Link : பொருளடக்கம் மற்றும் Part 1 & 2
Part-3
6d) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் இறைவனை நெருங்குவதற்காக கல்வியறிவுடைய சிறந்த மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்டது: -
பித்அத் அனைத்தும் வழிகேடுகள், அவைகள் நிராகரிக்கப்படவேண்டியவைகள் என்றிருக்கும் போது எவ்வளவு பெரிய அறிஞரால் கல்விமான்களால் அறிமுகப்படுத்தப்பட்டால் தான் என்ன?
நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பித்அத்துல் ஹஸனா ஆகும்.
பித்அத்துகளில் நல்லவை கெட்டவை என்ற பாகுபாடே கிடையாது. அனைத்து பித்அத்துகளும் வழிகேடு என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
'நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும' அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
மேலும் கூறினார்கள்: -
'(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்' ஆதாரம்: அஹ்மத்
எனவே அனைத்து பித்அத்களும் நரகத்திற்குரிய வழிகேடுகளேயன்றி வேறில்லை.
நபி (ஸல்) அவர்களின் வார்த்தையான 'அனைத்து பித்அத்களும் வழிகேடுகள்' என்பது சுருக்கமான அதே நேரத்தில் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய கட்டளையாகும். இது இஸ்லாத்தின் மிக முக்கியமான கொள்கையாகும்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: - 'நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது (இறைவனால்) நிராகரிக்கப்படும்' என்று நபி (ஸல்) கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம் அஹ்மத்)
எனவே மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில், ஒருவர் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இஸ்லாத்தில் புதிதாக ஒன்றை உருவாக்கினால் நிச்சயமாக அது வழிகேடே ஆகும், எனவே அவைகள் நிராகரிக்கடவேண்டிய ஒன்றாகும். இந்த வகையில் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் சேரும்.
நபி (ஸல்) அவர்களுடைய பிறந்த தினங்களை கொண்டாடுவோருக்கு நம்முடைய கேள்விகள்: -
நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடி அதன் மூலம் அவர்களைக் கண்ணியப்படுத்துவதாக இருந்தால் இத்தகைய நல்லா செயல்களை ஏன் நபித்தோழர்களும், அவர்களுக்குப் பின் வந்த மூன்று தலைமுறையினரும் செய்யவில்லை. அவர்களுக்கு இத்தகைய நல்ல செயல்கள் தெரியவில்லை என்று பின் இந்த சஹாபாக்களுக்குப் பின்னர் வந்த சமுதாயத்தினர் கண்டுபிடித்தார்களா? இந்த புதுமையைக் கண்டு பிடித்தவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நேர்வழி பெற்ற கலீபாக்கள், சஹாபாக்கள் மற்றும் அடுத்து வந்த இரண்டு சமுதாயத்தவர்களான தாபியீன்கள் மற்றும் தபஅ தாபயீன்களை விடச் சிறந்தவர்களா? நிச்சயமாக இல்லை. பின்னர் அவர்களே செய்யாத புதுமையான ஒன்றை நாம் செய்ய வேண்டும்?
6e) இஸ்லாம் நபி (ஸல்) அவர்களின் மீது அன்பு செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. எனவே நாங்கள் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடி அவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம் : -
நபி (ஸல்) அவர்களின் மீது அன்பு செலுத்துவது முஸ்லிமான ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். ஒருவர் தம்முடைய உயிர், பொருள், குடும்பம் மற்றும் பெற்றோர்கள் இவர்கள் அனைவரையும் விட நபி (ஸல்) அவர்களை அதிகம் நேசிக்காதவரை அவர் உண்மையான முஃமினாக மாட்டார். ஆனால் அதற்காக நபி (ஸல்) அவர்கள் ஏவிய நற்செயல்களைச் செய்வதை விட்டு விட்டு அவர்கள் தடுத்த பித்அத்தான செயல்களைச் செய்வது என்பது எவ்வாறு அறிவுப்பூர்வமானதாகும். ஒருவர் மீது அன்பு செலுத்துவது என்பது அவர் சொன்னதையெல்லாம் செய்வதும் அவர் தடுத்ததிலிருந்து விலகி கொள்வது தானே அவர் மீது மரியாதை செலுத்தி அன்பு செலுத்துவது ஆகும்?
நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துவது என்பது அவர்களின் சுன்னத்தான வழிமுறைகளை பின்பற்றி அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடித்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு மாற்றமான செயல்களைச் செய்வதிலிருந்தும் விலகியிருத்தல் ஆகும். நிச்சயமாக நபி (ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு மாற்றமான அனைத்தும் பித்அத் ஆவதோடல்லாமல் நபி (ஸல்) அவர்களுக்குக் கீழ் படிய மறுப்பதாகும். நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதும் இதில் அடங்கும். ஒருவரின் நல்ல எண்ணம் அவருக்கு இஸ்லாத்தில் பித்அத்தை செய்வதற்குரிய அனுமதி ஆகாது.
இஸ்லாம் என்பது இரண்டு முக்கியமான விஷயங்களில் அமைந்துள்ளது.
1. இக்லாஸ் என்னும் மனத்தூய்மை
2. நபி (ஸல்) அவர்களின் வழி முறையைப் பின்பற்றுவது.
எனவே நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துவது என்பது நபி (ஸல்) அவர்களுடைய மற்றும் குர்ஆனுடைய கட்டளைகளை மீறி செயல்படுவது அல்ல! மாறாக நபி (ஸல்) அவர்களுடைய சொல் செயல் அங்கீகாரம் ஆகியவைகளை ப்பின்பற்றுவதன் மூலம் அவர்களை கண்ணியப்படுத்தி அன்பு செலுத்துவதாகும்.
