Feb 28, 2008

சிந்தனைக்காக சில வரிகள் : ஒரு நிமிடம்!

எழுதியவர்: அபூ அரீஜ்

தூண்களின்றி உயர்த்தப்பட்ட வானம்,
பிடிமானமின்றி சுழழும் பூமி,
பூமி அசைந்து விடாமலிருக்க முளைகளாக அறையப்பட்ட மலைகள்,
மண்ணின் செழிப்பை ஊக்குவிக்கும் மழை,
உயிர் நாடியான காற்று,
பச்சைப் பசேலென்ற போர்வையை பூமிக்குப் போர்த்திக் கொண்டிருக்கும் ஒளிக் கற்றைகள்...

இப்படி இறைவனின் படைப்பில் அனைத்துமே சிந்தனையைத் தூண்டிக் கொண்டிருக்கும் அதிசயப் படைப்புக்களாகும். இவை யாவும் சர்வசாதாரனமாக எம் கண்முன்னே காட்சி தருவதாலும், அவற்றின் கொடைகளை நாளாந்தம் அனுபவிப்பதாலும் அதன் மகிமையை நாம் உணர மறந்து விட்டோம்.

இறைவனின் படைப்பில் யாவுமே காரண காரியத்துடனேயே படைக்கப்பட்டுள்ளன. அணுத்துகள்கள் முதல் அண்டம் வரை யாவுமே ஏதோ ஒரு நோக்கத்தின் அடிப்படையில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏன் மனிதனின் உருவாக்கமான சாதாரன செருப்புக்குக் கூட ஒரு நோக்கம் இருக்கத்தான் செய்கின்றது.
உலகின் அதிபதியான உயர்படைப்பான மனிதன் மட்டும் காரணமின்றி படைக்கப் பட்டிருப்பானா? இல்லை அவன் மட்டும் இறைவனின் படைப்பில் விதிவிலக்கா? பதில் காண வேண்டும். பதில் கண்டு செயலாற்றவே பகுத்தறிவு கூட எமக்குத் தரப்பட்டுள்ளது.

மரணிக்கு முன் கீழ்காணும் இச்சிறு கேள்விகளுக்கேனும் ஒரு முறை விடை கண்டு விட்டு உன் இறுதி மூச்சை விடு.

எம்மைப் படைத்தவன் யார்?

பல கடவுளர்கள் இருக்கிறார்கள் என்பது சாத்தியமானதா?

நாம் எதற்காகப் படைக்கப் பட்டோம்?

உண்மையான நீதி இவ்வுலகில் சாத்தியப் படாதபோது அந்நீதி எங்கு கிடைக்கும்?

நம் இறுதி முடிவு என்னவாயிருக்கும்?

நிம்மதியற்ற இம்மை முடிவடைந்தால், நிம்மதியைத் தரும் மறுமை என்று ஒன்று இருக்குமா?

நரகம், சுவர்க்கம் என்பனவற்றின் யதார்த்த நிலை யாது?

சுவனத்திற்கான, நித்திய ஜீவனுக்கான உண்மையான வழி எது?

இது போன்ற அநேக கேள்விகள் நம் மனக்கண் முன்னே நிழலாடுகின்றன. உறங்கிக் கொண்டிருக்கும் நம் உணர்வுகளைத் தட்டி எழுப்பி நாம் தான் விடை காண வேண்டும். நோக்கமற்ற வாழ்க்கை அழிவிற்கே இட்டுச் செல்லும்.

சிறிய தவறு இழைத்தாலும் நம் மேலதிகாரி நம்மைப் புரட்டி எடுக்கும் போது, படைக்கப்பட்ட நோக்கத்தையே நாம் மறந்து வாழ்ந்து விட்டு மரணித்தால் நம்மைப் படைத்தவன் சும்மா விட்டுவிடுவானா?

உனக்குள் சுற்றிச் சுழலும் இக்கேள்விகளுக்கு நீயே விடை காண முயறிச்சி எடு!

Feb 26, 2008

சந்தோசமாயிரு...

எழுதியவர்: அபூ அரீஜ்

அல்லாஹ்வின் நாமம் போற்றி...

சந்தோஷமாயிரு!!

- இறைவிசுவாசமும், நற்கருமங்களும் சிறந்த வாழ்க்கையின் சின்னங்கள். இரண்டையும் காலம் முழுவதும் கைவிடாதே!

- கல்வியைக் கைக்கொள், வாசிப்பை வளப்படுத்து. அது உன் கவளையைப் போக்கும்!

- பாவங்களுக்கு விடை கொடு, பாவமன்னிப்பைப் புதுப்பித்துக் கொள்.. அவை உன் வாழ்க்கைக்கு ஒளியூட்டும் ஊடகங்கள்!

- அல்குர்ஆனின் வரிகளை ஆழ்ந்து கவணி. இறைஞாபகம் இறுதி விரை தொடரட்டும்!

- மனிதர்களோடு மனம் மங்காது நடந்து கொள், உன் உள்ளம் அமைதி பெரும்!

- வீரத்தை உன் நெஞ்சிலே விதைத்துக் கொள், கோழைத்தனம் உன்னைக் கொடுமைப்படுத்த வேண்டாம். வீரம் உள்ளத்தை வளப்படுத்தும்!

- போட்டியும் பொறாமையும், நயவஞ்சகமும், நானென்ற அகங்காரமும் அகத்து நோய்கள். அவற்றை உள்ளத்திலிருந்து உறித்தெடுத்து விடு!

- காயம் தரும் கவளையும், வாழ்க்கையின் வசந்தங்களை சாகடிக்கும் அதிருப்தியும் களையப்பட வேண்டிய களைகள். பயன் தரும் செயல்களில் கவணம் கொள்!

- உனக்கு மேலே உள்ளவர்களை ஒரு போதும் பாராதே! உனக்குக் கீழே ஓராயிரம் பேருண்டு. அவர்களை நினைத்து அமைதி கொள்!

- கீழ்த்தர உணர்வுகளுக்கும், கெட்ட சிந்தனைகளுக்கும் இடம் கொடாதே. மோசமான கற்பனைகளை முளையிலேயே கிள்ளிவிடு!

- கோபப்படாதே! பொறுமையைக் கைக் கொள்! அந்தோ வாழ்க்கையின் இறுதி வினாடிகள் எம்மை அழைக்கின்றன!

- நீங்கும் செல்வத்தை நினைத்து நிம்மதியாயிரு! ஏழ்மை வந்துவிடும் என ஒருபோதும் அஞ்சாதே. அல்லாஹ்வின் மீது தவக்குல் வை!

- நீங்கும் பிரச்சினைகளுக்காய் நித்தமும் அழாதே! வாழ்க்கையின் வரம்புகளில் அவ்வப்போது முளைக்கும் துன்பங்களை துச்சமாய் மதி!

- வாழ்க்கையை எளிமையாக்கு! உலக வாழ்க்கையின் வசந்தங்களைத் தேடித் தேடி ஒருபோதும் அலையாதே. அது உன்னை சிறுமைப் படுத்தும்!

- படாடோபம் உன்னை பரிதவிக்க வைக்கும். உன் ஆன்மாவை அவதிக்குள்ளாக்கும்!

- கடந்த காலத்தை நீதியின் தராசில் நிறுத்துப்பார். உன்னை நீயே அறிந்து கொள்வாய்!

- கரைதட்டிய துன்பங்களோடு உன்னுடன் உறவாடும் அருட்கொடைகளை ஒப்பிட்டுப்பார். உன்வாழ்க்கையின் அஸ்தமனங்களை விட, விடியல்களே அதிகமாயிருக்கும்!

- உன்னை நோக்கி வந்த சொல்லம்புகளை ஓரங்கட்டு. அவை சொந்தக்காரனைத்தானே சென்றடையும். உன்னை அது ஒருபோதும் ஊனப்படுத்தமாட்டாது.

- உன் சிந்தனையைச் செழுமையாக்கு. அருளும், அறிவும், சீரும், சிறப்பும், வெற்றியும், வீரமும் உன் சிந்தனைக்கு விருந்தளிக்கட்டும்.

- யாரிடமிருந்தும் நன்றியை எதிர்பார்க்காதே! பகட்டுப் பாராட்டுக்கள் உன்னை ஊனப்படுத்த வேண்டாம். அல்லாஹ்வின் அருள் வேண்டியே அமல்களனைத்தும் ஆர்முடுகளாகட்டும்!

- நற்கருமங்களை நாற்படுத்தாதே. இன்றே செய்! நாளை என்பது நமக்கு வேண்டாம்!

- உன் தகுதிக்கேற்ப காரியம் கொள். உன் சாந்திக்கு பச்சைக் கொடிகாட்டும் சங்கதிகளில் சங்கமமாகு!

- அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப்பார். நன்றி செலுத்து. நன்றிமறவா நாட்டம் கொள்!

- அல்லாஹ் உனக்களந்த செல்வம், செழிப்பு, குடும்பம், குதூகழிப்பு, ஆரோக்கியம் அனைத்திலும் திருப்தி கொள்!

- அறிந்தோர், அறியாதோர் அனைவரோடும் அன்புடன் நட. அக்கம் பக்கத்து வீட்டாரை அரவனைத்து நட. ஏழைகளின் பக்கம் கொஞ்சமேனும் திரும்பிப்பார்.

உன் இருட்டு வாழ்க்கைக்கு விடை கொடு! அந்தோ சந்தோஷம் சங்கமமாகும் சமயம் உனை அழைக்கின்றது. நாளைய திங்கள் சந்தோஷக் கதிர்களோடு உதிக்கட்டும். அவை உன் கறுப்புப் பக்கத்தைத் துடைத்து வென்மையாக்கும்!!

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்பார்கள்! அஃதே பிறர் உள்ளத்தில் சந்தோஷத்தை விதை. உன் உள்ளத்தில் அது தனாய் ஊற்றெடுக்கும்!

உலகில் சந்தோஷத்தையும், நிம்மதியையும் படைக்க நாமும் புறப்படுவோமா? நிச்சயமாக வல்ல ரஹ்மான் நமக்குத் துணை நிற்பான்.

ஓர் ஓசையற்ற பயணம்.......

எழுதியவர்: அபூ அரீஜ்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

ஓர் ஓசையற்ற பயணம்

காலம்: அனைத்து கிழமை நாட்களிலும்

பயணி பற்றிய விபரம்: -

தகுதியானோர் : ஆதமின் மகன்!

மூல உற்பத்தி : களிமண்!

விலாசம் : பூமியின் மேற்பகுதி!

பயணச் சீட்டு பற்றிய விபரம்: -

பயண வழி : ஒன்வே ஒன்லி (ஒற்றைப் பயணம் மட்டும், திரும்பும் சீட்டு கிடையாது)!

விலை : முற்றாக இலவசம்!

முற்பதிவு : ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது!

பொதி(சுமை) பற்றிய விபரம்: -

ஒவ்வொரு விமானத்திலும் ஒரு பயணி மட்டுமே அனுமதி!

கூடுதலாக 5 மீட்டர் வெள்ளைத் துணியும் சிறிய அளவு காட்டனும் எடுத்துக் கொள்ளலாம்!

பெறுமதி வாய்ந்த பொதி பற்றிய விபரம்: -

மனத்தூய்மையுடன் நிறைவேற்றப்பட்ட தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், தர்மங்கள்,

சத்தியத்திற்காக செய்த தியாகங்கள்,

குழந்தைகளை நல்லவர்களாக ஆக்க எடுத்துக் கொண்ட உண்மையான கரிசணைகள் மற்றும்

இது போன்ற நற்காரியங்கள் மட்டும்.

பயணம் பற்றிய விபரம்: -

பயணத்தளம் : பூமியின் எந்தப் பகுதியுமாக இருக்கலாம்.

பயணிக்கும் நேரம் : மரணத்தைத் தொடர்ந்து!

இறங்கும் இடம் : மறு உலகம்.

குறிப்பு: பயணச் சீட்டு, கடவுச் சீட்டு, பிரயாண ஆவணங்கள் போன்ற எதுவும் தேவையில்லை. தயாராக மட்டும் இருந்து கொண்டால் போதுமானது!

தங்குமிட வசதி: -

தற்காலிகமாக மட்டும் ஏற்பாடு செய்யப்படும்!!

அறையின் அளவு : கிட்டத்தட்ட 2 அடி அகளமும் 6 அடி நீளமுமாகும்!

அறையின் சிறப்பம்சம் : வெரும் புழுதி மணலினாலும் சிறிய கற்களினாலும் அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!

தங்குமிட வசதி பற்றிய விபரம் : பணக்காரனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் ஒரே வகையான வசதி மட்டும்தான் ஏற்பாடு செய்யப்படும் என்பதை தயவு செய்து கவணத்திற் கொள்க!

கீழ்காணும் செளகரியங்கள் காணப்படும் :

குளிரூட்டி (ஏ.சி) : 0 டொன் !!!

நீர் விநியோகம் : கிடையாது !!!

மின் விநியோகம் : கிடையாது !!!

தொலை பேசி : கிடையாது !!!

டீ.வி மற்றும் சேனல்கள் : சுவனம் அல்லது நரகம் !!!

பத்திரிக்கைகள் அல்லது புத்தகஙகள் : கிடையாது !!!

ரூம் சர்விஸ் : அல்லாஹ்வுக்கு எந்தளவு கட்டுப்பட்டு நடந்தோம் என்பதைப் பொருத்து அமையும்!

முக்கிய கவணத்திற்கு : -
அனைத்து பயணிகளும் மேற் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தையும் தயவு செய்து கவணத்திற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்!

பயணச் சீட்டு ரத்துச் செய்யப்படடுவதோ அல்லது பிறருக்கு மாற்றுவதோ முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது!

எனவே, தயவு செய்து அனைவரும் (விதிவிலக்கு கிடையவே கிடையாது) பயணத்திற்கு தயாராக இருந்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கின்றோம்.

மலக்குல் மெளத் எனப்படும் உயிரைக் கைப்பற்றும் வனவர் வந்தவுடன் பயணம் ஆரம்பமாகும் என்பதையும் அறியத்தருகின்றோம்!

மேலதிக தகவல்களுக்கு: -

உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அல்-குர்ஆன் மற்றும் ஸுன்னாவை படிக்கவும்.

Feb 25, 2008

இறைத் தூதர் இயேசு நாதர் : சத்தியத் தொடர் -3

எழுதியவர்: அபூ அரீஜ்

அன்பின் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளே!

உங்கள் வேத நூலான பைபிளின் வசனங்களை சற்று நிதானத்தோடும், பொறுமையோடும், ஆராய்ச்சிக் கண்னோட்டத்தோடும் வாசிப்பீர்களாக. அப்போது நாம் சொல்ல வருகின்ற விடயம் தெளிவாக உங்களுக்குப் புறியும். ஏனென்றால், திருச்சபைகளின் போதனைக்கும், கிறிஸ்தவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கும் பைபிள் முழுக்க முழுக்க மாறுபடுகின்றன என்பது ஆச்சரியமாய் இருக்கின்றது.

இறைவன் தனது தூதர்களில் சிலரை குறிப்பிட்ட சில சமூகத்தார்களுக்கு மட்டும் தூதர்களாக அனுப்பியுள்ளான். அதே தொடரில் இஸ்ரவேல் சமூகத்தாருக்கு மட்டும் அனுப்பப்பட்ட இறைத்தூதர்தான் இயேசு எனப்படும் ஈஸா நபி அவர்கள்: -

'....இஸ்ராயீலின் மக்களுக்கு (இயேசுவை) ஒரு தூதராகவும் (அனுப்புவான் என்றும் கூறினான்).'- அல் குர்ஆன்(3:49)

இந்த அல் குர்ஆன் வசனத்தினை பின் வரும் பைபிள் வசனங்கள் தெள்ளத் தெளிவாக உண்மைப் படுத்துகின்றன. இதோ உங்கள் கவனத்திற்கு: -

'காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல வென்றார்.' - மத்தேயு (15:24)

'இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.' - மாற்கு (12:29)

அவ்வாறே மோசேயும் இஸ்ரவேலர்களுக்கு மாத்திரம் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதரே என்பதற்கான சான்றுகள்: -

'நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்,...' - லேவியராகமம் (11:2)

'நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்,...' –எசேக்கியேல் (24:21)

எனவே, இந்த வசனங்கள் அனைத்தும் இயேசு நாதர் இஸ்ரவேலர் சமுதாயத்திற்கு மட்டும் கர்த்தரால் அனுப்பப்பட்ட தூதர் என்பதை பறை சாற்றுகின்றது. அதே நேரம் கர்த்தராகிய அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மது நபியவர்கள் தான் முழுமனித மனித சமுதாயத்திற்கும் தூதராகவும், அருட்கொடையாகவும் அனுப்பப்பட்டார்கள் என்பது பின்வரும் வசனம் மூலம் தெளிவாகின்றது.

'(நபியே), உம்மை அகிலத்தாருக்கு ஓர்அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை.'– அல் குர்ஆன்(21:107).

ஆக, இயேசு நாதர் கர்த்தரின் மகன் அல்ல, இறைத்தூரரே என்பதுதான் உண்மை. இயேசு பற்றி அல் குர்ஆன் கூறும் அனைத்து செய்திகளையும், அது உண்மைதானா என்பதனை உங்கள் பைபிளிடமே நீங்கள் கேட்டுத்தெறிந்து கொள்ளலாம். எனவே நீங்களே உண்மைக்கு சான்றாய் இருந்து கொண்டு, ஏன் சத்தியத்தைப் பின்பற்ற மறுக்கறீர்கள்? நிதானமாக சில வினாடிகள் சிந்தித்துப் பாருங்கள். சத்தியத்தை உணர உங்கள் சிந்தனைக்கு இடம் கொடுங்கள். மரணம் எமைத் துரத்துகின்றது. உடலை விட்டு நம் உயிர் பிரியுமுன் உண்மையை ஏற்றுக் கொள்வோம்.

சத்தியத்தை ஏற்க நாம் ஏன் மறுக்கிறோம் தெரியுமா? ஆம், நம் சமுதாயம். நம் குடும்பத்தினர் . எம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது மட்டும் தான் விடையே தவிர வேறில்லை.

உண்மை எமையழைக்கின்றது – நாமோ, நம் குடும்பத்தைத் திரும்பிப் பார்க்கிறோம், நம் சமுதாயம் எமைத்தடுத்து நிறுத்துகிறது. ஆனால் அந்த சமுதாயத்தினால் நாளை மறுமையில் நமக்கு ஒரு துளியளவு நன்மையாவது செய்து விட முடியுமா? என்றால் நிச்சயமாக இல்லவே இல்லை.

ஆகவே அன்பானவர்களே! சத்தியம் தெளிவாகின்ற போது, அதனைத் தட்டிக் கழிக்காமல் உணர்ந்து ஏற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனமாகும்.

