Jan 18, 2009
பாவமன்னிப்பு தேடல்!
‘எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே! தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்பு தேடுபவர்களே!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரரம் : திர்மிதி.
பாவமன்னிப்பு தேடினால் வெற்றியாளராகலாம்: -
அல்லாஹ் கூறுகிறான்: -
முஃமின்களே! நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்-குர்ஆன் 24:31)
கலப்பற்ற மனதோடு பாவமன்னிப்பு தேடினால் சுவனச்சோலை பரிசாக கிட்டும்!
அல்லாஹ் கூறுகிறான்: -
ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான். (அல்-குர்ஆன் 66:8)
நாளொன்றுக்கு நூறு முறை பாவமன்னிப்பு தேடிய நபி (ஸல்) அவர்கள்!
‘மனிதர்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள். நான் ஒவ்வொரு நாளும் அல்லாஹ்விடம் நூறு முறை பாவமன்னிப்புத் தேடுகிறேன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அஃகர்ரு பின் யஸார் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.
முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்களே நாளொன்றுக்கு நூறு முறை பாவமன்னிப்பு தேடினார்கள் என்றால் நாம் எவ்வாறு தேட வேண்டும் என சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
இறைவனின் மகிழ்ச்சி!
‘உங்களில் ஒருவர் வனாந்தரத்தில் தனது ஒட்டகத்தை தவறவிட்ட பிறகு திடீரென அது கிடைக்கப்பெற்ற நிலையில் அவர் அடைகின்ற மகிழ்ச்சியை விட அதிகமாக அல்லாஹ், தனது அடியான் பாவமன்னிப்புத் தேடும் போது மகிழ்ச்சி அடைகிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.
பாவமன்னிப்பு தேடுவதை தாமதிக்க கூடாது!
‘உயிர் தொண்டைக் குழியை அடைவதற்கு முன்பு வரை ஒரு அடியானின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உமர் (ரலி)
சூரியன் மேற்கில் உதிக்குமுன்…
‘அல்லாஹ் இரவில் தன் கையை நீட்டுகிறான் பகலில் பாவம் செய்தவர் மன்னிப்பு கேட்பதற்காக. பகலில் தன் கையை நீட்டுகிறான் இரவில் பாவம் செய்தவன் மன்னிப்புக் கோருவதற்காக. சூரியன் மேற்கில் உதிக்கும் வரை இவ்வாறு செய்கிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.
தொடர்புடைய ஆக்கம்:
பாவமன்னிப்பு தேடுவது எவ்வாறு?
Jul 16, 2008
சகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு அசாதாரண நிகழ்ச்சி!
அப்போது திடீரென நான் அவரை கண்டுகொண்டேன். அந்த சமயத்தில் அவர் சுய நினைவை இழந்தவராகவும் பின்னர் சுய நினைவை மீண்டவராகவும் இருந்தார். நான் உங்களுக்கு தண்ணீர் புகட்டட்டுமா? என்று அவரிடம் கேட்ட போது அவர் தலையை ஆட்டினார். திடீரென வேறு ஒருவர் தன்னுடைய காயத்தின் காரணமாக வலியினால் கூப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது வலியால் துடித்துக்கொண்டிருந்த என் உறவினர் மற்றவரை கவனிக்குமாறு எனக்கு சைகை காட்டினார். நான் அவரிடம் சென்றபோது அவர் அம்ர் பின் ஆஸின் சகோதரர் ஹிஸாம் என்பதை பார்த்தேன். நான் உங்களுக்கு தண்ணீர் புகட்டட்டுமா என்று கேட்டேன். அப்போது திடீரென்று வேறு ஒருவர் அவருடைய காயத்தின் வலியின் காரணமாக கூப்பிட்டுக் கொண்டிருந்ததை நாங்கள் கேட்டோம். ஆகையால் அவரை சென்று கவனிக்குமாறு அவர் என்னிடம் சைகை செய்தார்.
நான் அவரிடம் சென்ற போது அவர் இறந்திருந்தார். நான் ஹிஸாமிடம் திரும்பிச் சென்ற போது அவரும் இறந்திருந்தார். பின்னர் நான் என் உறவினரிடம் சென்ற போது அவரும் இறந்திருந்ததைப் பார்த்தேன்.
ஆகையால் அனைவருமே ஒருவர் மற்றவரின் மேல் உள்ள அன்பின் காரணமாக தன்னுடைய தாகத்தை தணிக்காமலேயே மரணமடைந்து விட்டனர். இது தான் மனித வரலாற்றில் ஓர் ஈடு இணையற்ற தியாகம் மற்றும் சகோதரத்துவத்தின் ஆதாரமாக இருக்கிறது.
இந்த அற்புத சரித்திர நிகழ்ச்சி இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் ‘அல்-இஸாபாஹ்’ என்ற நூலிலும், இப்னு அல்-முபாரக் (ரஹ்) அவர்களின் ‘அல்-ஜிஹாத்’ என்ற நூலிலும், அப்துல்லா பின் அல்-முபாரக் (ரஹ்) அவர்களின் ‘அஜ்-ஜூஹத்’ என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அறிவிப்பாளர்கள் அனைவருமே நம்பகமானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.
நன்றி : www.turntoislam.com
May 20, 2008
மூதாதையர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுதல்
உண்மையான அமைதி மற்றும் நிம்மதி என்பது, நம்மையும், வானம் பூமியையும் மற்றும் இதற்கிடையில் உள்ள அனைத்தையும் படைத்த இறைவனை எப்போதும் நினைவு கூறுவதில் தான் உள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்: -
13:28 (நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள் மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!
13:29 எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு (எல்லா) நற்பாக்கியங்களும் உண்டு இன்னும் அழகிய இருப்பிடமும் உண்டு. (அல்-குர்ஆன் 13:28-29)
ஆகையால் ஒருவர் அல்லாஹ்வுடைய மற்றும் அவனுடைய தூதருடைய வழிமுறைகளை பின்பற்றாமல் தனக்கு தானே நிம்மதி அடைய முயற்சி செய்தால், அது அவன் பார்க்கின்ற, உணர்கின்ற சிலை வணக்கங்களின் பக்கம் அவனை இட்டுச் செல்லும். இதன் மூலம் அவன், அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்ற வெறுக்கத் தக்க குற்றத்தை செய்தவன் ஆகின்றான். அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் என்பது இஸ்லாத்தில் மிகப் பெறும் பாவமாகும் அல்லாஹ்வுக்கு இணை வைத்த நிலையில் மரணித்த ஒருவனை இறைவன் மன்னிக்க மாட்டான் மேலும் அவர்களுக்கு சுவர்க்கத்தை ஹராமாக்கியும் விடுகிறான். முன்னால் வாழ்ந்த சமுதாயங்கள் அழிக்கப்பட்டதெல்லாம், அவர்களுக்கு தெளிவான அல்லாஹ்வின் போதனைகள் அவனுடைய தூதரின் மூலம் வந்த பின்பும், அதனை பின்பற்றாமல் அல்லாஹ்விடத்தில் மிகப் பெரும் பாவமான அவனுக்கு இணை வைத்தது தான்.
அல்லாஹ் கூறுகிறான்: -
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான் இதைத் தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான் யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்-குர்ஆன் 4:48)
‘நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்’ என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: ‘இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்’ என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவி புரிபவர் எவருமில்லை. (அல்-குர்ஆன் 5:72)
மக்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மனித மற்றும் மிருகங்களின் சிலைகள், கப்ருகளில் உள்ளவர்களை அழைப்பது ஆகியவைகள் அனைத்தையும் செய்வதற்கு ஒரே காரணம் அவர்களின் மூதாதையர்கள் அவ்வாறு செய்த காரணத்தினால் தான். அவர்கள், இந்த சிலைகள் தம்மை படைக்கவும் இல்லை, தமக்கு எதையும் கொடுக்கவும் இல்லை என்பதை நன்கு அறிந்திருந்தனர். மேலும் இந்த உருவங்கள் தமக்கு வாழ்க்கையையோ சொத்து சுகங்களையோ, குழந்தைகளையோ, இறப்பையோ கொண்டு வருவதில்லை என்பதையும் அறிந்திருந்தனர். மனித இனம் முழுவதும் ஏக மனதாக, “நாம் அனைவரும் இந்த உலகத்தைப் படைத்துப் பரிபாலிக்கின்ற இறைவனின் படைப்பிகள் தான்” என்பதை நம்பியிருந்தனர். இருந்த போதிலும் இவர்கள், தங்களுக்குத் தாங்களே கடவுளாக்கி கொண்டவர்களையும் மகான்களாக்கி கொண்டவர்களையும் சிரம் பணிந்து மன்றாடி, கையேந்தி வழிப்பட்டு வருகின்றனர். தங்கள் மூதாதையர் செய்ததால் தவிர வேறெந்த காரணத்தையும் அவர்களால் சொல்ல முடியவில்லை.
இஸ்லாம் என்பது குர்ஆனின் போதனைகள் மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமே அல்லாமல், மூதாதையர்களின் வழிமுறைகளை பின்பற்றக்கூடிய மார்க்கமல்ல. இதை அல்லாஹ்வும் அவனுடைய திருமறையில் வலியுறுதிக் கூறுகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: -
மேலும், ‘அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்’ என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ‘அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்’ என்று கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?
அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால் ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையம் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். (அல்-குர்ஆன் 2:170-171)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: -
அல்லது, ‘இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே! நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் - அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?’ என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)
அவர்கள் (பாவங்களிலிருந்து) விடுபட்டு (நம்மிடம்) திரும்புவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விளக்கிக் கூறுகின்றோம். (அல்-குர்ஆன் 7:173-174)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: -
அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் ‘நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?’ என்று கேட்ட போது: அவர்கள், ‘எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள். (அதற்கு) அவர், ‘நிச்சயமாக நீங்களும், உங்களுடைய மூதாதையரும் - பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள்’ என்று கூறினார். (அல்-குர்ஆன் 21:52-54)
இன்னும், நீர் இவர்களுக்கு இப்றாஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக!
அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி: ‘நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?’ என்று கேட்டபோது,
அவர்கள்: ‘நாங்கள் சிலைகளை வணங்குகிறோம் நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்’ என்று கூறினார்கள்.
(அதற்கு இப்றாஹீம்) கூறினார்: ‘நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?
‘அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா அல்லது தீமை செய்கின்றனவா? (எனவுங் கேட்டார்)
(அப்போது அவர்கள்) ‘இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்’ என்று கூறினார்கள்.
அவ்வாறாயின், ‘நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா?’ என்று கூறினார்.
‘நீங்களும், உங்கள் முந்திய மூதாதையர்களும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்).’
‘நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே - அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்).’
‘அவனே என்னைப் படைத்தான் பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.
‘அவனே எனக்கு உணவளிக்கின்றான் அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.’
‘நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.
‘மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான் பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.’
‘நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன். (அல்-குர்ஆன் 26:69-82)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: -
‘அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்’ என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் ‘(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்’ என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?) (அல்-குர்ஆன் 31:21)
நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்: ‘இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்’ என்று கூறுகிறார்கள் இன்னும் அவர்கள் ‘இது இட்டுக் கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை’ என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம்: திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, ‘இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை’ என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள். (அல்-குர்ஆன் 34:43)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: -
அப்படியல்ல! அவர்கள் கூறுகிறார்கள்: ‘நிச்சயமாக நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம் நிச்சயமாக நாங்கள் அவர்களுடைய அடிச்சுவடுகளையே பின்பற்றுகிறோம்.’
இவ்வாறே உமக்கு முன்னரும் நாம் (நம்முடைய) தூதரை எந்த ஊருக்கு அனுப்பினாலும், அவர்களில் செல்வந்தர்கள்: ‘நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் கண்டோம் நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளையே பின்பற்றுகின்றோம்’ என்று கூறாதிருக்கவில்லை.
(அப்பொழுது அத்தூதர்,) ‘உங்கள் மூதாதையரை எதன்மீது நீங்கள் கண்டீர்களோ, அதை விட மேலான நேர்வழியை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருந்த போதிலுமா?’ என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ‘நிச்சயமாக நாங்கள், எதைக்கொண்டு நீங்கள் அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ, அதை நிராகரிக்கிறோம்’ என்று சொல்கிறார்கள்.
ஆகவே, நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம் எனவே, இவ்வாறு பொய்ப்பித்துக் கொண்டிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீர் கவனிப்பீராக! (அல்-குர்ஆன் 43:22-25)
தற்போது உள்ள உலகத்தில், சாதாரண உலக விஷயங்களை எடுத்துக் கொண்டால், ‘என்னுடைய தந்தை படிக்காதவராக இருந்தார் ஆகையால் அவரைப் போல நானும் படிக்காதவனாக இருக்கப் போகிறேன்’ என்று யாரும் சொல்வதில்லை. மாறாக ஒவ்வொருவரும் கடின உழைப்பு செய்து தன்னுடைய குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்கின்றனர்.
அதே போல தன்னுடைய தந்தை ஏழையாக இருந்தார், ஆகையால் நானும் ஏழையாக இருக்கப் போகிறேன் என்றும் யாரும் சொல்வதில்லை. மாறாக ஒவ்வொருவரும் அதிகமதிகம் பணம் சம்பாதிப்பதற்கு முயற்சி செய்கின்றனர்.
ஏன் மார்க்க விஷயங்களில் மட்டும் முளையை மழுங்கடித்து குருட்டுத்தனமாக தன்னுடைய மூதாதையர்களை பின்பற்றுகிறேன் என்கிறார்கள்? குர்ஆனின் போதனைகளை மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறார்கள்? குர்ஆன் உண்மையின் பக்கம் வழிகாட்டிய போதும், ஏன் குருட்டுத்தனமாக தன்னுடைய மூதாதையரை பின்பற்றுகிறார்?
May 14, 2008
இணைவைக்கும் குடும்பத்தார்களை, தூய இஸ்லாத்திற்கு அழைப்பது எவ்வாறு?
இன்று நாம் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் பக்கம் திரும்பி இருக்கிறோம் என்றால் அது நம்முடைய அறிவாற்றலினாலோ அல்லது நமது திறமையினாலோ அன்று; மாறாக அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் தன் அடியார்களாகிய நம்மீது கொண்டுள்ள, மிகப் பெரும் கருணையினால் அவனுடைய சத்திய மார்க்கத்தின் வழி காட்டியாக விளங்கும் அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் பக்கம் நம்மைத் திருப்பி இருக்கிறான். இதற்காக அவனுடைய அடியார்களாகிய நாம் அவன் நமக்கு புரிந்த பேருபகாரத்திற்காக எவ்வளவு தான் நன்றி செலுத்தினாலும் அது போதுமானதாக இருக்காது.
அல்லாஹ்வின்,அளப்பெரும்,கருணையும்,நேர்வழியும் நமக்கு இருந்திருக்காவிட்டால், நவூதுபில்லாஹ் மின்ஹா! அவனால் என்றுமே மன்னிக்கபடாத ஷிர்க் என்னும் மாபாதக செயலாகிய இணைவைத்தல் என்றும் மிகக் கொடிய பாவத்தில் இன்றளவும் நாமும் உழன்று கொண்டிருப்போம். எனவே நாம் நம்மீது கருணை கொண்ட வல்ல ரஹ்மானை, கருணையாளனை எக்கணமும் புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உண்டாவதாக!
அல்லாஹ் கூறுகிறான்:-
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.
(நபியே!) இதுவே உம் இறைவனின் நேரான வழியாகும் - சிந்தனையுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கின்றோம். (அல்-குர்ஆன் 6:125-126)
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசித்திருக்கின்ற ஒவ்வொரு முஃமின் மீதும் அவனுடைய சத்திய மார்க்கத்தை தம் குடும்பத்தார்களுக்கு, உற்றார் உறவினர்களுக்கு இன்னும் சமுதாயத்தில் உள்ள பிறருக்கும் எடுத்துக் கூறுவதை கடமையாக்கியுள்ளான். ஆனால் யாருக்கு நேர்வழி காட்டவேண்டும் என்பது முற்று முழுதாக அல்லாஹ்வின் விருப்பத்தைப் பொருத்தது.
அல்லாஹ் கூறுகிறான்:-
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்¢ அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்¢ அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்¢ தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (அல்-குர்ஆன் 6:66)
எனவே முஃமினான ஒவ்வொரு ஆணும், பெண்ணும், தம்மையும் தம் குடும்பத்தார்களையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து கொள்ளவேண்டும். அதற்காக நம் குடும்பத்தார்களை அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையிலான தூய இஸ்லாத்தின் பக்கம் அழைப்பது, அவர்களை அல்லாஹ் கட்டளையிட்ட ஏவல் விலக்கல்களை பேணி நடக்குமாறு ஏவுவது நம்மீது கடமையாக இருக்கிறது.
நாம் முதலில் நமது நெருங்கிய குடும்பத்தார்களை அல்-குர்ஆனின் பக்கம் திருப்ப முயற்சிக்க வேண்டும். அவர்களிடம் கண்ணியமான முறையில் எடுத்துக் கூறி அல்-குர்ஆனை பொருளுணர்ந்து படிக்கச் செய்திட முயற்சிக்க வேண்டும். கருணையாளனான அல்லாஹ் நாடினால் அதன் மூலம் அவர்கள் மிககொடிய ஷிர்க் எனும் இணைவைத்தலிருந்து விடுபட்டு படைத்த இறைவனை மட்டும் வழிபடும் உன்மையான முஸ்லிம்களாக மாறக்கூடும்.
முக்கியமான, விஷயம் ஒன்றை இங்கே நாம் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். நாம் நமது குடும்பத்தார்களிடம் இஸ்லாத்தைப் போதிக்கும் போது மிகவும் அறிவுக் கூர்மையுடன், நிதானமாகவும் மிகவும் பொறுமையுடனும் செயல்படவேண்டும். மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
நாம் தூய இஸ்லாத்தை அறிந்துணர்ந்து ஏற்றுக்கொண்டு விட்டதால் நமது குடும்பத்தார்களும், அவர்கள் பிறந்தது முதல் செய்து வருகின்ற சமாதி வழிபாடு, பித்அத் போன்ற அனைத்து வழிகேடுகளையும் உடனடியாக விட்டு விடவேண்டும் என்று அவசரப்படக் கூடாது. நிதானமின்மையின் காரணத்தால் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள், குடும்பத்தில் பிரிவுகள் போன்றவைகள் நிகழ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. தேவையற்ற நீண்ட வாக்குவாதங்களையும், விவாதங்களையும் முற்று முழுதாக தவிர்க்க வேண்டும்.
சந்தர்ப்ப, சூழ்நிலைகளை அனுசரித்து யாரிடம் பேசப்போகின்றோமோ அவருடைய மனநிலையை அறிந்து மிகவும் நளினமாகவும், விவேகத்துடனும் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் அவர்கள் செய்கின்ற ஷிர்க், பித்அத் போன்றவற்றைக் கேட்பவர்களின் சிந்தனையைத் தூண்டக் கூடிய அறிவுப்பூர்வமான தர்க்கரீதியில் (logic) எடுத்துரைக்க வேண்டும்.
பின்னர் தூய இஸ்லாம் என்பது அல்-குர்ஆன் மற்றும் சுன்னா மட்டுமே என்பதை விளக்க வேண்டும். இவ்வாறு செய்வதையே அல்-குர்ஆனும் நமக்கு போதிக்கிறது.
அல்லாஹ் கூறுகிறான்:-
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (அல்-குர்ஆன் 16:125)
நமது குடும்பத்தார்கள் தாம் செய்கின்ற தவறை உணர்ந்து சத்தியத்தை ஏற்றுக் கொள்வதற்கு சில நிமிடங்ள் ஆகலாம், அல்லது சில நாட்கள் ஆகலாம் அல்லது சில மாதங்களோ அல்லது வருடங்களோ ஆகலாம். ஏன் சில சமயங்களில் அவர்கள் சத்திய இஸ்லாத்தை கடைசி வரையிலும் ஏற்றுக் கொள்ளாமலேயே மரணிக்கலாம்.
அல்லாஹ் முஸ்லிம்கள் மீது கடமையாக பிறருக்கு எடுத்துசொல்வதை மட்டும் தான் ஆக்கியிருக்கிறான். ஒருவரை நேர்வழி படுத்துவதோ அல்லது வழிகேட்டில் விட்டுவிடுவதோ நம்முடைய பொறுப்பன்று. அது அல்லாஹ்வின் விருப்பத்தை பொறுத்தது.
இஸ்லாத்தில் சேருமாறு யாரையும் நிர்ப்பந்தப் படுத்தக்கூடாது: -
அல்லாஹ் ஒவ்வொருக்கும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலையும், இறைவனை அடைவதற்குரிய பாதையை தேர்ந்தெடுக்கும் சுய விருப்பத்தையும் கொடுத்திருக்கிறான். எனவே அல்லாஹ் நாடினால் அவர் சுயமாக சிந்தித்து சத்திய இஸ்லாத்தை தமது இறைவனை அடையும் வழியாக தேர்ந்தெடுப்பார்.
ஆகையால் நாம் நம்முடைய விருப்பங்களை, நம்பிக்கைகளை ஒருவர் மீது திணித்து, அதை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தக் கூடாது. அவர்கள் எவ்வளவு தான் நமக்கு நெருக்கமானவர்களாகவோ, அல்லது அன்பு, பாசத்திற்குரியவர்களாகவோ இருந்தாலும் சரியே! ஏன்னென்றால் அவர்களை நேர்வழி படுத்தும் ஆற்றல், சக்தி நம்மிடம் இல்லை. நமது பொறுப்பு நம்மால் முடிந்த அளவு அவர்களிடம் எடுத்துக் கூறுவது தான்.
அல்லாஹ் கூறுகிறான்:-
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 2:256)
(நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் - மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான். (அல்-குர்ஆன் 28:56)
பெற்றோர்கள் இணைவைப்பவர்களாக இருந்தால்…?
பெற்றோர்கள் இணை வைப்பவர்களாக இருந்தால் கூட அவர்களிடம் நாம் கண்ணியமான முறையில் தான் இஸ்லாத்தை எடுத்துக் கூறவேண்டும். அவர்கள் நாம் சொல்வதை கேட்கவில்லையே என்று அவர்கள் மீது கோபப்படவோ அல்லது அவர்களை ஒதுக்கி வைக்கவோ நிச்சயமாக கூடாது. தவ்ஹீதை போதிக்கிறோம் என்ற பெயரில் நம்முடைய இளைய சகோதரர்களில் பலர் பெற்றோர்களை கண்ணியமற்ற முறையிலும் அவமரியாதை செய்கின்ற வகையிலும் நடத்துகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.
அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவிக்கிறார்கள்: -
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் என் தாயார் ஆசையாக என்னிடம் வந்தார். (அப்போது அவர் இணைவைப்பவராக இருந்தார்.) நான் நபி(ஸல்) அவர்களிடம் ‘(என் தாயார் வந்துள்ளார்.) அவருடன் உறவைப் பேணிக்கொள்ளட்டுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று கூறினார்கள்.
‘எனவே, அஸ்மாவின் தாயர் தொடர்பாக, ‘மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கிறான்’ எனும் (திருக்குர்ஆன் 60:8 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்’ என (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார். (ஆதாரம்: புகாரி)
எனவே சகோதர, சகோதரிகளே,நாம் செய்யவேண்டியவை என்னவெனில்,பொறுமையாகவும், நளினமாகவும் நம்முடைய ஆயூட்காலம் முழுவதும் சத்தியத்தை எடுத்துக் கூறிக்கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு தொழுகையிலும் நம் குடும்பத்தார்களுக்காக, அவர்களுடைய நேர்வழிக்காக அல்லாஹ்விடம் மன்றாடி துஆச் செய்ய வேண்டும். (இன்ஷா அல்லாஹ்) இறைவன் நாடினால் அவர்களுக்கும் நேர்வழியை காட்டுவான். அவர்கள் சத்தியத்தை ஏற்கவில்லையெனில், குறைந்தபட்சம் நாம் நமது சக்திக்கு ஏற்றவாறு நமது தஃவா எனும் அழைப்புபணி என்ற கடமையைச் செய்தவராகி விடுவோம்.
அல்லாஹ் நம்மிடம் எத்தனை பேர்களை இஸ்லாத்திற்கு மாற்றினாய் என்று கேட்கப் போவதில்லை. மாறாக நாம் அழைப்புப் பணி செய்தோமா இல்லையா என்று தான் கேட்பான்!
எனவே என தருமை சகோதர சகோதரிகளே, சத்தியத்தை எடுத்து சொல்லும் சிறந்த பணியில் என்றும் நாம் சளைக்காது பொறுமையுடன் நமது ஆயுட்காலம் வரைக்கும் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாகவும்.
அல்லாஹ் அதற்குறிய ஆற்றலை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!(ஆமீன்).
May 4, 2008
இறைவனை இவ்வுலகில் காண முடியுமா?
அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது! அவனது சாந்தியும் சமாதானமும் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தார்கள், தோழர்கள் மற்றும் முஸ்லிமான நம் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக!.
இறைவனை இந்த உலகில் பார்க்க இயலுமா என்பதைக் காணுவதற்கு முன்னர் இறைவன் தன்னுடைய பண்புகளாக தன்னுடைய திருமறையில் கூறுவதைச் சற்று பார்ப்போம்.
அல்லாஹ் கூறுகிறான்: -
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது: உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான். (அல்-குர்ஆன் 2:265)
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 4:58)
அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை; இன்னும் இந்தப்பூமி முழுதும் கியாம நாளில் அவனுடைய ஒரு பிடிதான்; மேலும், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டதாக இருக்கும்; அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மகா தூயவன். (அல்-குர்ஆன் 39:67)
‘அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது’ என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்; அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; (அல்-குர்ஆன் 5:64)
அல்லாஹ் தன்னுடைய திருமறையின் பல இடங்களில் தான் அனைத்தையும் பார்க்கக் கூடியவன் என்றும், எல்லாவற்றையும் கேட்கக் கூடியவன் என்றும் கூறுகிறான். மேலும் தன்னுடைய கைகளைப் பற்றியும் கூறுகிறான். ஆனால் அவைகளைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவைகள் மனிதக் கற்பனைக்கு கூட மிக மிக அப்பாற்பட்டதாகும்.
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசித்த ஒரு முஃமின் அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தன்னைப் பற்றிக் கூறியவற்றை உள்ளது உள்ளவாறே நம்பிக்கைக் கொண்டால் போதுமானது. அதாவது அல்லாஹ் தன்னுடைய வல்லமையைக் கொண்டும் ஆற்றலைக்கொண்டும் அனைத்தையும் பார்ப்பவன் மற்றும் எல்லாவற்றையும் கேட்பவன் என்றும் அவன் தன்னுடைய கைகளாக குறிப்பிடப்பட்டவை அவனுடைய படைப்பினங்களில் எதற்கும் ஒப்பானவை அல்ல என்பதையும் நம்பிக்கைக் கொண்டால் போதுமானது.
மேலும் அல்லாஹ் தனது பண்புகளாக திருமறையில் எதைக் குறிப்பிட்டுள்ளானோ அதை அப்படியே நம்பிக்கைக் கொள்ள வேண்டும். அதில் எவ்வித கூடுதலோ அல்லது குறைவோ செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது. மேலும் அவற்றிற்கு சுய விளக்கம் கொடுக்கவும் கூடாது.
அல்லாஹ் கூறுகிறான்: -
வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (அல்-குர்ஆன் 42:11)
இறைவனை இவ்வுலகில் பார்க்க இயலுமா?
அல்லாஹ் கூறுகிறான்: -
6:102 அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான்; ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.
6:103 பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (அல்-குர்ஆன் 6:102 & 103)
மேலே குறிப்பிடப்பட்ட திருமறை வசனத்தில் ‘பார்வைகள் அவைன அடைய முடியாது, ஆனால் அவனே எல்லபப் பார்வைகளையும் சுழ்ந்து அடைகின்றான் என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே அல்லாஹ்வின் படைப்பினங்களில் யாருமே அவனைப் பார்த்ததில்லை என்றும் அறிய முடிகின்றது.
நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் இரவின் போது இறைவனைப் பார்த்தார்களா?
மஸ்ரூக் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் முஃமின்களின் அன்னையே! முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஃராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது நேரில் பார்த்தார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்து விட்டது.
மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கின்றாரோ அவர் பொய்யுரைத்து விட்டார்.
முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் யார் கூறினாரோ அவர் பொய் சொல்லிவிட்டார் என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக) கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது. அவனோ அனைத்தையும் பார்க்கின்றான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான். எனும் (6:103 ஆவது) வசனத்தையும், எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும் வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை எனும் (42:51 ஆவது) வசனத்தையும் ஓதினார்கள்.
மேலும் எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றை அறிவார்கள் என்று சொல்கிறாரோ, அவரும் பொய்யே சொன்னார் என்று கூறிவிட்டு பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக) எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகின்றான் என்பதை அறிவதில்லை, எனும் (31:34 ஆவது) வசனத்தை ஓதினார்கள்.
