Showing posts with label பெரும்பாவங்கள். Show all posts
Showing posts with label பெரும்பாவங்கள். Show all posts

Jan 17, 2009

பொய்யில் ஊறித்திளைக்கும் யூதர்கள்!

பாலஸ்தீனிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தையே தீவிரவாத அரசாங்கம் என்று சொல்லி அப்பாவி பாலஸ்தீனிய மக்களைக் கொன்று குவித்தது போதாதென்று இன்று அராஜகத்தின் உச்சக்கட்டத்திற்கே சென்று அப்பாவி பொது மக்களின் மீது குண்டு மழை பொழிந்து பச்சிளங் குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவிக்கும் யூதர்கள் வழமையாக ‘நாங்கள் தீவிரவாதிகளின் இலக்குகளை மட்டுமே தாக்குகிறோம்’ என்று வழமையான தங்களின் பொய் மூட்டைகளை உலகிற்கு அவிழ்த்து விட்டு மேற்குலகவாதிகளை நம்ப வைத்து அவர்கள் மௌனம் காக்க வைத்து ஒரு மாபெரும் இன அழிவையே நடத்துகின்றனர்.

இப்போது மட்டுமல்ல காலங்காலமாகவே யூதர்கள் பொய்யர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர் என்பதற்கு நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று ஸஹீஹ் புகாரியில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்: -

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி (யூத மதத்தில் இருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்களுக்கு எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து சில விஷயங்களைக் குறித்துக் கேட்டார். ‘தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்’ என்று கூறினார். பிறகு, ‘1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையின் சாயலிலோ, தன் தாயின் சாயலிலோ இருப்பது எதனால்?’ என்று கேட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘சற்று முன்பு தான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்’ என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், ‘ஜிப்ரீல் தான் வானவர்களிலேயே யூதர்களுக்குப் பகைவராயிற்றே!’ என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்றுதிரட்டும். சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்பயான சதையாகும். குழந்தை(யிடம் காணப்படும் தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது’ என்று பதிலளித்தார்கள். (உடனே) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், தாங்கள் இறைத்தூதர் தாம் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்’ என்று கூறினார்கள்.

பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். எனவே, நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட செய்தியை அவர்கள் அறிவதற்கு முன்னால் தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்’ என்று கூறினார்கள்.

அப்போது யூதர்கள் (நபி - ஸல் - அவர்களிடம்) வந்தார்கள். (உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) வீட்டினுள் புகுந்து (மறைந்து) கொண்டார்கள்.) நபி(ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), ‘உங்களில் அப்துல்லாஹ் இப்னு சலாம் எத்தகைய மனிதர்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘அவர் எங்களில் நல்லவரும், எங்களில் நல்லவரின் மகனும் ஆவார்; எங்களில் சிறந்தவரும், சிறந்தவரின் மகனும் ஆவார்’ என்று பதிலளித்தார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு சலாம்) இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!’ என்று கூறினார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் முன்பு போன்றே கேட்டார்கள். அதற்கு அவர்கள் முன்பு போன்றே பதிலளித்தார்கள். உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் வெளியே வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்’ என்று கூறினார்கள். உடனே யூதர்கள், ‘இவர் எங்களில் கெட்ட வரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்’என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) குறை கூறலானார்கள். (அவற்றைக் கேட்ட) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், ‘இதைத் தான் நான் அஞ்சிக் கொண்டிருந்தேன், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள்.

சபித்தல் முஃமின்களின் பண்பு அல்ல!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.

நம்மில் சிலருக்கு கோபம் ஏற்படும் சில நேரங்களில் உடனே அவ்வாறு கோபம் ஏற்படுவதற்கு காரணமாணவர்களைச் சபித்து விடுகின்றனர். உதாரணமாக தமக்கு உபகாரம் செய்யாத பிள்ளைகளைப் பெற்றோர்களும், துரோகம் இழைத்தவர்களை பிறரும் சபிப்பதைப் காணமுடிகிறது. இன்னும் சிலர் சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் மண்ணை வாறியிறைத்து சாபமிடும் பழக்கமுடையவராயிருப்பதைக் காணலாம்.

இத்தகைய பண்புகள் உண்மையான முஃமின்களுக்கு உரிய பண்பு இல்லை. முஃமின்களைச் சபிப்பது குறித்து நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

‘ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : திர்மிதீ.

மேலும் நபி (ஸல்) அவர்கள், ‘அதிகம் சபிப்பது உண்மையானவர்களுக்கு அழகல்ல’ என்று கூறியிருக்கிறார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

சபித்தவனையே சூழும் சாபம்:-

‘ஒரு அடியான் எதாவது ஒரு பொருளை சபித்தால் அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும். அப்போது வானத்தின் வாசல்கள் அடைக்கப்படும். பிறகு அந்த சாபம் பூமியை நோக்கி இறங்கும். அப்போது பூமியின் வாசல்களும் அடைக்கப்படும். பிறகு அது வலது இடது புறங்களின் பக்கம் திரும்பும். அங்கும் வழி கிடைக்காததால் யார் மீது சபிக்கப்பட்டதோ அவரின்பக்கம் திரும்பிச் செல்லும். அவர் அதற்கு தகுதியற்றவராக இருந்தால் சொன்னவரிடமே திரும்பிச் சென்றுவிடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி), ஆதாரம் : அபூதாவுத்.

ஒரு முஃமினை சபிப்பது அவனை கொலை செய்வதற்கு ஒப்பாகும்!

ஒரு முஃமினை சபிப்பது அவனை கொலை செய்வதைப் போன்றதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஜைத் (ரலி), ஆதாரம் : புகாரி.

நாவைப் பேணுவோம்!

அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

படைப்பினங்களிலே மிகச் சிறந்த படைப்பாக அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மனிதன் தன்னுடைய சிறிய நாவினால் சில நேரங்களில் மேன்மையடைகின்றான். ஆனால் பல நேரங்களில் சிறுமையடைந்து விடுகிறான்.

உலகில் நிகழும் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம் இந்த நாவு தான் என்றால் அது மிகையாகாது. இந்த நாவின் மூலம் பல சமூகங்களுக்கிடையே பெரும் போர்களும் அழிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. அதே போல் மிகப் பெரும் சமுதாய எழுச்சிகளும், புரட்சிகளும் ஏற்பட்டிருக்கின்றன. எனவே நாம் இந்த நாவைப் பயன்படுத்துவதைப் பொறுத்து அதன் வினைவு ஆக்கப் பூர்வமானதாகவோ அல்லது அழிவைத் தரக்கூடியதாகவோ அது அமைகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

‘ஒரு அடியான் அல்லாஹ் திருப்தியுறும் வார்த்தையைக் கூறுகிறார். (ஆனால்) அதனுடைய சக்தியைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. இதன் காரணமாக அல்லாஹ் அவனுடைய அந்தஸ்த்தை உயர்த்துகிறான். இன்னொரு மனிதன் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய வார்த்தையை பேசுகிறான். (ஆனால்) அவன் அதனுடைய சக்தியை எண்ணிப் பார்ப்பதில்லை. இதன் காரணமாக அல்லாஹ் அவனை நரகத்தில் எறிகிறான்’ அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் :புகாரி.

