சிந்தனைக் கவிதை - எழுதியவர்: அபூ அரீஜ்
பஞ்சம், நான் நாளாந்தம் கண்டு களிக்கும் சினிமா!
பட்டினி, நான் சந்திக்கவில்லை - அங்கோ
பலரின் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கின்றது!
பஞ்சமும் பட்டினியும் பட்டிமன்றம் நடாத்த
பரிதவித்த பொழுதுகள் வேடிக்கை பார்க்கின்றன!
அங்கே வெற்றி எப்போதும் மரணத்துக்குத்தான்!
ஒட்டிய வயிறும் உப்பிய தேகமும்
அவர்களோடு ஒட்டிப்பிறந்த வாழ்க்கைச் சரித்திரம்!
உப்பிய தேகம் தான் அவர்களது வாழ்க்கை வரலாறு!
ஒரு தாகித்த குரல்,
வாய்க்கு ருசியாய் எனக்குத் தேவையில்லை
வகைவகையாய் ஏதும் கேட்டிடவில்லை!
அதோ -
ஒரு சொட்டுக் கஞ்சிக்காய் உயிர் விடும் ஊனங்கள்!
எலும்பும் தோலும் தான் அவன் தேகம்!
உலகம் அவனைத் துறந்தது போல்
சதையும் சட்டென்று அவனை விலகிக் கொண்டது!
பசிக் கொடுமை அவன் உடலை அரிக்க அரிக்க
நடமாடும் குச்சியாய் அவன் தேய்ந்து போனான்!
அந்தோ சரிந்து விடும் தோரணையில் அவன் பொழுதுகள் நகர்கின்றன!
தாளாத பசி சதையைத் திண்றொழிக்க
எலும்பாவது எஞ்சட்டுமே என பாவப்பட்டு
எலும்பை மூடிக் கொண்டது தோல்!
ஆறடி மனிதன் அவன்
அறைக்கிலோ மாமிசம் கூட தேரா தேகமது!
உயிருள்ள எலும்புக் கூடு!!
சுடுமணலில் காய்ந்த கருவாடாய்
உப்பிக் கிடக்கின்றது அவன் தேகம்!
கொசுக்குக் கூட குத்துவதற்கு இடமில்லை!
பஞ்சம் துரத்தித் துரத்தி அவனைக் கொல்ல
பட்டினி பாய்ந்து பாய்ந்து அவனைக் குதறிற்று!
பசி வெள்ளம் அவனை அடித்துச் செல்கிறது
பரிதாபமாய் அவனுயிர் போக –
நம் சமூகமோ, கண்டும் காணாதது போல்..!!
உன் சகோதரனின் அவலக் குரல்!
அண்ணா..! தம்பி..! சகோதரா..!
கேட்கிறதா அவன் அவலக் குரல்?
அவனால் முணகத்தான் முடியும்.
பசிக்கொடுமை அவன் குரலையும் கொஞ்சம் கொஞ்சமாய்
குடித்து விட்டிருந்தது!
அண்ணா..!
என் அடிவயிராவது ஆறுதலடையட்டும்
அடிச் சட்டியின் தீய்ந்து போன சோறுகளாவது கிடைக்காதா?
- இது அவன் முணகலின் தேடல்!!
தம்பி..!
என் ஈரமற்றுப் போன நாக்கினை நனைத்துக் கொள்ள
எஞ்சிய எச்சில்களாவது கிடைக்காதா?
- இது அவன் விடும் பெரு மூச்சின் ஓசை!!
சகோதரா..!
ஒரு வாய்க் கஞ்சி ஊற்றினால்
ஒரு வாரம் எனக்குத் தெம்பூரும்.
நீ உண்ட தட்டின் ஓரங்களில் ஒட்டியிருக்கும்
உணவையாவது பொறுக்கித் திண்ண எனக்கு வழி செய்வாயா?
- இது அவன் எதிர் பார்ப்பின் பாஷை!!
நான் உயிருள்ளதோர் எலும்புக் கூடு!
வாழ்க்கையின் எந்த சுகந்தமும் எனை முத்தமிட்டது கிடையாது!
என் வாழ்க்கையில் வசந்தத்தை - நான்
கனவில் கூட கண்டது கிடையாது!
எல்லோருக்கும் போல் எனக்கும் ஆசையுண்டு
ஆனால் - எட்டாக் கனிக்கு கொட்டாவி விட்டடென்ன பயன்!
என் வாழ்க்கையே கானல் நீராய் ஆனபோது
எதிர்பார்ப்புக்கள் என்பதும் கானல் நீரே!
ஆனால் -
ஒன்றை மட்டும் சொல்கிறேன்
உன் ஸகாத்தும், ஸதகாவும்
உன்னிடம் தேங்கிக் கிடக்கும் எம் எதிர்காலங்கள்!
உன் உதவியும், ஒத்தாசையும்
உயிர்வாழ நாம் கேட்கும் உயிர்ப்பிச்சை!
நீ - எமக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
கரையற்ற குளமாய்த் தேங்கிக் கிடக்கின்றன.
என் உயிர் பிரியு முன் உதவிக் கரம் கொடு!
உன் உயிர் பிரியு முன் உன் கடமையைச் செய்!!