மேலும் எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்து விடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்து விட்டார்கள், என்று சொன்னாரோ, அவரும் பொய்யே சொன்னார், என்று கூறிவிட்டு பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக) தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் இறைவன் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள் எனும் (5:67ஆவது) வசனத்தை ஓதினார்கள். மாறாக முஹம்மது (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களையே அவரது (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள் என்று சொன்னார்கள். ஸஹீஹ் புகாரியில் இடம் பெற்றுள்ள ஆதாரப் பூர்வமான இந்த ஹதீஸே நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்க்க வில்லை என்பதைத் தெளிவு படுத்துகிறது.
மேலும் அவனுடைய படைப்பினங்களில் யாரும் இதுவரை அல்லாஹ்வைப் பார்த்ததில்லை, இனி பார்க்கவும் முடியாது. எனவே மஹான்கள் பல முறை இறைவனைக் கண்டார்கள், அவனிடம் உரையாடினார்கள் என்றெல்லாம் சூஃபியாக்களின் போலிக் கொள்கைப் பரப்பு புத்தகங்களிலும் மத்ஹப்களின் பிக்ஹ் புத்தகங்களிலும் கூறப்பட்டிருப்பவை அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற இட்டுக் கட்டப்பட்ட பொய்யான செய்திகளாகும்.
ஆனால் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் பல மறுமையில், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்ற அவனுடைய நல்லாடியார்களுக்கு அல்லாஹ் காட்சி தருவான் என்று கூறுகிறது.
இறைத்தூதர் அவர்களே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?’ என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! இல்லை’ என்றார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், ‘மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் ‘இல்லை’ என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இதே போல்தான் நீங்கள் உங்களின் இறைவனைக் காண்பீர்கள்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
அல்லாஹ் நம் அனைவருக்கும் மறுமையில் அவனுடைய திருமுகத்தைக் காணும் நற்பேற்றினைத் தந்தருள்வானாகவும்.
Apr 22, 2008
ஈமானை பலப்படுத்துவது எப்படி?
(நபியே!) ‘ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரீல்) இதை இறக்கி வைத்தார்’ என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக.
அல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 8, ஸூரத்துல் அன்ஃபால் வசனங்கள் 2-4 ல் கூறுகிறான்: -
8:2 உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.
8:3 அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்.
8:4 இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு.
அல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 9, ஸூரத்துத் தவ்பா வசனங்கள் 2-4 ல் கூறுகிறான்: -
9:124 ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், ‘இது உங்களில் யாருடைய ஈமானை (நம்பிக்கையை) அதிகப்படுத்தி விட்டது?’ என்று கேட்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர்; யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை இது (மெய்யாகவே) அதிகப்படுத்திவிட்டது இன்னும் அவர்கள் (இது குறித்து) மகிழ்ச்சி அடைகிறார்கள்.
9:125 ஆனால், எவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களுடைய (நெஞ்சங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அவர்களுக்கு அதிகப்படுத்தி விட்டது; அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே மரிப்பார்கள்.
அல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 3, ஸூரத்துல் ஆல இம்ரான் வசனங்கள் 190-195 ல் கூறுகிறான்: -
3:190 நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
3:191 அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, ‘எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!’ (என்றும்)
3:192 ‘எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!’ (என்றும்;)
3:193 ‘எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; ‘எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!’ (என்றும்;)
3:194 ‘எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).
3:195 ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; ‘உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்’ (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.
சகோதர சகோதரிகளே!
யார் ஒருவர் அளவற்ற அருளாளனின் எண்ணிலடங்காத அத்தாட்சிகளைத் தேடி, அவற்றைப் பற்றி சிந்தித்து ஆராய்ந்து, தெளிவு பெற்று அவனின் நுண்ணறிவாற்றலைக் கண்டு வியந்தவராக இவைகள் அனைத்தையும் இறைவன் வீண் விளையாட்டுக்காக படைக்கவில்லை என்று உறுதியாக நம்புகிறாரோ அப்போது அந்த நம்பிக்கை நிச்சயமாக அவருடைய ஈமானையும் அதிகரிக்கும்.
யார் ஒருவர் நிற்கும் போதும், அமர்ந்திருக்கும் போதும், படுத்திருக்கும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவராக அவன் நமக்கு அளித்திருக்கும் அளவற்ற நிஃமத்துக்களை, அருள்களை பற்றி சிந்தித்து அவனுக்கு நன்றி செலுத்த முயல்கிறாரோ அப்போது அது அவருடைய ஈமானையும் நம்பிக்கையையும் அதிகரிக்கும்.
அடுத்ததாக ஒருவருடைய இதயத்தில் இறை நினைப்பை அதிகரித்து ஈமானையும் நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்து நம்மை இறைவனுக்கு மிக நெருக்க மாக்கி வைக்கும் மிக மிக முக்கியமான செயல் என்ன வெனில்,
மிகுந்த சிரத்தையுடன் அகிலத்தார்களுக்கெல்லாம் அருளாளனாகிய அல்லாஹ் நமக்கு வழிகாட்டியாக அருளிய அல்-குர்ஆனை பொருளுணர்ந்து படித்து அது கூறும் நல்லுபதேசங்களைப் பின்பற்றி அது விலக்கும் செயல்களை விட்டும் விலகியிருத்தல் ஆகும்.
அல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 16, ஸூரத்துந் நஹ்ல் வசனம் 89 ல் கூறுகிறான்: -
16:89 மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.
அல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 14, ஸூரத்து இப்ராஹீம் வசனங்கள் 1-2 ல் கூறுகிறான்: -
14:1 அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக!).
14:2 அல்லாஹ் எத்தகையவன் என்றால் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தாமாகும்; இன்னும் (இதை) நிராகரிப்போருக்குக் கடினமான வேதனையினால் பெருங்கேடுதான்.
வெறுமனே சில குர்ஆன் ஆயத்துக்களை ஓதுவதாலோ அல்லது பொருளறியமல் சில துஆக்களைக் கேட்பதாலோ ஒருவருடைய தீமையான காரியங்கள் அவரைவிட்டும் அகலாது, மேலும் அவைகள் அவருடைய ஈமானை, நம்பிக்கையை அதிகரிக்கவோ செய்யாது.
ஆனால் யார் ஒருவர் உண்மையிலேயே தன்னுடைய விருப்பு வெறுப்புகளை அல்லாஹ்வுக்காகவே என்று ஆக்கிக் கொண்டவராக அவர் தன்னுடைய இறைவனின் சீரிய வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறாரோ அவருக்கு இறைவனின் வழிகாட்டுதல்களும் மன்னிப்பும் கிடைக்கும். மறுமையில் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படும்.
ஆனால் இது ஒருவர் உண்மையாகவே அதிக சிரத்தையுடன் முயற்சி செய்து எவ்வித தயக்கமும் இல்லாமல் தன்னை இறைவழியில் முழுமையாக அர்பனித்துக் கொண்டால் மட்டுமே மறுமையில் நற்பாக்கியத்தைப் பெற்றுத் தரும் நேர்வழியை அடைவதற்கு வழிவகுக்கும்.
ஒருவரை அவர் தொடர்ந்து தவறுகள் செய்வதிலிருந்தும் தடுக்கக் கூடிய சக்தி எதுவென்றால் அவர் எந்நேரமும் தக்வா (இறையச்சமுடன்) இருப்பதுவேயாகும். அதாவது தவிர்க்க முடியாத நாளில் நம்மைப் படைத்த இறைவன் முன்னே நிறுத்தப்படுவோம், அவனுடைய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நாம் இவ்வுலகில் தீய செயல்கள் புரிந்தால் தண்டணை கிடைக்கும் என்ற அச்சத்துடன் எப்போதும் நாம் வாழ முற்பட்டால் நிச்சயமாக அது நம்முடைய வாழ்க்கையை சீராக்கி, வாழ்நாள் முழுவதும் மறுமை வாழ்வுக்கு தேவையான நற்கருமங்களைச் செய்வதற்கு அது நம்மைத் தூண்டும்.
இந்த இறையச்சமே இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்துகிற செயல்களை செய்வதிலிருந்தும் நம்மைத் தடுக்கும்.
எனவே சகோதர சகோதரிகளே,- நம்முடைய மனதைச் சுத்தப்படுத்தி அல்லாஹ்வை எப்போதும் நினைவில் இருத்திக் கொள்ள சிறந்த வழி என்ன வென்றால்,- நம்முடைய எண்ணங்களை சீராக்கி அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்களை செய்யக் கூடிய பக்குவத்தை ஏற்படுத்துவது எது வென்றால்,- நம்முடைய ஈமானை, நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய சிறந்த வழி என்னவென்றால்,
நிச்சயமாக அது மனிதர்களின் இம்மை மறுமை வாழ்க்கையை வெற்றி பெறச் செய்வதற்காக மனிதர்களைப் படைத்த இறைவன் அருளிய அருள் மறையாம் திருக்குர்ஆனை பொருளுணர்ந்து படித்து அதன் படி வாழ முயற்சிப்பதே ஆகும்.
யார் ஒருவர் உண்மையிலேயே தன்னுடைய விருப்பு வெறுப்புக்களை அல்லாஹ்வுக்கென்றே அமைத்துக்கொண்டு, அவருடைய சொல் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அவனுடைய அருள்மறையின் ஏவல் விலக்கல்களுக்கேற்ப அமைத்துக் கொண்டு வாழ்வாரானால் நிச்சயமாக அவருடையஈமானும் நம்பிக்கையும் அதிகரிக்கும். அல்லாஹ்வின் அளப்பற்ற மன்னிப்பும் அவன் வாக்களித்த சுவர்க்கமும் அதன் மூலம் கிடைக்கும்.
தொடர்புடைய ஆக்கங்கள்:
சமூக முன்னேற்றத்திற்கு தேவையானது எது? - Audio/Video
அமல்கள் ஏற்றுக் கொள்ளப்பட…
இறையச்சத்தை அதிகப்படுத்துவது எவ்வாறு?
தவ்ஹீதும் அதன் வகைகளும்
இஸ்லாம் என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன? இவற்றிக்கிடையே உள்ள வேறுபாடு என்ன?
Apr 14, 2008
போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!
உலக சமூகங்களில் எண்ணிக்கை அடிப்படையில் இன்று முஸ்லிம் சமூகம் இரண்டாம் இடம் வகிக்கின்றது. இந்த ஒப்பற்ற வளர்ச்சி உலக ஆதிக்க வக்கிரப் புத்தி கொண்ட சமூகங்களுக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளது.
உலக மதங்களில் வயதினடிப்படையில் மிகவும் இளைய மதமாகத்தான் இஸ்லாம் கணிக்கப்படுகின்றது. அதன் துரித வளர்ச்சி, கட்டுக்கோப்பு, தளர்வற்ற தன்மை, பிற மதத்தினர்களை இலகுவில் கவரும் திறண் போன்றவற்றை மேற்கத்திய நாடுகளும், கிறிஸ்தவ ஆதிக்க வர்க்கமும் சகித்துக் கொள்ள முடியாமல் திணறுவதை அவர்களது ஆக்கங்கள் அம்பலமாக்கிவிடுகின்றன!
‘அவர்கள் தங்கள் வாய்களினால் (ஊதி) அல்லாஹ்வின் பிரகாசத்தை அணைத்து விட நாடுகின்றனர். இந்நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை பூர்த்தியாக்கி வைப்பதைத் தவிர (வேறெதையும்) நாடவில்லை’. – அல்-குர்ஆன் (9:32).
சத்தியத்தின் வளர்ச்சியை, உண்மையின் உயர்ச்சியை யார் தான் தடுக்க முடியும். சத்தியச் சூரியன் உதித்து விட்டால் சட்டென்று விலகிவிடும் இருட்டு. சூரியனுக்கு கருப்புச் சாயம் பூச நினைக்கின்றது ஒரு வக்கிரச் சமூகம்! சத்திய இஸ்லாத்தின் சர்ரென்ற வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் சத்தியத்தை அசத்தியமாக்கும் முயற்சிகளில் பலர் களமிறங்கியிருக்கின்றனர்.
உலகத்தாருக்கு அருட்கொடையாக உதித்த எம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேலிச் சித்திரத்தின் மூலம் அவமதிக்க அண்மைக் காலமாக டென்மார்க் போன்ற நாடுகளில் உள்ளவர்களால் கடும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் முன்னர் இருந்ததை விட முஸ்லிம்களிடத்திலும், முஸ்லிமல்லாதோரிடத்திலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது அந்தஸ்தும், மதிப்பும் அதிகரித்து வருவதை அவர்களே உணரத் தொடங்கியுள்ளனர்.
தரமான பொருட்கள் சந்தைகளில் அதிகம் கொள்முதல் செய்யப்படுவது அதன் சிறப்பை உணர்த்துகின்றது. தரமற்ற பொருட்கள் மற்றும் போலி உற்பத்திகளை சந்தைப்படுத்தும் வியாபாரிகளுக்கு தரமான பொருட்கள் அதிகம் விலை போவதை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அதனால் தரமான பொருட்கள் விற்போரைத் தாக்குவதையும், அந்த இடத்திலிருந்து அவர்களது வணிகத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்குவதையும் நாம் நாளாந்தம் அங்காடி விற்பனைத் தளங்களில் காணும் காட்சிகளாக மாறிவிட்டது.
தரம் குறைந்த பொருட்களையும், போலி உற்பத்திகளையும் அதிகம் விற்கும் இடங்களில் தரமான பொருட்களை சந்தைப்படுத்துவோருக்கு இடம் கிடைப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் அந்த வியாபாரிகளைப் பற்றி அவதூறுகளைப் பரப்புவதையும், குறிப்பிட்ட அப்பொருட்களைப் பற்றி கீழ்தரமாகப் பேசுவதையும் அவர்கள் ஒருபோதும் நிறுத்துவதில்லை. இதனால் போலி வார்த்தைகளில் மயங்குபவர்கள் மயங்கிக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் ஏமாற்றமடைந்து போவது ஒரு புறம் கவலையாகவும் மறு புறம் வேதனையாகவும் இருக்கின்றது.
போலிகள் கவணம்! போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்: -
இந்த நடவடிக்கையினால் தரமான பொருட்கள் தரம் குறைந்ததாக மாறி விடாது. அதனை விற்கும் வியாபாரிகள் மோசமானவர்களாக இருப்பார்கள் என்பதும் தவறு. எனவே தான் நடுநிலையாளர்கள் நம் சிந்தனையைக் கிளறும் சிறந்த வரிகளைக் கற்றுத் தந்து விட்டு கறை சேர்ந்துள்ளனர்.
கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், தீரவிசாரித்து அறிந்ததே மெய்: -
இஸ்லாத்தை நோக்கி முஸ்லிமல்லாதோரின் படையெடுப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. எந்தப் பொருள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகின்றதோ அப்பொருளைப் பற்றி அறிந்து கொள்ள மனிதர்கள் முற்படுவது இயற்கை. அதே போன்று தான் இன்று இஸ்லாமும், முஸ்லீம்களும் உலக மன்றத்தில் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகும் ஒன்றாக மாறியுள்ளது. இஸ்லாம் எக்கோணங்களிலெல்லாம் அவமதிக்கப்பட வேண்டுமோ அக்கோணங்களில் எல்லாம் அவமதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அனைத்துமே வீண் பழியும், பொய்க் குற்றச் சாட்டுக்களுமாகும். இவற்றை மக்களிடையே கொண்டு செல்வதில் மேற்கத்திய செய்தி ஊடகங்களும் சர்வதேச வலைப்பின்னல் தளங்களும் அதீத ஆர்வம் காட்டுகின்றன!
அரக்கர்களால் தூண்டப்பட்ட மக்கள் அல்-குர்ஆனைப் படிக்க ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். பெருபேறு என்னவென்றால் அல்-குர்ஆன் அவர்களை ஈர்த்தது மட்டுமல்லாமல் இஸ்லாத்தில் நாளாந்தம் இனைந்து கொண்டிருக்கின்றனர். இது வெரும் போலிக் கூற்றன்று.
http://www.youtubeislam.com/ என்ற வெப்தளத்தைப் பாருங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். இஸ்லாத்தை நோக்கி படையெடுப்போரின் பட்டியலை அங்கே காணலாம். அவர்களது சொந்த வாக்கு மூலம் அங்கே ஒளி ஒலி வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த உண்மையை பொய்படுத்தும் நடவடிக்கையில் கிறிஸ்தவ அமைப்புக்கள் விடா முயற்சி எடுத்துள்ளனர். உலக பிரசித்தி வாய்ந்தவர்களின் பெயர்களை இட்டு இன்னார் முஸ்லிமாகி விட்டார், இன்னார் இஸ்லாத்தை ஏற்று விட்டார் என்றெல்லாம் போலியாக அவர்களே பொய் விளம்பரம் கொடுத்து வருகின்றனர். மைக்கல் ஜெக்ஸன் முஸ்லிமாகி விட்டார், சுனிதா வில்லியம்ஸ் முஸ்லிமாகி விட்டார் என்று சில கிறிஸ்தவர்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இதன் மூலமாக புதிதாக இஸ்லாத்தை ஏற்போரின் உண்மைச் செய்திகளை உலகின் கண்களுக்கு பொய்ப்பிக்க முனைகின்றனர்.
இப்படிப்பட்டவர்களை நினைக்கும் போது பாவமாக உள்ளது. பொன்னான நேரத்தை வீணடித்து தீமைகளை விலை கொடுத்து வாங்குகின்றனர்.
சகோதரர்களே! சத்தியத்தை ஏற்று ஏக தெய்வ விசுவாசியாக வாழுங்கள். அல்லது சத்தியத்தை ஏற்போருக்கு வழிவிடுங்கள்.
Apr 2, 2008
நச்சுப் பாம்புக்குப் பெயர் தான் நல்லப் பாம்பு!
சினிமாக்கள் உமிழ்ந்த எச்சங்கள் சில..
பொன்னான நேரம் மண்ணாய்ப் போகும் துயர்!
சமுதாய சீர்கேட்டிற்கு முதற் காரணியான காட்சி!
இஸ்லாமிய கலாச்சாரங்கள் சிதைவதற்கு வழிகோலுகின்றது!
மனிதனது உள்ளங்களிலே நயவஞ்சகத்தை உண்டாக்கும் விபரீதம்!
சில சமயங்களில் இன மோதல்களுக்குக் கூட வழிவகுக்கும் அபாயங்கள்!
சிறுவர்கள் மனங்களிலே சின்னச் சின்ன ஆசைகளை வளர்க்கின்றது!
வாலிப உள்ளங்களுக்கு வயாகரா ஏற்றி வேடிக்கைப் பார்க்கிறது இந்த சினிமா!
அந்திப்பட்டால் பாடங்களை மீட்டுவதில் ஆர்வம் காட்டிய மாணவர்கள்
இன்று டி.வி.க்களுக்கு முன்னால் காட்சி தரும் சோகங்கள்!
நல்ல விஷயங்களை கேட்பது, படிப்பது போன்ற நல்லறங்களை விட்டும் நம்மைத் தடுக்கிறது
குடிப்பழக்கம், புகைத்தல் போன்ற தீய பழக்க வழக்கங்களுக்கு
மிக விரைவில் மனிதனை அடிமையாக்கி வேடிக்கைப் பார்க்கின்றது இந்த சினிமாக்கள்!
நாகரிகம், ஸ்டைல் என்ற பெயரில் சினிமா நடிகர்களால் இவைகள் ஊக்குவிக்கப்படுகின்றது!
நாகரீக மோகம் கொண்ட இளைஞர்களுக்கு நடிகர்கள் தானே ஆசிரியர்கள்!?
விபச்சாரத்தில் வழுக்கி விழ மனிதனை கூவி அழைக்கின்றது இந்த சினிமாக்கள்!
அரைகுறையாக காட்சி தரும் அழகு மங்கையர்களைக் கண்டு களிப்பதற்கென்றே
ஒரு சமூகம் அலைமோதுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்!
இது தானே விபச்சார விபத்திற்கான முதல் எட்டு (படி)...!!
சமுதாய சீர் கேட்டிற்கு வித்திடும் இந்த சினிமாவைப் புறக்கணிப்போம்
பொண்ணான நேரத்தை மண்ணாக்காது
ஒவ்வொரு வினாடியையும் நல்ல விஷயங்களில் செலவு செய்வோம்
நச்சுப் பாம்புக்குப் பெயர் தான் நல்லபாம்பு
சினிமாக்கள் எவ்வளவு தான் நல்ல தோல் போர்த்தினாலும்
அது வடிகட்டிய அசிங்கம்... அசிங்கம்... அசிங்கம் தான்!
இந்த கேவலமான சினிமாக்களை புறக்கணித்து படிப்பு, வாசிப்பு போன்ற விஷயங்களில் கவணம் செலுத்துவதன் மூலம்
காலத்தை வீணாக்காது காலத்தின் கண்ணியத்தைப் பேணுவோமாக!
Mar 31, 2008
சரித்திரப் பார்வையில் மூடர் தினம்! (ஏப்ரல் ஃபூல்)
இறைவனின் நேரிய வழிகாட்டுதல்களும், அறிவுப்பூர்வமான எந்த வித கொள்கைளும் இல்லாமல் தம்முடைய மனோஇச்சைகளையே தங்களின் கொள்கைகளாகவும் வாழ்க்கை நெறியாகவும், கடவுளாகவும் பின்பற்றி வாழக்கூடியவர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் குறிப்பிட்ட தினங்களை முக்கியப்படுத்தி அவைகளுக்கு முக்கியத்துவம் தந்து அந்த நாட்களை கொண்டுவது ஆகும்.
இவ்வகையான கொண்டாட்டங்களில் காதலர் தினம், மனைவியர் தினம், அன்னையர் தினம், மூடர் தினம் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வகையான தினங்களைக் கொண்டாடுவோர் அவற்றுக்காக ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் கூறுவர். இந்த சிறிய கட்டுரையில் இவர்கள் மூடர் தினம் (ஏப்ரல் ஃபூல்) என கொண்டாடும் தினத்தைப் பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டத்தைப் பார்க்கலாம்.
மூடர் தினத்தின் தோற்றம் குறித்த கருத்துக்கள்: -
மூடர் தினத்தின் தோற்றம் குறித்த பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றது. இருப்பினும் இதன் தோற்றம் குறித்த உறுதியான கருத்து என்று எதுவும் கூறுவதற்கில்லை.
இதன் தோற்றம் குறித்த கருத்துக்களில் மிகவும் பிரபலமாகக் கருதப்படும் சிலவற்றைக் காண்போம்: -
1) பண்டைய அறியாமைக் கால பழக்கம்: -
சிலரது கூற்றுப்படி, பண்டைய காலத்தில் வாழ்ந்த அறியாமைக் கால மக்கள் ஏப்ரல் 1 அல்லது மார்ச் 21 ஆம் தேதியை மையமாக வைத்து வரக்கூடிய 'சம இரவு தினம்' (vernal equinox) என்றழைக்கடும் (பூமியின் வடக்கு அரைக்கோளத்தில்) வசந்த காலத்தின் துவக்க தினத்தை திருவிழா தினமாக கொண்டாடி வந்தனர். இந்த தினத்தில் கேலியும் கிண்டல்களும் அடங்கிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வந்தனர்.(1)
2) புதிய வருடப்பிறப்பு அறிமுகமாதல்:-
கி.பி. 1582 ஆம் ஆண்டு கிறிஸ்தவ போப் கிரிகோரி XIII என்பவர் புதிய காலன்டரை அறிமுகப்படுத்தி ஜனவரி 1 ஆம் தேதியை புதிய ஆண்டின் துவக்க நாளாக மாற்றியபோது அதுவரை ஜூலியன் காலன்டர் முறைப்படி ஏப்ரல் ஒன்றாம் தேதியை தங்களின் வருடப்பிறப்பாக கொண்டாடி வந்தவர்கள் இந்த புதிய காலன்டரை ஏற்க மறுத்தனர். அவர்களை கேலி செய்யும் விதமாக இந்த புதிய காலன்டரை தினித்தவர்கள் ஜனவரி முதல் தேதியை வருடப்பிறப்பாக ஏற்க மறுத்தவர்களை கேலியும், கிண்டலும் செய்யும் விதத்தில் அவர்களை மூடர்களாக்குகின்ற விதத்தில் பொய்களையும் போலியான பரிசுப் பொருட்களையும் அனுப்பி வைத்து மகிழ்ந்தனர். இந்த அறிவீனமான செயல் பின்னர் படிப்படியாக ஐரோப்பியா முழுவதும் பரவலாயிற்று. (2)
3) முஸ்லிம்களிடமிருந்து ஸபெயினைக் கைப்பற்றுதல்: -
ஸபெயினை முஸ்லிம்கள் ஆட்சி செய்த போது அவர்களின் படை மிகவும் வலிமை மிக்கதாகவும் எதிரிகள் கண்டு அஞ்சக் கூடியதாகவும் அமைந்திருந்தது. அதைக் கண்டு பொறுக்காத இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களை அழித்துவிட துடித்தனர். இருப்பினும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அதற்கான காரணத்தை அவர்கள் ஆராயும் போது முஸ்லிம் படையினர் சிறந்த ஈமான் தாரிகளாகவும் இறையச்சமுடையவர்களாகவும் இருப்பதைக் கண்டனர்.
முஸ்லிம்களை வெல்ல வேண்டுமானால் அவர்களின் நம்பிக்கையைக் சிதைப்பதை விட வேறு வழியில்லை என்பதை உணர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்களுக்கு மதுபானத்தையும் சுருட்டுகளையும் இலவசமாக அனுப்பி வைத்தனர். அதைப் பயன்படுத்த துவங்கிய முஸ்லிம்கள் நாளடைவில் தங்களது ஈமானில் உறுதியழந்து பின்னர் படிப்பபடியாக தங்களின் வலிமையிலும் வலுவிழந்தனர்.
இதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிறிது சிறிதாக முஸ்லிம்கள் வசம் இருந்த ஸ்பெயினின் பகுதிகளைக் கைப்பற்றலாயினர். இறுதியில் முஸ்லிம்களின் கோட்டையாக விளங்கிய கிரினாடாவில் உள்ள பகுதியை ஏப்ரல் முதல் தினத்தன்று கைப்பற்றினர். அந்த நாள் முதல் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் தேதியை மூடர்களின் தினமாக அவர்கள் கொண்டாடி வருகின்றனர். (3)
இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல் தினம்!: -
இந்த வகை மூடர் தினத்தின் தோற்றம் குறித்து கூறப்படும் கருத்துக்களில் உண்மையானது எதுவாக இருந்தாலும் முஸ்லிம்கள் இந்த தினத்தைக் கொண்டாடுவதோ அல்லது அந்த தினத்தில் ஒருவரையொருவர் கேலியும், கிண்டலும் செய்து பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதோ இஸ்லாத்தில் அனுமதிக்கபடாதவைகளாகும்.
மூடர் தினத்தை முஸ்லிம்கள் ஏன் கொண்டாடக் கூடாது?
1) ஜாஹிலிய்யாக் (அறியாமைக்) காலத்தின் அனைத்து மூடப்பழக்க வழக்கங்களையும் குழிதோண்டிப் புதைப்பதற்காக வந்தவர்கள் தான் நமது நபி (ஸல்) அவர்கள். நாம் அண்ணலாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டுமேயல்லாது அறியாமைக்கால மக்களின் பழக்கங்களாகிய பிறரைக் கேலி, கிண்டல் செய்து அவர்களை ஏமாற்றி அதன் மூலம் சந்தோசமடைவதைப் பின்பற்றக் கூடாது.
2) கிறிஸ்தவ பாதிரியாரான போப் கிரிகோரி என்பவர் துவக்கிய புதிய காலன்டரைப் பின்பற்றாதவர்களை கேலி செய்வதற்காக உருவாக்கியதாகக் கருதப்படும் இந்த தினத்தைக் கொண்டாடுபவர்கள் அவர்களின் இத்தீய செயல்களுக்குத் துணைபோவதோடு அல்லாமல் நபி (ஸல்) அவர்களின் 'யார் அந்நிய சமூகத்தவர்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே!' என்ற எச்சரிக்கையை மீறி செயல்பட்டவரைப் போலாவார்.
3) போதைப் பொருட்களுக்கு முஸ்லிம்களை அடிமையாக்கி அதன் மூலம் அவர்களை மூடர்களாக்கி அவர்களின் மனவலிமையை இழக்கச் செய்து அதன் மூலம் தந்திரமாக ஸ்பெயின் நாட்டை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றி அதைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்து ஒரு முஸ்லிமும் கொண்டாடுவாரானால் அவரை விட வேறு ஒரு மூடர் இருக்க முடியுமா? ஏனென்றால் இது தம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் மூடர்களாக்கப்பட்டதை தாமே கொண்டாடுவது போலாகாதா?
