Link : பொருளடக்கம் & Part 1
Part 2: -
6) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுபவர்களின் வாதங்கள்: -
இந்த பித்அத்களைப் புரிவோர் தங்களுக்கு ஆதாரமாக பலவகையான வாதங்களை முன் வைக்கின்றனர். இவைகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற மிக பல வீனமானவைகளாகும். அவைகளை சற்று ஆராய்வோம்.: -
6a) நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மரியாதை செலுத்தி அவர்களை மதிக்கின்றோம் என கூறுகின்றனர்: -
நபி (ஸல்) அவர்களை மதிப்பது என்பது,
அவர்கள் கட்டளையிட்டவற்றை ஏற்று அதன்படி நடப்பதும்,
அவர்கள் தடுத்தவற்றிலிருந்தும் விலகி இருப்பதும் மற்றும்
அவர்கள் மீது அன்பு செலுத்துவதும் ஆகும்.
ஆனால் ஒருவர் நபி (ஸல்) அவர்கள் ஏவிய கட்டளைகளைப் பின்பற்றாதது மட்டுமல்லாமல் அவர்கள் தடுத்தவற்றைச் செய்து கொண்டே நான் நபி (ஸல்) அவர்களை மதிக்கிறேன் என்று கூறுவது எந்த வகையில் அறிவீனமானது என்று நாம் சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இதற்கு அனைவருக்கும் தெரிந்த தந்தை மகன் உதாரணம் ஒன்றைக் கூறலாம்: -
ஒருவர் தம்முடைய தந்தையை மிகவும் மதிப்பதாகக் கூறுகிறார். ஆனால் அவர் செய்வதெல்லாம் அந்த தந்தையின் கட்டளைக்கு நேர்மாற்றம். தந்தை எதையெல்லாம் செய்யக் கூடாது என கூறினாரே அதை மகன் விரும்பிச் செய்கின்றார். தந்தை எதைச் செய்ய வேண்டும் என சொன்னாரோ அதை மகன் கண்டுக்கொள்வதே இல்லை. மகனின் இந்தச் செயல் தந்தைக்கு மரியதை செலுத்தி கண்ணியப் படுத்தியக் கருதப்படுமா அல்லது தந்தையின் பேச்சைக் கேட்காதது மூலம் அவரை இழிவு படுத்தியதாக் கருதப்படுமா? சிந்தியுங்கள் எனதருமை சகோதர சகோதரிகளே!
மேலும் நபி (ஸல்) அவர்களை சஹாபாக்கள் மதித்தது போல் வேறு யாரும் மதிக்க முடியாது. ஆனால் சஹாபாக்களோ நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடவில்லை. இவ்வாறு பிறந்த தினங்களைக் கொண்டாட வேண்டும் என்று இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தால் சஹாபாக்கள் தான் முதலில் செய்திருப்பார்கள். அந்த அளவிற்கு நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு கட்டளையையும் பின்பற்றி நடப்பவர்களாகவும் நபி (ஸல்) அவர்களுடைய சுன்னத்தைப் பேணி நடப்பவர்களாகவும் சஹாபாக்கள் வாழ்ந்தனர். ஆனால் யாரும் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை விழாவாக கொண்டாடியதாக ஒரு சிறு ஆதாரம் கூட கிடையாது.
இவர்கள் சஹாபாக்களை விட அதிகமாக நபி (ஸல்) அவர்களை மதிக்கிறார்களா? அல்லது இத்தகைய நல்ல அமல்கள் சஹாபாக்களுக்குத் தெரியாமல் போய்விட்டதா? எனவே இவர்களின் நாங்கள் நபி (ஸல்) அவர்களை இந்த விழாவின் மூலம் மதிக்கிறோம் என்ற வாதம் அர்த்தமற்றதும் அவர்களுக்கே எதிரானதும் ஆகும்.
6b) பெரும்பாண்மையான மக்கள் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனரே! அதனால் நாங்களும் கொண்டாடுகிறோம்: -
நபி (ஸல்) அவர்களின் '(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை' என்ற கூற்றுப்படி பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பித்அத் என்றும் வழிகேடு என்று உறுதியான பிறகு எத்தனை நபர்கள் எத்தனை நாடுகளில் பின்பற்றினால் என்ன?
உலகில் உள்ள பெரும்பாண்மையான மக்கள் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்றும் அவர்களைப் பின்பற்றினால் வழி கெடுத்து விடுவார்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறானே!
பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் - இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். (அல்-குர்ஆன் 6:116)
இன்னும் அநேக வசனங்களில் பெரும்பாலோரைப் பின்பற்றக் கூடாது என்றும் அதற்குரிய காரணத்தையும் அல்லாஹ் விளக்குகிறான்:-
பெரும்பாலோர் ஈமான் கொள்ள மாட்டார்கள். (2:100)
பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (2:243)
பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.(5:32)
பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.(5:49)
பெரும்பாலோர் ஃபாஸிக்கு (பாவி)களாக இருக்கின்றீர்கள் (5:59)
பெரும்பாலோர் பாவத்திலும், அக்கிரமத்திலும் விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல்படுவதை (நபியே!) நீர் காண்பீர்.(5:62)
பெரும்பாலோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையாகும (5:66)
பெரும்பாலோர் நல்லறிவு பெறாதவர்களாகவே இருக்கின்றனர் (5:103)
பெரும்பாலோர் மூடர்களாகவே இருக்கின்றனர். (6:111)
பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (6:116)
பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள் (6:119)
பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை (10:36)
பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.(7:117, 10:60)
பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்' (10:92)
பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை (11:17)
பெரும்பாலோர் காஃபிர் (நன்றி கெட்டவர்)களாகவே இருக்கின்றனர். (16:83)
பெரும்பாலோர் சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை; ஆகவே அவர்கள் (அதைப்) புறக்கணிக்கிறார்கள். (21:24)
பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள். (23:70)
பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.(29:63)
எனவே பெரும்பாலானோரைப் பின்பற்றுவது என்பது மேற்கூறப்பட்ட வசனங்களுக்கு எதிரானதாகும்.