கர்த்தராகிய அல்லாஹ் இறுதி இறைவேதத்தில் கூறுகிறார்: -

'சத்தியம் வந்தது, அசத்தியம் ஒழிந்தது, நிச்சம் அசத்தியம் ஒழிந்தே தீரும்' (இறுதி வேதம் 17:81)

தொடர்-4 : கர்த்தராகிய இறைவன் நாடினால்

இயேசு மட்டும் ஏன் இறை மகன்? : சத்தியத் தொடர்-2

எழுதியவர்: அபூ அரீஜ்

இயேசு தன்னைக் குறித்து புதிய ஏற்பாட்டில் மட்டும் கிட்டத்தட்ட (81) இடங்களில் தான் 'மனித குமாரன்' என்று கூறுகின்ற அதே நேரம், இயேசுவை இறைவனின் குமாரன் என்று நம்பி, அதைப் பிரச்சாரம் செய்யக் கூடிய கிறிஸ்தவ சகோதரர்கள் 'இயேசுவைத் தம் குமாரர்' என்று கர்த்தர் கூறுகின்றார் என்று பைபிள் கூறுவதை முதலாவது ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.

'அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி 'இவர் என்னுடைய நேச குமாரன்' இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது' (மத்தேயு 3:17)

இந்த வசனத்தை அடிப்படையாக வைத்து இயேசுவை இறைமகன் என்று நம்பக் கூடிய கிறிஸ்தவர்கள், அதே பைபிள் இன்னும் பலரை இறைமகன் என்று பைபிள் கூறுவதைக் கண்டு கொள்வதே இல்லை!!

'இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்ட புத்திரன்... என்று கர்த்தர் சென்னார்' (யாத்திராகமம் 4:22)

முந்தைய வசனத்தை விட இது தெளிவான வசனமாகும். இயேசுவைப் பற்றிக் கூறும் வசனத்தில் கர்த்தர் இவ்வாறு கூறியதாகக் காணப்படவில்லை. ஒரு அசரீரியான சப்தம் தான் இவ்வாறு கூறியதாகக் காணப்படுகின்றது. அது கடவுளின் சப்தமாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை, பிசாசு கூட இவ்வாறு விளையாடியிருக்க முடியும். முன்பொரு முறை பிசாசு இயேசுவை சோதித்ததாக மத்தேயு (4:9,10) வசனங்கள் கூறுகின்றன. எனவே இயேசுவை விட இஸ்ரவேல் தாம் கர்த்தரின் குமாரர் எனக் குறிப்பிடப்பட அதிகம் தகுதி பெறுகிறார்.

அதுமட்டுமல்ல, பவுல் எனப்படும் சவுலின் சொந்தக் கற்பனை தான் இக்கூற்று என்பதனை கீழ் வரும் வசனங்கள் குறிப்பிடுகின்றன.

'சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சில நாள் இருந்து, தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்' (அப்போஸ்தலர் 9:19,20).

உங்கள் சிந்தனைக்கு பைபிளில் இன்னும் இறைமகன்கள் (?) பட்டியல் தொடர்கின்றது!

'நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்' (சங்கீதம் 2:7)

என்று கர்த்தர் தாவீதை நோக்கிக் கூறியிருக்கிறார்.

மேலும் இன்னும் அநேக வசனங்களில்,

'அவன் (சாலமோன்) எனக்குக் குமாரனாய் இருப்பான். நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்' (முதலாம் நாளாகமம் 22:10)

'இஸ்ரவேலுக்கு நான் பிதாவாக இருக்கிறேன். எப்பிராயீம் என் சேஷ்ட புத்திரனாயிருக்கிறான்' (எரேமியா 31:9)

'நான் அவனுக்கு (சாமுவேலுக்கு)ப் பிதாவாயிருப்பேன். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்' (இரண்டாம் சாமுவேல் 7:14)

'நான் அவனுக்கு (தாவீதுக்கு)ப் பிதாவாயிருப்பேன். அவன் எனக்குக் குமாரனாய் இருப்பான்' (முதலாம் நாளர்கமம் 17:13)

இத்தனை தேவ குமாரர்களிருக்க இயேசுவை மட்டும் இறைவனின் மகன் என்று கூறுவது பைபிளின் போதனைக்கே முரணாகாதா? சிந்தித்து உணர்வீர்களாக. அதே நேரம் 'இறைமகன்' எனும் அடைமொழி 'கடவுளின் புத்திரர்கள்' எனும் கருத்தில் பைபிளில் பயன் படுத்தப்படவில்லை, மாறாக 'இறைவனின் அடியார்கள்' எனும் கருத்திலேயே பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இயேசு 'இறைமகன்' எனக் கூறப்படுவதால் இயேசுவை அழைத்து உதவி தேடக்கூடிய கிறிஸ்தவர்கள் அதே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள மற்றவர்களை அவ்வாறு அழைப்பதில்லையே அது ஏன்? இக் கேள்விக்கு கிறிஸ்தவ உலகில் விடை இல்லை!

என தருமை கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளே! எமது நோக்கம் உங்களை நோவினைப்படுத்த வேண்டும் என்பது துளி கூட கிடையாது. மாறாக நீங்கள் சிந்தித்து சத்தியத்தை உணர்ந்து தெளிவோடு எதிலும் செயலாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

இன்னும் பல வசனங்கள் இறைமக்கள் என பலரைக் குறிப்பிடுவதைப் பின்வரும் வசனங்களில் பார்க்கலாம்: -

உபாகமம் 14:1, சங்கீதம் 68:5, மத்தேயு 6:14-15, 5:9, 5:45, 7:11, 23:9, யோவான் 1:12, லூக்கா 6:35, அப்போஸ்தலர் 17:29, ரோமர் 8:16, இரண்டாம் கொரிந்தியர் 6:18

எனவே சிந்தியுங்கள் சகோதர, சகோதரிகளே!

இறைவன் தன்னுடைய இறுதி வேதத்தில் கூறுகிறான்: -

''சத்தியம் வந்தது, அசத்தியம் ஒழிந்தது, நிச்சயம் அசத்தியம் ஒழிந்தே தீரும்' (இறுதி வேதம் 17:81)

சத்தியத் தொடர்-3 : இறைத் தூதர் இயேசு நாதர்...

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றி பைபிள் : சத்தியத் தொடர்-1

எழுதியவர்: அபூ அரீஜ்

'நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன். அப்போது என்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாக வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருள்வார்.' (யோவான் 14:16)

'பிதாவிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக் குறித்துச் சாட்சி கொடுப்பார்' (யோவான் 15:26)

'நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் போகிறது உங்களுக்குப் பிரயேஜனமாயிருக்கும். நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார். நான் போவேனாகில் அவரை உங்களிடத்தில் அனுப்புவேன்' (யோவான் 16:7-11)

'சத்திய ஆவியாகிய அவர் வரும்போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல் தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்' (யோவான் 16:3)

'ஆகையால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கணிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்' (மத்தேயு 21:43)

'அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி, அவர்கள் சொன்னது சரியே. உன்னைப் போல ஒரு தீர்க்க தரிசியை நான் அவர்களுக்கூக அவர்கள் சகோதரர்களிடமிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் நாமத்திலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகேடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்' (உபாகமம் 18:17-19)

அன்பார்ந்த கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளே!

சற்று சிந்தித்து, பின் வரும் வினாக்களுக்கு விடை காண முன்வாருங்கள்: -

1) மேலேயுள்ள வாக்கியங்களில் கூறப்பட்டுள்ள, வரப்போகிற சத்திய ஆவியான தேற்றரவாளன் யார்?
2) அவர் சொல்லப் போகிற விடயங்கள் யாவை?
3) கர்த்தரின் நாமத்திலே அவர் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவிகேளாதவனின் நிலை என்ன?

கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளே, அந்த தேற்றரவாளர் வேறு யாருமில்லை. இந்த அகில உலக மக்களுக்கும் கர்த்தரின் சத்திய வாக்கினை எடுத்துக் கூறி மக்களை நல்வழி கூறி கர்த்தருடைய நேர்வழியை காட்டிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள்.

ஹீப்ரு மொழியிலிருந்து ஏனைய பாஷைகளுக்கு பைபிளை மொழி பெயர்க்கப்பட்ட போது, 'முஹம்மது' என்ற பெயர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தும் அதனை திட்டமிட்டு மறைத்து விட்டனர். உண்மை தானாகவே வெளிச்சத்திற்கு வந்து விட்டது. (பைபிளின் மூல நூலில் சாலமன் பாடல்கள் 5:16 ல் 'முஹம்மதிம்' என்று இருந்த பெயரை மொழி பெயர்க்கும் போது மாற்றி விட்டனர். ஹீப்ரு மொழியில் 'திம்' என்ற அடைமொழி மரியாதையைக் குறிக்கும் சொல்லாகும். பார்க்கவும் ஆதாரம்)

முஹம்மது என்ற பெயரை திரித்து தேற்றரவாளர் எனக் கூறப்பட்ட என்ற அந்த தீர்க்கதரிசி கூறிய விடயங்கள் தான் சத்திய மார்க்கமான இஸ்லாம்.

கர்த்தரின் நாமத்திலே அவர் (முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்ததைகளுக்கு கட்டுப்படாதவர்களை மறுமையில் கர்த்தர் தண்டிப்பார். (உபாகமம் 18:17-19)
எனவே என தருமை கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே, முஹம்மது (ஸல்) அவர்கள் குறித்தும் மற்றும் இஸ்லாம் குறித்தும் பைபிள் கூறும் கருத்துக்களை நீங்கள் சற்று நடுநிலையோடு சிந்தித்து தெளிவு பெற வேண்டுகிறோம்.

சத்தியத் தொடர்-2 : இயேசு மட்டும் ஏன் இறை மகன்?

Feb 24, 2008

தொழாதவனின் நோன்பு, தர்மம் போன்ற நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா?

எழுதியவர்: அபூ அரீஜ்

கேள்வி: -

தொழாதவனின் நோன்பு, தர்மம் போன்ற நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா?