4) இந்த மூடர் தினத்தின் தோற்றம் குறித்த மேலே குறிப்பிடப்பட்ட காரணங்கள் எதுவாக இருந்தாலும் அல்லது இவைகளல்லாத வேறு எந்தக் காரணமாக இருந்தாலும் அவைகள் அனைத்துமே முஸ்லிம்களால் தோற்றுவிக்கப்படவில்லை. மாறாக இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் இஸ்லாத்தின் எதிரிகளால் தோற்றுவிக்கப்பட்டது. எனவே தம்மை முஸ்லிம் எனக் கூறிக்கொள்ளும் எவரும் இத்தகைய தீய செயல்களிலிருந்து விலகியிருப்பதோடல்லாமல் மற்றவர்களுக்கு இதன் தீமைகளை எடுத்துக் கூற முன்வரவேண்டும்
5) இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக இந்த தினங்களைக் கொண்டாடுபவர்கள் செய்யும் காரியங்களாவன: -
a. பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வது
b. பிறரை ஏமாற்றி அவர் ஏமாந்து துன்பப்படும் போது அதைப் பார்த்து ரசிப்பது
c. போலியான பரிசுப்பொருட்களை பிறருக்கு அனுப்பி அவரை கேலி செய்வது
d. ஒருவரின் நெருங்கிய உறவினர்கள் (தாய், தந்தை அல்லது மனைவி போன்றவர்கள்) இறந்து விட்டதாக வதந்தியைக் கிளப்பி விட்டு அவரை வேதனைப் படுத்தி அதை ரசிப்பது
e. ஒரு நாட்டின் தலைவர் இறந்து விட்டதாக அல்லது மிக மோசமான ஒரு விபத்து ஏற்பட்டு விட்தாக வதந்நியைக் கிளப்புவது
f. இது போன்ற ஏராளமான பொய்யான தகவல்களையும் கேவலத்திற்குரிய செயல்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவைகள் அனைத்துமே இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகள் மட்டுமின்றி இதைச் செய்பவர்களுக்கு மிக கடுமையான எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றது.
பொய் பேசுவதன் தீமைகள்: -
1) பொய்யுரைப்பவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள்: -
அல்லாஹ் கூறுகிறான் :
16:105 நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)
2) முனாஃபிக்கின் (நயவஞ்சகனின்) அடையாளங்களில் ஒன்று பொய்யுரைப்பது: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்குர்ஆன் 9:77)
3) பொய் பேசுவது நரகத்திற்கு வழிவகுக்கும்: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும்; நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் 'வாய்மையாளர்' (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகி விடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் 'பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி), ஆதாரம்: புகாரி
4) பரிகசிப்பது மற்றும் கேலி செய்வது அறிவீனர்களின் செயல்: -
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், 'நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்' என்று சொன்னபோது, அவர்கள் '(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?' என்று கூறினர்; (அப்பொழுது) அவர், '(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார். (அல்குர்ஆன் 2:67)
5) பொய் பேசுபவனுக்குரிய தண்டனைகள்: -
சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் 'உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?' என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, 'நடங்கள்' என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். - அல்லது பிளந்தார் - பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், 'அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?' என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்' என்றனர்.
……
நான் அவ்விருவரிடமும், 'நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?' என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், '(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.
……
தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.
அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப்(ரலி, ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)
6) விளையாட்டுக்காகக் கூட பொய் பேசக் கூடாது: -
முஆவியா இப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசுபவனுக்கும் பொய் சொல்பவனுக்கும் கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக' என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆதாரம் : திர்மிதி
இஸ்லாத்தில் விளையாட்டாகப் பொய் பேசுவது கூட தடுக்கப்பட்டுள்ளது. அது போல பிறரை சந்தோசப்படுத்துவதற்காகவும் பொய் பேசக் கூடாது.
எனவே சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் கடுமையாக எச்சரித்திருக்கும் இத்தகைய தீய செயல்களான பொய் பேசுதல், பிறரை துன்புறுத்தி சந்தோசம் அடைதல், ஏமாற்றுதல் ஆகியவைகளையே முழு மூச்சாக செயல்படுத்தும் மிக மோசமான மூடர்களின் மூடர் தினத்தை விட்டும் முஸ்லிம்களாகிய நாhம் தவிர்ந்திருப்பதோடு அல்லாமல் பிறருக்கும் இதனுடைய தீமைகளை எடுத்துக் கூறி இதனை நமது சமூக மக்களிடமிருந்து களைவதற்கு முயற்சிக்க வேண்டும்.
அல்லாஹ் அதற்குரிய ஆற்றலையும் மனவலிமையையும் தந்தருள்வானாகவும்.
கட்டுரைக்கு உதவிய தளங்கள் –
1) http://www.museumofhoaxes.com/aforigin.html
2) http://www.infoplease.com/spot/aprilfools1.html
3) http://islam-qa.com/index.php?pg=article&ln=eng&article_id=99
Mar 25, 2008
என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பலனில்லையே! ஏன்?
தொகுப்பு: நிர்வாகி
பொதுவான கேள்வி: -
நான் ஐவேளை தொழுது வருகிறேன்! பர்லான மற்றும் சுன்னத்தான நோன்பு முதலிய கடமைகளை தவறாமல் செய்து வருகிறேன். இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகிறேன்! ஆனால் என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பலனில்லையே! அப்படியானால் என்னுடைய பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லையா?
பதில்: -
பொதுவாக முஃமின்களுடைய துஆவை (பிரார்த்தனையை) மூன்று வகையாக பிரிக்கலாம். அவைகள்: -
- ஹராமான செயல்களிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்கும் ஒரு முஃமினுடைய துஆ
- ஹராமான செயல்களில் மூழ்கியுள்ள ஒருவரின் துஆ
- அநீதியிழைக்கப்பட்டவரின் துஆ.
1) ஹராமான செயல்களிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்கும் ஒரு முஃமினுடைய துஆ: -
ஒரு முஃமினைப் பொறுத்தவரைக்கும் அவர் எந்நேரமும் இறைநம்பிக்கையுடன் இறைவனிடம் பிரார்த்தித்வராக இருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. அநேக குர்ஆன் வசனங்களும் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களும் பிரார்த்தனை செய்வதன் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன.
பிரார்த்தனையின் முக்கியத்துவம்: -
அல்லாஹ் கூறுகிறான்: -
"(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; 'நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்' என்று கூறுவீராக. அல்-குர்ஆன் (2:186) "
'என்னிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.' (அல்குர்ஆன் 40:60)
மேற்கூறிய இந்த வசனங்கள் பிரார்த்தனையின் முக்கியத்துவம் குறித்துக் கூறும் வசனங்களாகும். ஏனெனில் பிரார்த்தனை சிறந்த வணக்கங்களில் ஒன்றாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
பிரார்த்தனை (துஆ) ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் -ரலி, நூல்:அபூதாவூத், திர்மிதி)
பிரார்த்தனைகளுக்கு அல்லாஹ் நிச்சயம் பதிலளிக்கிறான்: -
அல்லாஹ்வை பேணுதலான முறைப்படி வணங்கும் ஒரு உண்மையான முஃமின் தன்னுடைய இறைவனிடம் கேட்டால் அந்தப் பிரார்த்தனைக்குப் பதிலளிப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
பாவம் சம்பந்தப்படாத இரத்த பந்தத்தை துண்டிக்காத விஷயத்தில் எந்த ஒரு முஸ்லிமாவது பிரார்த்தனை செய்தால் அல்லாஹ் அவனுக்கு மூன்றில் ஒன்றை கொடுக்காமலில்லை. அவனின் பிரார்த்தனையை உடன் ஏற்றுக் கொள்கின்றான். அல்லது அதனுடைய நன்மையை மறுமைக்காக சேகரித்து வைக்கின்றான். அல்லது அப்பிரார்த்தனையைப் போன்று (அவனுக்கு நேரவிருந்த) ஒரு ஆபத்தை தடுத்து விடுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அப்படியானால் நாம் அதிகம் பிரார்த்தனை செய்வோமே என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், கேட்பதை விட அல்லாஹ் அதிகமாக பதிலளிக்க தயாராக இருக்கிறான்' எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரி, ஆதாரம்: திர்மிதி
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: -
துன்பத்திற்குள்ளான நிலையிலும் கவலையிலும் இருக்கும் அல்லாஹ்வின் அடியான் ஒருவன் இந்த துஆவை கேட்டால் அவருடைய துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.
"யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உனது அடிமை, உனது அடிமையின் மகன், மற்றும் உனது அடிமைப் பெண்ணின் மகன். எனது நெற்றிப்பிடி உன் கையில் உள்ளது. அதனை உனது சட்டத்தின்படி நீ செயல்படுத்துகிறாய். எனக்கு நீதமான தீர்ப்பு வழங்குகிறாய். உனக்கு நீயே சூட்டிக்கொண்ட, உனது வேதத்தில் நீ இறக்கியருளிய, உனது படைப்பினங்களில் ஒருவருக்கு (நபிக்கு) நீ கற்றுக் கொடுத்த, உனது மறைவான ஞானத்தில் நீயே தேர்ந்தெடுத்துக் கொண்ட உன்னுடைய அனைத்துப் பெயர்களின் பொருட்டால் கேட்கிறேன். (இறைவா!) குர்ஆனை என் உள்ளத்தை பொலிவூட்டக் கூடியதாக, நெஞ்சின் ஒளியாக, கவலையை நீக்கக்கூடியதாக, துன்பத்தை போக்கக் கூடியதாக ஆக்குவாயாக!"
இந்த வார்த்தைகளடங்கிய துஆ ஏற்றுக்கொள்ளப்படும். அல்லாஹ் அவருடைய துயரங்களை நீக்கிவிட்டு அதற்குப் பகரமாக இன்பங்களையும் மகிழ்ச்சியையும் அளிப்பான். ஆதாரம்: அஹ்மத்
உயர்ந்தவனாகிய உங்களின் இரட்சகன் வெட்கமுள்ளவன், சங்கையானவன் அவனிடம் இரு கைகளையும் உயர்த்தினால் (பிரார்த்தித்தால்) அவ்விரண்டையும் வெறுமையாக திருப்பி விட அவன் வெட்கப்படுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: சல்மான் (ரலி)
மூவரின் துவா அல்லாஹ்வினால் நிராகரிக்கப் படாது. பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு செய்யும் துஆ; நோன்பாளியின் துஆ; பிரயாணத்தில் இருக்கும் பயணியின் துஆ.' ஆதாரம்: திர்மிதி
"மூவரின் துஆக்கள் எப்போதும் (அல்லாஹ்வினால்) நிராகரிக்கப்படுவதில்லை. அவர்கள்: ஒருவர் தமது நோன்பு துறக்கும்போது கேட்கும் துஆ; நீதியான ஆட்சியாளரின் துஆ; அநியாயம் இழைக்கப்பட்டவரின் துஆ" ஆதாரம்: திர்மிதி
பிரார்த்தனை செய்ய சிறந்த நேரங்கள்: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
இரவின் பாதியோ அல்லது மூன்றில் இரண்டு பகுதியோ கடந்து விட்ட பின் அல்லாஹுத்தஆலா பூமியின் வானத்திற்கு இறங்குகிறான். பிறகு, கேட்கக் கூடியவர்களுக்கு கொடுக்கப்படும், பிரார்த்திப்பவர்களுக்கு பதிலளிக்கப்படும். பாவ மன்னிப்புத் தேடுபவர்களுக்கு பாவம் மன்னிக்கப்படும் என்று அதிகாலை உதயமாகும் வரைக்கும் அல்லாஹ் கூறிக்கொண்டிருக்கிறான். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்.
ஒவ்வொரு இரவின் ஒரு பகுதியிலும் கேட்கப்படும் துஆ: -
"இரவின் பகுதியில் ஒரு நேரம் இருக்கிறது அந்நேரத்தில் எந்த முஸ்லிமும் இந்த உலகத்தின் விஷயத்தில் அல்லது மறுமையின் விஷயத்தில் கேட்டு அது அளிக்கப்படாமல் இருப்பது இல்லை; இது ஒவ்வொரு இரவிலும் இருக்கிறது." ஆதாரம்: முஸ்லிம்.
பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் கேட்கப்படும் துஆ: -
'பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் துஆக்கள் நிராகரிக்கப்படுவது இல்லை.' அறிவிப்பவர்: அனஸ் (ரலி) ஆதாரம்: அஹ்மத், அபுதாவூத்.
சஜ்தாவின் போது இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நேரமாகும்: -
'ஓர் அடியான் தன்னுடைய இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நிலை ஸஜ்தாவில் இருக்கும் போதே ஆகும். ஆகையால் அந்நிலையில் அல்லாஹ்விடம் அதிகமாக துஆ செய்து தமது தேவைகளை கேளுங்கள். ஆதாரம்: முஸ்லிம், அபூதாவுத்
(பிரார்த்தனை) துஆ செய்யும் ஒழுங்கு முறைகள்: -
'நீங்கள் யாராயினும் பிரார்த்தனைப் புரிந்தால் அல்லாஹ்வைப் புகழ்ந்து ஆரம்பிக்கட்டும். பின்னர் இறைத்தூதர் (ஸல்) மீது ஸலவாத்துச் சொல்லட்டும். பின்னர் அவர் விரும்பியதைக் கேட்டு பிரார்த்திக்கட்டும்' என்றார்கள். அறிவிப்பவர்: பலாலா இப்னு உபைத் (ரலி) ஆதார நூல்கள்: முஸ்னத் அஹ்மத். ஸுனன் அபூதாவூத். ஸுனன் திர்மிதி.
அவசரக்கார மனிதன்: -
நம்மில் சிலருக்கு, நான் தொடர்ந்து ஐவேளை தொழுது வருகிறேன், நோன்பு வைக்கின்றேன், கடமையான மற்றும் சுன்னத்தான அமல்களையெல்லாம் செய்கின்றேன், ஆனால் என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பலனில்லையே ஏன என்ற சந்தேகம் எழலாம்.
பொதுவாக மனிதன் அறியாமையின் காரணமாக அவசரக்காரனாக இருக்கிறான். சில நேரங்களில் ஒன்றை அவன் நல்லது எனக் கருதி அது தனக்கு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் என எண்ணுவான். ஆனால் அது அவனுக்குக் கிடைக்கப்பெறுமாயின் அதுவே அவனுடைய இந்த உலக வாழ்வின் மிகப்பெறும் சோதனையாகவும் வேதனையாகவும் மாறிவிடுகிறது. ஏன் மறுமை வாழ்வுக்காக அவனுடைய செயல்பாடுகளையே பாதித்துவிடும் அளவுக்கு அது அமைந்து விடுகிறது.
அனைத்தையும் அறிந்தவனான அல்லாஹ் மட்டுமே அவனுடைய அடிமைகள் ஒவ்வொருடைய தேவையையும் நன்கறிந்தவனாகவும், அவர்களுக்கு எது தேவை மற்றும் எது தேவையில்லை எனவும் அறிந்தவனாக இருக்கிறான். எனவே நாம் அல்லாஹ்விடம் துஆ செய்யும் போது ' நாம் கேட்கும் ஒன்று நமக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பலனளிக்குமாயின் அதை நல்குமாறும், அவ்வாறில்லையெனில் அதற்குப் பகரமாக அதைவிடச் சிறந்த ஒன்றை நல்குமாறும் கேட்கவேண்டும். ஏனெனில் எது நல்லது அல்லது எது கெட்டது என்பது நமக்குத் தெரியாது; ஆனால் நம்மைப் படைத்த அல்லாஹ்விற்கே நம்மை விட பரிபூரணமாக தெரியும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 17:11)
மேலும் ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தம் என நினைக்கிறேன். அதாவது ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யத் தவறக் கூடாது. மனிதனாகிய அனைவரும் அல்லாஹ்வின் பால் தேவையுள்ளவர்கள். அல்லாஹ்மட்டும் தான் தேவையற்றவன்.