6c) மீலாது விழாக்கள் நபி (ஸல்) அவர்களை எப்போதும் நினைவில் இருத்திக்கொள்ள உதவும்: -
நபி (ஸல்) அவர்களை மீலாது விழாக்களில் மட்டும்தான் நினைவுபடுத்த வேண்டுமா? மற்ற நாட்களில் நினைவு படுத்தக்கூடாதா? முஃமின்களுக்கு நபி (ஸல்) அவர்களிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருப்பதாக அல்லாஹ் கூறுகிறானே (அல்-குர்ஆன் 33:21)! அப்படியென்றால் வருடத்தில் ஒருமுறை நினைவுபடுத்தி அந்த அழகிய முன்மாதிரியைப் பின்பற்றி விட்டு மற்ற நாட்களில் நினைவு படுத்தத் தேவையில்லையா? இல்லை சகோதர சகோதரிகளே! இது முற்றிலும் தவறு.
உண்மையான முஸ்லிம்கள் எல்லாக் காலங்களிலும், எல்லா நேரங்களிலும் நபி (ஸல்) அவர்களை நினைவில் இருத்திக் கொண்டே இருப்பார். அதாவது,
நபி (ஸல்) அவர்களின் பெயர் கூறப்படும் போதெல்லாம் அவர்கள் மீது சலவாத்து கூறுவார்கள்
நபி (ஸல்) அவர்களின் பெயர் பாங்கு, இகாமத், குத்பா உரை மற்றும் தொழுகையின் போதும் நினைவு கூர்ந்து சலவாத்து கூறுவார்
ஒவ்வொரு முறையும் நபி (ஸல்) அவர்கள் ஏவிய வாஜிபான, முஸதஹப்பான கடமைகளைச் செய்யும் போதும் நினைவு கூறுவார்
நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அன்றாடம் ஓத வேண்டிய துஆக்களை ஓதும் போதும் நினைவு கூறுவார்
இவ்வாறாக ஒரு முஃமின் இரவு பகல் என பாராது, மீலாது விழா நாட்கள் என்றும் பாராமல் எந்நேரமும் நபி (ஸல்) அவர்கள் ஏவிய நன்மையான செயல்களைச் செய்வதன் மூலமும் நபி (ஸல்) அவர்கள் தடுத்த தீமையான காரியங்களைச் செய்வதிலிருந்தும் விலகியிருத்தல் மூலமும் எந்நேரமும் நபி (ஸல்)அவர்களை நினைவில் இருத்திக்கொண்டேயிருப்பார்.
ஆனால் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடுவோர் நபி (ஸல்) அவர்கள் தடுத்த தீமையான செயலான பித்அத் என்னும் நூதன செயலைச் செய்வதன் மூலம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து விலகி தூரமாகச் செல்கின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இந்த வகையான பித்அத்தான விழாக்கள் தேவையில்லை. ஏனென்றால் ஏற்கனவே அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை கண்ணியப்படுத்தி அவர்களின் அந்தஸ்தை உயர்த்தி விட்டான்.
அல்லாஹ் கூறுகிறான்: -
மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். (அல்-குர்ஆன் 94:4)
மேலும் தினமும் ஐவேளை கூறக்கூடிய பாங்கு மற்றும் இகாமத் போன்றவற்றிலும், குத்பா பேருரைகளிலும், தொழுகையிலும் நபி (ஸல்) அவர்களின் பெயரும் குறிப்பிடப்படுகிறது. மேலும் திருமறையை ஓதும் ஒவ்வொரு முறையும் நபி (ஸல்)அவர்களை நினைவு கூராமலிருப்பதில்லை! இதுவே நபி (ஸல்) அவர்களைக் கண்ணியத்திற்கும், அவர்களின் மீது அன்பு செலுத்தி அவர்களைப் பற்றிய நினைவை புதுப்பித்துக் கொள்வதற்கும் அவர்களைப் பின்பற்றி வாழ்வதற்கான ஊக்கத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்கும் போதுமானதாகும்.
உண்மையான முஃமின் அனு தினமும் இஸ்லாத்தின் காரியங்களைச் செய்து வருவாராயின் அதன் மூலம் நபி (ஸல்) அவர்களை நிணைவு படுத்திக் கண்ணிப்படுத்தியவராகக் கருதப்படுவார். மாறாக பிறந்த நாள் விழா போன்ற பித்அத்தான செயல்களைச் செய்வதன் மூலம் நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு மாறு செய்பவர்கள் எவ்வாறு நபி (ஸல்) அவர்களை நினைபடுத்தி கண்ணியப்படுத்தியவராவார்? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே!