Mar 31, 2008

சரித்திரப் பார்வையில் மூடர் தினம்! (ஏப்ரல் ஃபூல்)

தொகுப்பு: நிர்வாகி

இறைவனின் நேரிய வழிகாட்டுதல்களும், அறிவுப்பூர்வமான எந்த வித கொள்கைளும் இல்லாமல் தம்முடைய மனோஇச்சைகளையே தங்களின் கொள்கைகளாகவும் வாழ்க்கை நெறியாகவும், கடவுளாகவும் பின்பற்றி வாழக்கூடியவர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் குறிப்பிட்ட தினங்களை முக்கியப்படுத்தி அவைகளுக்கு முக்கியத்துவம் தந்து அந்த நாட்களை கொண்டுவது ஆகும்.

இவ்வகையான கொண்டாட்டங்களில் காதலர் தினம், மனைவியர் தினம், அன்னையர் தினம், மூடர் தினம் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வகையான தினங்களைக் கொண்டாடுவோர் அவற்றுக்காக ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் கூறுவர். இந்த சிறிய கட்டுரையில் இவர்கள் மூடர் தினம் (ஏப்ரல் ஃபூல்) என கொண்டாடும் தினத்தைப் பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டத்தைப் பார்க்கலாம்.

மூடர் தினத்தின் தோற்றம் குறித்த கருத்துக்கள்: -

மூடர் தினத்தின் தோற்றம் குறித்த பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றது. இருப்பினும் இதன் தோற்றம் குறித்த உறுதியான கருத்து என்று எதுவும் கூறுவதற்கில்லை.

இதன் தோற்றம் குறித்த கருத்துக்களில் மிகவும் பிரபலமாகக் கருதப்படும் சிலவற்றைக் காண்போம்: -

1) பண்டைய அறியாமைக் கால பழக்கம்: -

சிலரது கூற்றுப்படி, பண்டைய காலத்தில் வாழ்ந்த அறியாமைக் கால மக்கள் ஏப்ரல் 1 அல்லது மார்ச் 21 ஆம் தேதியை மையமாக வைத்து வரக்கூடிய 'சம இரவு தினம்' (vernal equinox) என்றழைக்கடும் (பூமியின் வடக்கு அரைக்கோளத்தில்) வசந்த காலத்தின் துவக்க தினத்தை திருவிழா தினமாக கொண்டாடி வந்தனர். இந்த தினத்தில் கேலியும் கிண்டல்களும் அடங்கிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வந்தனர்.(1)

2) புதிய வருடப்பிறப்பு அறிமுகமாதல்:-

கி.பி. 1582 ஆம் ஆண்டு கிறிஸ்தவ போப் கிரிகோரி XIII என்பவர் புதிய காலன்டரை அறிமுகப்படுத்தி ஜனவரி 1 ஆம் தேதியை புதிய ஆண்டின் துவக்க நாளாக மாற்றியபோது அதுவரை ஜூலியன் காலன்டர் முறைப்படி ஏப்ரல் ஒன்றாம் தேதியை தங்களின் வருடப்பிறப்பாக கொண்டாடி வந்தவர்கள் இந்த புதிய காலன்டரை ஏற்க மறுத்தனர். அவர்களை கேலி செய்யும் விதமாக இந்த புதிய காலன்டரை தினித்தவர்கள் ஜனவரி முதல் தேதியை வருடப்பிறப்பாக ஏற்க மறுத்தவர்களை கேலியும், கிண்டலும் செய்யும் விதத்தில் அவர்களை மூடர்களாக்குகின்ற விதத்தில் பொய்களையும் போலியான பரிசுப் பொருட்களையும் அனுப்பி வைத்து மகிழ்ந்தனர். இந்த அறிவீனமான செயல் பின்னர் படிப்படியாக ஐரோப்பியா முழுவதும் பரவலாயிற்று. (2)

3) முஸ்லிம்களிடமிருந்து ஸபெயினைக் கைப்பற்றுதல்: -

ஸபெயினை முஸ்லிம்கள் ஆட்சி செய்த போது அவர்களின் படை மிகவும் வலிமை மிக்கதாகவும் எதிரிகள் கண்டு அஞ்சக் கூடியதாகவும் அமைந்திருந்தது. அதைக் கண்டு பொறுக்காத இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களை அழித்துவிட துடித்தனர். இருப்பினும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அதற்கான காரணத்தை அவர்கள் ஆராயும் போது முஸ்லிம் படையினர் சிறந்த ஈமான் தாரிகளாகவும் இறையச்சமுடையவர்களாகவும் இருப்பதைக் கண்டனர்.

முஸ்லிம்களை வெல்ல வேண்டுமானால் அவர்களின் நம்பிக்கையைக் சிதைப்பதை விட வேறு வழியில்லை என்பதை உணர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்களுக்கு மதுபானத்தையும் சுருட்டுகளையும் இலவசமாக அனுப்பி வைத்தனர். அதைப் பயன்படுத்த துவங்கிய முஸ்லிம்கள் நாளடைவில் தங்களது ஈமானில் உறுதியழந்து பின்னர் படிப்பபடியாக தங்களின் வலிமையிலும் வலுவிழந்தனர்.

இதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிறிது சிறிதாக முஸ்லிம்கள் வசம் இருந்த ஸ்பெயினின் பகுதிகளைக் கைப்பற்றலாயினர். இறுதியில் முஸ்லிம்களின் கோட்டையாக விளங்கிய கிரினாடாவில் உள்ள பகுதியை ஏப்ரல் முதல் தினத்தன்று கைப்பற்றினர். அந்த நாள் முதல் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் தேதியை மூடர்களின் தினமாக அவர்கள் கொண்டாடி வருகின்றனர். (3)

இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல் தினம்!: -

இந்த வகை மூடர் தினத்தின் தோற்றம் குறித்து கூறப்படும் கருத்துக்களில் உண்மையானது எதுவாக இருந்தாலும் முஸ்லிம்கள் இந்த தினத்தைக் கொண்டாடுவதோ அல்லது அந்த தினத்தில் ஒருவரையொருவர் கேலியும், கிண்டலும் செய்து பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதோ இஸ்லாத்தில் அனுமதிக்கபடாதவைகளாகும்.

மூடர் தினத்தை முஸ்லிம்கள் ஏன் கொண்டாடக் கூடாது?

1) ஜாஹிலிய்யாக் (அறியாமைக்) காலத்தின் அனைத்து மூடப்பழக்க வழக்கங்களையும் குழிதோண்டிப் புதைப்பதற்காக வந்தவர்கள் தான் நமது நபி (ஸல்) அவர்கள். நாம் அண்ணலாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டுமேயல்லாது அறியாமைக்கால மக்களின் பழக்கங்களாகிய பிறரைக் கேலி, கிண்டல் செய்து அவர்களை ஏமாற்றி அதன் மூலம் சந்தோசமடைவதைப் பின்பற்றக் கூடாது.

2) கிறிஸ்தவ பாதிரியாரான போப் கிரிகோரி என்பவர் துவக்கிய புதிய காலன்டரைப் பின்பற்றாதவர்களை கேலி செய்வதற்காக உருவாக்கியதாகக் கருதப்படும் இந்த தினத்தைக் கொண்டாடுபவர்கள் அவர்களின் இத்தீய செயல்களுக்குத் துணைபோவதோடு அல்லாமல் நபி (ஸல்) அவர்களின் 'யார் அந்நிய சமூகத்தவர்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே!' என்ற எச்சரிக்கையை மீறி செயல்பட்டவரைப் போலாவார்.

3) போதைப் பொருட்களுக்கு முஸ்லிம்களை அடிமையாக்கி அதன் மூலம் அவர்களை மூடர்களாக்கி அவர்களின் மனவலிமையை இழக்கச் செய்து அதன் மூலம் தந்திரமாக ஸ்பெயின் நாட்டை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றி அதைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்து ஒரு முஸ்லிமும் கொண்டாடுவாரானால் அவரை விட வேறு ஒரு மூடர் இருக்க முடியுமா? ஏனென்றால் இது தம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் மூடர்களாக்கப்பட்டதை தாமே கொண்டாடுவது போலாகாதா?

4) இந்த மூடர் தினத்தின் தோற்றம் குறித்த மேலே குறிப்பிடப்பட்ட காரணங்கள் எதுவாக இருந்தாலும் அல்லது இவைகளல்லாத வேறு எந்தக் காரணமாக இருந்தாலும் அவைகள் அனைத்துமே முஸ்லிம்களால் தோற்றுவிக்கப்படவில்லை. மாறாக இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் இஸ்லாத்தின் எதிரிகளால் தோற்றுவிக்கப்பட்டது. எனவே தம்மை முஸ்லிம் எனக் கூறிக்கொள்ளும் எவரும் இத்தகைய தீய செயல்களிலிருந்து விலகியிருப்பதோடல்லாமல் மற்றவர்களுக்கு இதன் தீமைகளை எடுத்துக் கூற முன்வரவேண்டும்

5) இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக இந்த தினங்களைக் கொண்டாடுபவர்கள் செய்யும் காரியங்களாவன: -

a. பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வது

b. பிறரை ஏமாற்றி அவர் ஏமாந்து துன்பப்படும் போது அதைப் பார்த்து ரசிப்பது

c. போலியான பரிசுப்பொருட்களை பிறருக்கு அனுப்பி அவரை கேலி செய்வது
d. ஒருவரின் நெருங்கிய உறவினர்கள் (தாய், தந்தை அல்லது மனைவி போன்றவர்கள்) இறந்து விட்டதாக வதந்தியைக் கிளப்பி விட்டு அவரை வேதனைப் படுத்தி அதை ரசிப்பது

e. ஒரு நாட்டின் தலைவர் இறந்து விட்டதாக அல்லது மிக மோசமான ஒரு விபத்து ஏற்பட்டு விட்தாக வதந்நியைக் கிளப்புவது

f. இது போன்ற ஏராளமான பொய்யான தகவல்களையும் கேவலத்திற்குரிய செயல்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவைகள் அனைத்துமே இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகள் மட்டுமின்றி இதைச் செய்பவர்களுக்கு மிக கடுமையான எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றது.

பொய் பேசுவதன் தீமைகள்: -

1) பொய்யுரைப்பவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள்: -

அல்லாஹ் கூறுகிறான் :

16:105 நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)

2) முனாஃபிக்கின் (நயவஞ்சகனின்) அடையாளங்களில் ஒன்று பொய்யுரைப்பது: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்குர்ஆன் 9:77)

3) பொய் பேசுவது நரகத்திற்கு வழிவகுக்கும்: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும்; நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் 'வாய்மையாளர்' (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகி விடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் 'பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி), ஆதாரம்: புகாரி

4) பரிகசிப்பது மற்றும் கேலி செய்வது அறிவீனர்களின் செயல்: -

இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், 'நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்' என்று சொன்னபோது, அவர்கள் '(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?' என்று கூறினர்; (அப்பொழுது) அவர், '(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார். (அல்குர்ஆன் 2:67)

5) பொய் பேசுபவனுக்குரிய தண்டனைகள்: -

சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் 'உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?' என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, 'நடங்கள்' என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். - அல்லது பிளந்தார் - பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், 'அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?' என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்' என்றனர்.

……

நான் அவ்விருவரிடமும், 'நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?' என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், '(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.

……

தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.

அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப்(ரலி, ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)

6) விளையாட்டுக்காகக் கூட பொய் பேசக் கூடாது: -

முஆவியா இப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசுபவனுக்கும் பொய் சொல்பவனுக்கும் கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக' என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆதாரம் : திர்மிதி

இஸ்லாத்தில் விளையாட்டாகப் பொய் பேசுவது கூட தடுக்கப்பட்டுள்ளது. அது போல பிறரை சந்தோசப்படுத்துவதற்காகவும் பொய் பேசக் கூடாது.

எனவே சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் கடுமையாக எச்சரித்திருக்கும் இத்தகைய தீய செயல்களான பொய் பேசுதல், பிறரை துன்புறுத்தி சந்தோசம் அடைதல், ஏமாற்றுதல் ஆகியவைகளையே முழு மூச்சாக செயல்படுத்தும் மிக மோசமான மூடர்களின் மூடர் தினத்தை விட்டும் முஸ்லிம்களாகிய நாhம் தவிர்ந்திருப்பதோடு அல்லாமல் பிறருக்கும் இதனுடைய தீமைகளை எடுத்துக் கூறி இதனை நமது சமூக மக்களிடமிருந்து களைவதற்கு முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ் அதற்குரிய ஆற்றலையும் மனவலிமையையும் தந்தருள்வானாகவும்.

கட்டுரைக்கு உதவிய தளங்கள் –

1) http://www.museumofhoaxes.com/aforigin.html

2) http://www.infoplease.com/spot/aprilfools1.html

3) http://islam-qa.com/index.php?pg=article&ln=eng&article_id=99

Mar 30, 2008

பண்பின் பிறப்பிடம் பயங்கரவாதம் ஆகுமா?

உரை:மௌலவி அஸ்ஹர் ஸீலானி

பண்பின் பிறப்பிடமாக, சிகரமாக விளங்கிய அண்ணல் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தி பயங்கரவாதியாக கேலிச் சித்திரம் வரைந்த இறை நிராகரிப்பாளர்களுக்கு எதிராக, நபி (ஸல்) அவர்களின் உயர் பண்புகளையும், அவர்கள் எந்த அளவிற்கு இந்த மனித சமுதயத்திற்கு ஒரு அருட் கொடையாக விளங்கினார்கள் என்பதை விளக்கும் ஓர் அற்புத உரை!

ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் கேட்டு பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய உரை! இணைய தளம் வைத்திருப்பவர்கள் தங்களின் தளங்களில் இந்த ஆடியோ வீடியோவுக்கான இணைப்பு கொடுக்க வேண்டுகிறோம்.

Audio/Video Link : பண்பின் பிறப்பிடம் பயங்கரவாதம் ஆகுமா?

Mar 29, 2008

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்!

உரை: மௌலவி அஸ்ஹர் ஸீலானி

அல்லாஹ்வை நம்பவேண்டிய முறையில் நம்புதல், பிரார்த்தனை செய்யும் போது அவனது மகத்தான அருளின் மீது அதீத நம்பிக்கையுடன் செய்தல், அல்லாஹ்வின் அளப்பற்ற அருளின் மீது நம்பிக்கை வைப்பதனால் ஏற்படும் பலன்கள்!

Audio/Video Link : அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்!

Mar 25, 2008

என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பலனில்லையே! ஏன்?

தொகுப்பு: நிர்வாகி

பொதுவான கேள்வி: -

நான் ஐவேளை தொழுது வருகிறேன்! பர்லான மற்றும் சுன்னத்தான நோன்பு முதலிய கடமைகளை தவறாமல் செய்து வருகிறேன். இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகிறேன்! ஆனால் என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பலனில்லையே! அப்படியானால் என்னுடைய பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லையா?


பதில்: -

பொதுவாக முஃமின்களுடைய துஆவை (பிரார்த்தனையை) மூன்று வகையாக பிரிக்கலாம். அவைகள்: -

  1. ஹராமான செயல்களிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்கும் ஒரு முஃமினுடைய துஆ
  2. ஹராமான செயல்களில் மூழ்கியுள்ள ஒருவரின் துஆ
  3. அநீதியிழைக்கப்பட்டவரின் துஆ.

1) ஹராமான செயல்களிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்கும் ஒரு முஃமினுடைய துஆ: -

ஒரு முஃமினைப் பொறுத்தவரைக்கும் அவர் எந்நேரமும் இறைநம்பிக்கையுடன் இறைவனிடம் பிரார்த்தித்வராக இருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. அநேக குர்ஆன் வசனங்களும் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களும் பிரார்த்தனை செய்வதன் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன.