தேவைகளைக் கேட்கும் ஒருவன் கண்டிப்பாக ஒரு விஷயத்தைக் கவணத்தில் கொள்ள வேண்டும். அதாவது நாம் அடிமைகள், அல்லாஹ் நமது எஜமான். நாம் எஜமானிடத்தில் கேட்கும் போதெல்லாம் எஜமான் உடனேயே நமக்கு தரவேண்டும் என எதிர்பார்ப்பது நம்மிடம் இருக்கும் குறையாகும். அல்லாஹ்வைப் பொருத்தவரை தனது அடியான் விஷயத்தில் அதிக அக்கறையுள்ளவன். அதனால் பிரார்த்தனை செய்யுமாறு கூறிவிட்டு அப்பிரார்த்தனைக்கு பதில் கொடுப்பதில் சில போது தாமதங்களை ஏற்படுத்துகிறான். காரணம், நாம் ஒன்றைக் கேட்போம் அதனை உடனேயே தந்துவிட்டால் சிலபோது அதுவே நம்மை சிரமத்திற்கு உள்ளாக்கி விடலாம். ஏனென்றால் அதனால் ஏற்படும் எதிர்கால விளைவுகள் பற்றி நாம் அறிய மாட்டோம். ஆனால் அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
உதாரணமாக, ஒருவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவர் மீதும் தந்தைக்கு பாசம் இருக்கின்றது. ஏதாவதொரு பொருளை அனைவரும் கேட்கிறார்கள், அப்பொருளை பெற்றுக் கொடுக்கும் சக்தியும் தந்தைக்கு உண்டு. ஆனால் அனைவருக்கும் அதனைப் பெற்றுக் கொடுக்க மாட்டார். காரணம் யாருக்கு கொடுக்க முடியும் யாருக்குக் கொடுக்கக் கூடாது என்பது குழந்தைகளை விட தந்தைக்கு நன்கு தெறியும். இதே போல் தான் அல்லாஹ் நம் விஷயங்களைப் பொறுத்த வரை நம்மை விட நன்கு அறிந்துள்ளான்.
எனவே நமது பிரார்த்தனைகளுக்கான பதிலை உடனேயே காண நினைப்பது நமது பண்பு. அப்பிரார்த்தனைக்கான பதிலை தரவேண்டிய நேரத்தில் தருவது அல்லாஹ்வின் பண்பாகும் என்பதனை உணர்ந்து கொள்ள தவறக் கூடாது.
எனவே நாம் அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையில் நம்பிக்கையிழக்காமலும் நம்முடைய துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லையே என பொறுமையிழக்காமலும் அல்லாஹ்வையே முற்றிலும் ஈமான் கொண்டு அவனையே முற்றிலுமாக சார்ந்து அவனிடமே நம்முடைய பொறுப்புகளை விட்டுவிட வேண்டும்.
மேலும் நாம் அவன் நம்முடைய பிரார்த்தனைகளைக் கேட்டுக் கொண்டான் என்றும் நாம் கேட்ட பிரார்த்தனைகள் நமக்கு இவ்வுலகிலோ அல்லது மறுமையிலோ நமக்குப் பலனளிக்குமாயின் அதை நமக்கு அல்லாஹ் நாடினால் தருவான் என்றும் அல்லது ஈருலகிலும் பலனளிக்கும் அதைவிடச் சிறந்த ஒன்றை நமக்குத் தருவான் என்றும் நாம் உறுதியாக நம்பிக்கைக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்லதைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லை; ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான். (அல்-குர்ஆன் 41:49)
அன்றியும், மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அவன் (நன்றியுணர்வின்றி) நம்மைப் புறக்கணித்து, விலகிச் செல்கிறான் - ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனை செய்(பவனா)கின்றான். (அல்-குர்ஆன் 41:51)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா (ரலி, அவர்கள் அறிவிக்கிறார்கள்: -
பொறுமையை இழக்காமலும், மேலும் 'நான் பிரார்த்தனை புரிந்தேன் ஆனால் என்னுடைய பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை' என்று கூறாத நிலையிலும் உங்களுடைய துஆ ஏற்றுக்கொள்ளப்படும்'
அல்லாஹ்வின் வாக்கு என்றுமே உண்மையானது: -
அல்லாஹ் கூறுகிறான்: -
பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம். (அல்-குர்ஆன் 37:75)
அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; இன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் யார்? (அல்-குர்ஆன் 4:122)
எனவே அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவனது இறுதி வேதத்தையும் நம்பும் ஒருவர் உறுதியான நம்பிக்கையுடன் ஏதாவது ஒரு வகையில் அல்லாஹ் நிச்சயம் நமது பிரார்த்தனைக்கு பதிலளிப்பான் என்ற நம்பிக்கையில் அவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
2) ஹராமான செயல்களில் மூழ்கியுள்ள ஒருவரின் துஆ: -
ஹராமான செயல்களில் மூழ்கியுள்ள ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை பெரும் பாலும் துஆக்கள் அங்கீகரிக்கப்பட வாய்ப்பில்லை என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
''ஒரு நீண்ட பயனத்தில் ஒருவன் இருக்கிறான். அவனுடைய தலை பரட்டையாகவும், அவன் புழுதியினால் அழுக்கடைந்தவனாகவும் இருக்கும் நிலையில் வானத்தை நோக்கி தம் இரு கரங்களையும் உயர்த்தியவனாக, இறைவா! இறைவா! எனப்பிரார்த்திக்கின்றான். (ஆனால்) அவனது உணவும் ஹராமாகும், குடிப்பவையும் ஹராமாகும், அவனது ஆடையும் ஹராமாகும், அவனோ ஹராத்திலேயே தோய்ந்துள்ளான் (இந்நிலையில்) அவனது பிரார்த்தனை எங்ஙணம் ஏற்றுக் கொள்ளப்படும்". என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். – ஆதாரம்: முஸ்லிம்.
எனவே எமது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமாயின் இந்நிபந்தனைகளை கட்டாயம் கவணத்திற் கொள்ள வேண்டும். வட்டி, கள்ளக் கடத்தல், திருட்டு, மோசடி, பிறர் சொத்தை அபகரித்தல், ஹராமானவற்றை விற்றல், அதனோடு தொடர்பாயிருத்தல், ஹராமானவற்றை உண்ணுதல், பருகுதல்... போன்ற அனைத்து வகையான ஹராமான செயல்களில் இருந்தும் விலகியவர்களாக எல்லா நேரத்திலும் அல்லாஹ்வை அஞ்சியவர்களாக வாழ்ந்து அவனிடம் கையேந்தினால் நிச்சயமாக ஒருபோதும் நமது பிரார்த்தனைகளை மறுக்க மாட்டான்.
அளவுக்கு மீறி பாவம் செய்திருப்பினும் மன்னிக்கக் கூடியவனாக அல்லாஹ் இருக்கிறான்: -
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 39, வசனங்கள் 53-54 ல் கூறுகிறான்: -
'என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்' (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
எனவே நான் பாவங்கள் அதிகம் செய்த பாவியாக இருக்கிறேன் என்று பாவத்திலேயே மீண்டும் மூழ்கியிருக்காமல் உடனடியாக இந்த பாவச் செயல்களிலிருந்து மீண்டு, இந்த பாவச் செயல்களை திரும்பவும் செய்ய மாட்டேன் என்ற உறுதியுடன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரிய பிறகு தொடர்ந்து நற்கருமங்களைச் செய்தவர்களாக அல்லாஹ்விடம் தமது தேவைகளைப் பிரார்த்தித்தால் இன்ஷா அல்லாஹ் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவான்.
யா அல்லாஹ்! தூய்மையான இறைவிசுவாசிகளாக எம்மை வாழ வைப்பாயாக.
3) அநீதியிழைக்கப்பட்டவனின் துஆ: -
ஹராமான செயல்களோடு தொடர்புள்ள ஒருவனாக இருந்தாலும் (நிராகரிப்பாளனாகக் கூட இருக்கலாம்) அப்பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். யாரும் யாருக்கும் எக்காரணம் கொண்டும் அநீதியிழைக்கக் கூடாது. எனவே தான் அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை தங்குதடையின்றி அல்லாஹ்வை சென்றடைகின்றன என்பதனை ஒரு சந்தர்ப்பத்தில் கீழ்வருமாறு கூறிக்காட்டினார்கள்.
முஆத் (ரழி) அவர்களை யமனுக்கு அனுப்பும் போது "அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை விஷயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்! எனென்றால் அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் திரை கிடையாது" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
முடிவுரை: -
அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் மற்றும் முஸ்லிமான அனைவருக்கும் உறுதியான ஈமானைத் தந்து, நம்மை ஹராமான செயல்களிலிருந்து விலகியிருப்பவர்களாக ஆக்கி, அனைவருக்கும் நன்மை செய்யக் கூடியவர்களாக ஆக்கியருள்வானாகவும். மேலும் சிறந்த வணக்கங்களில் ஒன்றாகிய பிரார்த்தனையை அல்லாஹ்விடம் மட்டுமே தொடர்ந்து செய்து அவனின் அளப்பற்ற அருளைப் பெறக் கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாகவும்.
Mar 22, 2008
மாற்றுக் கருத்துக்கிடமில்லா மறுமை வாழ்க்கை!
வல்லோனின் திரு நாமம் போற்றி
மொழியியலில் எல்லாச் சொற்களுக்கும் எதிர் சொற்கள் இருக்கின்றன. இரவு-பகல், காலை-மாலை, இன்று-நாளை... இது போன்று 'இம்மை' எனும் சொல்லுக்கு எதிர்ப்பதம் 'மறுமை' என்பதாகும்.
இஸ்லாம் கூறும் 'மறுமை வாழ்க்கை' பற்றி உலக அரங்கில் காலம் நெடுகிலும் வாதப்பிரதி வாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சத்தியமும் அசத்தியமும் மோதிக் கொள்ளும் பொழுது சத்தியத்தைத் தேடிக் கொண்டிருக்கும் சத்தியவாதிகளுக்கு பாலில் சக்கரை விழுந்ததைப் போன்றிருக்கும். ஏனென்றால் சத்தியம் பகுத்தறிவோடு ஒத்துப் போகக் கூடியது. அது எப்பொழுதும் ஆதாரங்களோடு அணிவகுத்து நிற்கும். தீமைப் புயலுக்கு முன்னும் நிலையாக நிற்கும் அதன் வலிமை உண்மையை உலகின் கண்களுக்கு உணர்த்த வல்லது.
தீமையை தீமை என்று தெரிந்து கொண்டும் அநேகர் அதைச் செய்வது போன்று அசத்தியத்தையும் ஏந்திப் பிடிக்கத்தான் செய்கின்றனர். அதேபோல் நன்மையான விடயங்கள் அநேகமிருக்க அவற்றை கண்டு கொள்ளாமல் இருப்பது போல், உண்மையை உணர்ந்திருந்தும் அவற்றை உதாசீனப்படுத்தும் தன்மையையும் காணமுடிகின்றது.
உண்மைதான் எப்போதும் ஜெயிக்கவல்லது. சத்தியம் நிச்சயம் தார்மீகத்தில் தலைத்து நிற்கும். இருந்தும் அந்த சத்தியத்தை ஏற்று வாழ்வோர் மிக மிகக் குறைந்தவர்களே! காரணம், எவருக்கு அல்லாஹ் நேர்வழியைக் காட்ட நாடுகிறானோ அவர்களுக்கு மட்டுமே நேர்வழியைப் பின்பற்றும் பாக்கியத்தையும் கொடுக்கின்றான்.
மறுமை உண்டா? என்ற ஐயத்திற்கு இரு கோணங்களில் பதில் காண்போம்.
மறுமை நம்பிக்கையும் - பகுத்தறிவும்.
மறுமை பற்றி இஸ்லாத்தின் மூலாதாரங்கள்.
இந்த நவீன காலத்தில் பகுத்தறிவின் செயற்பாடு அளப்பறியது. மனித நுகர்வுச் சந்தையில் பகுத்தறிவுதான் உரைகல்! முனிதனின் மட்டுப்படுத்தப்பட்ட பகுத்தறிவுக்குப் படாதவைகள் ஏராளம். பெரும்பாலான விடயங்கள் பகுத்தறிவுக்குப் படவில்லை என்றுதான் ஓரங்கட்டப்படுகின்றன. இப்படி முஸ்லிமல்லாத சகோதரர்கள் ஓரங்கட்டிய ஒரு விடயம்தான் இஸ்லாம் கூறும் 'மறுமை' நம்பிக்கையாகும்.
மறுமை வாழ்க்கையை நம்புவது பகுத்தறிவுக்கு உட்பட்டதா? அல்லது மறுபிறவிக் கோட்பாட்டை ஏற்பது பகுத்தறிவுக்கு ஏற்றதா? விடை காணப்பட வேண்டிய அம்சங்கள். மறுபிறவிக் கோட்பாடு உண்மையில் பகுத்தறிவோடு எந்தளவுக்கு முரண்படுகின்றது என்பதனை இறுதியில் விளக்கியுள்ளோம்.
இறைவனின் படைப்புகளில் மனிதனுக்கு மட்டும்தான் சிந்தித்து செயலாற்றும் திறன் வழங்கப்பட்டுள்ளது. உங்கள் சிந்தனையைத் தூண்டும் சில கேள்விகளை உங்கள் மன்றத்தில் வைக்கிறோம் அவற்றிற்கு விடை காணுங்கள் இஸ்லாம் கூறும் மறுமை வாழ்க்கையின் உண்மை நிலையை அது உங்களுக்கு உணர்த்தும்.
'இம்மை' எனும் சொல்லுக்கு எதிர்ப்பதம் 'மறுமை' என்றால் அதன் உண்மையான அர்த்தம் தான் என்ன?
மனிதன் வாழ நினைக்கிறான் ஆனால் வாழ்க்கையின் வசந்தங்கள் கைகூடு முன்னே அவன் வாழ்க்கை முடிந்து விடுகின்றது. அழிவிலா வசந்தங்கள் இவ்வுலகில் கைகூடாத போது அது எங்குதான் சாத்தியம்?
நூறு சதவிகிதம் என்று எழுதிப் பார்த்திருக்கிறோம். காகிதங்களில் கண்டிருக்கிறோம். ஆனால் நூறு சதவிகிதம் என்பது அதிகமான விடயங்களில் ஏட்டுச் சுரக்காய்தான். இவ்வுலகில் சாத்தியப்படாத போது அது எவ்வுலகில் கிடைக்கும்?
