

அகப்பெருமைக்காரர், ஆணவம் கொண்டோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்: -

‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்-குர்ஆன் 31:18)

அகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத் திரிபவரும் நரக வாசிகளாவார்கள்: -

ஹாரிஸா இப்னு வஹப் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டேன் ”உங்களுக்கு நரகவாசியைப் பற்றி அறிவித்துத் தரட்டுமா? அவர் யாரெனில் மிகக் கடுமையானவரும், அகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத் திரிபவருமாவார்.” . (ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி)

தற்பெருமை கொள்பவனுக்கு உவமானம்!

அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -

‘எவன் தன் தலைமுடியை வாரி அழகுபடுத்தி நல்ல ஆடைகளை அணிந்து கர்வத்துடன் தலை நிமிர்ந்து தன்னில் தானே பூரிப்பு அடைந்த வண்ணம் நடந்து செல்கின்றானோ அவன் பூமியில் திடுமெனச் செருகப்பட்டு மறுமை நாள் வரை அதன் அதலபாதாளத்தில் முட்டி மோதி மூழ்கடிக்கப்பட்டு விடுபவன் போலாவான்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)

தற்பெருமை மற்றும் ஆணவம் கொண்டோர் அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளானவர்களாவார்கள்:-

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ”எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹவை சந்திக்கும் நாளில் அல்லாஹ அவர் மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்.” (ஆதாரம் : அல் அதபுல் முஃப்ரத்)

ஆடையைப் பூமியில் பெருமையுடன் இழுத்துச் செல்பவனை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான்: -

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ”எவன் தனது ஆடையைப் பூமியில் பெருமையுடன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில் பார்க்க மாட்டான்.” (ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி)

பெருமையடிக்கும் ஏழையுடன் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான்: -

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ‘மூன்று நபர்கள், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு. அவர்கள் விபச்சாரம் புரியும் வயோதிகன், பொய்யனான அரசன், பெருமையடிக்கும் ஏழை.” (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)

பெருமை அல்லாஹ்வுக்கே உரியது: -

”கண்ணியம் எனது கீழாடை, பெருமை எனது மேலாடை. அந்த இரண்டில் எதையேனும் என்னிடம் பறித்துக்கொள்ள முற்பட்டால் அவரை நரகில் போட்டு வேதனை செய்வேன்” என அல்லாஹ் கூறியதாக நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)

Aug 8, 2008

சேர்த்து, சுருக்கி (ஜம்வு, கஸர்) தொழுதல்

இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் இரண்டாவதாகவும் மிக முக்கியமானதாகவும் தொழுகை இருக்கிறது. தொழுகையை எக்காரணத்தைக் கொண்டும் விடுவதற்கு இஸ்லாத்தில் அறவே இடமில்லை. பிரயாணம் போன்ற சிரமமான நேரங்களிலும் ஒருவர் தொழுகையை விடுவதற்கு அனுமதி இல்லை. ஆனால் கருணையாளாகிய அல்லாஹ் பிரயாணிகளின் சிரமத்தை தவிர்ப்பதற்காக அவனுடைய திருத்தூதர் صلى الله عليه وسلم அவர்களின் வழிகாட்டுதலின் மூலம் ஜம்வு, கஸர் என்று சொல்லப்படக் கூடிய சேர்த்து மற்றும் சுருக்கித் தொழக் கூடிய சலுகைகளை நமக்கு வழங்கியிருக்கிறான்.

சேர்த்து தொழுதல் (ஜம்வு): -

பிரயானம் செய்யும் ஒருவர் இரண்டு நேரத் தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்து தொழுவதற்கு “ஜம்வு” என்று பெயர். இந்த “ஜம்வு” தொழுகையை பின்வரும் ஏதாவது ஒருவகையில் தொழுது கொள்ளலாம்.

ஜம்வு தக்தீம் - சேர்த்து முற்படுத்தி தொழுதல்: -

பிரயாணம் செய்பவர் லுஹருடைய நேரத்தில் லுஹரையும் அஸரையும் சேர்த்து தொழுது கொள்ளலாம். அதாவது லுஹர் தொழுது விட்டு அதைத் தொடர்ந்து அஸரையும் சேர்த்து தொழுது கொள்ளலாம்.

அல்லது

மஃரிபுடைய நேரத்தில், மஃரிபை தொழுது விட்டு அதைத் தொடர்ந்து இஷாவையும் சேர்த்து முற்படுத்தி தொழலாம்.

இவ்வாறு அஸருடைய தொழுகையை முற்படுத்தி லுஹருடன் சேர்த்தோ அல்லது இஷாவுடைய தொழுகையை முற்படுத்தி மஃரிபுடன் சேர்த்தோ தொழுவதற்கு “ஜம்வு தக்தீம் - சேர்த்து முற்படுத்தி தொழுதல்” என்று பெயர்.