பிரார்த்தனையின் முக்கியத்துவம்: -

அல்லாஹ் கூறுகிறான்: -

"(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; 'நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்' என்று கூறுவீராக. அல்-குர்ஆன் (2:186) "

'என்னிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.' (அல்குர்ஆன் 40:60)

மேற்கூறிய இந்த வசனங்கள் பிரார்த்தனையின் முக்கியத்துவம் குறித்துக் கூறும் வசனங்களாகும். ஏனெனில் பிரார்த்தனை சிறந்த வணக்கங்களில் ஒன்றாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

பிரார்த்தனை (துஆ) ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் -ரலி, நூல்:அபூதாவூத், திர்மிதி)

பிரார்த்தனைகளுக்கு அல்லாஹ் நிச்சயம் பதிலளிக்கிறான்: -

அல்லாஹ்வை பேணுதலான முறைப்படி வணங்கும் ஒரு உண்மையான முஃமின் தன்னுடைய இறைவனிடம் கேட்டால் அந்தப் பிரார்த்தனைக்குப் பதிலளிப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

பாவம் சம்பந்தப்படாத இரத்த பந்தத்தை துண்டிக்காத விஷயத்தில் எந்த ஒரு முஸ்லிமாவது பிரார்த்தனை செய்தால் அல்லாஹ் அவனுக்கு மூன்றில் ஒன்றை கொடுக்காமலில்லை. அவனின் பிரார்த்தனையை உடன் ஏற்றுக் கொள்கின்றான். அல்லது அதனுடைய நன்மையை மறுமைக்காக சேகரித்து வைக்கின்றான். அல்லது அப்பிரார்த்தனையைப் போன்று (அவனுக்கு நேரவிருந்த) ஒரு ஆபத்தை தடுத்து விடுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அப்படியானால் நாம் அதிகம் பிரார்த்தனை செய்வோமே என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், கேட்பதை விட அல்லாஹ் அதிகமாக பதிலளிக்க தயாராக இருக்கிறான்' எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரி, ஆதாரம்: திர்மிதி

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: -

துன்பத்திற்குள்ளான நிலையிலும் கவலையிலும் இருக்கும் அல்லாஹ்வின் அடியான் ஒருவன் இந்த துஆவை கேட்டால் அவருடைய துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.

"யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உனது அடிமை, உனது அடிமையின் மகன், மற்றும் உனது அடிமைப் பெண்ணின் மகன். எனது நெற்றிப்பிடி உன் கையில் உள்ளது. அதனை உனது சட்டத்தின்படி நீ செயல்படுத்துகிறாய். எனக்கு நீதமான தீர்ப்பு வழங்குகிறாய். உனக்கு நீயே சூட்டிக்கொண்ட, உனது வேதத்தில் நீ இறக்கியருளிய, உனது படைப்பினங்களில் ஒருவருக்கு (நபிக்கு) நீ கற்றுக் கொடுத்த, உனது மறைவான ஞானத்தில் நீயே தேர்ந்தெடுத்துக் கொண்ட உன்னுடைய அனைத்துப் பெயர்களின் பொருட்டால் கேட்கிறேன். (இறைவா!) குர்ஆனை என் உள்ளத்தை பொலிவூட்டக் கூடியதாக, நெஞ்சின் ஒளியாக, கவலையை நீக்கக்கூடியதாக, துன்பத்தை போக்கக் கூடியதாக ஆக்குவாயாக!"

இந்த வார்த்தைகளடங்கிய துஆ ஏற்றுக்கொள்ளப்படும். அல்லாஹ் அவருடைய துயரங்களை நீக்கிவிட்டு அதற்குப் பகரமாக இன்பங்களையும் மகிழ்ச்சியையும் அளிப்பான். ஆதாரம்: அஹ்மத்

உயர்ந்தவனாகிய உங்களின் இரட்சகன் வெட்கமுள்ளவன், சங்கையானவன் அவனிடம் இரு கைகளையும் உயர்த்தினால் (பிரார்த்தித்தால்) அவ்விரண்டையும் வெறுமையாக திருப்பி விட அவன் வெட்கப்படுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: சல்மான் (ரலி)

மூவரின் துவா அல்லாஹ்வினால் நிராகரிக்கப் படாது. பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு செய்யும் துஆ; நோன்பாளியின் துஆ; பிரயாணத்தில் இருக்கும் பயணியின் துஆ.' ஆதாரம்: திர்மிதி

"மூவரின் துஆக்கள் எப்போதும் (அல்லாஹ்வினால்) நிராகரிக்கப்படுவதில்லை. அவர்கள்: ஒருவர் தமது நோன்பு துறக்கும்போது கேட்கும் துஆ; நீதியான ஆட்சியாளரின் துஆ; அநியாயம் இழைக்கப்பட்டவரின் துஆ" ஆதாரம்: திர்மிதி


பிரார்த்தனை செய்ய சிறந்த நேரங்கள்: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

இரவின் பாதியோ அல்லது மூன்றில் இரண்டு பகுதியோ கடந்து விட்ட பின் அல்லாஹுத்தஆலா பூமியின் வானத்திற்கு இறங்குகிறான். பிறகு, கேட்கக் கூடியவர்களுக்கு கொடுக்கப்படும், பிரார்த்திப்பவர்களுக்கு பதிலளிக்கப்படும். பாவ மன்னிப்புத் தேடுபவர்களுக்கு பாவம் மன்னிக்கப்படும் என்று அதிகாலை உதயமாகும் வரைக்கும் அல்லாஹ் கூறிக்கொண்டிருக்கிறான். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்.

ஒவ்வொரு இரவின் ஒரு பகுதியிலும் கேட்கப்படும் துஆ: -

"இரவின் பகுதியில் ஒரு நேரம் இருக்கிறது அந்நேரத்தில் எந்த முஸ்லிமும் இந்த உலகத்தின் விஷயத்தில் அல்லது மறுமையின் விஷயத்தில் கேட்டு அது அளிக்கப்படாமல் இருப்பது இல்லை; இது ஒவ்வொரு இரவிலும் இருக்கிறது." ஆதாரம்: முஸ்லிம்.

பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் கேட்கப்படும் துஆ: -

'பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் துஆக்கள் நிராகரிக்கப்படுவது இல்லை.' அறிவிப்பவர்: அனஸ் (ரலி) ஆதாரம்: அஹ்மத், அபுதாவூத்.

சஜ்தாவின் போது இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நேரமாகும்: -

'ஓர் அடியான் தன்னுடைய இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நிலை ஸஜ்தாவில் இருக்கும் போதே ஆகும். ஆகையால் அந்நிலையில் அல்லாஹ்விடம் அதிகமாக துஆ செய்து தமது தேவைகளை கேளுங்கள். ஆதாரம்: முஸ்லிம், அபூதாவுத்

(பிரார்த்தனை) துஆ செய்யும் ஒழுங்கு முறைகள்: -

'நீங்கள் யாராயினும் பிரார்த்தனைப் புரிந்தால் அல்லாஹ்வைப் புகழ்ந்து ஆரம்பிக்கட்டும். பின்னர் இறைத்தூதர் (ஸல்) மீது ஸலவாத்துச் சொல்லட்டும். பின்னர் அவர் விரும்பியதைக் கேட்டு பிரார்த்திக்கட்டும்' என்றார்கள். அறிவிப்பவர்: பலாலா இப்னு உபைத் (ரலி) ஆதார நூல்கள்: முஸ்னத் அஹ்மத். ஸுனன் அபூதாவூத். ஸுனன் திர்மிதி.

அவசரக்கார மனிதன்: -

நம்மில் சிலருக்கு, நான் தொடர்ந்து ஐவேளை தொழுது வருகிறேன், நோன்பு வைக்கின்றேன், கடமையான மற்றும் சுன்னத்தான அமல்களையெல்லாம் செய்கின்றேன், ஆனால் என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பலனில்லையே ஏன என்ற சந்தேகம் எழலாம்.

பொதுவாக மனிதன் அறியாமையின் காரணமாக அவசரக்காரனாக இருக்கிறான். சில நேரங்களில் ஒன்றை அவன் நல்லது எனக் கருதி அது தனக்கு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் என எண்ணுவான். ஆனால் அது அவனுக்குக் கிடைக்கப்பெறுமாயின் அதுவே அவனுடைய இந்த உலக வாழ்வின் மிகப்பெறும் சோதனையாகவும் வேதனையாகவும் மாறிவிடுகிறது. ஏன் மறுமை வாழ்வுக்காக அவனுடைய செயல்பாடுகளையே பாதித்துவிடும் அளவுக்கு அது அமைந்து விடுகிறது.

அனைத்தையும் அறிந்தவனான அல்லாஹ் மட்டுமே அவனுடைய அடிமைகள் ஒவ்வொருடைய தேவையையும் நன்கறிந்தவனாகவும், அவர்களுக்கு எது தேவை மற்றும் எது தேவையில்லை எனவும் அறிந்தவனாக இருக்கிறான். எனவே நாம் அல்லாஹ்விடம் துஆ செய்யும் போது ' நாம் கேட்கும் ஒன்று நமக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பலனளிக்குமாயின் அதை நல்குமாறும், அவ்வாறில்லையெனில் அதற்குப் பகரமாக அதைவிடச் சிறந்த ஒன்றை நல்குமாறும் கேட்கவேண்டும். ஏனெனில் எது நல்லது அல்லது எது கெட்டது என்பது நமக்குத் தெரியாது; ஆனால் நம்மைப் படைத்த அல்லாஹ்விற்கே நம்மை விட பரிபூரணமாக தெரியும்.

அல்லாஹ் கூறுகிறான்: -

மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 17:11)

மேலும் ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தம் என நினைக்கிறேன். அதாவது ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யத் தவறக் கூடாது. மனிதனாகிய அனைவரும் அல்லாஹ்வின் பால் தேவையுள்ளவர்கள். அல்லாஹ்மட்டும் தான் தேவையற்றவன்.

தேவைகளைக் கேட்கும் ஒருவன் கண்டிப்பாக ஒரு விஷயத்தைக் கவணத்தில் கொள்ள வேண்டும். அதாவது நாம் அடிமைகள், அல்லாஹ் நமது எஜமான். நாம் எஜமானிடத்தில் கேட்கும் போதெல்லாம் எஜமான் உடனேயே நமக்கு தரவேண்டும் என எதிர்பார்ப்பது நம்மிடம் இருக்கும் குறையாகும். அல்லாஹ்வைப் பொருத்தவரை தனது அடியான் விஷயத்தில் அதிக அக்கறையுள்ளவன். அதனால் பிரார்த்தனை செய்யுமாறு கூறிவிட்டு அப்பிரார்த்தனைக்கு பதில் கொடுப்பதில் சில போது தாமதங்களை ஏற்படுத்துகிறான். காரணம், நாம் ஒன்றைக் கேட்போம் அதனை உடனேயே தந்துவிட்டால் சிலபோது அதுவே நம்மை சிரமத்திற்கு உள்ளாக்கி விடலாம். ஏனென்றால் அதனால் ஏற்படும் எதிர்கால விளைவுகள் பற்றி நாம் அறிய மாட்டோம். ஆனால் அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

உதாரணமாக, ஒருவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவர் மீதும் தந்தைக்கு பாசம் இருக்கின்றது. ஏதாவதொரு பொருளை அனைவரும் கேட்கிறார்கள், அப்பொருளை பெற்றுக் கொடுக்கும் சக்தியும் தந்தைக்கு உண்டு. ஆனால் அனைவருக்கும் அதனைப் பெற்றுக் கொடுக்க மாட்டார். காரணம் யாருக்கு கொடுக்க முடியும் யாருக்குக் கொடுக்கக் கூடாது என்பது குழந்தைகளை விட தந்தைக்கு நன்கு தெறியும். இதே போல் தான் அல்லாஹ் நம் விஷயங்களைப் பொறுத்த வரை நம்மை விட நன்கு அறிந்துள்ளான்.

எனவே நமது பிரார்த்தனைகளுக்கான பதிலை உடனேயே காண நினைப்பது நமது பண்பு. அப்பிரார்த்தனைக்கான பதிலை தரவேண்டிய நேரத்தில் தருவது அல்லாஹ்வின் பண்பாகும் என்பதனை உணர்ந்து கொள்ள தவறக் கூடாது.

எனவே நாம் அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையில் நம்பிக்கையிழக்காமலும் நம்முடைய துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லையே என பொறுமையிழக்காமலும் அல்லாஹ்வையே முற்றிலும் ஈமான் கொண்டு அவனையே முற்றிலுமாக சார்ந்து அவனிடமே நம்முடைய பொறுப்புகளை விட்டுவிட வேண்டும்.

மேலும் நாம் அவன் நம்முடைய பிரார்த்தனைகளைக் கேட்டுக் கொண்டான் என்றும் நாம் கேட்ட பிரார்த்தனைகள் நமக்கு இவ்வுலகிலோ அல்லது மறுமையிலோ நமக்குப் பலனளிக்குமாயின் அதை நமக்கு அல்லாஹ் நாடினால் தருவான் என்றும் அல்லது ஈருலகிலும் பலனளிக்கும் அதைவிடச் சிறந்த ஒன்றை நமக்குத் தருவான் என்றும் நாம் உறுதியாக நம்பிக்கைக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: -

மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்லதைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லை; ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான். (அல்-குர்ஆன் 41:49)

அன்றியும், மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அவன் (நன்றியுணர்வின்றி) நம்மைப் புறக்கணித்து, விலகிச் செல்கிறான் - ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனை செய்(பவனா)கின்றான். (அல்-குர்ஆன் 41:51)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா (ரலி, அவர்கள் அறிவிக்கிறார்கள்: -

பொறுமையை இழக்காமலும், மேலும் 'நான் பிரார்த்தனை புரிந்தேன் ஆனால் என்னுடைய பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை' என்று கூறாத நிலையிலும் உங்களுடைய துஆ ஏற்றுக்கொள்ளப்படும்'

அல்லாஹ்வின் வாக்கு என்றுமே உண்மையானது: -

அல்லாஹ் கூறுகிறான்: -

பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம். (அல்-குர்ஆன் 37:75)

அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; இன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் யார்? (அல்-குர்ஆன் 4:122)

எனவே அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவனது இறுதி வேதத்தையும் நம்பும் ஒருவர் உறுதியான நம்பிக்கையுடன் ஏதாவது ஒரு வகையில் அல்லாஹ் நிச்சயம் நமது பிரார்த்தனைக்கு பதிலளிப்பான் என்ற நம்பிக்கையில் அவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

2) ஹராமான செயல்களில் மூழ்கியுள்ள ஒருவரின் துஆ: -

ஹராமான செயல்களில் மூழ்கியுள்ள ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை பெரும் பாலும் துஆக்கள் அங்கீகரிக்கப்பட வாய்ப்பில்லை என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

''ஒரு நீண்ட பயனத்தில் ஒருவன் இருக்கிறான். அவனுடைய தலை பரட்டையாகவும், அவன் புழுதியினால் அழுக்கடைந்தவனாகவும் இருக்கும் நிலையில் வானத்தை நோக்கி தம் இரு கரங்களையும் உயர்த்தியவனாக, இறைவா! இறைவா! எனப்பிரார்த்திக்கின்றான். (ஆனால்) அவனது உணவும் ஹராமாகும், குடிப்பவையும் ஹராமாகும், அவனது ஆடையும் ஹராமாகும், அவனோ ஹராத்திலேயே தோய்ந்துள்ளான் (இந்நிலையில்) அவனது பிரார்த்தனை எங்ஙணம் ஏற்றுக் கொள்ளப்படும்". என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். – ஆதாரம்: முஸ்லிம்.

எனவே எமது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமாயின் இந்நிபந்தனைகளை கட்டாயம் கவணத்திற் கொள்ள வேண்டும். வட்டி, கள்ளக் கடத்தல், திருட்டு, மோசடி, பிறர் சொத்தை அபகரித்தல், ஹராமானவற்றை விற்றல், அதனோடு தொடர்பாயிருத்தல், ஹராமானவற்றை உண்ணுதல், பருகுதல்... போன்ற அனைத்து வகையான ஹராமான செயல்களில் இருந்தும் விலகியவர்களாக எல்லா நேரத்திலும் அல்லாஹ்வை அஞ்சியவர்களாக வாழ்ந்து அவனிடம் கையேந்தினால் நிச்சயமாக ஒருபோதும் நமது பிரார்த்தனைகளை மறுக்க மாட்டான்.

அளவுக்கு மீறி பாவம் செய்திருப்பினும் மன்னிக்கக் கூடியவனாக அல்லாஹ் இருக்கிறான்: -

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 39, வசனங்கள் 53-54 ல் கூறுகிறான்: -

'என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்' (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

எனவே நான் பாவங்கள் அதிகம் செய்த பாவியாக இருக்கிறேன் என்று பாவத்திலேயே மீண்டும் மூழ்கியிருக்காமல் உடனடியாக இந்த பாவச் செயல்களிலிருந்து மீண்டு, இந்த பாவச் செயல்களை திரும்பவும் செய்ய மாட்டேன் என்ற உறுதியுடன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரிய பிறகு தொடர்ந்து நற்கருமங்களைச் செய்தவர்களாக அல்லாஹ்விடம் தமது தேவைகளைப் பிரார்த்தித்தால் இன்ஷா அல்லாஹ் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவான்.

யா அல்லாஹ்! தூய்மையான இறைவிசுவாசிகளாக எம்மை வாழ வைப்பாயாக.

3) அநீதியிழைக்கப்பட்டவனின் துஆ: -

ஹராமான செயல்களோடு தொடர்புள்ள ஒருவனாக இருந்தாலும் (நிராகரிப்பாளனாகக் கூட இருக்கலாம்) அப்பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். யாரும் யாருக்கும் எக்காரணம் கொண்டும் அநீதியிழைக்கக் கூடாது. எனவே தான் அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை தங்குதடையின்றி அல்லாஹ்வை சென்றடைகின்றன என்பதனை ஒரு சந்தர்ப்பத்தில் கீழ்வருமாறு கூறிக்காட்டினார்கள்.

முஆத் (ரழி) அவர்களை யமனுக்கு அனுப்பும் போது "அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை விஷயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்! எனென்றால் அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் திரை கிடையாது" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

முடிவுரை: -

அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் மற்றும் முஸ்லிமான அனைவருக்கும் உறுதியான ஈமானைத் தந்து, நம்மை ஹராமான செயல்களிலிருந்து விலகியிருப்பவர்களாக ஆக்கி, அனைவருக்கும் நன்மை செய்யக் கூடியவர்களாக ஆக்கியருள்வானாகவும். மேலும் சிறந்த வணக்கங்களில் ஒன்றாகிய பிரார்த்தனையை அல்லாஹ்விடம் மட்டுமே தொடர்ந்து செய்து அவனின் அளப்பற்ற அருளைப் பெறக் கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாகவும்.

Mar 22, 2008

தாய் குலத்தின் முன்மாதிரி!

உரை: அபூ அரீஜ்

Audio Link : தாய் குலத்தின் முன்மாதிரி!

மாற்றுக் கருத்துக்கிடமில்லா மறுமை வாழ்க்கை!

எழுதியவர்: அபூ அரீஜ்

வல்லோனின் திரு நாமம் போற்றி

மொழியியலில் எல்லாச் சொற்களுக்கும் எதிர் சொற்கள் இருக்கின்றன. இரவு-பகல், காலை-மாலை, இன்று-நாளை... இது போன்று 'இம்மை' எனும் சொல்லுக்கு எதிர்ப்பதம் 'மறுமை' என்பதாகும்.

இஸ்லாம் கூறும் 'மறுமை வாழ்க்கை' பற்றி உலக அரங்கில் காலம் நெடுகிலும் வாதப்பிரதி வாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சத்தியமும் அசத்தியமும் மோதிக் கொள்ளும் பொழுது சத்தியத்தைத் தேடிக் கொண்டிருக்கும் சத்தியவாதிகளுக்கு பாலில் சக்கரை விழுந்ததைப் போன்றிருக்கும். ஏனென்றால் சத்தியம் பகுத்தறிவோடு ஒத்துப் போகக் கூடியது. அது எப்பொழுதும் ஆதாரங்களோடு அணிவகுத்து நிற்கும். தீமைப் புயலுக்கு முன்னும் நிலையாக நிற்கும் அதன் வலிமை உண்மையை உலகின் கண்களுக்கு உணர்த்த வல்லது.

தீமையை தீமை என்று தெரிந்து கொண்டும் அநேகர் அதைச் செய்வது போன்று அசத்தியத்தையும் ஏந்திப் பிடிக்கத்தான் செய்கின்றனர். அதேபோல் நன்மையான விடயங்கள் அநேகமிருக்க அவற்றை கண்டு கொள்ளாமல் இருப்பது போல், உண்மையை உணர்ந்திருந்தும் அவற்றை உதாசீனப்படுத்தும் தன்மையையும் காணமுடிகின்றது.

உண்மைதான் எப்போதும் ஜெயிக்கவல்லது. சத்தியம் நிச்சயம் தார்மீகத்தில் தலைத்து நிற்கும். இருந்தும் அந்த சத்தியத்தை ஏற்று வாழ்வோர் மிக மிகக் குறைந்தவர்களே! காரணம், எவருக்கு அல்லாஹ் நேர்வழியைக் காட்ட நாடுகிறானோ அவர்களுக்கு மட்டுமே நேர்வழியைப் பின்பற்றும் பாக்கியத்தையும் கொடுக்கின்றான்.

மறுமை உண்டா? என்ற ஐயத்திற்கு இரு கோணங்களில் பதில் காண்போம்.
மறுமை நம்பிக்கையும் - பகுத்தறிவும்.
மறுமை பற்றி இஸ்லாத்தின் மூலாதாரங்கள்.

இந்த நவீன காலத்தில் பகுத்தறிவின் செயற்பாடு அளப்பறியது. மனித நுகர்வுச் சந்தையில் பகுத்தறிவுதான் உரைகல்! முனிதனின் மட்டுப்படுத்தப்பட்ட பகுத்தறிவுக்குப் படாதவைகள் ஏராளம். பெரும்பாலான விடயங்கள் பகுத்தறிவுக்குப் படவில்லை என்றுதான் ஓரங்கட்டப்படுகின்றன. இப்படி முஸ்லிமல்லாத சகோதரர்கள் ஓரங்கட்டிய ஒரு விடயம்தான் இஸ்லாம் கூறும் 'மறுமை' நம்பிக்கையாகும்.

மறுமை வாழ்க்கையை நம்புவது பகுத்தறிவுக்கு உட்பட்டதா? அல்லது மறுபிறவிக் கோட்பாட்டை ஏற்பது பகுத்தறிவுக்கு ஏற்றதா? விடை காணப்பட வேண்டிய அம்சங்கள். மறுபிறவிக் கோட்பாடு உண்மையில் பகுத்தறிவோடு எந்தளவுக்கு முரண்படுகின்றது என்பதனை இறுதியில் விளக்கியுள்ளோம்.

இறைவனின் படைப்புகளில் மனிதனுக்கு மட்டும்தான் சிந்தித்து செயலாற்றும் திறன் வழங்கப்பட்டுள்ளது. உங்கள் சிந்தனையைத் தூண்டும் சில கேள்விகளை உங்கள் மன்றத்தில் வைக்கிறோம் அவற்றிற்கு விடை காணுங்கள் இஸ்லாம் கூறும் மறுமை வாழ்க்கையின் உண்மை நிலையை அது உங்களுக்கு உணர்த்தும்.

'இம்மை' எனும் சொல்லுக்கு எதிர்ப்பதம் 'மறுமை' என்றால் அதன் உண்மையான அர்த்தம் தான் என்ன?

மனிதன் வாழ நினைக்கிறான் ஆனால் வாழ்க்கையின் வசந்தங்கள் கைகூடு முன்னே அவன் வாழ்க்கை முடிந்து விடுகின்றது. அழிவிலா வசந்தங்கள் இவ்வுலகில் கைகூடாத போது அது எங்குதான் சாத்தியம்?

நூறு சதவிகிதம் என்று எழுதிப் பார்த்திருக்கிறோம். காகிதங்களில் கண்டிருக்கிறோம். ஆனால் நூறு சதவிகிதம் என்பது அதிகமான விடயங்களில் ஏட்டுச் சுரக்காய்தான். இவ்வுலகில் சாத்தியப்படாத போது அது எவ்வுலகில் கிடைக்கும்?

மனிதனது தலை நரைக்கலாம். ஆனால் அவனது எண்ணங்களும், ஆசைகளும் நரைப்பது கிடையாது. அதனால்தான் வயது ஏற ஏற அநேகர் வாழ்க்கையின் வசந்தங்களையெல்லாம் கண்டுவிடத் துடிப்பது போன்று இன்னும் பல வருடங்கள் மரணமற்று வாழ விரும்புகின்றனர். ஆனால் மனித இயல்பும், இறைவனின் நியதியும் அவற்றிற்கு இடம் கொடுப்பதில்லை. அப்படியாயின் நரைக்காத இளமையும், மரணமற்ற வாழ்க்கையும் எங்குதான் சாத்தியப்படும்?
இவ்வுலகில் அனைத்திற்கும் ஆரம்பம் இருப்பது போல் முடிவும் இருக்கின்றது. அப்படியானால் முடிவே அற்ற ஒன்றை எங்குதான் காண்பது?

நல்லவர்கள் பலர் துன்பத்தில் துவழுவது போல் கெட்டவர்கள் பலர் இன்பத்தில் மிதக்கின்றனர். இப்படியே அவர்களது வாழ்க்கையும் அஸ்தமித்து விடுகிறது. உலக வாழ்க்கையில் பலரால் உணரப்படாத இந்த விந்தைக்கு இவ்வுலகில் அர்த்தம் காணப்படாத போது எந்த உலகில் தான் விடை காணப்படும்?

சிறையில் வாடும் அனைவரும் குற்றவாளிகளும் அல்லர். சிறைக்கு வெளியே வாழும் அனைவரும் சுத்தவாளிகளும் அல்லர். இவ்வுலகில் இவர்களது நிஜம் உணரப்படாத போது எவ்வுலகில் அவர்களது சுயரூபம் வெளிக்காட்டப்படும்?

இந்த சடவாத உலக நீதிமன்றங்கள் எல்லாம் நீதி தேவதையின் இரு கண்களையும் கறுப்புத் துணியால் கட்டிவிட்டுத்தான் (போலி) நீதி வழங்குகின்றன! இப்படியே இவ்வுலகம் முடிவடைந்து விட்டால் அநீதியிழைக்கப்பட்டவர்களுக்கு எங்குதான் நீதி கிடைக்கும்?
சில குற்றங்களுக்கு எவ்வளவுதான் முயன்றாலும் முழுமையான தண்டனைகள் வழங்க முடியாது. அது இவ்வுலகில் சாத்தியமும் இல்லை. உதாரணமாக, ஒரு கொலை செய்தவனுக்கும், நூறு கொலை செய்தவனுக்கும் உயர்ந்த பட்ச தண்டனையாக தூக்குத் தண்டனைதான் வழங்க முடியும். அல்லது ஆயுல் தண்டனை கொடுக்கலாம். உண்மையில் இது ரொம்ப ரொம்ப அநியாயமாகும். இவ்விடயத்தில் இவ்வுலகில் சரியான நீதி செலுத்த முடியாத பட்சத்தில் அது எங்குதான் சாத்தியம்?

பிறப்பது வாழ்வதற்கே என்று சடவாத உலகம் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அதேநேரம் பல குழந்தைகள் அம்மா என்று சொல்லப் பழகு முன்னரே இவ்வாழ்க்கைக்கு பிரியாவிடை கொடுத்து விடுகின்றது. இவர்களுக்கும் இயற்கைத் தத்துவத்தின் நீதி கிடைப்பதெங்கே?

உலகம் அழிவை நோக்கி புறப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று பொதுவாக மக்களும், உலகம் அழியும் தருணம் வெகு தொலைவில் இல்லை என்று விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் அண்மைக்காலமாக இஸ்லாத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த ஆரம்பித்து விட்டன. உலகம் அழிக்கப்பட்டு விட்டால்....???

கேள்விகளே மனிதனின் ஐயங்களை நிவர்த்தி செய்ய வல்லது. அதனால் தான் அல்-குர்ஆன் கேள்வி கேட்டு உங்கள் ஐயங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள் என பிரகடனப்படுத்துகின்றது.

'நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்'. (அல்-குர்ஆன்)

எனவே நாம் மேலே உதாரணத்திற்காக குறிப்பிட்டுள்ள கேள்விகள் போன்ற சிந்தனையைத் தூண்டக் கூடிய அம்சங்கள் நமக்கு மறுமை வாழ்க்கை நிச்சயம் உண்டு என்பதை அறிவுபூர்வமாக உணர்த்துகிறது.

சத்தியத்தை உணர்ந்து கொள்ள, சத்தியத்தை நிலைநாட்ட, சமாதானத்தை இவ்வுலகில் விதைக்க நம்மைப்படைத்த இறைவன் நமக்கு பகுத்தறிவைத் தந்தான். ஆனால் பலர் தமக்குக் கொடுக்கப்பட்ட அந்த பகுத்தறிவினாலேயே தாமும் கெட்டு பிறiரையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். வெருமனே முன்பின் யோசிக்காமல், ஆதார பூர்வமாக எந்தவொரு விடயத்தையும் அனுகாமல், நான் என்ற அகங்காரத்தால் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள தனது பகுத்தறிவை வைத்துக் கொண்டு அனைத்திற்கும் தீர்வுகாண, முடிவெடுக்க நினைப்பது தவறு. ஏனென்றால் அனேகம் பேர் தமது பகுத்தறிவை மட்டும் நீதிபதியாக்கிக் கொண்டு சட்டம் வகுத்துக் கொள்கின்ற போது நினைத்ததற்குப் புறம்பாக பல விடயங்கள் நடந்து போகின்றன. அவர்கள் எந்த பகுத்தறிவை உதவிக்கழைக்கிறார்களோ அந்த பகுத்தறிவே அவர்களை படுகுழியில் தள்ளி விடுவதை நாளாந்தம் நாம் கண்டு கொண்டிருக்கின்றோம்.

மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் அனைத்துத் தன்மைகளும் மட்டுப்படுத்தப்பட்டவைகள்தாம். பார்வைப் புலன், கேள்வி, தொடுகை, நுகர்ச்சி போன்ற எதுவாக இருப்பினும் ஒரு எல்லை வரை தான் தனது பனியைச் செய்யும். அதற்கு மேல் வேறு துனைகளுடன் தான் தன் பனியைத் தொடரும். இது தான் மனிதனின் நிலை. இதே போன்றது தான் நம் பகுத்தறிவும்.

பகுத்தறிவு தவிர்ந்த ஏனைய புலன்களின் பலவீனத் தன்மையை இலகுவில் புரிந்து கொள்ளும் மனிதன் தனது பகுத்தறிவின் யதார்த்த நிலையையும், அதன் பலவீனத் தன்மையையும் இலகுவில் புறிந்து கொள்வதில்லை. இந்த நிலையை நன்கறிந்த அல்லாஹ் காலத்தின் தேவைக்கேற்ப தனது தூதர்களை அனுப்பி வழிகாட்டியுள்ளான்.

இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாக்குகளும், அல்-குர்ஆனும் பல இடங்களில் இறுதி நாள் பற்றியும், மறுமை நாள் பற்றியும் வெவ்வேறு அடைமொழிகளுடன் குறிப்பிடுகின்றன. அதேபோன்று அந்த நாள், அந்த நாளைத் தொடர்ந்து வரும் நிகழ்வுகள் அதேபோல் அதன் பின் இருக்கும் மறுமை நாள் பற்றியெல்லாம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் மனிதர்களான அனைவரும் அந்த நாளைப் பயந்து இறைவன் கூறிய பிரகாரம் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும்.

மறுமை பற்றி அல்-குர்ஆன்:-

1) (17:49-51), (29:20), (30:27), (31:28), (36:79) ஆகிய வசனங்கள் மனிதனை அல்லாஹ் அழித்து விட்டு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவான் என்பதனை ஐயமற விளக்குகின்றன. ஒன்றுமே இல்லாமல் இருந்த மனிதனை தன் வல்லமையினால் உண்டாக்கியவன், நம்மை அழித்துவிட்டு மீண்டும் எம்மை உயிப்பிப்பது ஒன்றும் அசாத்தியமான காரியம் கிடையாது.

மனிதனுக்குக் கூட ஒன்றை உருவாக்கி அதனை இல்லாமல் செய்து விட்டு அதே போன்ற ஒன்றை மீண்டும் உருவாக்குவது சிரமமான ஒன்றும் கிடையாது. ஒரு பொருளை முதலில் உருவாக்குவதுதான் கடினம். ஆனால் அல்லாஹ் ஆகு என்றால் ஆகிவிடும் சக்தி படைத்தவன். அப்படியான சக்தியுள்ளவன்தான் இறைவனாக இருக்க சாத்தியமானவன். மனிதனுக்கே சர்வசாதாரனமான இப்படியான விடயங்களில் சக்தியுள்ளபோது சர்வசக்தனான வல்லநாயன் விடயத்தில் ஐயம் கொள்வது தகுமா?!

2) (21:1), (21:97), (33:63), (42:17), (42:18), (54:1) போன்ற வசனங்கள் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறுவதன் மூலம் நாம் எந்நேரமும் அந்த நாளுக்காக தயாராக இருந்து கொள்ள வேண்டும் என்பதனை உணர்த்துகின்றது.

அந்த நாள் நாம் கண்மூடித் திறப்பதற்குள் திடீரென ஏற்படும் என்பதையும் அல்-குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. உதாரணமாக: (6:31), (7:187) போன்ற வசங்கள் அல்-குர்ஆனில் பல இடங்களில் காணப்படுகின்றன. (அல்-குர்ஆனைப் படிக்கவும்).

3) மறுமை நாள் மிகவும் கடுமையான நாள் என்பதனையும் எல்லோரும் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படுவோம் என்பதனையும் பல வடிவங்களில் அல்-குர்ஆன் விவரிக்கின்றது.

யாவரும் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படும் நாள். (2:148), (2:281), (3:9)...
தாம் விதைத்ததை அறுவடை செய்யும் நாள். (3:30), (3:115), (4:40)...
தம் செல்வக் குழந்தைகள் கூட எமக்கு உதவ முடியாத நாள். (3:116), (26:88)...
பாலூட்டும் தாய் கூட தம் குழந்தையை மறக்கும் நாள். (22:2)...
எவரும் எவருக்கும் எள்ளலவும் உதவ முடியாத நாள். (2:48), (2:123), (2:254), (26:88)...

இறுதி நாள் பற்றியும் இறுதி நாளின் பின் ஏற்படும் மறுமை நிகழ்வுகள் பற்றியும் அல்-குர்ஆன் ஏராளமான இடங்களில் பலவகையான அடைமொழிகளை உபயோகித்து எம் சிந்தனையைத் தூண்டிக் கொண்டிருக்கின்றது. அல்-குர்ஆன் கூறும் விடயங்கள் வெரும் புரான இதிகாசங்களைப் போன்ற தன்று. மாறாக அனைத்தையும் படைத்தவனின் ஊர்ஜித வாக்குகளாகும். எனவே எந்தவொரு விடயத்தையும் தட்டிக் கழிக்காது நம்பி செயல்படுவோமாக.

மறுமை பற்றி அண்ணலாரின் பொன் மொழிகள்: -

1) 'இறைநம்பிக்கை கொண்டு அதில் அக்கிரமத்தைக் கலக்காதவர்களுக்கே (இம்மையிலும் மறுமையிலும்) அச்சமற்ற நிலை உண்டு. மேலும் அவர்களே நேர்வழி பெற்றவர்களுமாவார்' (திருக்குர்ஆன் 06:82) என்ற இறைவசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள் 'நம்மில் யார் அக்கிரமம் செய்யாமலிருக்க முடியும்?' எனக் கேட்டனர். அப்போதுஇ 'நிச்சயமாக (அல்லாஹ்வுக்கு எவரையும்) இணையாக்குவதுதான் மிகப் பெரும் அக்கிரமம்' (திருக்குர்ஆன் 31:13) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.(புகாரி)

2) நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து 'ஈமான் என்றால் என்ன?' என்று கேட்டதற்கு 'ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது' எனக் கூறினார்கள்... (புகாரி)

3) 'எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். 'கல்வி குறைந்து போய் விடுவதும் அறியாமை வெளிப்படுவதும் வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பதும் ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வகிக்கும் ஒரே ஆண் என்ற நிலமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுதியாவதும் ஆண்கள் குறைந்து விடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறக் கேட்டிருக்கிறேன்' என அனஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி)

4) 'ஓர் இரவில் தூக்கத்திலிருந்து எழுந்த நபி(ஸல்) அவர்கள் (அச்சரியமாக) 'அல்லாஹ் தூய்மையானவன்! இந்த இரவில்தான் எத்தனை சோதனைகள் இறக்கப்பட்டிருக்கின்றன. திறந்து விடப்பட்ட அருட்பேறுகள்தான் என்னென்ன?' என்று கூறிவிட்டு, 'தம் அறைகளில் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களை (தம் மனைவிமார்களை இறை வணக்கத்திற்காக தூக்கத்தை விட்டும்) எழுப்புங்கள். ஏனெனில், இவ்வுலகில் ஆடை அணிந்தவர்களாகயிருக்கும், எத்தனையோ பெண்கள் மறுமையில் நிர்வாணமாக இருப்பார்கள்' என்று கூறினார்கள்' என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

இவ்வாறு ஏறாளமான நபி மொழிகள் மறுமையில் நடை பெறக் கூடிய செய்திகளை நமக்கு கூறுவதிலிருந்து நிச்சயம் மறுமை நாள் என்ற ஒன்று இருக்கிறது என்பதனைத் தெளிவு படுத்துகின்றது.

மறுமை பற்றி நபிவாக்கிலிருந்து தெரிந்து கொள்ள ஆதாரபூர்வமான ஆயிரக்கணக்கான செய்திகள் இருக்கின்றன. ஆர்வத்தோடு தேடுங்கள்.... படியுங்கள்.... அல்லாஹ் நம் அனைவரது மறுமை வாழ்க்கையையும் சிறப்பாக ஆக்கி வைப்பானாக.

Mar 21, 2008

பெற்றோரின் மகிமை - ஓர் உண்மைச் சம்பவம்!

உரை: அபூ அரீஜ்

செய்த தவறை மறைப்பதற்காக பெற்றோரிடத்தில் அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம் செய்ததின் விளைவு! பெற்றோரின் சாபம் பலித்தது. சமீபத்தில் சவூதி அரேபியாவில் நடந்த உண்மைச் சம்பவம். பிள்ளைகள் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளும், பெற்றோர் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளும்!

Audio-Video Link : பெற்றோரின் மகிமை - ஓர் உண்மைச் சம்பவம்!

Mar 19, 2008

தொழுகையின் கடமையான செயல்களை அவசரமாகச் செய்தால் தொழுகை கூடுமா?

தொகுப்பு: நிர்வாகி

கேள்வி: -

3) தொழுகையின் கடமையான செயல்களை விரைவாகச் செய்தால் தொழுகை கூடுமா?

பதில்: -


ஒருவர் தொழும் போது அவர் தம்மைப் படைத்த அல்லாஹ்வுக்கு முன்னிலையில் நிற்பதாக உணர்ந்து அவனுக்கு முற்றிலும் பணிந்தவராக மிகுந்த உள்ளச்சத்துடன் தொழ முயற்ச்சிக்கும் போது அவருடைய தொழுகை தானாகவே பணிவுள்ளதாக, உண்மையானதாக அமையும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒருநாள் மக்கள் முன்வந்திருந்தார்கள். அப்போது ஒருவர் (வாகனமேதுமின்றி) நடந்துவந்து, 'இறைத்தூதர் அவர்களே!' 'இஹ்ஸான்' என்றால் என்ன?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் வணங்குவதாகும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கிறான் (எனும் உணர்வுடன் அவனை வணங்குவதாகும்.)' என்று பதிலளித்தார்கள். (நீண்ட ஹதீஸின் சுருக்கம்) ஆதாரம்: புகாரி.

ஒருவர் மெதுவாகவும் நிதானமாகவும் தொழும் போது தான் அவர் அல்லாஹ்வின் சன்னிதானத்தின் முன் நின்று அவனை பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வுடனும், பணிவுடனும் உள்ளச்சத்துடனும் அவனை வணங்க முடியும்.

மாறாக ஒருவர் அவசர அவசரமாக தொழுதால் மேற்கூறிய உணர்வுகளில் தொழ இயலாததோடல்லாமல் ஒருவர் தன் மீது சுமத்தப்பட்டிருக்கின்ற கடமையை நிறைவேற்றுவதற்காக வெறுமனே செய்கின்ற சடங்கைப் போலாகும்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தொழுகையில் உள்ளச்சத்துடன் தொழவேண்டிய அவசியம் குறித்துக் கூறுகிறான்.

"ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்" (அல்-குர்ஆன் 23:1-2)

மேலும் நபி (ஸல்) அவர்கள் வேகமாக தொழும் ஒருவரைப் பார்த்து அவரை திரும்பவும் தொழுமாறு கட்டளையிட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் (அந்த நேரத்தில்) பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது முடித்ததும்) நபி(ஸல்) அவர்களுக்கு அவர் ஸலாம் கூறினார். நபி(ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பின்பு 'திரும்பவும் நீர் தொழுவீராக? நீர் தொழவே இல்லை" என்றும் கூறினார்கள்.

அந்த மனிதர் முன்பு தொழுதது போன்றே மீண்டும் தொழுதுவிட்டு வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். 'திரும்பவும் தொழுவீராக! நீர் தொழவே இல்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இவ்வாறு மூன்று முறை நடந்தது). அதன் பிறகு அந்த மனிதர் 'சத்தியமார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை! எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்!' என்று கேட்டார்.

"நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறும்! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதும்! பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தாச் செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே உம்முடைய எல்லாத் தொழுகையிலும் செய்து வருவீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.

நமது சகோதர சகோதரிகளில் சிலர் செய்யும் தவறு என்னவெனில் ருகூவிலிருந்து எழுந்ததும் அவசர அவசரமாக சஜ்தாவிற்குச் செல்கின்றனர். அதே போல் இரண்டு சஜ்தாக்களுக்களும் இடையில் இடைவெளியில்லாமல் அவசரமாக இரண்டு சஜ்தாக்களையும் செய்கின்றனர். இவ்வாறு செய்பவர்கள் மேற் கூறப்பட்ட நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையான "நீர் தொழவே இல்லை" என்பதனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். தொழுதும் தொழாத பாவிகளைப்போல் இல்லாமல் முறையாக தொழுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்.

அல்லாஹ் நம்மனைவருக்கும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறைப்படி தொழுகையை நிறைவேற்றுவதற்கு அருள் புரிவானாகவும்.

Mar 16, 2008

நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா – Part 3

Link : பொருளடக்கம் மற்றும் Part 1 & 2

Part-3

6d) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் இறைவனை நெருங்குவதற்காக கல்வியறிவுடைய சிறந்த மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்டது: -

பித்அத் அனைத்தும் வழிகேடுகள், அவைகள் நிராகரிக்கப்படவேண்டியவைகள் என்றிருக்கும் போது எவ்வளவு பெரிய அறிஞரால் கல்விமான்களால் அறிமுகப்படுத்தப்பட்டால் தான் என்ன?

நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பித்அத்துல் ஹஸனா ஆகும்.
பித்அத்துகளில் நல்லவை கெட்டவை என்ற பாகுபாடே கிடையாது. அனைத்து பித்அத்துகளும் வழிகேடு என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

'நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும' அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
மேலும் கூறினார்கள்: -

'(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்' ஆதாரம்: அஹ்மத்
எனவே அனைத்து பித்அத்களும் நரகத்திற்குரிய வழிகேடுகளேயன்றி வேறில்லை.

நபி (ஸல்) அவர்களின் வார்த்தையான 'அனைத்து பித்அத்களும் வழிகேடுகள்' என்பது சுருக்கமான அதே நேரத்தில் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய கட்டளையாகும். இது இஸ்லாத்தின் மிக முக்கியமான கொள்கையாகும்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: - 'நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது (இறைவனால்) நிராகரிக்கப்படும்' என்று நபி (ஸல்) கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம் அஹ்மத்)
எனவே மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில், ஒருவர் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இஸ்லாத்தில் புதிதாக ஒன்றை உருவாக்கினால் நிச்சயமாக அது வழிகேடே ஆகும், எனவே அவைகள் நிராகரிக்கடவேண்டிய ஒன்றாகும். இந்த வகையில் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் சேரும்.

நபி (ஸல்) அவர்களுடைய பிறந்த தினங்களை கொண்டாடுவோருக்கு நம்முடைய கேள்விகள்: -

நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடி அதன் மூலம் அவர்களைக் கண்ணியப்படுத்துவதாக இருந்தால் இத்தகைய நல்லா செயல்களை ஏன் நபித்தோழர்களும், அவர்களுக்குப் பின் வந்த மூன்று தலைமுறையினரும் செய்யவில்லை. அவர்களுக்கு இத்தகைய நல்ல செயல்கள் தெரியவில்லை என்று பின் இந்த சஹாபாக்களுக்குப் பின்னர் வந்த சமுதாயத்தினர் கண்டுபிடித்தார்களா? இந்த புதுமையைக் கண்டு பிடித்தவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நேர்வழி பெற்ற கலீபாக்கள், சஹாபாக்கள் மற்றும் அடுத்து வந்த இரண்டு சமுதாயத்தவர்களான தாபியீன்கள் மற்றும் தபஅ தாபயீன்களை விடச் சிறந்தவர்களா? நிச்சயமாக இல்லை. பின்னர் அவர்களே செய்யாத புதுமையான ஒன்றை நாம் செய்ய வேண்டும்?

6e) இஸ்லாம் நபி (ஸல்) அவர்களின் மீது அன்பு செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. எனவே நாங்கள் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடி அவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம் : -

நபி (ஸல்) அவர்களின் மீது அன்பு செலுத்துவது முஸ்லிமான ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். ஒருவர் தம்முடைய உயிர், பொருள், குடும்பம் மற்றும் பெற்றோர்கள் இவர்கள் அனைவரையும் விட நபி (ஸல்) அவர்களை அதிகம் நேசிக்காதவரை அவர் உண்மையான முஃமினாக மாட்டார். ஆனால் அதற்காக நபி (ஸல்) அவர்கள் ஏவிய நற்செயல்களைச் செய்வதை விட்டு விட்டு அவர்கள் தடுத்த பித்அத்தான செயல்களைச் செய்வது என்பது எவ்வாறு அறிவுப்பூர்வமானதாகும். ஒருவர் மீது அன்பு செலுத்துவது என்பது அவர் சொன்னதையெல்லாம் செய்வதும் அவர் தடுத்ததிலிருந்து விலகி கொள்வது தானே அவர் மீது மரியாதை செலுத்தி அன்பு செலுத்துவது ஆகும்?

நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துவது என்பது அவர்களின் சுன்னத்தான வழிமுறைகளை பின்பற்றி அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடித்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு மாற்றமான செயல்களைச் செய்வதிலிருந்தும் விலகியிருத்தல் ஆகும். நிச்சயமாக நபி (ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு மாற்றமான அனைத்தும் பித்அத் ஆவதோடல்லாமல் நபி (ஸல்) அவர்களுக்குக் கீழ் படிய மறுப்பதாகும். நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதும் இதில் அடங்கும். ஒருவரின் நல்ல எண்ணம் அவருக்கு இஸ்லாத்தில் பித்அத்தை செய்வதற்குரிய அனுமதி ஆகாது.

இஸ்லாம் என்பது இரண்டு முக்கியமான விஷயங்களில் அமைந்துள்ளது.

1. இக்லாஸ் என்னும் மனத்தூய்மை
2. நபி (ஸல்) அவர்களின் வழி முறையைப் பின்பற்றுவது.

எனவே நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துவது என்பது நபி (ஸல்) அவர்களுடைய மற்றும் குர்ஆனுடைய கட்டளைகளை மீறி செயல்படுவது அல்ல! மாறாக நபி (ஸல்) அவர்களுடைய சொல் செயல் அங்கீகாரம் ஆகியவைகளை ப்பின்பற்றுவதன் மூலம் அவர்களை கண்ணியப்படுத்தி அன்பு செலுத்துவதாகும்.

6f) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் மூலம் நாம் அவர்களின் வரலாற்றைப் படித்து அதன் மூலம் மற்றவர்களை நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்ற ஊக்கப்படுத்துகிறோம்.

நாம் இது வரை விளக்கியவைகளே இவர்களின் இந்தக் கேள்விக்கும் பதிலாக அமைகிறது. நபி (ஸல்) அவர்களின் வரலாற்றைப் படித்து அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறையைப் எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும், வருடம் முழுவதும் ஏன் தாம் மரணமடையும் வரையிலும் பின்பற்றி வாழ்வது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும். ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் அவ்வாறு செய்வது என்பது பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும். மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் அவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகிச் செல்கிறார்.

7) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவது குற்றத்திற்குரிய பித்அத்தே!: -

• எந்த வகையில் பார்த்தாலும் நபி (ஸல்) அவர்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவது என்பது குற்றத்திற்குரிய பித்அத் என்ற இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட நூதன செயலாகும்.
• ஒவ்வொரு முஸ்லிமும் இந்தச் செயல்களை தடுத்து நிறுத்த முடியுமானவரை முயற்சி எடுத்து நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை மேலோங்கச் செய்யப் பாடுபடவேண்டும்.
• இந்த நூதன செயல்களைச் செய்பவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கவேண்டும். ஏனென்றால் இத்தகையவர்கள் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவைப் பின்பற்றுவதற்குப் பதிலாக புதிய அனாச்சாரங்களையும் பித்அத்களையுமே மார்க்கம் என்று கருதி செயல்படுவர்.
• எத்தனை நபர்கள் இந்த நூதன செயல்களைச் செய்தாலும் ஒரு உண்மையான முஃமின் அவர்களைப் பின்பற்றக்கூடாது. மாறாக அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையை, அதை பின்பற்றுபவர்கள் வெகு சொற்பமாயினும் சரியே அதை மட்டுமே பின்பற்ற வேண்டும்.
• சத்தியத்தின் அளவுகோல் எத்தனை நபர்கள் அதை செய்கிறார்கள் அல்லது பேசுகிறார்கள் என்பது அல்ல! மாறாக சத்தியத்தின் அளவு கோல் உண்மையே!

8) கருத்து வேறுபாடு ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

'உங்களில் யாரேனும் (நீண்ட நாள்) வசிப்பீர்களானால் பல வேறுபாடுகளைக் காண்பீர்கள். என்னுடைய வழிமுறையையும் எனக்குப் பின்னால் வரக்கூடிய நேர்வழிபெற்ற கலிபாக்களின் வழிமுறைகளையும் பின்பற்றி நடக்க நான் உங்களை வலியுறுத்துகிறேன். அவைகளை வலுவாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். (மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படுவதை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள்; ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்' (ஆதாரம் அஹ்மத் மற்றும் திர்மிதி)

இந்த ஹதீஸில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் தோன்றக் கூடிய காலக்கட்டங்களில் நாம் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக விளக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். புதிதாக தோன்றக் கூடியவைகள் அனைத்தும் வழிகேடுகள் என்றும் அவைகளை விட்டும் எச்சரிக்கையாக இருக்குமாறும் நமக்கு வலியுறுத்திக்கிறார்கள்.

எனவே நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலோ அல்லது நேர்வழிபெற்ற கலிபாக்களின் வழிமுறைகளிலோ அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாததால் இது வழிகேட்டின் பால் இழுத்துச் செல்லும் ஒரு பித்ஆத் ஆகும். இதுவே மேற்கூறப்பட்ட ஹதீஸின் கருத்துப்படி உள்ள பொருளாகும். மேலும் அல்லாஹ் கூறுகிறான்: -

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும்இ உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.(அல்குர்ஆன் 4:59)

இந்த வசனத்தில் அல்லாஹ்வுக்குக் கீழ் படியுங்கள் என்று கூறப்பட்டிருப்பதன் விளக்கமாவது அல்லாஹ்வின் கூற்றாகிய அல்-குர்ஆனுக்கு கீழ்படிவதாகும்.

அல்லாஹ்வின்தூதருக்கு கீழ்படியுங்கள் என்றால் அவர்களது மறைவிற்குப் பின்னர் அவர்களுடைய சுன்னாவைப் பின்பற்றுதல் என்பதாகும்.

ஏதேனும் பிணக்கு அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அல்லாஹ்வுடைய வேதத்திலும் அவனுடைய தூதரின் சுன்னாவிலும் தான் தீர்வு காணவேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்.
எனவே குர்ஆனிலோ அல்லது சுன்னாவிலோ நபி (ஸல்) அவர்களின் பிறந்த நானைக் கொண்டாடுமாறு எங்கே கூறப்பட்டிருக்கிறது?

யாரேனும் இந்தச் செயலைச் செய்தால் அல்லது நல்லது எனக் கருதினால் இதிலிருந்து அவர் உடனடியாக மீண்டு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்கவேண்டும். இதுவே உண்மையைத் தேடும் ஒரு முஃமினின் பண்பாகும். ஆனால் இந்த உண்மை தெள்ளத் தெளிவாக விளங்கிய பின்னரும் யாரேனும் பிடிவாதமாகவும் ஆணவமாகவும் இருந்தால் அவருடைய கணக்கு அல்லாஹ்விடமே உள்ளது.

அல்லாஹ்வின் வேதமாகிய அல்-குர்ஆனையும் அவனுடைய இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் தெளிவான சீரிய வழிகாட்டுதல்களையும் நாம் அல்லாஹ்வை சந்திக்கும் வரையிலும் உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு அவற்றைப் பின்பற்றி வாழ வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவோம்.

நன்றி: www.islam-qa.com

பொறுமைக்கு ஓர் அழகிய முன்மாதிரி!

உரை: அபூ அரீஜ்

Link : பொறுமைக்கு ஓர் அழகிய முன்மாதிரி!

Mar 12, 2008

நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா! - Part 2

Link : பொருளடக்கம் & Part 1

Part 2: -
6) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுபவர்களின் வாதங்கள்: -

இந்த பித்அத்களைப் புரிவோர் தங்களுக்கு ஆதாரமாக பலவகையான வாதங்களை முன் வைக்கின்றனர். இவைகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற மிக பல வீனமானவைகளாகும். அவைகளை சற்று ஆராய்வோம்.: -

6a) நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மரியாதை செலுத்தி அவர்களை மதிக்கின்றோம் என கூறுகின்றனர்: -

நபி (ஸல்) அவர்களை மதிப்பது என்பது,

அவர்கள் கட்டளையிட்டவற்றை ஏற்று அதன்படி நடப்பதும்,

அவர்கள் தடுத்தவற்றிலிருந்தும் விலகி இருப்பதும் மற்றும்

அவர்கள் மீது அன்பு செலுத்துவதும் ஆகும்.

ஆனால் ஒருவர் நபி (ஸல்) அவர்கள் ஏவிய கட்டளைகளைப் பின்பற்றாதது மட்டுமல்லாமல் அவர்கள் தடுத்தவற்றைச் செய்து கொண்டே நான் நபி (ஸல்) அவர்களை மதிக்கிறேன் என்று கூறுவது எந்த வகையில் அறிவீனமானது என்று நாம் சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இதற்கு அனைவருக்கும் தெரிந்த தந்தை மகன் உதாரணம் ஒன்றைக் கூறலாம்: -

ஒருவர் தம்முடைய தந்தையை மிகவும் மதிப்பதாகக் கூறுகிறார். ஆனால் அவர் செய்வதெல்லாம் அந்த தந்தையின் கட்டளைக்கு நேர்மாற்றம். தந்தை எதையெல்லாம் செய்யக் கூடாது என கூறினாரே அதை மகன் விரும்பிச் செய்கின்றார். தந்தை எதைச் செய்ய வேண்டும் என சொன்னாரோ அதை மகன் கண்டுக்கொள்வதே இல்லை. மகனின் இந்தச் செயல் தந்தைக்கு மரியதை செலுத்தி கண்ணியப் படுத்தியக் கருதப்படுமா அல்லது தந்தையின் பேச்சைக் கேட்காதது மூலம் அவரை இழிவு படுத்தியதாக் கருதப்படுமா? சிந்தியுங்கள் எனதருமை சகோதர சகோதரிகளே!

மேலும் நபி (ஸல்) அவர்களை சஹாபாக்கள் மதித்தது போல் வேறு யாரும் மதிக்க முடியாது. ஆனால் சஹாபாக்களோ நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடவில்லை. இவ்வாறு பிறந்த தினங்களைக் கொண்டாட வேண்டும் என்று இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தால் சஹாபாக்கள் தான் முதலில் செய்திருப்பார்கள். அந்த அளவிற்கு நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு கட்டளையையும் பின்பற்றி நடப்பவர்களாகவும் நபி (ஸல்) அவர்களுடைய சுன்னத்தைப் பேணி நடப்பவர்களாகவும் சஹாபாக்கள் வாழ்ந்தனர். ஆனால் யாரும் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை விழாவாக கொண்டாடியதாக ஒரு சிறு ஆதாரம் கூட கிடையாது.

இவர்கள் சஹாபாக்களை விட அதிகமாக நபி (ஸல்) அவர்களை மதிக்கிறார்களா? அல்லது இத்தகைய நல்ல அமல்கள் சஹாபாக்களுக்குத் தெரியாமல் போய்விட்டதா? எனவே இவர்களின் நாங்கள் நபி (ஸல்) அவர்களை இந்த விழாவின் மூலம் மதிக்கிறோம் என்ற வாதம் அர்த்தமற்றதும் அவர்களுக்கே எதிரானதும் ஆகும்.

6b) பெரும்பாண்மையான மக்கள் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனரே! அதனால் நாங்களும் கொண்டாடுகிறோம்: -

நபி (ஸல்) அவர்களின் '(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை' என்ற கூற்றுப்படி பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பித்அத் என்றும் வழிகேடு என்று உறுதியான பிறகு எத்தனை நபர்கள் எத்தனை நாடுகளில் பின்பற்றினால் என்ன?

உலகில் உள்ள பெரும்பாண்மையான மக்கள் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்றும் அவர்களைப் பின்பற்றினால் வழி கெடுத்து விடுவார்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறானே!

பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் - இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். (அல்-குர்ஆன் 6:116)

இன்னும் அநேக வசனங்களில் பெரும்பாலோரைப் பின்பற்றக் கூடாது என்றும் அதற்குரிய காரணத்தையும் அல்லாஹ் விளக்குகிறான்:-

பெரும்பாலோர் ஈமான் கொள்ள மாட்டார்கள். (2:100)

பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (2:243)

பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.(5:32)

பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.(5:49)

பெரும்பாலோர் ஃபாஸிக்கு (பாவி)களாக இருக்கின்றீர்கள் (5:59)

பெரும்பாலோர் பாவத்திலும், அக்கிரமத்திலும் விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல்படுவதை (நபியே!) நீர் காண்பீர்.(5:62)

பெரும்பாலோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையாகும (5:66)

பெரும்பாலோர் நல்லறிவு பெறாதவர்களாகவே இருக்கின்றனர் (5:103)

பெரும்பாலோர் மூடர்களாகவே இருக்கின்றனர். (6:111)

பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (6:116)

பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள் (6:119)

பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை (10:36)

பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.(7:117, 10:60)

பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்' (10:92)

பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை (11:17)

பெரும்பாலோர் காஃபிர் (நன்றி கெட்டவர்)களாகவே இருக்கின்றனர். (16:83)

பெரும்பாலோர் சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை; ஆகவே அவர்கள் (அதைப்) புறக்கணிக்கிறார்கள். (21:24)

பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள். (23:70)

பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.(29:63)

எனவே பெரும்பாலானோரைப் பின்பற்றுவது என்பது மேற்கூறப்பட்ட வசனங்களுக்கு எதிரானதாகும்.

6c) மீலாது விழாக்கள் நபி (ஸல்) அவர்களை எப்போதும் நினைவில் இருத்திக்கொள்ள உதவும்: -

நபி (ஸல்) அவர்களை மீலாது விழாக்களில் மட்டும்தான் நினைவுபடுத்த வேண்டுமா? மற்ற நாட்களில் நினைவு படுத்தக்கூடாதா? முஃமின்களுக்கு நபி (ஸல்) அவர்களிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருப்பதாக அல்லாஹ் கூறுகிறானே (அல்-குர்ஆன் 33:21)! அப்படியென்றால் வருடத்தில் ஒருமுறை நினைவுபடுத்தி அந்த அழகிய முன்மாதிரியைப் பின்பற்றி விட்டு மற்ற நாட்களில் நினைவு படுத்தத் தேவையில்லையா? இல்லை சகோதர சகோதரிகளே! இது முற்றிலும் தவறு.

உண்மையான முஸ்லிம்கள் எல்லாக் காலங்களிலும், எல்லா நேரங்களிலும் நபி (ஸல்) அவர்களை நினைவில் இருத்திக் கொண்டே இருப்பார். அதாவது,

நபி (ஸல்) அவர்களின் பெயர் கூறப்படும் போதெல்லாம் அவர்கள் மீது சலவாத்து கூறுவார்கள்

நபி (ஸல்) அவர்களின் பெயர் பாங்கு, இகாமத், குத்பா உரை மற்றும் தொழுகையின் போதும் நினைவு கூர்ந்து சலவாத்து கூறுவார்

ஒவ்வொரு முறையும் நபி (ஸல்) அவர்கள் ஏவிய வாஜிபான, முஸதஹப்பான கடமைகளைச் செய்யும் போதும் நினைவு கூறுவார்

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அன்றாடம் ஓத வேண்டிய துஆக்களை ஓதும் போதும் நினைவு கூறுவார்

இவ்வாறாக ஒரு முஃமின் இரவு பகல் என பாராது, மீலாது விழா நாட்கள் என்றும் பாராமல் எந்நேரமும் நபி (ஸல்) அவர்கள் ஏவிய நன்மையான செயல்களைச் செய்வதன் மூலமும் நபி (ஸல்) அவர்கள் தடுத்த தீமையான காரியங்களைச் செய்வதிலிருந்தும் விலகியிருத்தல் மூலமும் எந்நேரமும் நபி (ஸல்)அவர்களை நினைவில் இருத்திக்கொண்டேயிருப்பார்.