மனிதனது தலை நரைக்கலாம். ஆனால் அவனது எண்ணங்களும், ஆசைகளும் நரைப்பது கிடையாது. அதனால்தான் வயது ஏற ஏற அநேகர் வாழ்க்கையின் வசந்தங்களையெல்லாம் கண்டுவிடத் துடிப்பது போன்று இன்னும் பல வருடங்கள் மரணமற்று வாழ விரும்புகின்றனர். ஆனால் மனித இயல்பும், இறைவனின் நியதியும் அவற்றிற்கு இடம் கொடுப்பதில்லை. அப்படியாயின் நரைக்காத இளமையும், மரணமற்ற வாழ்க்கையும் எங்குதான் சாத்தியப்படும்?
இவ்வுலகில் அனைத்திற்கும் ஆரம்பம் இருப்பது போல் முடிவும் இருக்கின்றது. அப்படியானால் முடிவே அற்ற ஒன்றை எங்குதான் காண்பது?
நல்லவர்கள் பலர் துன்பத்தில் துவழுவது போல் கெட்டவர்கள் பலர் இன்பத்தில் மிதக்கின்றனர். இப்படியே அவர்களது வாழ்க்கையும் அஸ்தமித்து விடுகிறது. உலக வாழ்க்கையில் பலரால் உணரப்படாத இந்த விந்தைக்கு இவ்வுலகில் அர்த்தம் காணப்படாத போது எந்த உலகில் தான் விடை காணப்படும்?
சிறையில் வாடும் அனைவரும் குற்றவாளிகளும் அல்லர். சிறைக்கு வெளியே வாழும் அனைவரும் சுத்தவாளிகளும் அல்லர். இவ்வுலகில் இவர்களது நிஜம் உணரப்படாத போது எவ்வுலகில் அவர்களது சுயரூபம் வெளிக்காட்டப்படும்?
இந்த சடவாத உலக நீதிமன்றங்கள் எல்லாம் நீதி தேவதையின் இரு கண்களையும் கறுப்புத் துணியால் கட்டிவிட்டுத்தான் (போலி) நீதி வழங்குகின்றன! இப்படியே இவ்வுலகம் முடிவடைந்து விட்டால் அநீதியிழைக்கப்பட்டவர்களுக்கு எங்குதான் நீதி கிடைக்கும்?
சில குற்றங்களுக்கு எவ்வளவுதான் முயன்றாலும் முழுமையான தண்டனைகள் வழங்க முடியாது. அது இவ்வுலகில் சாத்தியமும் இல்லை. உதாரணமாக, ஒரு கொலை செய்தவனுக்கும், நூறு கொலை செய்தவனுக்கும் உயர்ந்த பட்ச தண்டனையாக தூக்குத் தண்டனைதான் வழங்க முடியும். அல்லது ஆயுல் தண்டனை கொடுக்கலாம். உண்மையில் இது ரொம்ப ரொம்ப அநியாயமாகும். இவ்விடயத்தில் இவ்வுலகில் சரியான நீதி செலுத்த முடியாத பட்சத்தில் அது எங்குதான் சாத்தியம்?
பிறப்பது வாழ்வதற்கே என்று சடவாத உலகம் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அதேநேரம் பல குழந்தைகள் அம்மா என்று சொல்லப் பழகு முன்னரே இவ்வாழ்க்கைக்கு பிரியாவிடை கொடுத்து விடுகின்றது. இவர்களுக்கும் இயற்கைத் தத்துவத்தின் நீதி கிடைப்பதெங்கே?
உலகம் அழிவை நோக்கி புறப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று பொதுவாக மக்களும், உலகம் அழியும் தருணம் வெகு தொலைவில் இல்லை என்று விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் அண்மைக்காலமாக இஸ்லாத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த ஆரம்பித்து விட்டன. உலகம் அழிக்கப்பட்டு விட்டால்....???
கேள்விகளே மனிதனின் ஐயங்களை நிவர்த்தி செய்ய வல்லது. அதனால் தான் அல்-குர்ஆன் கேள்வி கேட்டு உங்கள் ஐயங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள் என பிரகடனப்படுத்துகின்றது.
'நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்'. (அல்-குர்ஆன்)
எனவே நாம் மேலே உதாரணத்திற்காக குறிப்பிட்டுள்ள கேள்விகள் போன்ற சிந்தனையைத் தூண்டக் கூடிய அம்சங்கள் நமக்கு மறுமை வாழ்க்கை நிச்சயம் உண்டு என்பதை அறிவுபூர்வமாக உணர்த்துகிறது.
சத்தியத்தை உணர்ந்து கொள்ள, சத்தியத்தை நிலைநாட்ட, சமாதானத்தை இவ்வுலகில் விதைக்க நம்மைப்படைத்த இறைவன் நமக்கு பகுத்தறிவைத் தந்தான். ஆனால் பலர் தமக்குக் கொடுக்கப்பட்ட அந்த பகுத்தறிவினாலேயே தாமும் கெட்டு பிறiரையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். வெருமனே முன்பின் யோசிக்காமல், ஆதார பூர்வமாக எந்தவொரு விடயத்தையும் அனுகாமல், நான் என்ற அகங்காரத்தால் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள தனது பகுத்தறிவை வைத்துக் கொண்டு அனைத்திற்கும் தீர்வுகாண, முடிவெடுக்க நினைப்பது தவறு. ஏனென்றால் அனேகம் பேர் தமது பகுத்தறிவை மட்டும் நீதிபதியாக்கிக் கொண்டு சட்டம் வகுத்துக் கொள்கின்ற போது நினைத்ததற்குப் புறம்பாக பல விடயங்கள் நடந்து போகின்றன. அவர்கள் எந்த பகுத்தறிவை உதவிக்கழைக்கிறார்களோ அந்த பகுத்தறிவே அவர்களை படுகுழியில் தள்ளி விடுவதை நாளாந்தம் நாம் கண்டு கொண்டிருக்கின்றோம்.
மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் அனைத்துத் தன்மைகளும் மட்டுப்படுத்தப்பட்டவைகள்தாம். பார்வைப் புலன், கேள்வி, தொடுகை, நுகர்ச்சி போன்ற எதுவாக இருப்பினும் ஒரு எல்லை வரை தான் தனது பனியைச் செய்யும். அதற்கு மேல் வேறு துனைகளுடன் தான் தன் பனியைத் தொடரும். இது தான் மனிதனின் நிலை. இதே போன்றது தான் நம் பகுத்தறிவும்.
பகுத்தறிவு தவிர்ந்த ஏனைய புலன்களின் பலவீனத் தன்மையை இலகுவில் புரிந்து கொள்ளும் மனிதன் தனது பகுத்தறிவின் யதார்த்த நிலையையும், அதன் பலவீனத் தன்மையையும் இலகுவில் புறிந்து கொள்வதில்லை. இந்த நிலையை நன்கறிந்த அல்லாஹ் காலத்தின் தேவைக்கேற்ப தனது தூதர்களை அனுப்பி வழிகாட்டியுள்ளான்.
இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாக்குகளும், அல்-குர்ஆனும் பல இடங்களில் இறுதி நாள் பற்றியும், மறுமை நாள் பற்றியும் வெவ்வேறு அடைமொழிகளுடன் குறிப்பிடுகின்றன. அதேபோன்று அந்த நாள், அந்த நாளைத் தொடர்ந்து வரும் நிகழ்வுகள் அதேபோல் அதன் பின் இருக்கும் மறுமை நாள் பற்றியெல்லாம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் மனிதர்களான அனைவரும் அந்த நாளைப் பயந்து இறைவன் கூறிய பிரகாரம் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும்.
மறுமை பற்றி அல்-குர்ஆன்:-
1) (17:49-51), (29:20), (30:27), (31:28), (36:79) ஆகிய வசனங்கள் மனிதனை அல்லாஹ் அழித்து விட்டு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவான் என்பதனை ஐயமற விளக்குகின்றன. ஒன்றுமே இல்லாமல் இருந்த மனிதனை தன் வல்லமையினால் உண்டாக்கியவன், நம்மை அழித்துவிட்டு மீண்டும் எம்மை உயிப்பிப்பது ஒன்றும் அசாத்தியமான காரியம் கிடையாது.
மனிதனுக்குக் கூட ஒன்றை உருவாக்கி அதனை இல்லாமல் செய்து விட்டு அதே போன்ற ஒன்றை மீண்டும் உருவாக்குவது சிரமமான ஒன்றும் கிடையாது. ஒரு பொருளை முதலில் உருவாக்குவதுதான் கடினம். ஆனால் அல்லாஹ் ஆகு என்றால் ஆகிவிடும் சக்தி படைத்தவன். அப்படியான சக்தியுள்ளவன்தான் இறைவனாக இருக்க சாத்தியமானவன். மனிதனுக்கே சர்வசாதாரனமான இப்படியான விடயங்களில் சக்தியுள்ளபோது சர்வசக்தனான வல்லநாயன் விடயத்தில் ஐயம் கொள்வது தகுமா?!
2) (21:1), (21:97), (33:63), (42:17), (42:18), (54:1) போன்ற வசனங்கள் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறுவதன் மூலம் நாம் எந்நேரமும் அந்த நாளுக்காக தயாராக இருந்து கொள்ள வேண்டும் என்பதனை உணர்த்துகின்றது.
அந்த நாள் நாம் கண்மூடித் திறப்பதற்குள் திடீரென ஏற்படும் என்பதையும் அல்-குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. உதாரணமாக: (6:31), (7:187) போன்ற வசங்கள் அல்-குர்ஆனில் பல இடங்களில் காணப்படுகின்றன. (அல்-குர்ஆனைப் படிக்கவும்).
3) மறுமை நாள் மிகவும் கடுமையான நாள் என்பதனையும் எல்லோரும் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படுவோம் என்பதனையும் பல வடிவங்களில் அல்-குர்ஆன் விவரிக்கின்றது.
யாவரும் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படும் நாள். (2:148), (2:281), (3:9)...
தாம் விதைத்ததை அறுவடை செய்யும் நாள். (3:30), (3:115), (4:40)...
தம் செல்வக் குழந்தைகள் கூட எமக்கு உதவ முடியாத நாள். (3:116), (26:88)...
பாலூட்டும் தாய் கூட தம் குழந்தையை மறக்கும் நாள். (22:2)...
எவரும் எவருக்கும் எள்ளலவும் உதவ முடியாத நாள். (2:48), (2:123), (2:254), (26:88)...
இறுதி நாள் பற்றியும் இறுதி நாளின் பின் ஏற்படும் மறுமை நிகழ்வுகள் பற்றியும் அல்-குர்ஆன் ஏராளமான இடங்களில் பலவகையான அடைமொழிகளை உபயோகித்து எம் சிந்தனையைத் தூண்டிக் கொண்டிருக்கின்றது. அல்-குர்ஆன் கூறும் விடயங்கள் வெரும் புரான இதிகாசங்களைப் போன்ற தன்று. மாறாக அனைத்தையும் படைத்தவனின் ஊர்ஜித வாக்குகளாகும். எனவே எந்தவொரு விடயத்தையும் தட்டிக் கழிக்காது நம்பி செயல்படுவோமாக.
மறுமை பற்றி அண்ணலாரின் பொன் மொழிகள்: -
1) 'இறைநம்பிக்கை கொண்டு அதில் அக்கிரமத்தைக் கலக்காதவர்களுக்கே (இம்மையிலும் மறுமையிலும்) அச்சமற்ற நிலை உண்டு. மேலும் அவர்களே நேர்வழி பெற்றவர்களுமாவார்' (திருக்குர்ஆன் 06:82) என்ற இறைவசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள் 'நம்மில் யார் அக்கிரமம் செய்யாமலிருக்க முடியும்?' எனக் கேட்டனர். அப்போதுஇ 'நிச்சயமாக (அல்லாஹ்வுக்கு எவரையும்) இணையாக்குவதுதான் மிகப் பெரும் அக்கிரமம்' (திருக்குர்ஆன் 31:13) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.(புகாரி)
2) நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து 'ஈமான் என்றால் என்ன?' என்று கேட்டதற்கு 'ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது' எனக் கூறினார்கள்... (புகாரி)
3) 'எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். 'கல்வி குறைந்து போய் விடுவதும் அறியாமை வெளிப்படுவதும் வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பதும் ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வகிக்கும் ஒரே ஆண் என்ற நிலமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுதியாவதும் ஆண்கள் குறைந்து விடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறக் கேட்டிருக்கிறேன்' என அனஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி)
4) 'ஓர் இரவில் தூக்கத்திலிருந்து எழுந்த நபி(ஸல்) அவர்கள் (அச்சரியமாக) 'அல்லாஹ் தூய்மையானவன்! இந்த இரவில்தான் எத்தனை சோதனைகள் இறக்கப்பட்டிருக்கின்றன. திறந்து விடப்பட்ட அருட்பேறுகள்தான் என்னென்ன?' என்று கூறிவிட்டு, 'தம் அறைகளில் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களை (தம் மனைவிமார்களை இறை வணக்கத்திற்காக தூக்கத்தை விட்டும்) எழுப்புங்கள். ஏனெனில், இவ்வுலகில் ஆடை அணிந்தவர்களாகயிருக்கும், எத்தனையோ பெண்கள் மறுமையில் நிர்வாணமாக இருப்பார்கள்' என்று கூறினார்கள்' என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
இவ்வாறு ஏறாளமான நபி மொழிகள் மறுமையில் நடை பெறக் கூடிய செய்திகளை நமக்கு கூறுவதிலிருந்து நிச்சயம் மறுமை நாள் என்ற ஒன்று இருக்கிறது என்பதனைத் தெளிவு படுத்துகின்றது.
மறுமை பற்றி நபிவாக்கிலிருந்து தெரிந்து கொள்ள ஆதாரபூர்வமான ஆயிரக்கணக்கான செய்திகள் இருக்கின்றன. ஆர்வத்தோடு தேடுங்கள்.... படியுங்கள்.... அல்லாஹ் நம் அனைவரது மறுமை வாழ்க்கையையும் சிறப்பாக ஆக்கி வைப்பானாக.
Mar 21, 2008
பெற்றோரின் மகிமை - ஓர் உண்மைச் சம்பவம்!
செய்த தவறை மறைப்பதற்காக பெற்றோரிடத்தில் அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம் செய்ததின் விளைவு! பெற்றோரின் சாபம் பலித்தது. சமீபத்தில் சவூதி அரேபியாவில் நடந்த உண்மைச் சம்பவம். பிள்ளைகள் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளும், பெற்றோர் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளும்!
Audio-Video Link : பெற்றோரின் மகிமை - ஓர் உண்மைச் சம்பவம்!
Mar 20, 2008
Mar 4, 2008
பாவமன்னிப்பு தேடுவது எவ்வாறு?