பதில்: -


ஐங்காலத் தொழுகையை நிறைவேற்றுவது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் இருபாலர் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்: -

"நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது" (அல்-குர்ஆன் 4:103)

மேலும் இத்தொழுகையானது இஸ்லாத்தின் தூண்களில் இரண்டாம் இடத்தைப் பெருகின்றது. எக்காரணத்தாலும் தொழுகையை விடுவதற்கு இஸ்லாத்தில் இடமே கிடையாது. எந்தளவுக்கென்றால் யுத்தக்களத்திலும் கூட தொழுகையை நிறைவேற்றியாக வேண்டும். ஒழுச் செய்வதற்குத் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் தயம்மும் செய்யுமாறு ஏவப்பட்டுள்ளது. இது போன்ற இன்னும் பல காரணங்களால் பெரும்பாலான உலமாக்கள், 'வேண்டுமென்றே தொழுகையை விடுவது ஒருவனை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி விடும்' எனக் கூறியுள்ளனர். எனவே தவ்பாச் செய்து மீளுவது கடமையாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: -

"அவர்கள் தவ்பாச் செய்து (திருந்தி) தொழுகையை நிலைநாட்டி, ஜக்காத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள்" (அல்-குர்ஆன் 9:5)

மேலும் அல்லாஹ் கூறுகையில்: -

"அவர்கள் தவ்பாச் செய்து (திருந்தி), தொழுகையை நிலைநாட்டி, ஜக்காத்தும் கொடுத்தால் அவர்கள், மார்க்கத்தில் உங்கள் சகோதரர்களே" (அல்-குர்ஆன் 9:11)

எனவே இஸ்லாமிய சகோதரத்துவம் தொழுகை மூலமாக நிலைப்பது போன்று, தொழுகையை விடுவதன் காரணமாக அது இல்லாமல் போவதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

"நிராகரிப்புக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையே. எவன் அதனை விடுகின்றானோ நிராகரித்தவனாகின்றான்" (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)

அபு தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: -"எவனிடம் தொழுகை இல்லையோ அவனிடம் ஈமான் இல்லை"

ஒருவன் நோன்பு நோற்கிறான், ஆனால் தொழுவதில்லை. இவன் நிலை என்ன?

தொழாதவனுடைய நோன்பு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஏனென்றால் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டான் என்று ஒருவன் தீர்ப்பளித்தால் அவன் குற்றவாளியா? என இப்னு உதைமீன் (ரஹ்) அவர்களிடம் வினவப்பட்ட போது, பின்வருமாறு பதிலளித்தார்கள்: -

நோன்பு நோற்றாலும் தொழாததன் காரணத்தால் அத்தீர்ப்பு சரியானதே. ஏனென்றால் தொழுகையானது இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றாகும். தொழுகையில்லாமல் இஸ்லாம் நிலைபெறாது. எனவே தொழுகையை விட்டவன் நிராகரிப்பவனாகின்றான். மேலும் நிராகரிப்பாளனின் நோன்போ, தர்மமோ ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

அல்லாஹ் கூறுகிறான்: -

"அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை" (அல் குர்ஆன் 9:54)

மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தொழுகையற்ற நோன்பானது எவ்விதப் பயனும் அளிப்பதில்லை என்பது தெளிவாகின்றது. எனவே முதலாவதாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டுவிட்டு அடுத்ததாக தொழுகையை நிலைநாட்ட வேண்டும்.

Feb 18, 2008

சுவனப் பயணத்திற்கோர் சுவையான அழைப்பு

மூலம்: ஈத் அல் அனஸி
தமிழாக்கம்: அபூ அரீஜ்
நீ அல்லாஹ்விற்கு அருகிலிருப்பதை விரும்புகிறாயா?

“அடியான் தனது இரட்சகனுக்கு மிகவும் அருகாமையில் இருக்கும் நிலை அவன் சுஜுதில் இருக்கும் போது தான். எனவே பிரார்த்தனைகளை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.

ஒரு ஹஜ் செய்த நன்மையைப் பெற விரும்புகிறாயா?

“ரமளான் மாதத்தில் உம்ரா செய்வது ஒரு ஹஜ் அல்லது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்குச் சமமானதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

சுவனத்தில் உனக்கொரு வீட்டைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறாயா?

“எவனொருவன் அல்லாஹ்வுக்காக பள்ளியொன்றை கட்டுகிறானோ, அவனுக்கு அதே போலொரு வீட்டை அல்லாஹ் கட்டுகிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.

அல்லாஹ்வினது திருப்பொருத்தத்தைப் பெற நாடுகிறாயா?

“அடியான் உணவருந்தி விட்டு அதற்காக அல்லாஹ்வை புகழ்வதை அல்லது பானத்தை அருந்திவிட்டு அதற்காக அல்லாஹ்வைப் புகழ்வதையொட்டி அல்லாஹ் (அந்த அடியானைப்) பொருந்திக் கொள்கிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.