நம் வாயிலிருந்து உச்சரிக்கும் அனைத்து வார்த்தைகளும் பதிவு செய்யப்படுகின்றது: -

முதலில் நாம் ஒன்றை கவனமாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். இறைவனால் நியமிக்கப்பட்டிருக்கும் வானவர்கள் கன நேரம் கூட தவறாமல் நம்மைக் கண்கானித்துக் கொண்டு நம்முடைய அனைத்துச் செயல்களையும் பதிவு செய்கின்றனர். மேலும் நம் வாயிலிருந்து உதிரும் அனைத்து வார்த்தைகளையும் ஒன்று கூட விடாமல் பதிவு செய்கின்றனர். அல்லாஹ் மறுமையில் இவை குறித்து நிச்சயமாக நம்மிடம் கேள்வி கேட்பான் என்பதை முஸ்லிமான ஒவ்வொருவரும் நன்கு நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:

“கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை” (அல்-குர்ஆன் 50:18)

சிந்திக்காமல் பேசுவதால் ஏற்படும் விபரீதம்: -

ஒரு அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப்பற்றி (நல்லதா அல்லது கெட்டதா என்று) சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடைப்பட்ட தூரமளவிற்கு நரகத்தின் (அடிப்பாகத்திற்கு) வீழ்ந்து விடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

முஸலிம்களில் சிறந்தவர்: -

‘முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ‘எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களே அவரே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), ஆதாரம் : புகாரி.

நல்லதைப் பேசு! அல்லது வாய் மூடி இரு!

‘எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும்! அல்லது வாய் மூடி இருக்கட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

சுவர்க்கம் செல்ல எளிய வழி: -

‘எவர் தமது தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாகப் பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி), ஆதாரம் : புகாரி.

Jan 8, 2009

இஸ்லாத்தின் பார்வையில் அவதூறு கூறுதல்!

அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

சமூக சீர்கேட்டை விளைவிக்கும் வெள்ளித் திரை சினிமாக்களாலும் சின்னத்திரை சீரியல்களாலும் மக்களின் சிந்திக்கும் அறிவு மழுங்கிவிட்ட இக்காலக் கட்டத்தில் பிறர் மீது அவதூறு கூறுவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இத்தகைய அவதூறுகளினால் பாதிக்கப்பட்டோர் எத்தகைய அவதிக்குள்ளாகிறார்கள் என்பதைப் பற்றி துளிகூட அக்கரையில்லாமல் தங்களின் வாய்க்கு வந்தபடியெல்லாம் தமக்கு வேண்டாதவர் மீது அவதூறு கூறி சேற்றை வாரியிறைக்கின்றனர்.

ஒரு பெண் விசயத்தில் கூறப்படும் அவதூறானது அவளின் வாழ்க்கையையே சின்னாபின்னமாக சிதைத்து ஒரு மீளமுடியாத நிரந்தர ஊனத்தை ஏற்படுத்தும். அதுவும் திருமணமாகாத பெண்கள் என்றால் அவளுக்கு மணவாழ்க்கை என்பதே கேள்விக்குறியாகிவிடும்.

இத்தகைய கொடுமையான செயலான அவதூறு கூறுவதை இஸ்லாம் தடை செய்திருப்பதோடல்லாமல் அவதூறு கூறுபவர்களுக்கு கடுமையான தண்டனை இருக்கின்றது என்றும் எச்சரிக்கின்றது.

அவதூறு கூறுபவர்களுக்கான எச்சரிக்கைகள்: -

அல்லாஹ் கூறுகிறான்: -

எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். (அல்-குர்ஆன் 24:4)

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் 24:23)

‘அழிக்கக் கூடிய ஏழு விஷயங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது நாங்கள் அவை என்னென்ன? என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், நியாயமாகவேயன்றி அல்லாஹ் ஹராமாக்கிய உயிரை கொலை செய்தல், வட்டியின் மூலம் சாப்பிடுதல், அனாதைகளின் பொருளை சாப்பிடுதல், போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுதல், கற்புள்ள பேதைப் பெண்களின் மீது அவதூறு கூறுதல்’ என்று பதிலளித்தார்கள்.

Jun 4, 2008

பெரும் பாவங்கள்!

பெரும் பாவம், சிறிய பாவம் என்றால் என்ன? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இவற்றை தவிர்த்துக் கொள்வது எப்படி? போன்றவற்றை புரிந்து கொள்வதற்காக எழுதப்பட்ட ஒரு சிறிய முயற்சி. நம் வாழ்க்கையின் தரம், இவற்றைப் பற்றிய அறிவை அறிந்துக் கொள்வதில் தான் உள்ளது.

அல்லாஹ் திருமறையில் நம்முடைய “பெரும்பாவங்களை தவிர்ந்து கொள்ளாத வரையில் நம்முடைய சிறிய பாவங்களை மன்னிக்கமாட்டான்” என்று கூறுகிறான் (4:31)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் “இந்த வசனத்திற்கு விளக்கம் அளிக்கையில், நாம் பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஐந்து நேரத் தொழுகை அவற்றுக்கு இடையே உள்ள சிறிய பாவங்களை களைந்து விடுகிறது. பெரும் பாவங்கள் நம்முடைய அமல்களை வீணாக்கி விடும்” என்று கூறினார்கள்.

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கி விடாதீர்கள். (அல்-குர்ஆன் 47:33)

அறிஞர்கள், பெரும் பாவங்களின் தொகுப்பை பல நூல்களில் விளக்கி உள்ளனர். அவற்றில் ஒன்று தான் இமாம் அத்தஹபி அவர்களின் நூல். அது சுருக்கமாக தொகுக்கப்பட்டு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தரப்பட்டுள்ளது.

பெரும் பாவங்கள்!

1) அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்

வணக்கங்களில் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் பெரிய (பாவமாகும்) இணைவைப்பு ஆகும்.

சிறிய இணைவைப்பு - ரியா : -

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: “தஜ்ஜாலின் அபாயத்தை விட அதிகமான ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கவில்லையா? ஒரு மனிதன் தொழுகைக்காக நின்று, மக்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய தொழுகையை அழகாக்குகிறார்” (இப்னு மாஜா)

2) கொலை செய்தல் (25:68)

3) சூனியம் செய்தல். (2:102)

4) தொழுகையை விட்டு விடுதல். (19:59)

5) ஜகாத் கொடுக்காமல் இருத்தல். (3:180)

6) காரணமில்லாமல் ரமலான் மாதத்தில் நோன்பு வைக்காமல் இருத்தல்.

7) வசதி இருந்தும் ஹஜ் செய்யாமல் இருத்தல்.

8.) பெற்றோருக்கு மாறு செய்தல். (17:23)

9) சொந்த பந்தங்களின் உறவை முறித்தல். (47:22)

10) விபச்சாரம் செய்தல். (17:30)

11) ஆண் புணர்ச்சி செய்தல்.