அதுமட்டுமல்லாமல் அளவற்ற அருளாளனும் தன்னுடைய படைப்பினங்களின் மேல் கொண்டுள்ள அளவில்லாத கருணையினாலும் அந்த முஃமினுடைய பாவங்களை மன்னிப்பதோடு அல்லாமல் அவர் செய்த தீய செயல்களை நற்செயல்களாக மாற்றி விடுவிடுகிறான்.
அளவற்ற அன்புடையயோனாகிய அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருவதற்கான நிபந்தனைகள்: -
1) மனத் தூய்மையுடன் பாவமன்னிப்பு கோரவேண்டும்
2) செய்துக் கொண்டிருக்கின்ற பாவமான செயல்களை உடனே நிறுத்த வேண்டும்
3) மீண்டும் அந்தப் பாவமான செயல்களின் பால் திரும்பக் கூடாது
4) தாம் செய்த பாவமான செயல்களை நினைத்து கைசேதப்படவேண்டும்
5) ஒரு அடியான் மற்றொரு அடியானுக்குச் செய்த பாவங்களுக்காக முதலில் அந்த அடியானிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
6) மரணத்தருவாயில் உயிர் தொண்டைக் குழியை அடைவதற்கு முன்னர் பாவமன்னிப்பு கோரவேண்டும்
7) சூரியன் மேற்கில் உதயமாவதற்கு முன்னர் பாவமன்னிப்பு கோரவேண்டும்
வரம்பு மீறி தீங்கிழைத்த பாவிகளையும் அல்லாஹ் மன்னிக்கிறான்: -
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 39, வசனங்கள் 53-54 ல் கூறுகிறான்: -
39:53 'என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்' (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
39:54 ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
செய்த தவறுக்காக உடனே அல்லாஹ்வை நினைத்து, வருந்தி பாவமன்னிப்பு கோரினால் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களுக்கு சுவனபதியை பரிசாக தருவான்: -
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 3, வசனங்கள் 135-136 ல் கூறுகிறான்: -
3:135 தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.
3:136 அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும்; சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது.
தவ்பா செய்து, ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்பவருடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றி விடுகிறான்: -
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 25, வசனங்கள் 63-71 ல் கூறுகிறான்: -
25:63 இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் 'ஸலாம்' (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.
25:64 இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.
25:65 'எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்' என்று கூறுவார்கள்.
25:66 நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.
25:67 இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.
25:68 அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.
25:69 கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.
25:70 ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
25:71 இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியவராவார்.
அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பாவத்தை விட்டும் திருந்திக் கொண்டால் அல்லாஹ் மன்னிக்கிறான்: -
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 6, வசனம் 54 ல் கூறுகிறான்: -
6:54 நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், 'ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)' என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
பாவ மன்னிப்பு கோருபவர் பாவமே செய்யாதவரைப் போலாவார்: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
'யார் தாம் செய்த பாவத்திற்காக பாவமன்னிப்பு கோருகிறாரோ அவர் பாவமே செய்யாதவரைப் போலாவார்' (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், ஆதாரம்: திர்மிதி)
உயிர் தொண்டைக் குழியை அடைவதற்கு முன் பாவமன்னிப்பு கோரவேண்டும்: -
'அல்லாஹ் தன்னுடைய அடியானுடைய பாவமன்னிப்பை மரணத்தருவாயில் அவர் உயிர் விடும் வரைக்கும் ஏற்றுக் கொள்கிறான்' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர், ஆதாரம்: திர்மிதி)
பாவமன்னிப்புக் கோருவதன் அவசியம்: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
"அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்; அவன் பால் திரும்புங்கள்; என்னைப் பாருங்கள்! நான் ஒரு நாளைக்கு நூறு தடவை பாவ மன்னிப்பு கோரி இறைஞ்சுகிறேன்" அறிவிப்பவர்: அகர் பின் யஸார்(ரலி) நூல்: முஸ்லிம்
முன் பின் பாவங்கள் மன்னிக்கபட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களே அல்லாஹ்விடம் தினமும் நூறு முறை பாவமன்னிப்பு கோரினார்கள் என்றால் நாம் எவ்வாறு கோரவேண்டும் என்பதைச் சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல்குர்ஆன் 2:286)
Mar 2, 2008
இது உங்களுக்காக.. (சுயபரிசோதனை)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனின் திருப்பெயரால்..
'நிச்சயமாக உங்கள் மீது பாதுகாவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
அவர்கள் கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.' (திருக்குர்ஆன் 82:10,11,12)
அன்பின் சகோதர, சகோதரிகளே..!
நாளை (இன்ஷா அல்லாஹ்..) மறுமையில் அல்லாஹ்விடத்தில் உங்கள் கணக்குகளை ஒப்படைக்கும் முன்பாக உங்களை நீங்களே பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
1. இன்று, ஐவேளைக்கால தொழுகைகளை ஜமாத்தோடு நிறைவேற்றினீர்களா?
2. உபரியான (சுன்னத், நபில்) வணக்கங்களை நிறைவேற்றினீர்களா?
3. இன்று, காலையில் விழித்தது முதல் இரவு தூங்கும் வரை ரசூல் (ஸல்) அவர்கள் கற்று தந்த திக்ரு, துஆக்களை பொருளுணர்ந்து முடிந்த வரை ஓதினீர்களா?
4. இன்று, திருக்குர்ஆனில் ஏதேனும் ஐந்து வசனங்களையாவது பொருளுணர்ந்து படித்தீர்களா?
5. முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்களே ஒரு நாளைக்கு 100 முறையாவது பாவ மன்னிப்பு கேட்பார்கள். இன்று காலையில் இருந்து நீங்கள் எத்தனை முறை பாவ மன்னிப்பு கோரினீர்கள்?
6. இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் எதிரிகள் நேர் வழி அடைய அல்லது அவர்களது சூழ்ச்சிகளில் இருந்து முஸ்லிம் சமுதாயம் பாதுகாக்கப்பட அல்லாஹ்விடம் பிராத்தனை புரிந்தீர்களா?
7. இன்று, உங்களைச்சுற்றியுள்ள மாற்று மதச்சகோதரர்களிடமும், முஸ்லிமாக இருந்தே இஸ்லாத்தை அறியாமல் இருக்கும் சகோதரர்களிடமும் இஸ்லாத்தின் ஏதேனும் ஒரு செய்தியினையாவது எத்தி வைத்தீர்களா?
8. இன்று, இஸ்லாத்தை நிலை நிறுத்த உலகமெங்கும் போராடிக் கொண்டிருக்கும் உங்கள் சகோதர, சகோதரிகளுக்காக பிராத்தனை புரிந்தீர்களா?
9. இன்று, காலை முதல் இரவு வரை யாரையாவது மனம் புண்படும் படி பேசி, பின்னர் சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்டீர்களா?
10. இன்று, உங்கள் நாவை வீணான பேச்சு, பொய், புறம், அவதூறு ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக் கொண்டீர்களா?
11. இன்று, உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை பேணிப் பாதுகாத்தீர்களா?
12. இன்று, நீங்கள் பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றினீர்களா?
13. இன்று, தீயப் பார்வை பார்ப்பதை விட்டும், தீயதைக் கேட்பதை விட்டும் உங்கள் கண்களையும், காதுகளையும் பாதுகாத்துக் கொண்டீர்களா?
14. இன்று, உங்கள் செல்வத்திலிருந்து ஒரு திர்ஹமாவது இறைவழியில் செலவழித்தீர்களா?
15. இன்று, தீமையான காரியங்கள், இழப்புகள் ஏற்பட்ட போது பொறுமையைக் கடைப்பிடித்து அல்லாஹ்வையே முழுமையாக சார்ந்தீர்களா?
16. இன்று, நன்மையான காரியங்கள் நிகழ்ந்த போது மறக்காமல் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அவனைப் புகழ்ந்தீர்களா?
17. குறிப்பாக, எல்லாவற்றுக்கும் மேலாக இன்று காலையில் இருந்து நீங்கள் செய்த எல்லா நல் அமல்களையும் அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் எதிர் பார்த்து செய்தீர்களா?
'இறை நம்பிக்கைக் கொண்டவர்களே! (வழி தவறி விடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், நீங்கள் நேர் வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான்' (திருக்குர்ஆன் 5: 105)
Mar 1, 2008
Feb 22, 2008
Feb 16, 2008
புறக்கணிக்கப்பட்ட சலாம்
இந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் உருவாக்கி அவற்றிலே மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகத் தந்துள்ளான். அவற்றில் ஒன்று தான் முகமன் (சலாம்) கூறுதல் ஆகும்.
இன்றைய காலக்கட்டங்களில், நம்மிடையே ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சலாம் கூறுதல் என்பது மிக அரிதாகிவிட்டது. அப்படியே சொன்னாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு பார்த்து சலாம் கூறி வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் சலாம் கூறுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், '(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6236
முழுமையாக ஸலாம் கூறுவதன் சிறப்பு: -
சிலர் சலாம் கூறும் போது புரியும் படியாகவோ அல்லது முழுமையாகவோ கூறுவதில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் சகாபாக்களிடம் அமர்ந்திருக்கும் போது ஒரு சஹாபி வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் என்றார். நபி (ஸல்) அவர்கள் பத்து என்று கூறினார்கள். சிறிது நேரம் சென்ற பிறகு மற்றொரு சஹாபி வந்து அஸ்ஸலாமு அலைலக்கும் வரஹ்மத்துல்லாஹி என்று கூறியபோது, நபி (ஸல்) அவர்கள் இருபது என்றார்கள். மற்றொரு சஹாபி வந்து அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு என்று கூறிய போது, நபி (ஸல்) அவர்கள் முப்பது என்று கூறினார்கள். சஹாபாக்கள் ஆர்வமிகுதியால் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்ட போது, முதலில் சலாம் கூறியவருக்கு பத்து நன்மைகள், இரண்டாவது சலாம் கூறியவருக்கு இருபது நன்மைகள், முன்றாவது சலாம் கூறியவருக்கு முப்பது நன்மைகள் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
'சலாம்' எனும் முகமனைப் பரப்ப வேண்டும்: -
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வருகிறது: -
உங்களிடையே ஸலாத்தைக் கொண்டு பரப்புங்கள். சலாம் சொல்வதால் இரு உள்ளங்களுக்கு இடையே இணக்கம் ஏற்படுகிறது.
நோயாளியிடம் நலம் விசாரிக்கும்படியும், ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லும்படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -உங்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக என) பதில் சொல்லும்படியும், (உன்னை நம்பிச்) சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், 'சலாம்' எனும் முகமனைப் பரப்பும்படியும், விருந்து அழைப்பை ஏற்கும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப்(ரலி) , ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5175)
வீடுகளில் நுழையும் முன் சலாம் கூறுவதன் அவசியம்: -
நம்முடைய வீட்டிலோ அல்லது பிறருடைய வீட்டிலோ நுழையும்போது நம்மில் எத்தனை பேர் சலாம் சொல்லி நுழையக் கூடியவர்களாக இருக்கிறோம்?. பிறருடைய வீட்டில் நுழையும் போது சமையல் வாசனை முக்கைத் துளைத்தவுடன் இன்று என்ன பிரியானி சமையலா? என்று கேட்வாறு உள்ளே நுழைகிறோம். ஆனால் இஸலாம் வலியுறுத்திக் கூறும் சலாம் சொல்வதில்லை அல்லது மறந்து விடுகிறோம்.
அத்தியாயம் 24, ஸூரத்துந் நூர் (பேரொளி), வசனம் 27 ல் அல்லாஹ் கூறுகிறான்: -
ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).
நபி(ஸல்) அவர்கள் (சபையோருக்கு அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் (மக்கள் நன்கு விளங்கிக் கொள்வதற்காக) அதனை மூன்று முறை திரும்பச் சொல்வார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6244
கணவன் மனைவிக்கும், பெரியவர் சிறியவருக்கும் சலாம் கூறுதல்: -
கணவன் மனைவிக்கும், பெரியவர் சிறியவருக்கும் சலாம் கூறக் கூடாது என்ற தவறான எண்ணம் நம்மிடையே காணப்படுகிறது. இது தவறானதாகும். நபி (ஸல்) அவர்கள் வீட்டிலே நுழையுமுன் மனைவிகளுக்கும், சிறியவர்களுக்கும் முந்திக்கொண்டு சலாம் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.
சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6231
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறுதல்: -
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறலாமா அல்லது அவர்களுடைய சலாத்திற்கு பதில் கூறலாமா? என்பதில் ஒரு சில அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், பெரும்பாலான அறிஞர்கள் மாற்றுமத சகோதர, சகோதரிகளுக்கும் சலாம் கூறுவதை ஆதரிக்கின்றார்கள்.
அத்தியாயம் 4, ஸூரத்துன்னிஸாவு (பெண்கள், வசனம் 86 ல் அல்லாஹ் கூறுகிறான்: -
உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
இந்த வசனத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் என்று அல்லாஹ் குறிப்பிடவில்லை. மேலும் மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கும் சலாம் கூறுவதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தின் பால் நல்லெண்ணம் கொண்டவர்களாக ஆகுவதற்குரிய சந்தர்ப்பமும் சகோதரத்துவமும் அதிகரிக்கும்.
மற்ற முகமன் கூறுவதிலுள்ள சிக்கல்கள்: -
இன்றைய காலக்கட்டத்தில் வழக்கத்தில் வணக்கம், நல்ல காலை பொழுது அல்லது நல்ல மாலைப் பொழுது, காலை, மாலை வணக்கம் போன்ற பலவிதமான முகமன்கள் இருக்கின்றன. அவைகளை எல்லா நேரங்களிலும் அல்லது எல்லா சூழ் நிலைகளிலும் பொருந்தக் கூடியதா என்றால் நிச்சயமாக இல்லை. ஒருவருடைய மனைவியோ அல்லது வேறு உறவினரோ இறந்து அவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்ற வேளையில் அவரிடம் சென்று Good Morning அல்லது Good Evenining என்று கூறினால் அது எப்படி அவரை கேலிக்குரியதாக்கும் என நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு மனிதர்களால் உருவாக்கப்பட்ட முகமன்கள் அனைத்தும் குறையுடைதாகவே இருக்கிறது.
ஆனால் அனைத்தும் அறிந்தவனான அல்லாஹ் நமக்கு கற்றுத்தந்த இந்த அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) என்ற இந்த முகமன் காலை, மாலை, இரவு போன்ற எந்த நேரத்திலும், துக்கம், இன்பம் போன்ற எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவருக்கு கூறுவதற்கு மிகப் பொருத்தமானதாக இருக்கிறது.
எனவே சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வால் அருளப்பட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட சலாத்தை நாம் ஒவ்வொருவரும் மற்றவரிடம் பரப்பி நம்முடைய உள்ளங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வல்ல அல்லாஹ் அருள்புரிவானாகவும்.