ஆனால் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடுவோர் நபி (ஸல்) அவர்கள் தடுத்த தீமையான செயலான பித்அத் என்னும் நூதன செயலைச் செய்வதன் மூலம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து விலகி தூரமாகச் செல்கின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இந்த வகையான பித்அத்தான விழாக்கள் தேவையில்லை. ஏனென்றால் ஏற்கனவே அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை கண்ணியப்படுத்தி அவர்களின் அந்தஸ்தை உயர்த்தி விட்டான்.

அல்லாஹ் கூறுகிறான்: -

மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். (அல்-குர்ஆன் 94:4)

மேலும் தினமும் ஐவேளை கூறக்கூடிய பாங்கு மற்றும் இகாமத் போன்றவற்றிலும், குத்பா பேருரைகளிலும், தொழுகையிலும் நபி (ஸல்) அவர்களின் பெயரும் குறிப்பிடப்படுகிறது. மேலும் திருமறையை ஓதும் ஒவ்வொரு முறையும் நபி (ஸல்)அவர்களை நினைவு கூராமலிருப்பதில்லை! இதுவே நபி (ஸல்) அவர்களைக் கண்ணியத்திற்கும், அவர்களின் மீது அன்பு செலுத்தி அவர்களைப் பற்றிய நினைவை புதுப்பித்துக் கொள்வதற்கும் அவர்களைப் பின்பற்றி வாழ்வதற்கான ஊக்கத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்கும் போதுமானதாகும்.

உண்மையான முஃமின் அனு தினமும் இஸ்லாத்தின் காரியங்களைச் செய்து வருவாராயின் அதன் மூலம் நபி (ஸல்) அவர்களை நிணைவு படுத்திக் கண்ணிப்படுத்தியவராகக் கருதப்படுவார். மாறாக பிறந்த நாள் விழா போன்ற பித்அத்தான செயல்களைச் செய்வதன் மூலம் நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு மாறு செய்பவர்கள் எவ்வாறு நபி (ஸல்) அவர்களை நினைபடுத்தி கண்ணியப்படுத்தியவராவார்? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே!

Mar 11, 2008

மெல்லிய ஆடை அணிந்து தொழுதால் தொழுகை கூடுமா?

உரை: அபூ அரீஜ்

Link:மெல்லிய ஆடை அணிந்து தொழுதால் தொழுகை கூடுமா?

நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா! - Part 1

பொருளடக்கம்

1) இஸ்லாம் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கம்

2) அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டியதன் அவசியம்

3) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட ஒரு புதுமையான விஷயமே

4)நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா - சிறிய வரலாற்றுக் கண்ணோட்டம்: -

5) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாக்களை ஏன் கொண்டாடக் கூடாது?

6) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுபவர்களின் வாதங்கள்: -

a) இந்த நாளைக் கொண்டாடுவதன் மூலம் நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மரியாதை செலுத்தி அவர்களை மதிக்கின்றோம்!

b) பல நாடுகளில் பெரும்பாண்மையான மக்கள் செய்கின்றனரே!

c) மீலாது விழாக்கள் மூலம் நபி (ஸல்) அவர்களை எப்போதும் நினைவில் இருத்திக்கொள்கிறோம்.

d) இறைவனை நெருங்குவதற்காக கல்வியறிவுடைய சிறந்த மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்டது

e) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பித்அத்துல் ஹஸனா ஆகும்.
i. உமர் (ரலி) அவர்கள் பின்பற்றிய பித்அத்துல் ஹசனாஹ்

ii. குர்ஆனை ஒரே நூலாக தொகுத்தது பித்அத்துல் ஹசனாஹ் ஆகும்

iii. ஹதீஸ்களை தொகுத்ததும் பித்அத்துல் ஹசனாஹ் ஆகும்

f) இஸ்லாம் நபி (ஸல்) அவர்களின் மீது அன்பு செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. எனவே நாங்கள் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடி அவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம்.

g) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் மூலம் நாம் அவர்களின் வரலாற்றைப் படித்து அதன் மூலம் மற்றவர்களை நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்ற ஊக்கப்படுத்துகிறோம்.

7) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவது குற்றத்திற்குரிய பித்அத்தே!
கருத்து வேறுபாடு ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?

1) இஸ்லாம் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கம்: -

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவனே (நாம் அறிந்த, அறியாத) பேரண்டத்தின் அதிபதி. அவன் இறையச்சமுடையவர்களுக்கு நல்ல வெகுமதிகளையும், அவனுடைய வரம்பை மீறுபவர்களுக்கு பெரிய அழிவையும் தரக்கூடியவன். அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை: அவனுக்கு யாதொரு இணையுமில்லை: சர்வ வல்லமையும், அதிகாரமும் அவனுக்கே உரியது என்று நான் சாட்சி கூறுகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், திருத்தூதருமாவார்கள்: அவர்கள் நபி மார்களுக்கு எல்லாம் இறுதி முத்திரையாக இருக்கிறார்கள்: மொத்த சமுதாயத்திற்கும் தலைவராக இருக்கிறார்கள் என்று நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும், அவர்களுடைய தோழர்கள் மற்றும் அவர்களை இறுதி தீர்ப்பு நாள் வரை பின்பற்றக் கூடியவர்கள் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக.

அல்லாஹ் ஸுப்ஹானஹுவத்தஆலா, அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை, நேர்வழிகாட்டியுடனும், மனித குலத்திற்கு ஓர் அருளான சத்திய இஸ்லாமிய மார்க்கத்துடனும், நன்மைகளைப் புரிவோருக்கு ஓர் முன்மாதிரியாகவும் அனுப்பி வைத்தான். அல்லாஹ் மனித குலம் அனைத்திற்கும், அவர்கள் தங்களைச் சீர்திருத்திக் கொள்வதற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும், அதாவது மார்க்கம் மற்றும் அன்றாட அலுவல்களை இறை நம்பிக்கையுடன் நடத்திச் செல்வதற்கும், நல்ல நடத்தைகளையும், அழகிய முன்மாதிரிகளையும், போற்றத்தக்க நற்குணங்களையும், நம்முடைய நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகவும், அவர்களுக்கு அருளிய குர்ஆன் மற்றும் அவர்களுடைய சுன்னத்தான வழிமுறைகளின் மூலமாகவும் காட்டிவிட்டான்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஸஹீஹான ஹதீஸ் கூறுகிறது :

"நான் உங்களிடம் ஒரு ஒளிமயமான பாதையை விட்டுச் செல்கிறேன். அதில் இரவு கூட பகலின் ஒளியைப் போல் இருக்கிறது"

அன்பான சகோதர சகோதரிகளே,

இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மதமும் அதனுடைய ஆன்மீக நெறி என்பதைப் பற்றி மட்டும் போதித்துக்கொண்டிருக்கும் வேளையில் இஸ்லாம் மட்டுமே ஒருவருடைய பிறப்பு முதல் இறப்பு வரை நிகழக்கூடிய அனைத்து விஷயங்களில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல் அந்தந்த சூழ்நிலைகளில் ஒரு முஸ்லிம் தான் என்ன செய்ய வேண்டும் எனவும் எதை செய்யக் கூடாது எனவும் போதிக்கிறது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஒரு மனிதருடைய குடும்ப வாழ்க்கை, கொடுக்கல் வாங்கல், வணக்க வழிபாடுகள், அரசியல், சந்தோசம், துக்கம் போன்ற எல்லாத் துறைகளிலும் அவனுக்கு தேவையான அறிவுரைகளையும் விழிமுறைகளையும் காட்டி முழுமையான மார்க்கமாகத் திகழ்கிறது. இதையே அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தன்னுடைய மார்க்கத்தை தான் முழுமைப் படுத்தி விட்டதாகக் கூறுகிறான்.

“…இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்” (அல-குர்ஆன் 5:3)

2) அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டியதன் அவசியம்: -

முஸ்லிமான ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் விழிமுறைகளையும் தம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் பின்பற்றி வாழ வேண்டும் எனவும் அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் எவ்வித கூடுதல் அல்லது குறைவோ செய்யக் கூடாது எனவும் அல்குர்ஆன் நமக்கு வலியுறுத்துகிறது.

அல்லாஹ் கூறுகிறான்: -

(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 3:31)

(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (அல்-குர்ஆன் 7:3)

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். . (அல்-குர்ஆன் 6:153)

நபி (ஸல்) அவர்கள் ஓரு சொற்பொழிவில் கண்கள் சிவக்க குரலை உயர்த்தி கூறினார்கள்:

"...செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்." அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி

எனவே சகோதர, சகோதரிகளே மேற்கூறிய வசனங்கள் மற்றும் நபிமொழிகள் அனைத்தும் அல்லாஹ்வின் வேதத்தையும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களையுமே நாம் பின்பற்றி வாழ வலியுறுத்துவதை அறிகிறோம்.

3) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட ஒரு புதுமையான விஷயமே!

நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பிறகு இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட பல வழிகேடுகளில், புதுமைகளில் மீலாது விழா என்றழைக்கபடக் கூடிய நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்களாகும். இந்த தினத்தை பல்வேறு பிரிவினர் பல்வேறு விதமாகக் கொண்டாடுகின்றனர்.

இன்றைய காலக்கட்டத்தில் தமிழகத்தில் பரவலாக காணப்படும் இந்த மீலாது விழாக்கொண்டாங்களும் அவற்றின் போதும் நடைபெறும் அனாச்சாரங்களும்: -

- ரபியுல் அவ்வல் பிறை 12 அல்லது அந்த மாதம் முழுவதும் விழா நடத்துகின்றனர்.

- தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் வீடுகளையும், தெருக்களையும் அலங்கரித்து கிறிஸ்தவர்கள் தங்களின் பண்டிகைகளின் போது தொங்கவிடும் நட்சத்திர விளக்குகளைப் போல் தொங்கவிடுகின்றனர்.

- நபி (ஸல்) அவர்களைப் புகழ்வதாகக் கூறிக்கொண்டு கூலிக்கு ஆட்களை அமர்த்தி ஷிர்க் நிறைந்த மவ்லிது பாடல்களை பாடவிட்டு அவர்களுக்கும் அங்கு வந்திருக்கின்ற அனைவருக்கும் சீரணி மற்றும் நெய் சோறு வழங்குகின்றனர்.

- மார்க்கம் அனுமதிக்காத வகையில் கூச்சலும் மேளதாளமும் முழங்க பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் போக்குவரத்துக்களை வேற்றுப்பாதைகளில் திருப்பிவிட்டு சாலைகளை அடைத்துக்கொண்டு ஊர்வலம் செல்கின்றனர்.

- அவ்வாறு உர்வலம் செல்லும் போது சில சமூக விரோதிகள் அதன் மூலம் வகுப்புக் கலவரத்தைத் தூண்டி முஸ்லிம்களின் உயிர் மற்றும் பொருட்களுக்கு சேதத்தை ஏற்படுத்துவது.

- பெரும் பொருட்செலவில் பிரமாண்டமான விழா மேடைகளையும் பந்தல்களையும் அமைத்து இறை நிராகரிப்பாளர்களை அழைத்து அந்த மேடையில் அமரவைத்து அவர்களை கவுரவித்து அவர்களை முஸ்லிம்களுக்கு உரையாற்ற வைப்பது.

- சிலர் அந்த நாட்களில் நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறி புகழ்ந்து அவர்களிடம் நேரடியாக உதவி கோருவது.

இவ்வாறு இந்த அனாச்சாரங்களின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். எந்த வகையில் இந்த நாட்களை; கொண்டாடினாலும் எந்த நோக்கத்திற்காக கொண்டாடினாலும் இவைகள் அனைத்தும் இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட நூதன செயல்களேயாகும். இவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்புமில்லாதது மட்டுமல்லாமல் இவைகள் அனைத்துமே நிராகரிக்கப்படவேண்டியவைகளாகும்.

4) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா - சிறிய வரலாற்றுக் கண்ணோட்டம்: -

நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது நபி (ஸல்) அவர்களால் சிறந்த சமுதாயம் என போற்றப்பட்ட சஹாபாக்கள், தாயீன்கள் மற்றும் தபஅ தாயீன்களின் காலத்திலோ நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாட்கள் கொண்டாடப்பட வில்லை. இஸ்லாத்தின் உண்மையான கொள்கைகளைச் சிதைப்பதற்காக முதன் முதலில் 'ஷியாக்களின் பாத்திமிட்' ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது தான் இந்த மீலாது விழாக்கள். உண்மையான முஃமின்களுக்கும் ஷியாக்களின் இந்த நூதன கண்டுபிடிப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

வரலாற்று ஆசிரியர் இப்னு கல்கான் என்பவர் கூறுகிறார்: -

ஃபாத்திமிட் ஆட்சியாளர்களுக்குப் பிறகு இதை விமர்சையாக முதன் முதலில் கொண்டாடியவர் ஈராக்கில் இர்பில் என்ற பகுதியை கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் அல்லது ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆட்சி செய்த மன்னர் அல்-முஜஃப்பார் அபூ சயீத் கவ்கபூரி என்பவராவார்.

மற்றொரு ஆய்வாளர் அபூ ஷாமா என்பவர் கூறுகிறார்: -

ஈராக்கின் மோசுல் நகரில் ஷெய்ஹூ உமர் இப்னு முஹம்மது அல்-மலா என்பவர் தான் முதன் முதலில் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடினர். பின்னர் இர்பில் நகரின் ஆட்சியாளர்களும் மற்றவர்களும் அதைப் பின்பற்றினர்.

அல்-ஹாபிஸ் இப்னு கதீர் அவர்கள் தன்னுடைய 'அல்-பிதாயா வல் நிகாயா' என்ற நூலில் மன்னர் அபூ சயீத் கவ்கபூரி அவர்களின் சரிதையைப் பற்றிக் குறிப்பிடும் போது பின்வருமாறு கூறுகிறார்கள்: -

'அவர் ரபியுல் அவ்வல் மாதத்தில் மிகப்பெரிய விழாவை ஏற்பாடு செய்வார், முஜஃப்பரின் விருந்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் கூறினர், “அவர் அந்த விழாவில் கலந்துக் கொண்டவர்களுக்கு தீயில் சுடப்பட்ட ஐந்தாயிரம் ஆடுகளின் தலைகளையும் (5000 ), பத்தாயிரம் கோழிகளையும், ஆயிரம் பெரிய பாத்திரங்களில் உணவுகளையும், முப்பது தட்டுகளில் இனிப்பு வகைகளையும் வழங்கியதாக கூறினர். மேலும் அந்த விழாக்களில் கலந்துக் கொண்ட சூஃபியாக்கள் லுகர் முதல் மறுநாள் விடியற்காலை பஜ்ர் வரையிலும் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்ததாகவும் மன்னரும் அந்த ஆட்டம் பாட்டத்தில் கலந்துக் கொண்டதாகவும் கூறினர்”

வரலாற்று ஆசிரியர் இப்னு கல்தான் தன்னுடைய நூல் 'வாஃபியாத் அல்-அய்யான்' என்னும் நூலில் கூறுகிறார்: -

'ஸபர் மாதத்தின் ஆரம்பத்திலேயே அவர்கள் கோபுரங்களின் உச்சிகளை அலங்கரிக்கத் துவங்கிவிடுவர். கோபுரங்களின் உச்சியில் பாடகர்களும், இசையமைப்பவர்களும் மற்றும் நடனமாடுபவர்களும் அமர்ந்து ஆட்டம்பாட்டத்திலிருப்பர். ஒரு போபுரத்தைக் கூட இவ்வாறு அலங்கரிக்காமல் விடுவதில்லை. மக்கள் அந்த நாட்களில் வேலைக்குச் செல்லாமல் அந்த வேடிக்கைகளைக் கண்டு களித்துக் கொண்டிருப்பார்கள்” (நன்றி : www.islam-qa.com)

இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா ஷியாக்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இஸ்லாத்தில் ஊடுருவ ஆரம்பித்தது. மார்க்கம் அறியா பாமர மக்களும் இவ்வாறு கொண்டாடுவது புனிதம் என்று கருதலாயினர். இதற்கு அல்லாஹ்வின் வேதத்திலோ அல்லது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலோ எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. எனவே இது இஸ்லாத்தில் தோற்றுவிக்கப்பட்ட பித்அத் என்னும் நூதன செயலேயாகும்.