12) வட்டி வாங்குதல் & கொடுத்தல் (2:275)

13) அனாதைகளின் சொத்தை அபகரித்தல். 4(10)

14) அல்லாஹ்வின் மீதும் தூதர் மீதும் இட்டுக்கட்டுதல்.(39:60)

15) போர்க்களத்தில் இருந்து புறமுதுகு காட்டி ஓடுதல். (8:16)

16) ஒரு அரசனாக இருந்து கொண்டு தவறு செய்தல், ஏமாற்றுதல், அடக்கு முறைசெய்தல். (அஷ் ஷுஅரா:42)

17) தற்பெறுமை, ஆணவம் கொள்ளுதல். (அந் நஹ்ல்:23)

18) பொய் சாட்சி சொல்லுதல் (25:72)

19) போதை வஸ்துக்களை குடித்தல் (5:90)

20) சூதாடுதல் (5:90)

21) குற்றமில்லாத பெண்கள் மீது அவதூறு சொல்லுதல் (24:23)

22) போரில் கிடைத்த பொருளில் இருந்து மோசடி செய்தல் (3:161)

23) திருடுதல் (5:38)

24) கொள்ளை அடித்தல் (5:33)

25) தவறான சத்தியம் பிரமாணம் செய்தல்.

யாராவது ஒருவர் சத்தியப் பிரமாணம் செய்யச் சொல்லும்போது, ஒரு முஸ்லிமின் சொத்தை அபகரிப்பதற்காக தவறான சத்தியம் செய்தல், அவர் மறுமை நாளில் அல்லாஹ்வை சந்திக்கும் போது அல்லாஹ்வி கோபத்துக்கு ஆளாவார் (சஹீஹ் அல் ஜாமிஆ)

26) அடக்கு முறையை கையாளுதல்.

27) சட்டவிரோதமாக வரி விதித்தல்

திவாலானவர் யார் என்று தெரியுமா? மறுமை நாளில் தொழுது, நோன்பு நோற்று ஜகாத் கொடுக்கப்பட்ட ஒருவர் கொண்டுவரப்படுவார். ஆனால் அவர் மற்றவர்களை ஏசி, அவதூறு கூறி அவர்களுடைய சொத்துக்களை தவறான வழியில் எடுத்து, அவர்களின் இரத்தத்தை பூமியில் சிந்தியவராவார். அவர்களின் நல்ல அமல்கள் எடுக்கப்பட்டு அநீதி இழைக்கப் பட்டவர்களுக்கு கொடுக்கப்படும். அது முடிந்து விட்டால் இவர்களுடைய தீமைகள், பாவங்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு நரகத்தில் வீசப்படுவார். (சஹிஹ் அல் ஜாமிஆ 87)

28) தடுக்கப்பட்ட உணவை உட்கொள்ளுதல். (2:188)

29) தற்கொலை செய்து கொள்ளுதல். (4:29)

30) தொடர்ந்து பொய் சொல்பவர் (3:61)

31) இஸ்லாமிய சட்டங்களை விட்டுவிட்டு மற்ற சட்டங்களை வைத்து ஆட்சி செய்பவர் (5:44)

32) லஞ்சத்தில் ஈடுபடுதல் (2:188)

33) பெண்கள் ஆண்களைப்போல அல்லது ஆண்கள் பெண்களை போல தோன்றுதல்

‘ஆண்களைப் போல தோன்றும் பெண்கள் மீதும் பெண்களைப் போல தோன்றும் ஆண்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக’ என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (சஹீஹ் அல் ஜாமிஆ)

34) ‘தய்யூத்’ ஆக இருப்பது

‘தய்யூத்’ என்பவர், தன் வீட்டுப் பெண்களை அநாகரிகமான செயல்களைச் செய்வதற்கு அனுமதிப்பவரும், பொறாமைப்படுபவரும், இரண்டு பேர்களுக்கிடையே அருவருக்கத் தக்க செயல்களைச் செய்வதற்கு ஏற்பாடு செய்பவரும் ஆவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

“தொடர்ந்து மது அருந்துபவர், ஓடிப் போன அடிமை, தம் குடும்பத்தார்கள் செய்யும் தீய செயல்களைக் கண்டு திருப்தியடைந்தவர் ஆகிய இந்த மூவருக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடை செய்திருக்கிறான்”

35) திருமணம் முடித்து, மனைவியை மற்றவர்களுக்காக கொடுப்பது.

36) சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யாமல் இருப்பது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு கல்லறையின் பக்கம் சென்ற போது சொன்னார்கள், “இவர்கள் இருவரும் மிகப் பெரும் விஷயத்துக்காக தண்டிக்கப் படவில்லை; ஒருவர் சிறுநீர் கழித்து சுத்தம் செய்யவில்லை; மற்றவர் கோள் சொல்லிக் கொண்டிருந்தார்” (சஹீஹ் அல் ஜாமிஆ)

37) மற்றவர்களுக்கு காண்பிப்பதற்காக செயல்படுவது (107:4-6)

38) உலக லாபத்துக்காக அறிவைப் பெறுதல் (2:160)

39) உடன் படிக்கையை முறித்தல் (8:27)

40) ஒருவர் செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டுவது (2:27)

41) களா கத்ரை மறுப்பது (54:49)

42) ஒட்டுக் கேட்பது (49:12)

43) கட்டுக் கதைகளை பரப்புவது (54:10)

44) மற்றவர்களை ஏசுவது ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும், கொலை செய்வது இறை நிராகரிப்பாகும் (சஹிஹ் அல் ஜாமிஆ)

45) வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: அவற்றில் ஒன்று வாக்குறுதி கொடுத்தால் அதற்கு மாறுசெய்வான். (புகாரி)

46) குறி சொல்பவர்களையும், ஜோசியத்தையும் நம்புவது.

“யார் ஒருவர் குறி சொல்பவரிடம் சென்று அவர் சொல்வதை நம்புகிறாரோ அவருடைய 40 நாள் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

47) கணவனுக்கு மாறுசெய்வது (4:34)

48) துணிகளில், திரைச்சீலைகளில் உருவ படங்களை வரைதல்.

49) ஒருவரின் இறப்புக்காக அடித்துக் கொள்ளுதல், கதறி அழுதல், துணிகளை கிழித்துக் கொள்ளுதல், முடிகளை இழுத்தல்.

50) அநீதி இழைத்தல்

51) மற்றவர்களின் இயலாமையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளுதல்.

52) அண்டை வீட்டார்களை துன்புறுத்துதல்.

“தன்னுடைய துன்புறுத்தலில் இருந்து யார் ஒருவரின் அண்டை வீட்டுக்காரர் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்”

53) முஸ்லீமை ஏசுவது, அவர்களை தொந்தரவு செய்வதும் (33:58)

54) கனுக்காலுக்கு கிழே ஆடை அணிவது

முஹம்மது நபி (ஸல்) அவர்கள், “யார் கனுக்காலுக்கு கிழே ஆடை அணிகிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் வீசப்படுவார்கள்” என்று கூறினார்கள். (புகாரி)

55) அல்லாஹ்வின் அடிமையை தொந்தரவு செய்வது.

56) தங்கம், வெள்ளி அணியும் ஆண்கள்

57) அடிமையை விட்டுவிட்டு ஓடி விடுவது

58) அல்லாஹ்வுக்கு அல்லாமல் மற்றவர்களுக்காக பலியிடுவது

59) உண்மைக்கு புறம்பாக, ஒருவரை இன்னாருடைய தந்தை என்று கூறுவது.

60) மற்றவர்களுக்கு காட்டுவதற்காக விவாதம் செய்வது.