ஜம்வு தஃகீர் - சேர்த்து பிற்படுத்தி தொழுதல்: -

பிரயாணம் செய்பவர் லுஹரை பிற்படுத்தி, அஸருடைய நேரத்தில் லுஹரையும் அஸரையும் சேர்த்து தொழுது கொள்ளலாம். அதாவது அஸருடைய நேரத்தில் முதலில் லுஹர் தொழுது விட்டு அதைத் தொடர்ந்து அஸரையும் சேர்த்து தொழுது கொள்ளலாம்.

அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: -

‘சூரியன் சாய்வதற்கு முன் நபி صلى الله عليه وسلم அவர்கள் பிரயாணம் மேற்கொண்டால் லுஹரை அஸர் நேரம் வரும்வரை தாமதப்படுத்தி அஸர் நேரம் வந்ததும் இரண்டு நேரத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள். பிரயாணத்தைத் துவங்கு முன் சூரியன் சாய்ந்துவிட்டால் லுஹரைத் தொழுதுவிட்டு புறப்படுவார்கள்’ (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

அல்லது

மஃரிபை பிற்படுத்தி, இஷாவுடைய நேரத்தில் மஃரிபையும் இஷாவையும் சேர்த்து தொழுது கொள்ளலாம். அதாவது இஷாவுடைய நேரத்தில் முதலில் மஃரிப் தொழுது விட்டு அதைத் தொடர்ந்து இஷாவையும் சேர்த்து தொழுது கொள்ளலாம்.

உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: -

நபி صلى الله عليه وسلم அவர்கள் அவசரமாகப் புறப்படுவதாக இருந்தால் மக்ரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள். (ஆதாரம் :புகாரி)

இவ்வாறு லுஹருடைய தொழுகையை பிற்படுத்தி அஸருடன் சேர்த்தோ அல்லது மஃரிபுடைய தொழுகையை பிற்படுத்தி இஷாவுடன் சேர்த்தோ தொழுவதற்கு “ஜம்வு தஃகீர் - சேர்த்து பிற்படுத்தி தொழுதல்” என்று பெயர்.

பிரயாணத்தில் இல்லாமல் ஊரில் இருப்பவர்கள் ஜம்வு செய்யலாமா?

ஊரில் இருப்பவர்கள், மழை, கடும் குளிர் அல்லது கடும் காற்று அடிக்கக் கூடிய நேரத்தில் பள்ளிக்கு வருவது சிரமமாக இருந்தால் அவர்கள் ஜம்வு செய்து கொள்ளலாம்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் மழை பெய்து கொண்டிருந்த ஓர் இரவில் மஃரிபையும், இஷாவையும் சேர்த்து தொழுதுள்ளார்கள். (ஆதாரம் :புகாரி, முஸலிம்)

சுருக்கி தொழுதல் (கஸர்): -

பிரயாணத்தில் இருப்பவர்கள், நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத் தொழுகைகளாக சுருக்கித் தொழுவதற்கு “கஸர்” என்று பெயர்.இவ்வாறு சுருக்கித் தொழுவது பிரயாணிகளுக்கு மட்டும் உரிய சலுகையாகும். நபி صلى الله عليه وسلم அவர்கள் எந்த பிரயாணத்தை மேற்கொண்டாலும் இவ்வாறு சுருக்கித் தொழுவார்கள். எனவே பிரயாணம் செய்யும் ஒருவர் நபி صلى الله عليه وسلم அவர்களின் இந்த நடைமுறையைப் பின்பற்றுவது அவருக்கு சுன்னத்தாகும்.

நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது (மற்றும்) காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அப்பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது….(அல்குர்ஆன் 4:101)

ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்: -

அல்லாஹ் தொழுகையினை கடமையாக்கிய போது ஊரிலிருந்தாலும், பிரயாணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்களாக கடமையாக்கினான். பிரயாணத்தில் தொழுகை இரண்டு ரக்அத்தாகவே ஆக்கப்பட்டு பிரயாணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது. (ஆதாரம் :புகாரி)

“ஜம்வு” மற்றும் “கஸர்” செய்பவர்களின் கவனத்திற்கு: -

1) நான்கு ரக்அத் தொழுகைகளான லுஹர், அஸர் மற்றும் இஷா தொழுகைகளைத் தான் சுருக்கி இரண்டு ரக்அத்களாக தொழலாம். ஆனால் மஃரிப் மற்றும் பஜ்ரு தொழுகைகளைச் சுருக்கித் தொழக் கூடாது.

2) நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்களாக “கஸர்” செய்யும் போது ஒவ்வொரு ரக்அத்திலும் வழமைப் போல் சூரத்துல் ஃபாத்திஹா மற்றும் திருக்குர்ஆனின் வசனங்களை ஓதி முறைப்படி தொழவேண்டும்.

3) கஸர் செய்யக் கூடிய இச்சலுகை ஊரின் எல்லையைத் தாண்டியதிலிருந்து ஆரம்பம் ஆகிறது. அவர் ஊர் திரும்பும் வரை தொடர்ந்து கஸர் செய்யலாம். ஆனால் எத்தனை நாட்கள் வெளியூரில் தங்கினால் அல்லது எவ்வளவு தூரம் பிரயாணம் செய்தால் கஸர் செய்யலாம் என்பதில் மார்க்க அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. (பார்க்கவும் வீடியோ)

4) பிரயாணத்தில் சுன்னத் தொழுகைகள்

இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -

நான் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் தோழமை கொண்டிருந்தேன். அவர்கள் பயணத்தில் உபரித் தொழுகைகளைத் தொழுததை நான் பார்த்ததில்லை. ‘அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது’ என்று அல்லாஹ் கூறினான். (ஆதாரம் : புகாரி)

5) பிரயாணம் செய்பவர் பஜ்ரு மற்றும் வித்ருடைய சுன்னத்தான தொழுகைகளை விடாமல் தொழுவது விரும்பத்தக்கது.

நபி صلى الله عليه وسلم அவர்கள் ஊரில் இருந்தாலும் சரி அல்லது பிரயாணத்தில் இருந்தாலும் சரி, வித்ருடைய தொழுகையை, பஜ்ருடைய தொழுகை - இவ்விரண்டையும் விடாமல் தொழுது வந்திருக்கிறார்கள்.

6) பிரயாணி ஜம்வு செய்வதுடன் கஸரும் செய்யலாம்.

7) பிரயாணத்திலிருப்பவர்கள் ஜம்வு செய்யும் போது இரண்டு தொழுகைகளுக்கும் ஒரு பாங்கு சொல்லிவிட்டு, ஒவ்வொரு தொழுகைக்கும் தனித் தனியே இகாமத் சொல்ல வேண்டும்.

ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: -

‘ஒரு பிரயாணத்தில் சூரியன் உச்சிலிருந்து சாய்ந்ததும் நபி صلى الله عليه وسلم அவர்கள் பாங்கு சொல்லி பின்னர் இகாமத் சொல்லி தொழுதார்கள். பின்பு மற்றொரு இகாமத் சொல்லி அஸர் தொழுதார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

8.) பிரயாணம் செய்பவர் விரும்பினால் கஸ்ர் செய்யாமல் முழுமையாகவும் தொழலாம்.

ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -

‘நான் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் மதினாவிலிருந்து மக்கா நோக்கி உம்ரா செய்யப் புறப்பட்டேன். நான் மக்காவை அடைந்தபோது, ‘அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் கஸ்ர் செய்கிறீர்கள். நான் முழுமையாகத் தொழுகிறேன். நீங்கள் நோன்பு நோற்கவில்லை.. நான் நோன்பு நோற்கிறேன்’ என்று நான் கேட்டபோது ‘ஆயிஷாவே! சரியாகச் செய்தீர்’ என்றார்கள். என்னைக் குறை காணவில்லை!’ (ஆதாரம் : நஸயீ)

9) மழை, கடும் குளிர் அல்லது கடும் காற்று அடிக்கக் கூடிய நேரத்தில் ஊரில் தங்கியிருப்பவர்கள் “ஜம்வு” செய்யும் போது “கஸர்” செய்யக் கூடாது.

அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

கிறிஸ்தவம் Vs இஸ்லாம் - பெண்ணுரிமை பகுதி : 5 பெண்களின் வாரிசுரிமை

பெண்களின் வாரிசுரிமை குறித்து பைபிள்: -

மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒருவன் குமாரன் இல்லாமல் மரித்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் குமாரத்திக்குக் கொடுக்கவேண்டும். (எண்ணாகமம், 27 வது அதிகாரம், 8 வது வசனம்)

பைபிளின் இந்த வசனத்தின் படி, மரணித்த ஒருவருக்கு ஆண் மகன் இருந்தால் அவருடைய சொத்தில் மரணித்தவரின் மனைவிக்கோ அல்லது மகளுக்கோ எவ்வித உரிமையும் இல்லை. ஆண் மகன் இல்லையென்றால் மட்டுமே மகளுக்கு சொத்துரிமை உண்டு என கூறுகிறது.

இனி அல்-குர்ஆன் என்ன கூறுகிறது என பார்ப்போம்!

பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும். (அல்-குர்ஆன் 4:7)

மேலும் இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு பெண்ணுடைய சொத்து அவளுக்கு மட்டுமே உரியது. அவளுடைய சொத்திலிருந்து கனவனையோ அல்லது அவனுடைய குழந்தைகளையோ பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மனைவியையும், அவனுடைய குழந்தைகளையும் காக்கும் முழு பொறுப்பும் கனவனையே சாரும். மேலும் கனவனின் சொத்தில் அவளுக்கும், அந்த கனவன் மூலமாக பெற்றெடுத்த அவளுடைய குழந்தைகளுக்கும் உரிமையுள்ளது.

நடுநிலையான கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் பெண்களுக்கு வாரிசுரிமை அளிக்கும் மார்க்கம் எது என சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.