ஒவ்வொரு உண்மையான முஸ்லிமும் இதிலிருந்து தவிர்ந்துக் கொள்வதோடு அல்லாமல் இத்தகைய தீய செயல்களை களைவதற்கு பாடுபட வேண்டும்.

5) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாக்களை ஏன் கொண்டாடக் கூடாது?

நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றது.

a) நபி (ஸல்) அவர்களோ அல்லது அவர்களைப் பின்தொடர்ந்த நேர்வழி பெற்ற கலிபாக்களோ அல்லது சஹாபாக்களோ அல்லது அவர்களுக்குப் பின் வந்த இரண்டு சிறந்த சமுதாயங்களோ நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாக்களைக் கொண்டாடவில்லை: -

ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

"என்னுடைய வழிமுறைகளையும் நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழிமுறைகளையும் வலுவாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். இவைகளை உங்களின் முன்பற்களுக்கு இடையில் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். (இஸ்லாத்தில்) நுழைக்கப்படும் புதிய அமல்களைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள். ஒவ்வொரு புதிய அமலும் பித்அத் ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும். ஓவ்வொரு வழிகேடும் நரகத்திற்குரியவை" என்று கூறினார்கள். (ஸஹீஹ் அல்-ஜாமிஅஸ் ஸகீர். ஹதீஸ் எண். 2549)

b) நாம் முன்னர் கூறியது போன்று இவ்வகையான விழாக்கள் ஷியாக்களான 'பாத்திமிட்' வம்ச மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்டு இஸ்லாத்தில் நுழைக்கப்பட்டது: -

யாரேனும் ஒருவர் நான் அல்லாஹ்விடம் நெருக்கமாகுவதற்காக நபி (ஸல்) அவர்களோ அல்லது அவர்களைப் பின்பற்றிய நபித்தோழர்களோ செய்யாத இச்செயல்களைச் செய்கிறேன் என்று கூறினால் அவர் அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் மார்க்கத்தை முழுமையாக எங்களுக்குப் போதிக்க வில்லை, அதனால் மிகச்சிறந்த இந்தச் செயலை நான் செய்கிறேன் என்று கூறி அல்லாஹ் இறக்கியருளிய

'இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்கா நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்' (அல் குர்ஆன் 5:3)

என்ற வசனத்தை நிராகரித்தது போலாகும். (இவ்வாறு எண்ணம் கொள்வதிலிருந்தும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாகவும்.) ஏனென்றால் இவர் அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ போதிக்காத ஒன்றை, பிறர் மூலம் இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட ஒன்றை மார்க்கம் என்றும் அதை செய்வதால் நன்மை கிடைக்கும் என்று கருதி செயல்படுகிறார்

c) நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவது கிறிஸதவர்களின் செயல்களைப் பின்பற்றுவது போலாகும்: -

கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களின் பிறந்த நாள் என்று கருதி ஒரு தினத்தைக் கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவர்களைப் பின்பற்றுவது என்பது மார்க்கத்தில் முழுவதுமாக தடுக்கப்பட்ட (ஹராம்) ஒன்றாகும். ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் இறை நிராகரிப்பாளர்களைப் பின்பற்றக் கூடாது என்றும் நாம் அவர்களிலிருந்து வேறுபட்டு இருக்க வேண்டும் எனவும் நமக்குத் வலியுறுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

'யார் பிறருக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே! ஆதாரம் அபூதாவுத்.

மேலும் கூறினார்கள்

'இறை நிராகரிப்பாளர்களிலிருந்து வேறுபட்டு இருங்கள்' ஆதாரம் முஸ்லிம்.

எனவே நாம் இறைநிராகரிப்பாளர்களின் செயல்களைக் குறிப்பாக வணக்க வழிபாடுகளைப் பின்பற்றி நடக்கக் கூடாது.

d) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாக்களில் இஸ்லாம் அனுமதிக்காத வீண் ஆடம்பரச் செலவுகளும் கேளிக்கைகளும் நடைபெறுகிறது: -

மீலாது விழாக்கள் என்ற பெயரில் தமிழகத்தில் நடைபெறும் கூட்டங்களில் வீண் ஆடம்பரத்திற்காக பெரும் பொருட்செலவில் பிரமாண்டமான விழா பந்தல் அமைத்து அதில் தோரணம் கட்டி அழகு படுத்துகின்றனர். மேலும் தஞ்சை,திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களில் இவ்வகை விழாக்கள் நடைபெறும் போது கோயில் திருவிழாக்கள் தோற்றுவிடும் அளவிற்கு கடைகள் அமைக்கப்பட்டு ஆண் பெண்கள் குழுமுகின்றனர். அது பல்வேறு அனாச்சாரங்களுக்கு வழி வகுப்பதோடல்லாமல் இஸ்லாத்திற்கு முரணாகவும் உள்ளது.

e) இவ்வகை விழாக்களில் ஷிர்க் நிறைந்த மவ்லிது மற்றும் புர்தா போன்ற அரபி பாடல்களை பாடுகின்றனர்: -

இவ்விழாக்களில் கஸீதத்துல் புர்தா, சுப்ஹான மவ்லிது போன்ற அரபிப் பாடல்களை இன்றைய கால சினிமாப்பாடல்களின் இராகத்திற்கேற்ப மெட்டு அமைத்து பாடுகின்றனர். இவ்வகை பாடல்களில் மூலம் நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்து அவர்களை அழைத்து உதவியும் தேடுகின்றனர். இன்னும் சில ஊர்களில் ஒரு படி மேலே சென்று விழாவிற்கு வந்திருக்கும் அனைவரும் எழுந்து நின்று சுப்ஹான மவ்லிதில் வரும் 'யா நபி' பாடலை பாடுகின்றனர். இவ்வாறு பாடும்போது நபி (ஸல்) அவர்கள் அங்கே ஆஜர் ஆகிறார்கள் என்றும் நம்பிக்கைக் கொள்கின்றனர். இது வெளிப்படையான ஷிர்க் என்னும் இணைவைத்தவலாகும். நபி (ஸல்) அவர்கள் தம்மை வரம்பு மீறிப் புகழ்வது குறித்து எச்சரித்திருக்கிறார்கள்.

'கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸா (அலை) அவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்ததைப் போல் (என்னைப்) புகழாதீர்கள். நான் அவனுடைய அடிமையே. எனவே அல்லாஹ்வின் அடிமையும் அவனது தூதரும் ஆவார்கள் என்று கூறுங்கள்.” ஆதாரம் : புகாரி

இவ்வாறாக பல்வேறு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். விரிவுக்கு அஞ்சி இங்கே அனைத்தையும் குறிப்பிடவில்லை.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Mar 5, 2008

உயிருள்ள எலும்புக் கூடு!

சிந்தனைக் கவிதை - எழுதியவர்: அபூ அரீஜ்

பஞ்சம், நான் நாளாந்தம் கண்டு களிக்கும் சினிமா!
பட்டினி, நான் சந்திக்கவில்லை - அங்கோ
பலரின் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கின்றது!

பஞ்சமும் பட்டினியும் பட்டிமன்றம் நடாத்த
பரிதவித்த பொழுதுகள் வேடிக்கை பார்க்கின்றன!
அங்கே வெற்றி எப்போதும் மரணத்துக்குத்தான்!

ஒட்டிய வயிறும் உப்பிய தேகமும்
அவர்களோடு ஒட்டிப்பிறந்த வாழ்க்கைச் சரித்திரம்!
உப்பிய தேகம் தான் அவர்களது வாழ்க்கை வரலாறு!

ஒரு தாகித்த குரல்,
வாய்க்கு ருசியாய் எனக்குத் தேவையில்லை
வகைவகையாய் ஏதும் கேட்டிடவில்லை!
அதோ -
ஒரு சொட்டுக் கஞ்சிக்காய் உயிர் விடும் ஊனங்கள்!

எலும்பும் தோலும் தான் அவன் தேகம்!
உலகம் அவனைத் துறந்தது போல்
சதையும் சட்டென்று அவனை விலகிக் கொண்டது!

பசிக் கொடுமை அவன் உடலை அரிக்க அரிக்க
நடமாடும் குச்சியாய் அவன் தேய்ந்து போனான்!
அந்தோ சரிந்து விடும் தோரணையில் அவன் பொழுதுகள் நகர்கின்றன!

தாளாத பசி சதையைத் திண்றொழிக்க
எலும்பாவது எஞ்சட்டுமே என பாவப்பட்டு
எலும்பை மூடிக் கொண்டது தோல்!

ஆறடி மனிதன் அவன்
அறைக்கிலோ மாமிசம் கூட தேரா தேகமது!
உயிருள்ள எலும்புக் கூடு!!

சுடுமணலில் காய்ந்த கருவாடாய்
உப்பிக் கிடக்கின்றது அவன் தேகம்!
கொசுக்குக் கூட குத்துவதற்கு இடமில்லை!

பஞ்சம் துரத்தித் துரத்தி அவனைக் கொல்ல
பட்டினி பாய்ந்து பாய்ந்து அவனைக் குதறிற்று!
பசி வெள்ளம் அவனை அடித்துச் செல்கிறது
பரிதாபமாய் அவனுயிர் போக –
நம் சமூகமோ, கண்டும் காணாதது போல்..!!

உன் சகோதரனின் அவலக் குரல்!

அண்ணா..! தம்பி..! சகோதரா..!
கேட்கிறதா அவன் அவலக் குரல்?
அவனால் முணகத்தான் முடியும்.
பசிக்கொடுமை அவன் குரலையும் கொஞ்சம் கொஞ்சமாய்
குடித்து விட்டிருந்தது!

அண்ணா..!
என் அடிவயிராவது ஆறுதலடையட்டும்
அடிச் சட்டியின் தீய்ந்து போன சோறுகளாவது கிடைக்காதா?
- இது அவன் முணகலின் தேடல்!!

தம்பி..!
என் ஈரமற்றுப் போன நாக்கினை நனைத்துக் கொள்ள
எஞ்சிய எச்சில்களாவது கிடைக்காதா?
- இது அவன் விடும் பெரு மூச்சின் ஓசை!!

சகோதரா..!
ஒரு வாய்க் கஞ்சி ஊற்றினால்
ஒரு வாரம் எனக்குத் தெம்பூரும்.
நீ உண்ட தட்டின் ஓரங்களில் ஒட்டியிருக்கும்
உணவையாவது பொறுக்கித் திண்ண எனக்கு வழி செய்வாயா?
- இது அவன் எதிர் பார்ப்பின் பாஷை!!

நான் உயிருள்ளதோர் எலும்புக் கூடு!
வாழ்க்கையின் எந்த சுகந்தமும் எனை முத்தமிட்டது கிடையாது!

என் வாழ்க்கையில் வசந்தத்தை - நான்
கனவில் கூட கண்டது கிடையாது!

எல்லோருக்கும் போல் எனக்கும் ஆசையுண்டு
ஆனால் - எட்டாக் கனிக்கு கொட்டாவி விட்டடென்ன பயன்!

என் வாழ்க்கையே கானல் நீராய் ஆனபோது
எதிர்பார்ப்புக்கள் என்பதும் கானல் நீரே!

ஆனால் -
ஒன்றை மட்டும் சொல்கிறேன்
உன் ஸகாத்தும், ஸதகாவும்
உன்னிடம் தேங்கிக் கிடக்கும் எம் எதிர்காலங்கள்!

உன் உதவியும், ஒத்தாசையும்
உயிர்வாழ நாம் கேட்கும் உயிர்ப்பிச்சை!

நீ - எமக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
கரையற்ற குளமாய்த் தேங்கிக் கிடக்கின்றன.

என் உயிர் பிரியு முன் உதவிக் கரம் கொடு!
உன் உயிர் பிரியு முன் உன் கடமையைச் செய்!!

Mar 4, 2008

பாவமன்னிப்பு தேடுவது எவ்வாறு?

ஒருவர் எவ்வளவு தான் பாவங்கள் செய்திருப்பின், அவர் மனம் திருந்தி அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவராக தூய மனதுடன் அவனிடம் பாவமன்னிப்பு கோருவாராயின், அந்த முஃமின் ஷிர்க் போன்ற படுபயங்கரமான பாவங்களைச் செய்திருப்பினும் அவருடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவதாக அல்லாஹ் தன் திருமறையிலே கூறியிருக்கிறான்.

அதுமட்டுமல்லாமல் அளவற்ற அருளாளனும் தன்னுடைய படைப்பினங்களின் மேல் கொண்டுள்ள அளவில்லாத கருணையினாலும் அந்த முஃமினுடைய பாவங்களை மன்னிப்பதோடு அல்லாமல் அவர் செய்த தீய செயல்களை நற்செயல்களாக மாற்றி விடுவிடுகிறான்.

அளவற்ற அன்புடையயோனாகிய அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருவதற்கான நிபந்தனைகள்: -

1) மனத் தூய்மையுடன் பாவமன்னிப்பு கோரவேண்டும்

2) செய்துக் கொண்டிருக்கின்ற பாவமான செயல்களை உடனே நிறுத்த வேண்டும்

3) மீண்டும் அந்தப் பாவமான செயல்களின் பால் திரும்பக் கூடாது

4) தாம் செய்த பாவமான செயல்களை நினைத்து கைசேதப்படவேண்டும்

5) ஒரு அடியான் மற்றொரு அடியானுக்குச் செய்த பாவங்களுக்காக முதலில் அந்த அடியானிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

6) மரணத்தருவாயில் உயிர் தொண்டைக் குழியை அடைவதற்கு முன்னர் பாவமன்னிப்பு கோரவேண்டும்

7) சூரியன் மேற்கில் உதயமாவதற்கு முன்னர் பாவமன்னிப்பு கோரவேண்டும்

வரம்பு மீறி தீங்கிழைத்த பாவிகளையும் அல்லாஹ் மன்னிக்கிறான்: -

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 39, வசனங்கள் 53-54 ல் கூறுகிறான்: -

39:53 'என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்' (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

39:54 ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.

செய்த தவறுக்காக உடனே அல்லாஹ்வை நினைத்து, வருந்தி பாவமன்னிப்பு கோரினால் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களுக்கு சுவனபதியை பரிசாக தருவான்: -

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 3, வசனங்கள் 135-136 ல் கூறுகிறான்: -

3:135 தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.

3:136 அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும்; சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது.

தவ்பா செய்து, ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்பவருடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றி விடுகிறான்: -

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 25, வசனங்கள் 63-71 ல் கூறுகிறான்: -

25:63 இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் 'ஸலாம்' (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.

25:64 இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.

25:65 'எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்' என்று கூறுவார்கள்.

25:66 நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.

25:67 இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.

25:68 அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.

25:69 கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.

25:70 ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.

25:71 இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியவராவார்.

அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பாவத்தை விட்டும் திருந்திக் கொண்டால் அல்லாஹ் மன்னிக்கிறான்: -

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 6, வசனம் 54 ல் கூறுகிறான்: -

6:54 நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், 'ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)' என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.

பாவ மன்னிப்பு கோருபவர் பாவமே செய்யாதவரைப் போலாவார்: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

'யார் தாம் செய்த பாவத்திற்காக பாவமன்னிப்பு கோருகிறாரோ அவர் பாவமே செய்யாதவரைப் போலாவார்' (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், ஆதாரம்: திர்மிதி)

உயிர் தொண்டைக் குழியை அடைவதற்கு முன் பாவமன்னிப்பு கோரவேண்டும்: -

'அல்லாஹ் தன்னுடைய அடியானுடைய பாவமன்னிப்பை மரணத்தருவாயில் அவர் உயிர் விடும் வரைக்கும் ஏற்றுக் கொள்கிறான்' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர், ஆதாரம்: திர்மிதி)

பாவமன்னிப்புக் கோருவதன் அவசியம்: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

"அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்; அவன் பால் திரும்புங்கள்; என்னைப் பாருங்கள்! நான் ஒரு நாளைக்கு நூறு தடவை பாவ மன்னிப்பு கோரி இறைஞ்சுகிறேன்" அறிவிப்பவர்: அகர் பின் யஸார்(ரலி) நூல்: முஸ்லிம்

முன் பின் பாவங்கள் மன்னிக்கபட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களே அல்லாஹ்விடம் தினமும் நூறு முறை பாவமன்னிப்பு கோரினார்கள் என்றால் நாம் எவ்வாறு கோரவேண்டும் என்பதைச் சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல்குர்ஆன் 2:286)

Mar 3, 2008

நல்ல மனைவியரின் குணங்கள்

முத்துப்பேட்டை - அபூ ஆஃப்ரின்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நற்குணம் படைத்த மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதினை பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் பார்த்தால் நமக்கு பல விஷயங்கள் புலப்படும்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்,

'நிரோகரிப்போருக்கு, (நபி) நூஹீடைய மனைவியையும், (நபி) லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாகச் கூறுகிறான். அவ்விருவரும் நமது நல்லடியார்களில் உள்ள இரு நல்லடியாருக்குக்கீழ் (மனைவியராக) இருந்தனர், பின்னர் அவ்விருவரும் (தங்கள் கணவர்களான) அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர், ஆகவே (தம் மனைவியரான), அவர்களிருவரை விட்டும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து எதையும் (நபிகளாகிய) அவ்விருவராலும் தடுக்க முடிய வில்லை, (இவர்கள்) துரோகம் செய்ததன் காரணமாக, இவர்களிடம்), ' நரக நெருப்பில் நுழைவோர்களுடன் நீங்களும் நழைந்து கொள்ளுங்கள்' என்று கூறப்பட்டது.' திருக்;குர்ஆன் 66 –10

மேலும் அல்லாஹ் குறிப்பிடும் போது, எகிப்து நாட்டை ஆட்சி செய்து, தன்னுடைய அதிகாரங்களால் பலருக்கு மிகவும் கொடுமைகளை புரிந்த பிர்அவ்னின் மனைவியின் குணத்தையும் பற்றியும் சொல்கிறான்,

மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் 'இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக' என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.' திருக்;குர்ஆன் 66 –11

நல்ல மனைவியானவள் இரத்த பந்த உறவு முறைகளை முறிக்காமலும், கணவருக்கு கீழ்ப்படிந்து நடக்க கூடியவளாகவும் இருக்க வேண்டும். தன்னுடைய பெற்றோர்களிடமும், மற்றும் குழந்தைகளிடமும் எந்த மாதிரியாக நடந்துக்கொள்ள வேண்டும். வெளி இடங்களிலும், வெளி நபர்களிடமும், பொது இடங்களிலும் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ற மனைவிகளுக்குரிய பல பங்குகளை பற்றி திருமறையானது பல இடங்களில் குறிப்பிடுகிறது.

ஒரு மனிதன் எவ்வளவு தான் நன்னடத்தையுள்ளவனாக இருந்தாலும் சரிதான். அவனுடைய மனைவி நன்னடத்தை உடையவளாக இல்லையெனில், அவனால் ஒரு போதும் இவ்வுலகில் நிம்மதியுடனும், மன அமைதியுடனும் வாழ்ந்திட முடியாது.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

'உலகின் அனைத்துப் பொருள்களும் அனுபவிப்பதற்காக உள்ளவைதாம்! அவற்றில் சிறந்த பொருள் நன்னடத்தை உள்ள மனைவி!' அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) ஆதாரம் : முஸ்லிம், மிஷ்காத்

குடும்பம் என்பது புரிந்துணர்வின் அடிப்படையிலேயே தான் இருக்க வேண்டும். இந்த புரிந்துணர்வின் அவசியத்தினை மனைவிமார்கள் நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் புகுந்த வீடுகளில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும். ஒரு சில குடும்பங்களில் எந்த புரிந்துணர்வும் இல்லாத பட்சத்தில் தான் சிறு பிரச்சனைகள் பூதகாரமாக மாறி விடுகிறது. பெண்களை ஏக இறைவன் பலஹீனமாக படைத்து உள்ளான். ஆகையால் தான் அவர்கள் பிரச்சனைகளை எளிதில் சமாளிக்க முடியாமல் சோர்ந்து போய் கவலையும் அடைகிறார்கள். ஒவ்வொரு இல்லங்களிலும் ஏதேனும் பிரச்சனை எப்படியாவது வந்தே தீரும் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்ன முடிவு என்பதினை பற்றி கணவன் மற்றும் மனைவி கலந்து ஆலாசிக்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்தினை பற்றியும் மனம் திறந்து பேச வேண்டும்; என்பதினை இருவரும் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் குடும்பத்தில் பிரச்சனை அதிகளவில் உருவாகி கணவன் மனைவி பிரிவினைக்கும் காரணமாக அது அமைந்து விடும்.

'இன்னும் (கணவன் மனைவியாகிய) இருவருக்குள், (பிணக்குண்டாகி) பிளவை நீங்கள் அஞ்சினால், அப்போது அவன் குடும்பத்தாரில் ஒரு மத்தியஸ்தரையும், அவள் குடும்பத்தாரில் ஒரு மத்தியஸ்தரையும் நீங்கள் (ஏற்படுத்தி) அனுப்புங்கள், அவ்விருவரும் (இவர்களுக்குள்) சமாதானத்தை உண்டு பண்ண நாடினால், அல்லாஹ் இவ்விருவரையும் ஒற்றுமையாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ், (யாவையும்) தெரிந்தவனாக,நன்கு உணர்கிறவனாக, இருக்கின்றான்.' திருக்குர்ஆன் 4:35

புகுந்த வீடு, புதிய சூழ்நிலை, மாமியார், நாத்தனார் மற்றும் புதிய முகங்கள் என்று புதுமையாக இருக்கும் திருமணம் புரிந்த புதிதில் மனைவிமார்களுக்கு. எல்லாவற்றிற்கு மனம் பொறுத்து போனால் எல்லாம் நன்மையே நடக்கும் என்பதினை எண்ணிக்கொண்டால் குடும்பம் ஒளிர வாய்ப்புண்டு. பெண்ணின் இதயம் மிக மிக மென்மையானது. ஆனால் அது ஒரு பெரும் கடல். அதன் உள்ளே அன்பு, பண்பு, அமைதி, அழகு, கருணை, காதல், பாசம் இப்படியாக எண்ணற்ற நன் முத்துக்களைத் தேடி தேடி எடுக்கலாம். அது எடுப்பவர்களின் திறமையை பொறுத்தே அமைந்திடும். குடும்பத்தில் கணவன் ஒரு சிறு துளி அன்பு செலுத்தினாலும், அவள் குடும்பத்தினை நல்ல மாதிரியாக கொண்டு செல்லுவாள். மனைவியானவள் குடும்பத்தில் உள்ள எல்லோருடைய மனங்களையும் புரிந்து அவர்களை எப்போதும் சந்தோஷமாக குளிர வைக்க தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.

'(நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்து, உங்களுக்கிடையில் அன்பையும், கிருபையையும் ஆக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்தார்க்கு இதில் நிச்சயமாக(ப் பல) அத்தாட்சிகளிருக்கின்றன.' திருக்குர்ஆன் 30: 21

குடும்பம் நல்ல மாதிரியாக இருக்க வேண்டுமானால், புரிந்துணர்வுடன் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் மனைவிக்கு இருக்குமாயின் அந்தக் குடும்பத்தில் காலை இளந்தென்றல் எந்நேரமும் வீசிக்கொண்டே இருக்கும் என்பதை சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லேயே. ஒரு பெண் எல்லா விதத்திலும் குறையற்றவளாக இருப்பது சாத்தியமானதல்ல. அவளிடம் ஏதேனும் குறையோ பலவீனமோ இருந்தாலும் அதே நேரத்தில் அவளிடம் சில நல்ல அம்சங்களும் இருக்கலாம். ஆகையால் ஒரு நல்ல கணவன் மனைவியின் இருபுறங்களையும் பார்த்திடல் வேண்டும்.

மனைவியானவள் தன்னுடைய குழந்தைகளுக்கு மார்க்க கல்வியின் அவசியத்தினை பற்றி நாள் தோறும் சொல்லி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். உலகக் கல்வியுடன் சேர்ந்து மார்க்க கல்வியினையும் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்தால் அந்த பிள்ளைகள் இரு உலகிலும் வெற்றியடைய வாய்ப்புண்டு. மார்க்கப்பற்றுள்ள பிள்ளைகளை உருவாக்க நம்மால் முடியும் என்பதினை ஒவ்வொரு மனைவியும் தன்னுடைய வாழ்க்கையின் குறிக்கோளாக வைத்து கொள்ள வேண்டும். இன்றைய காலக்கட்டங்கள் பிள்ளைகள் வீணாக சுற்றி திரிய கூடிய சூழ்நிலைகளால் சூழப்பட்டு உள்ளது. ஆகையால் நாம் தான் சந்ததிகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதினை தாயாக மாறக்கூடிய மனைவிகள் புரிந்துக்கொள்ள வேண்டும். இவ்வுலகம் வீண் விரயமும் மற்றும் ஆடம்பரமும் கலந்தே உள்ளதாக இருக்கிறது. ஆகையால் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் என்பதினை மனைவிமார்கள் தெரிந்து கொண்டு பிள்ளைகளை நன் முறையில் வளர்க்க வேண்டும்.

ஒவ்வொரு பெண்களும் அவர்கள் வெளியே செல்லும் போது தலைக்குனிந்து செல்லக்கூடிய பெண்மணியாகவும் மற்றும் தலை முந்தாணைகள் சரியாக இருக்கின்றாதா என்பதனை அடிக்கடி பார்க்கக்கூடிய பெண்மணிகளாகவும்; இருக்க வேண்டும். வெளி நபர்கள் நம்மை பார்ப்பார்கள் என்பதனை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றும் வாசனை திரவியங்கள் அதிகளவில் பூசக்கூடாது. ஏனெனில் வெளி நபர்கள் கவனம் நம் மீது திரும்புவதற்கு இது ஒரு காரணமாக நாமே அமைத்துத் தரக்கூடாது. ஒப்பனை மற்றும் அலங்காரங்கள் நம்முடைய கணவனுக்கு மட்டுமே உரியது. பிறருக்காக அல்ல என்பதினையும் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றும் வெளியே செல்லும் போது கணவனின் அனுமதியை பெற்று தான் செல்ல வேண்டும். கணவனின் அனுமதி இல்லாமல் செல்லும் மனைவிகளை அவர்கள் செல்லும் வழியெங்கும் மலக்குமார்கள் சபிக்கிறார்கள். வெளி நபர்கள் முன்பாக வருவதில் மனைவிகள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதனையும் இந்த குர்ஆன் வசனம் தெளிவாக நமக்கு காட்டுகிறது.

'(நபியுடைய மனைவியர்) தங்களுடைய தந்தைகள் (முன்பாகவும்), தங்கள் ஆண் மக்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரர்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரர்களின் புதல்வர்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரிகளின் புதல்வர்கள் (முன்பாகவும்), தங்கள் பெண்கள் (முன்பாகவும்), தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களி(ன் முன்பாக வருவதி)லும் அவர்களின் மீது குற்றமில்லை. மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:55)

Mar 2, 2008

இது உங்களுக்காக.. (சுயபரிசோதனை)

தொகுப்பு: முத்துப்பேட்டை - அபூ ஆஃப்ரின்;

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனின் திருப்பெயரால்..

'நிச்சயமாக உங்கள் மீது பாதுகாவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
அவர்கள் கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.' (திருக்குர்ஆன் 82:10,11,12)


அன்பின் சகோதர, சகோதரிகளே..!

நாளை (இன்ஷா அல்லாஹ்..) மறுமையில் அல்லாஹ்விடத்தில் உங்கள் கணக்குகளை ஒப்படைக்கும் முன்பாக உங்களை நீங்களே பரிசோதித்துக்கொள்ளுங்கள்.

1. இன்று, ஐவேளைக்கால தொழுகைகளை ஜமாத்தோடு நிறைவேற்றினீர்களா?
2. உபரியான (சுன்னத், நபில்) வணக்கங்களை நிறைவேற்றினீர்களா?
3. இன்று, காலையில் விழித்தது முதல் இரவு தூங்கும் வரை ரசூல் (ஸல்) அவர்கள் கற்று தந்த திக்ரு, துஆக்களை பொருளுணர்ந்து முடிந்த வரை ஓதினீர்களா?
4. இன்று, திருக்குர்ஆனில் ஏதேனும் ஐந்து வசனங்களையாவது பொருளுணர்ந்து படித்தீர்களா?
5. முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்களே ஒரு நாளைக்கு 100 முறையாவது பாவ மன்னிப்பு கேட்பார்கள். இன்று காலையில் இருந்து நீங்கள் எத்தனை முறை பாவ மன்னிப்பு கோரினீர்கள்?
6. இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் எதிரிகள் நேர் வழி அடைய அல்லது அவர்களது சூழ்ச்சிகளில் இருந்து முஸ்லிம் சமுதாயம் பாதுகாக்கப்பட அல்லாஹ்விடம் பிராத்தனை புரிந்தீர்களா?
7. இன்று, உங்களைச்சுற்றியுள்ள மாற்று மதச்சகோதரர்களிடமும், முஸ்லிமாக இருந்தே இஸ்லாத்தை அறியாமல் இருக்கும் சகோதரர்களிடமும் இஸ்லாத்தின் ஏதேனும் ஒரு செய்தியினையாவது எத்தி வைத்தீர்களா?

8. இன்று, இஸ்லாத்தை நிலை நிறுத்த உலகமெங்கும் போராடிக் கொண்டிருக்கும் உங்கள் சகோதர, சகோதரிகளுக்காக பிராத்தனை புரிந்தீர்களா?
9. இன்று, காலை முதல் இரவு வரை யாரையாவது மனம் புண்படும் படி பேசி, பின்னர் சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்டீர்களா?
10. இன்று, உங்கள் நாவை வீணான பேச்சு, பொய், புறம், அவதூறு ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக் கொண்டீர்களா?
11. இன்று, உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை பேணிப் பாதுகாத்தீர்களா?
12. இன்று, நீங்கள் பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றினீர்களா?
13. இன்று, தீயப் பார்வை பார்ப்பதை விட்டும், தீயதைக் கேட்பதை விட்டும் உங்கள் கண்களையும், காதுகளையும் பாதுகாத்துக் கொண்டீர்களா?
14. இன்று, உங்கள் செல்வத்திலிருந்து ஒரு திர்ஹமாவது இறைவழியில் செலவழித்தீர்களா?
15. இன்று, தீமையான காரியங்கள், இழப்புகள் ஏற்பட்ட போது பொறுமையைக் கடைப்பிடித்து அல்லாஹ்வையே முழுமையாக சார்ந்தீர்களா?
16. இன்று, நன்மையான காரியங்கள் நிகழ்ந்த போது மறக்காமல் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அவனைப் புகழ்ந்தீர்களா?
17. குறிப்பாக, எல்லாவற்றுக்கும் மேலாக இன்று காலையில் இருந்து நீங்கள் செய்த எல்லா நல் அமல்களையும் அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் எதிர் பார்த்து செய்தீர்களா?

'இறை நம்பிக்கைக் கொண்டவர்களே! (வழி தவறி விடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், நீங்கள் நேர் வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான்' (திருக்குர்ஆன் 5: 105)