61) மற்றவர்களுக்கு காட்டுவதற்காக விவாதம் செய்வது

62) அளவையில் மோசம் செய்தல் (83:1-3)

63) அல்லாஹ்வின் திட்டத்தில் இருந்து பாதுகாப்பு பெற்றதாக நினைப்பது

64) பன்றியின் இறைச்சி, இரத்தம் சாப்பிடுவது

65) காரணமில்லாமல், பள்ளி வாசலை விட்டு விட்டு, தனியாக தொழுவது

66) ஜும்ஆ தொழுகை, மற்றும் ஜமாஅத் தொழுகைகளை காரணமில்லாமல் தொடர்ச்சியாக தொழாமல் இருப்பது

67) செல்வாக்கை பயன்படுத்தி மற்றவர்களை தொந்தரவு செய்வது

68) பித்தலாட்டங்கள், வஞ்சகங்கள் செய்வது

69) முஸ்லீம்களை வேவு பார்ப்பது

70) சஹாபாக்களை நித்தனை செய்வது.

ஆங்கில மூலம் : www.allaahuakbar.net.in

May 8, 2008

பொய் பேசுவதன் தீமைகள்!

எழுதியவர் : நிர்வாகி

அணைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சட்சி கூறுகிரறேன். மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் உண்மை அடியாரும் ஆவார்கள் எனவும் நான் சாட்சி கூறுகிறேன்.

பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லும் ஒரு தீய செயலாகும். உலகில் உள்ள அனைத்து மதங்களும், கொள்கை கோட்பாடுகளும் இதனை குறித்து எச்சரிக்கின்றன. சத்திய இஸ்லாமிய மார்க்கத்திலோ பொய் பேசுவதை தடை செய்திருப்பதோடல்லாமல் இதன் விளைவுகளைப் பற்றி மிக கடுமையாக எச்சரிக்கப் விடப்பட்டுள்ளது.

1) பொய் பேசுவது ஹராமானது ஆகும்!


அ) அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள் தான் பொய் பேசுவார்கள்: -
அல்லாஹ் கூறுகிறான்: -

“நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்” (அல்-குர்ஆன் 16:105)

ஆ) பொய் பேசுவது முனாபிஃக்கின் அடையாளம்: -


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
முனாபிஃக்கின் அடையாளம் மூன்று1) பேசினால் பொய் பேசுவான்,2) வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான்3) நம்பினால் மோசம் செய்வான். அறிவிப்பவர்:அபுஹுரைரா(ரலி), ஆதாரம் புகாரி,முஸ்லிம்.

2) பொய்யின் வகைகள்: -

அ) அல்லாஹ்வின் மீதும் அவனின் தூதரின் மீதும் பொய் கூறுவது: -


இஸ்லாத்தின் பார்வையில் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் இட்டுக்கட்டி பொய் கூறுவது மிகப் பெரும் பாவமாகும். சில மார்க்க அறிஞர்களின் கூற்றுப்படி, இவர்கள் இஸ்லாத்தை விட்டே வெளியில் சென்று விட்டார்கள்.


அல்லாஹ் கூறுகிறான்: -

‘அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்’ என்று (நபியே!) கூறிவிடும். (அல்-குர்ஆன் 10:69)

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: -

“என் மீது பொய் கூறாதீர்கள்! யாராவது என் மீது பொய்கூறினால் அவர் நரகத்தில் நுழையட்டும்” அறிவிப்பவர் : அலி (ரலி), ஆதாரம்:புகாரி.
“என்மீது யாராவது பொய் கூறினால்,அவர் நரகத்தை தனது இருபிடமாக ஆக்கிக் கொள்ளட்டும்” அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி), ஆதாரம்:புகாரி,முஸ்லிம்.

ஆ) வியாபாரத்தில் பொய் கூறுவது: -


"மறுமையில் அல்லாஹ் மூவரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்; அவர்களை கண்ணியப்படுத்தவும் மாட்டான்; அவர்களுக்கு வேதனை மிக்க தண்டனையுண்டு” நபி (ஸல்) அவர்கள் இதனை மூன்று முறை திருப்பிக் கூறினார்கள். அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : “அவர்கள் அழிந்து நாசமாகட்டும்! யாரஸுல்லுல்லாஹ்” யார் அவர்கள்? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தனது கனுக்காலுக்கு கிழே தனது ஆடையை தொங்க விடுபவனும், செய்த உபகாரத்தை பிறருக்கு சொல்லிக் காட்டுபவனும், பொய் சத்தியம் செய்து தனதுபொருள்களை விற்பனை செய்பவனும் ஆவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் முஸ்லிம்.

“விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின்வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!” என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி (2079)

இ) கணவுகளில் பொய் கூறுவது: -


தாம் காணாத கணவை கண்டதாக பொய்க் கூறுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -


“ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற் கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும் படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) ‘தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது ‘தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் ‘அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றோர் அறிவிப்பில் ‘தம் கனவு குறித்து பொய் சொல்கிறவர்…’ என்று வந்துள்ளது.
அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் ‘உருவப்படம் வரைகிறவர்… கனவு கண்டதாக(ப் பொய்) சொல்கிறவர்… (மக்களின் பேச்சுகளை) செவிதாழ்த்திக் கேட்பவர்…’ என்று இடம் பெற்றுள்ளது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பில், ‘செவிதாழ்த்திக் கேட்கிறவர்… கனவு கண்டதாக(ப் பொய்) சொல்கிறவர்… (உயிரினத்தின்) உருவப்படம் வரைகிறவர்…’ என்று இடம் பெற்றுள்ளது. ஆதாரம்,புகாரி:-7042

ஈ) கேட்பதையெல்லாம் பிறரிடம் கூறுவது: -


நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் “கேட்பதையெல்லாம் பேசுவதே ஒருவன் பொய் பேசுவதற்கு போதுமானதாகும்”. அறிவிப்பவர் ஹாஃபிஸ் இப்னு ஆஸிம்(ரலி) ஆதாரம்:முஸ்லிம்.

இங்கு முக்கியமான ஒன்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், நம்முடைய சகோதரர்களில் பலர் இன்றைய நவீன கால கருத்துப்பரிமாற்றுச் சாதனமான இமெயில் வழியாக ஒரு தகவல் பெற்றால் அதன் உண்மை நிலையை அறியாமல் ஆர்வக் கோளாறினால் அதை அப்படியே தமது நண்பர்களுக்கும், உறவினற்களுக்கும் அனுப்பி விடுகின்றனர். இதுபோல் நமக்கு அனுப்பியவரிடம், செய்தி தவறானவையாக இருக்கிறதே என்று கேட்டால், உடனே அவர்கள், மன்னிக்கவும், நான் இன்னும் படிக்கவில்லை, ஆனால் மற்றவர்களுக்கு அனுப்பிவிட்டேன் என்று கூறுகிறார்கள்.

நம்முடைய சகோதர சகோதரிகளிடம் உல்ள இத்தகைய ஆர்வக் கோளாறுகள் மூலம் பொய்யான செய்தி ஒன்றைப் பரப்ப முயற்சிக்கும் பொய்யன் ஒருவனுக்கு நம்மையறியாமல் நாமும் உடந்தையாக இருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

உ) நகைச்சுவைக்காகப் பொய் பேசுவது: -


யாரையும் பாதிக்காத வகையில் நண்பர்களுக்கிடையில் விளையாட்டாக பொய் பேசலாம் என்று நம்மில் சிலர் எண்ணுகின்றனர், ஆனால் இது தவறாகும், சத்திய இஸ்லாத்தில் விளையாட்டுக்காக பொய் பேசுவது கூட தடைசெய்யப்பட்டுள்ளது.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: -

“நான் நகைச்சுவையாக பேசுகிறேன், ஆனால் உண்மையைத் தவிர வேறென்றும் பேசுவதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) ஆதாரம்: தபரானி அவர்களின் அல்-முஜம் அல் கபீர்)
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் எங்களுடன் நகைச்சுவையாக பேசுகிறீர்களே” (என்று கூறினார்கள்) அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆனால் நான் உண்மையை மட்டும் தான் பேசுகிறேன்” என்று கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி.

அப்துல் ரஹ்மான் இப்னு அபி லைலா அறிவிக்கிறார்கள்: -

‘நபித்தோழர்கள் எங்களிடம் கூறினார்கள் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்.அப்போது எங்களுடன் இருந்த ஒருவர் உறங்கி விட்டார். அப்போது சிலர் அவரிடம் சென்று அவருடைய அம்புகளை எடுத்துக் கொண்டனர். அவர் விழித்தெழுந்ததும், அவர் (தன்னுடைய அம்புகளை கணாததினால்) அலறினார், அதைக் கண்ட மக்கள் சிரித்தனர். அப்போது நபி(ஸல்)அவர்கள் நீங்கள் எதைகண்டு சிரிக்கிறிர்கள் என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள் “ஒன்றுமில்லை நாங்கள் அம்புகளை எடுத்தோம், அதனால் அவர் அலறுகிறார். என்று கூறினர் அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை அச்சுருத்துவது தடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். ஆதாரம்: அபூ தாவூத், அஹ்மத்)

அப்துல்லா இப்னு அல் சயீப் இப்னு யஜீத், தன் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்கள்:-

“உங்களில் யாரும் அவருடைய சகோதரருடைய உடமைகளை விளையாட்டுக்காகவோ. அல்லது வேறெந்த காரணத்துக்காகவோ எடுக்க கூடாது’ யாரேனும் அவருடைய சகோதரரின் ஒரு குச்சியை எடுத்திருந்தால் (கூட) அதை அவரிடம் திருப்பித் தந்துவிட வேண்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : அபூதாவூத் மற்றும் திர்மிதி.

ஊ) குழந்தைகளிடம் பொய் சொல்வது: -


இன்று நம்மில் பலர் சர்வ சாதாரணமாக குழந்தைகளிடம் விளையாட்டாகப் பொய் பேசுகிறோம். நாம் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் இரு வானவர்களால் பதிவு செய்யப் படுகிறது என்பதை மறந்து விடுகிறோம். இந்த விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் ஏனென்றால் நாம் குழந்தைகளிடம் விளையாடுவதற்காக பொய் கூறும்போது நம் வாயிலிருந்து வெளிவந்த வார்தைகளை பொய் என்று நம் நன்மை/தீமை பட்டியலிலே பதிக்கப்பட்டு விடுகிறது. இதை குறித்து நபி(ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ஆமிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -

ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் அமர்திருக்கும் போது என் அன்னை இங்கே வா’ நான் உனக்கு ஒன்று தருகிறேன், என்று என்னை அழைத்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், அவருக்கு என்ன தரப்போகிறாய் என்று (என் தாயிடம்) வினவினார்கள். (அதற்கு என் தாய்) நான் அவருக்கு ஒரு பேரிச்சம் பழம் கொடுப்பேன், என்று கூறினார்கள். (அதற்கு) நபி(ஸல்) அவர்கள் நீங்கள் அவருக்கு ஒன்றும் தராமல் இருந்தால் நீங்கள் பொய் கூறியவராகியிருப்பீர்கள், என்று கூறினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: - “யாரேனும் ஒரு குழந்தையிடம் இங்கே வந்து இதை எடுத்துக்கொள் என்று கூறிவிட்டு அந்தக் குழந்தைக்கு ஒன்றும் தராவிட்டால், அது பொய் பேசியதாக கணக்கிலப்படும், என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவூத்,மற்றும் ஸஹீஹ் அல் ஜாமிவு

எ) மக்களை சிரிக்க வைப்பதற்காக பொய் பேசுவது: -


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

“மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசி, பொய் சொல்பவனுக்கு கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்:முஆவியா இப்னு மாதா, ஆதாரம் (திர்மிதி, அபூதாவூத்)

3) பொய் பேசுவதற்குரிய தண்டனைகள்: -


உண்மையையே போதிக்கினற, சத்திய மார்க்கமான இஸ்லாத்தில் பொய் பேசுவதற் குரியவர்கான தண்டனையைப் பற்றி கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பொய் பேசுபவர்களுக்கு இவ்வுலகில் ‘பொய்யன்’ என்ற இழிவு ஏற்படுவதோடல்லாமல் மறுமையிலோ மிக கடுமையான தண்டனைகள் காத்திருக்கிறது. பொய் பேசுபவர்களுக்குரிய இவ்வுலக மறுவுலக தண்டனைகளைப் பார்போம்.

அ) பொய் பேசுபவர்களின் உள்ளத்தில் நயவஞ்சகம் (முனாபிஃக் தனம்) விதைக்கப்படும்: -


எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்¢ அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்-குர்ஆன் 9:77)

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -

“முனாபிஃக்கை நீங்கள் மூன்று வழிகளில் அறியலாம், அவன் பேசினால் பொய் பேசுவான், அவன் வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்ற மாட்டான், அவனை நம்மினால் மோசம் செய்வான், மேலும் அவர்கள் (பின்வரும்) இந்த ஆயத்தை ஓதுங்கள், என்று கூறினார்கள்.

அவர்களில் சிலர், ‘அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்ததால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்’ என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள். (அல்-குர்ஆன் 9:75)

எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்¢ அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்-குர்ஆன் 9:77)

ஆதாரம்: முஸன்னஃப் இப்னு அமீஷைபா.

ஆ) பொய் பேசுவது தீமைகளுக்கு வழிவகுத்து நரகத்திற்கு இட்டுச்செல்லும்: -


இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -

நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச் செயல் சுவனம் செல்ல வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன் உண்மையே பேசிக்கொண்டிருகிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்!