6f) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் மூலம் நாம் அவர்களின் வரலாற்றைப் படித்து அதன் மூலம் மற்றவர்களை நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்ற ஊக்கப்படுத்துகிறோம்.
நாம் இது வரை விளக்கியவைகளே இவர்களின் இந்தக் கேள்விக்கும் பதிலாக அமைகிறது. நபி (ஸல்) அவர்களின் வரலாற்றைப் படித்து அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறையைப் எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும், வருடம் முழுவதும் ஏன் தாம் மரணமடையும் வரையிலும் பின்பற்றி வாழ்வது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும். ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் அவ்வாறு செய்வது என்பது பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும். மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் அவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகிச் செல்கிறார்.
7) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவது குற்றத்திற்குரிய பித்அத்தே!: -
• எந்த வகையில் பார்த்தாலும் நபி (ஸல்) அவர்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவது என்பது குற்றத்திற்குரிய பித்அத் என்ற இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட நூதன செயலாகும்.
• ஒவ்வொரு முஸ்லிமும் இந்தச் செயல்களை தடுத்து நிறுத்த முடியுமானவரை முயற்சி எடுத்து நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை மேலோங்கச் செய்யப் பாடுபடவேண்டும்.
• இந்த நூதன செயல்களைச் செய்பவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கவேண்டும். ஏனென்றால் இத்தகையவர்கள் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவைப் பின்பற்றுவதற்குப் பதிலாக புதிய அனாச்சாரங்களையும் பித்அத்களையுமே மார்க்கம் என்று கருதி செயல்படுவர்.
• எத்தனை நபர்கள் இந்த நூதன செயல்களைச் செய்தாலும் ஒரு உண்மையான முஃமின் அவர்களைப் பின்பற்றக்கூடாது. மாறாக அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையை, அதை பின்பற்றுபவர்கள் வெகு சொற்பமாயினும் சரியே அதை மட்டுமே பின்பற்ற வேண்டும்.
• சத்தியத்தின் அளவுகோல் எத்தனை நபர்கள் அதை செய்கிறார்கள் அல்லது பேசுகிறார்கள் என்பது அல்ல! மாறாக சத்தியத்தின் அளவு கோல் உண்மையே!
8) கருத்து வேறுபாடு ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
'உங்களில் யாரேனும் (நீண்ட நாள்) வசிப்பீர்களானால் பல வேறுபாடுகளைக் காண்பீர்கள். என்னுடைய வழிமுறையையும் எனக்குப் பின்னால் வரக்கூடிய நேர்வழிபெற்ற கலிபாக்களின் வழிமுறைகளையும் பின்பற்றி நடக்க நான் உங்களை வலியுறுத்துகிறேன். அவைகளை வலுவாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். (மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படுவதை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள்; ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்' (ஆதாரம் அஹ்மத் மற்றும் திர்மிதி)
இந்த ஹதீஸில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் தோன்றக் கூடிய காலக்கட்டங்களில் நாம் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக விளக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். புதிதாக தோன்றக் கூடியவைகள் அனைத்தும் வழிகேடுகள் என்றும் அவைகளை விட்டும் எச்சரிக்கையாக இருக்குமாறும் நமக்கு வலியுறுத்திக்கிறார்கள்.
எனவே நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலோ அல்லது நேர்வழிபெற்ற கலிபாக்களின் வழிமுறைகளிலோ அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாததால் இது வழிகேட்டின் பால் இழுத்துச் செல்லும் ஒரு பித்ஆத் ஆகும். இதுவே மேற்கூறப்பட்ட ஹதீஸின் கருத்துப்படி உள்ள பொருளாகும். மேலும் அல்லாஹ் கூறுகிறான்: -
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும்இ உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.(அல்குர்ஆன் 4:59)
இந்த வசனத்தில் அல்லாஹ்வுக்குக் கீழ் படியுங்கள் என்று கூறப்பட்டிருப்பதன் விளக்கமாவது அல்லாஹ்வின் கூற்றாகிய அல்-குர்ஆனுக்கு கீழ்படிவதாகும்.
அல்லாஹ்வின்தூதருக்கு கீழ்படியுங்கள் என்றால் அவர்களது மறைவிற்குப் பின்னர் அவர்களுடைய சுன்னாவைப் பின்பற்றுதல் என்பதாகும்.
ஏதேனும் பிணக்கு அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அல்லாஹ்வுடைய வேதத்திலும் அவனுடைய தூதரின் சுன்னாவிலும் தான் தீர்வு காணவேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்.
எனவே குர்ஆனிலோ அல்லது சுன்னாவிலோ நபி (ஸல்) அவர்களின் பிறந்த நானைக் கொண்டாடுமாறு எங்கே கூறப்பட்டிருக்கிறது?
யாரேனும் இந்தச் செயலைச் செய்தால் அல்லது நல்லது எனக் கருதினால் இதிலிருந்து அவர் உடனடியாக மீண்டு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்கவேண்டும். இதுவே உண்மையைத் தேடும் ஒரு முஃமினின் பண்பாகும். ஆனால் இந்த உண்மை தெள்ளத் தெளிவாக விளங்கிய பின்னரும் யாரேனும் பிடிவாதமாகவும் ஆணவமாகவும் இருந்தால் அவருடைய கணக்கு அல்லாஹ்விடமே உள்ளது.
அல்லாஹ்வின் வேதமாகிய அல்-குர்ஆனையும் அவனுடைய இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் தெளிவான சீரிய வழிகாட்டுதல்களையும் நாம் அல்லாஹ்வை சந்திக்கும் வரையிலும் உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு அவற்றைப் பின்பற்றி வாழ வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவோம்.
நன்றி: www.islam-qa.com