மேலும் திண்ணமாக பொய் என்பது தீமை செய்ய வழிகாட்டுகிறது. தீமை செய்வது நரகத்திற்கு வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒருமனிதன் பொய் பேசிக்கொண்டிருக்கிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் மகாப் பொய்யன் என்று எழுதப்படுகிறான்! (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

இ) பொய் பேசுபவனுடைய சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது: -


இப்னு அல் கைய்யூம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: -

(ஒருவருடைய) சாட்சியங்ககளும்,பத்வாக்களும்,குறிப்புகளும், நிராகரிக்கப்படுவதற்கான மிக முக்கியமான காரணம் பொய் பேசுவதாகும் ஏனென்றால், இந்த பொய் அவருடைய சாட்சியத்தையும், பத்வாக்களையும் மற்றும் குறிப்புகளையும் மாசுபடுத்துகிறது. இது ஒரு குருடன் நான் பிறையைப் பார்தேன் என்று சாட்சியம் கூறுவதைப் போன்றது. அல்லது ஒரு செவிடன் ஒருவர் நடந்து சென்ற ஒசையைக் கேட்டேன், என்று சாட்சியம் கூறுவது போன்றதாகும். பொய் பேசும் நாக்கானது வேலையே செய்யாத உறுப்பைப் போன்றது. உண்மையில் அது அதைவிட மோசமானது, ஒருவனிடம் இருக்கும் மிகமிக மோசமான ஒரு பொருள் எது வென்றால் அது பொய் பேசும் அவனுடைய நாக்கு ஆகும். ஆதாரம்:(அலாம் அல்-முவக்கியீன் 1/95)

ஈ) பொய் பேசுபவருடைய முகங்கள் கருத்துவிடும்: -


அல்லாஹ் கூறுகிறான்: -

அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா? (அல்-குர்ஆன் 39:60)

உ) பொய் பேசுபவருடைய கண்ணங்களின் சதைகள் கிழிக்கப்படும்: -


சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்: -

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் ‘உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?’ என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: -

இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, ‘நடங்கள்’ என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். - அல்லது பிளந்தார் - பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், ‘அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?’ என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்’ என்றனர்.

….

நான் அவ்விருவரிடமும், ‘நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?’ என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், ‘(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.



தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.
அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப்(ரலி, ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)

ஊ) பொய் பேசினால் உண்மையான ஈமான் (நம்பிக்கை) ஏற்படாது: -


உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள், விளையாட்டுக்காக பொய் பேசுவதை நிறுத்தும் வரையில் உண்மையான ஈமான் (இறை நம்மிக்கை) ஏற்படாது. ஆதாரம்: முஸன்னஃப் இப்னு அமீஷைபா.

4) அனுமதிக்கப்பட்ட பொய்கள்: -


1) அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் பொய் பேசுவது என்பது அனைத்து விஷயங்களிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட மூன்று விஷயங்களில் அளவுக்கு மீறாமல் பொய் அனுமதிக்கப்பட்டுள்ளது, எந்த மனிதனுக்கும் ஏதாவது ஒருவகையில் நஷ்டமோ அல்லது குழப்பமோ அல்லது தீமையோ ஏற்படாது என்றிருந்தால்


1, போரின் போது 2, சண்டையிட்டுக் கொள்ளும் இருதரப்பினரை சமாதானப்படுத்த 3, ஒரு கணவன் தன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் அன்பையும், பாசத்தையும், பரிமாறிக் கொள்வதற்காக கூறிக்கொள்ளும் பொய் ஆகியவை அனுமதிக்கப் பட்டதாகும்.

நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அஸ்மா பிந்த் யஜித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள்: -

மூன்று விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் பொய் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. (அவைகள்)
1, ஒருவன் தன் மனைவியை மகிழ்விப்பதற்காக பேசுவது 2, யுத்தத்தின் போது 3, மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக! (ஆதாரம் திர்மிதி, ஸஹீஹ் அல் ஜாமிவு)

தொடர்புடைய ஆக்கங்கள்:

உண்மையாளர்களுக்குரிய உயர் அந்தஸ்த்து! - பகுதி 2 Audio/Video

பெற்றோரின் மகிமை - ஓர் உண்மைச் சம்பவம்! - Audio/Video

Mar 31, 2008

சரித்திரப் பார்வையில் மூடர் தினம்! (ஏப்ரல் ஃபூல்)

தொகுப்பு: நிர்வாகி

இறைவனின் நேரிய வழிகாட்டுதல்களும், அறிவுப்பூர்வமான எந்த வித கொள்கைளும் இல்லாமல் தம்முடைய மனோஇச்சைகளையே தங்களின் கொள்கைகளாகவும் வாழ்க்கை நெறியாகவும், கடவுளாகவும் பின்பற்றி வாழக்கூடியவர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் குறிப்பிட்ட தினங்களை முக்கியப்படுத்தி அவைகளுக்கு முக்கியத்துவம் தந்து அந்த நாட்களை கொண்டுவது ஆகும்.

இவ்வகையான கொண்டாட்டங்களில் காதலர் தினம், மனைவியர் தினம், அன்னையர் தினம், மூடர் தினம் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வகையான தினங்களைக் கொண்டாடுவோர் அவற்றுக்காக ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் கூறுவர். இந்த சிறிய கட்டுரையில் இவர்கள் மூடர் தினம் (ஏப்ரல் ஃபூல்) என கொண்டாடும் தினத்தைப் பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டத்தைப் பார்க்கலாம்.

மூடர் தினத்தின் தோற்றம் குறித்த கருத்துக்கள்: -

மூடர் தினத்தின் தோற்றம் குறித்த பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றது. இருப்பினும் இதன் தோற்றம் குறித்த உறுதியான கருத்து என்று எதுவும் கூறுவதற்கில்லை.

இதன் தோற்றம் குறித்த கருத்துக்களில் மிகவும் பிரபலமாகக் கருதப்படும் சிலவற்றைக் காண்போம்: -

1) பண்டைய அறியாமைக் கால பழக்கம்: -

சிலரது கூற்றுப்படி, பண்டைய காலத்தில் வாழ்ந்த அறியாமைக் கால மக்கள் ஏப்ரல் 1 அல்லது மார்ச் 21 ஆம் தேதியை மையமாக வைத்து வரக்கூடிய 'சம இரவு தினம்' (vernal equinox) என்றழைக்கடும் (பூமியின் வடக்கு அரைக்கோளத்தில்) வசந்த காலத்தின் துவக்க தினத்தை திருவிழா தினமாக கொண்டாடி வந்தனர். இந்த தினத்தில் கேலியும் கிண்டல்களும் அடங்கிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வந்தனர்.(1)

2) புதிய வருடப்பிறப்பு அறிமுகமாதல்:-

கி.பி. 1582 ஆம் ஆண்டு கிறிஸ்தவ போப் கிரிகோரி XIII என்பவர் புதிய காலன்டரை அறிமுகப்படுத்தி ஜனவரி 1 ஆம் தேதியை புதிய ஆண்டின் துவக்க நாளாக மாற்றியபோது அதுவரை ஜூலியன் காலன்டர் முறைப்படி ஏப்ரல் ஒன்றாம் தேதியை தங்களின் வருடப்பிறப்பாக கொண்டாடி வந்தவர்கள் இந்த புதிய காலன்டரை ஏற்க மறுத்தனர். அவர்களை கேலி செய்யும் விதமாக இந்த புதிய காலன்டரை தினித்தவர்கள் ஜனவரி முதல் தேதியை வருடப்பிறப்பாக ஏற்க மறுத்தவர்களை கேலியும், கிண்டலும் செய்யும் விதத்தில் அவர்களை மூடர்களாக்குகின்ற விதத்தில் பொய்களையும் போலியான பரிசுப் பொருட்களையும் அனுப்பி வைத்து மகிழ்ந்தனர். இந்த அறிவீனமான செயல் பின்னர் படிப்படியாக ஐரோப்பியா முழுவதும் பரவலாயிற்று. (2)

3) முஸ்லிம்களிடமிருந்து ஸபெயினைக் கைப்பற்றுதல்: -

ஸபெயினை முஸ்லிம்கள் ஆட்சி செய்த போது அவர்களின் படை மிகவும் வலிமை மிக்கதாகவும் எதிரிகள் கண்டு அஞ்சக் கூடியதாகவும் அமைந்திருந்தது. அதைக் கண்டு பொறுக்காத இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களை அழித்துவிட துடித்தனர். இருப்பினும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அதற்கான காரணத்தை அவர்கள் ஆராயும் போது முஸ்லிம் படையினர் சிறந்த ஈமான் தாரிகளாகவும் இறையச்சமுடையவர்களாகவும் இருப்பதைக் கண்டனர்.

முஸ்லிம்களை வெல்ல வேண்டுமானால் அவர்களின் நம்பிக்கையைக் சிதைப்பதை விட வேறு வழியில்லை என்பதை உணர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்களுக்கு மதுபானத்தையும் சுருட்டுகளையும் இலவசமாக அனுப்பி வைத்தனர். அதைப் பயன்படுத்த துவங்கிய முஸ்லிம்கள் நாளடைவில் தங்களது ஈமானில் உறுதியழந்து பின்னர் படிப்பபடியாக தங்களின் வலிமையிலும் வலுவிழந்தனர்.

இதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிறிது சிறிதாக முஸ்லிம்கள் வசம் இருந்த ஸ்பெயினின் பகுதிகளைக் கைப்பற்றலாயினர். இறுதியில் முஸ்லிம்களின் கோட்டையாக விளங்கிய கிரினாடாவில் உள்ள பகுதியை ஏப்ரல் முதல் தினத்தன்று கைப்பற்றினர். அந்த நாள் முதல் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் தேதியை மூடர்களின் தினமாக அவர்கள் கொண்டாடி வருகின்றனர். (3)

இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல் தினம்!: -

இந்த வகை மூடர் தினத்தின் தோற்றம் குறித்து கூறப்படும் கருத்துக்களில் உண்மையானது எதுவாக இருந்தாலும் முஸ்லிம்கள் இந்த தினத்தைக் கொண்டாடுவதோ அல்லது அந்த தினத்தில் ஒருவரையொருவர் கேலியும், கிண்டலும் செய்து பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதோ இஸ்லாத்தில் அனுமதிக்கபடாதவைகளாகும்.

மூடர் தினத்தை முஸ்லிம்கள் ஏன் கொண்டாடக் கூடாது?

1) ஜாஹிலிய்யாக் (அறியாமைக்) காலத்தின் அனைத்து மூடப்பழக்க வழக்கங்களையும் குழிதோண்டிப் புதைப்பதற்காக வந்தவர்கள் தான் நமது நபி (ஸல்) அவர்கள். நாம் அண்ணலாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டுமேயல்லாது அறியாமைக்கால மக்களின் பழக்கங்களாகிய பிறரைக் கேலி, கிண்டல் செய்து அவர்களை ஏமாற்றி அதன் மூலம் சந்தோசமடைவதைப் பின்பற்றக் கூடாது.

2) கிறிஸ்தவ பாதிரியாரான போப் கிரிகோரி என்பவர் துவக்கிய புதிய காலன்டரைப் பின்பற்றாதவர்களை கேலி செய்வதற்காக உருவாக்கியதாகக் கருதப்படும் இந்த தினத்தைக் கொண்டாடுபவர்கள் அவர்களின் இத்தீய செயல்களுக்குத் துணைபோவதோடு அல்லாமல் நபி (ஸல்) அவர்களின் 'யார் அந்நிய சமூகத்தவர்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே!' என்ற எச்சரிக்கையை மீறி செயல்பட்டவரைப் போலாவார்.

3) போதைப் பொருட்களுக்கு முஸ்லிம்களை அடிமையாக்கி அதன் மூலம் அவர்களை மூடர்களாக்கி அவர்களின் மனவலிமையை இழக்கச் செய்து அதன் மூலம் தந்திரமாக ஸ்பெயின் நாட்டை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றி அதைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்து ஒரு முஸ்லிமும் கொண்டாடுவாரானால் அவரை விட வேறு ஒரு மூடர் இருக்க முடியுமா? ஏனென்றால் இது தம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் மூடர்களாக்கப்பட்டதை தாமே கொண்டாடுவது போலாகாதா?

4) இந்த மூடர் தினத்தின் தோற்றம் குறித்த மேலே குறிப்பிடப்பட்ட காரணங்கள் எதுவாக இருந்தாலும் அல்லது இவைகளல்லாத வேறு எந்தக் காரணமாக இருந்தாலும் அவைகள் அனைத்துமே முஸ்லிம்களால் தோற்றுவிக்கப்படவில்லை. மாறாக இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் இஸ்லாத்தின் எதிரிகளால் தோற்றுவிக்கப்பட்டது. எனவே தம்மை முஸ்லிம் எனக் கூறிக்கொள்ளும் எவரும் இத்தகைய தீய செயல்களிலிருந்து விலகியிருப்பதோடல்லாமல் மற்றவர்களுக்கு இதன் தீமைகளை எடுத்துக் கூற முன்வரவேண்டும்

5) இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக இந்த தினங்களைக் கொண்டாடுபவர்கள் செய்யும் காரியங்களாவன: -

a. பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வது

b. பிறரை ஏமாற்றி அவர் ஏமாந்து துன்பப்படும் போது அதைப் பார்த்து ரசிப்பது

c. போலியான பரிசுப்பொருட்களை பிறருக்கு அனுப்பி அவரை கேலி செய்வது
d. ஒருவரின் நெருங்கிய உறவினர்கள் (தாய், தந்தை அல்லது மனைவி போன்றவர்கள்) இறந்து விட்டதாக வதந்தியைக் கிளப்பி விட்டு அவரை வேதனைப் படுத்தி அதை ரசிப்பது

e. ஒரு நாட்டின் தலைவர் இறந்து விட்டதாக அல்லது மிக மோசமான ஒரு விபத்து ஏற்பட்டு விட்தாக வதந்நியைக் கிளப்புவது

f. இது போன்ற ஏராளமான பொய்யான தகவல்களையும் கேவலத்திற்குரிய செயல்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவைகள் அனைத்துமே இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகள் மட்டுமின்றி இதைச் செய்பவர்களுக்கு மிக கடுமையான எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றது.

பொய் பேசுவதன் தீமைகள்: -

1) பொய்யுரைப்பவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள்: -

அல்லாஹ் கூறுகிறான் :

16:105 நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)

2) முனாஃபிக்கின் (நயவஞ்சகனின்) அடையாளங்களில் ஒன்று பொய்யுரைப்பது: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்குர்ஆன் 9:77)

3) பொய் பேசுவது நரகத்திற்கு வழிவகுக்கும்: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும்; நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் 'வாய்மையாளர்' (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகி விடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் 'பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி), ஆதாரம்: புகாரி

4) பரிகசிப்பது மற்றும் கேலி செய்வது அறிவீனர்களின் செயல்: -

இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், 'நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்' என்று சொன்னபோது, அவர்கள் '(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?' என்று கூறினர்; (அப்பொழுது) அவர், '(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார். (அல்குர்ஆன் 2:67)

5) பொய் பேசுபவனுக்குரிய தண்டனைகள்: -

சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் 'உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?' என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, 'நடங்கள்' என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். - அல்லது பிளந்தார் - பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், 'அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?' என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்' என்றனர்.

……

நான் அவ்விருவரிடமும், 'நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?' என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், '(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.

……

தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.

அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப்(ரலி, ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)

6) விளையாட்டுக்காகக் கூட பொய் பேசக் கூடாது: -

முஆவியா இப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசுபவனுக்கும் பொய் சொல்பவனுக்கும் கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக' என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆதாரம் : திர்மிதி

இஸ்லாத்தில் விளையாட்டாகப் பொய் பேசுவது கூட தடுக்கப்பட்டுள்ளது. அது போல பிறரை சந்தோசப்படுத்துவதற்காகவும் பொய் பேசக் கூடாது.

எனவே சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் கடுமையாக எச்சரித்திருக்கும் இத்தகைய தீய செயல்களான பொய் பேசுதல், பிறரை துன்புறுத்தி சந்தோசம் அடைதல், ஏமாற்றுதல் ஆகியவைகளையே முழு மூச்சாக செயல்படுத்தும் மிக மோசமான மூடர்களின் மூடர் தினத்தை விட்டும் முஸ்லிம்களாகிய நாhம் தவிர்ந்திருப்பதோடு அல்லாமல் பிறருக்கும் இதனுடைய தீமைகளை எடுத்துக் கூறி இதனை நமது சமூக மக்களிடமிருந்து களைவதற்கு முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ் அதற்குரிய ஆற்றலையும் மனவலிமையையும் தந்தருள்வானாகவும்.

கட்டுரைக்கு உதவிய தளங்கள் –

1) http://www.museumofhoaxes.com/aforigin.html

2) http://www.infoplease.com/spot/aprilfools1.html

3) http://islam-qa.com/index.php?pg=article&ln=eng&article_id=99

Jan 24, 2008

வட்டியின் தீமைகள்

இன்று நம் சமுதாய மக்களிடையே புரையோடிப் போயிருக்கும் பெரும்பாவங்களில், தீமைகளில் வட்டியும் ஒன்று. நம்மில் சிலருக்கு வட்டி மட்டுமே குடும்ப வருவாயாக இருக்கும் அளவுக்கு வட்டியை சாதாரண ஒன்றாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மாதம் தவறாமல் வரும் வட்டிப்பணத்தில் குடும்பம் நடத்துபவர்களிடம் இப்படி வட்டிப்பணத்தில் சாப்பிடுகிறீர்களே இது பாவம் இல்லையா? என்று நாம் கேட்போமேயானால், நாங்கள் செய்த எங்களுடைய முதலீட்டுக்குக் கிடைக்கும் லாபத்தைத் தான் சாப்பிடுகின்றோம் என்று கூறி வட்டியையும், வியாபாரத்தையும் ஒன்றாக ஆக்குகின்றனர். வட்டி வாங்குவது பெரும் பாவம் என்றால் இவ்வாறு அவர்கள் அவ்வாறு கூறியது அதைவிட மிகப்பெரும் பாவமாகும். வியாபாரம் வட்டியைப் போன்றதே என்று கூறுபவர்களை அல்லாஹ் கடுமையாக குர்ஆனிலே எச்சரிக்கின்றான்.

"யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், 'நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான் ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்" (அல் குஆன் 2:275)

மறுமையில் சித்தம் கலங்கிய நிலையில் எழுப்ப வைக்கும் அளவிற்கு மிகக் கொடிய பாவமாகிய வட்டியை வாங்கி அதையே தம் வருமானமாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் கூறுவது என்னவென்றால், நாங்கள் செய்த முதலீடு, வட்டியின் மூலம் பெறுகிக் கொண்டே செல்கின்றது, அதனால் எங்களுக்கு தொடர்ந்து இலாபம் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்கின்றனர்.

அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகிறான்.

"அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை." (அல்குஆன் 2:276)

அல்லாஹ்வினால் பரக்கத் கிடைக்காத மலையளவு பொற்குவியலே இருந்தும் என்ன பயன்? வட்டியின் மூலம் பார்ப்பதற்கு (செல்வங்கள்) அதிகரிப்பது போலத் தோன்றினாலும் முடிவில் மிகக்குறைந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அல்லாஹ்வின் பரக்கத்தையுடைய செல்வம் சிறிதளவு இருந்தாலும் அதன் மூலம் அபிவிருத்தியும், நிறைய பலன்களும் கிடைக்கும் அல்லவா? மேலும் வட்டி வாங்குவதை வருமானமாக, தொழிலாகக் கொண்டிருப்பவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான் என்றும், அவர்களுடைய அமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்றும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய அறிவிப்பின் மூலமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

"வட்டியினால் திரட்டப்படும் பொருளையும், அவ்வாறு பொருள் திரட்டுபவனையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். எனவே அப்பொருளின் அபிவிருத்தியைத் தடுத்து அதனை அழித்து விடுகிறான். அவ்வாறே அத்தொழில் புரிவோரின் தர்மத்தையும், ஹஜ்ஜையும், இதர நன்மைகளையும் அவன் ஏற்பதில்லை" அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நபி (ஸல்) அவர்கள் வட்டியில் சம்பத்தப்பட்ட அத்தனை பேர்களையும் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.

"வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்" அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.

வட்டி வாங்குவதை ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக கூறிய நபி (ஸல்) அவர்கள் வட்டியின் தீமைகளைப் பற்றி விளக்கிக் கூறும்போது,

"வட்டியின் மூலம் கிடைத்த ஒரு திர்ஹம் முப்பத்தி ஆறு விபச்சாரத்தை விட அல்லாஹ்விடம் மிகக் கொடுமையானது என்றும், ஒருவனுடைய மாமிசம், (அல்லாஹ்வால்) தடுக்கப்பட்ட ஒன்றின் (வட்டியின்) மூலம் வளர்ச்சியடைந்தால் அதற்கு நரகமே மிக ஏற்றதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : தப்ரானி

இரட்டிப்பாகும் என்று நினைத்து வட்டி வாங்காதீர்கள்:-

அல்லாஹ் கூறுகிறான்:-

"ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்" (அல்குஆன் 3:130)

மற்றவர்களின் முதலீடுகளுடன் சேர்த்து வட்டிக்கு விடாதீர்கள்:-

"(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்" (அல்குஆன் 30:39)

எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டுவிடுங்கள்:-

"ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்" அல்குஆன் 2:278)

இறைவனின் வட்டியைப் பற்றிய தெளிவான "யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள்" என்ற இறைவனின் வசனத்தை (2:275) பற்றி நாம் அனைவரும் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

அல்லாஹ் முஸ்லிமான நம்மனைவரின் ஈமானையும் உறதிபடுத்தி, இத்தகைய கொடுமையான பாவத்திலிருந்து மீளச்செய்து மீண்டும் வட்டியின் திமைகளில் சிக்காமல் காப்பாற்ற வேண்டும் என பிராத்திப்போம். வல்ல நாயனான அல்லாஹ் அருள் புரிய போதுமானவன். ஆமின்.