உன் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதை விரும்புகிறாயா?

“அதானுக்கும் இகாமத்திற்குமிடையில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவுத்.

ஒரு வருடம் முழுவதும் நோன்பு நோற்ற கூலி எழுதப்படுவதை விரும்புகிறாயா?

“ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் நோற்பது அந்த வருடம் முழுவதும் நோற்பதற்குச் சமமானதாகும்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

மலைகளை போன்ற நன்மைகள் கிடைப்பதை விரும்புகிறாயா?

“மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு ‘கிராத்’ அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு ‘கிராத்’ அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு ‘கிராத்’ என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

நபிகளார் (ஸல்) அவர்களுடன் சுவனத்தில் இருப்பதற்கு விரும்புகிறாயா?

நானும் அனாதைக்கு அபயமளிப்பவரும் சுவனத்தில் இவ்வாறு இருப்போம் என நபிகள் (ஸல்) அவர்கள் சுட்டு விரலையும், இணைத்துக் காட்டினார்கள்” ஆதாரம்: புகாரி.

அல்லாஹ்வின் பாதையில் போராடிய கூலியைப் பெற விரும்புகிறாயா?

கணவனை இழந்தவள், ஏழை போன்றோர்களிடத்தில் கவணம் செலுத்துபவர் புனிதப் போரில் போரிட்டவர் போலாவார்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்் புகாரி, முஸ்லிம்.

ரசூல் (ஸல்) அவர்கள் உனக்கு சுவனத்தைப் பொறுப்பேற்பதை விரும்புகிறாயா?

“எவர் தன் நாவையும், மருமஸ்தானத்தையும் பாதுகாப்பதாக எனக்கு வாக்களிக்கின்றாரோ அவருக்கு நான் சுவனத்தைப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

மரணத்திற்குப் பின்னும் உன் நல்லறங்கள் தொடர்வதை விரும்புகிறாயா?

ஒருவர் மரணித்தால் அவரது மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. (அவை): - நிலையான தர்மம், அல்லது பிரயோசனமுள்ள கல்வி, அல்லது சாலிஹான குழந்தையின் பிரார்த்தனை” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.

சுவனத்துப் புதையல் ஒன்றைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறாயா?

“லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என்று கூறிக் கொள்ளுமாறு நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மையைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறாயா?

“எவர் ‘இஷாத்’ தொழுகையை ஜமாத்தோடு தொழுகிறாரோ அவர் பாதி இரவை நின்று வணங்கியவர் போலாவார். எவர் சுப்ஹ் தொழுகையையும் ஜமாத்தோடு தொழுகிறாரோ அவர் முழு இரவும் தொழுததைப் போன்றதாகும்.” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.

அல்குர்ஆனில் முன்றில் ஒரு பகுதியை சில வினாடிகளில் ஓதுவதை ஆசைப்படுகிறாயா?

“குல் ஹுவல்லாஹ் அஹது…” அல்குர்ஆனில் முன்றில் ஒரு பகுதிக்குச் சமமானதாகும் என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.

உனது நன்மையின் தராசு கனமாக இருப்பதை விரும்புகிறாயா?

“அளவற்ற அருளாளனுக்கு மிகவும் விருப்பமான, நாவுக்கு இலகுவான, தராசுக்கு கணமான இரண்டு வசனங்கள்: “சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம்”. ஆதாரம்: புகாரி.

உன் இரணத்தில் விஸ்தீரணம் ஏற்படுவதையும், ஆயுள் நீடிக்கப்படுவதையும் விரும்புகிறாயா?

“எவரது இரணத்தில் விஸ்தீரணம் ஏற்படுவதை அல்லது தனது ஆயுள் நீடிக்கப்படுவதை விரும்புகிறாரோ அவர் இனபந்துக்களுடன் (உறவினருடன்) சேர்ந்து வாழட்டும்” ஆதாரம்: புகாரி

உன்னை அல்லாஹ் சந்திக்க விரும்புவதை ஆசைப்படுகிறாயா?

எவர் அல்லாஹ்வை சந்திப்பதை விரும்புகிறாரோ அவரை அல்லாஹ் சந்திக்க விரும்புகிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்: புகாரி.

அல்லாஹ்வுடைய பாதுகாப்பை விரும்புகிறாயா?

“எவர் சுபுஹுத் தொழுகையை நிறைவேற்றுகிறாரோ அவர் அல்லாஹ்வினது பாதுகாப்பிற்குள் வந்து விடுகிறார்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி.

உனது பாவங்கள் அதிகமாக இருந்தும் அவைகள் மன்னிக்கப்படுவதை விரும்புகிறாயா?

“எவர் ‘சுபுஹானல்லாஹி வபிஹம்திஹி’ என ஒரு நாளைக்கு நூறு தடவை கூறுகின்றாரோ, அவருடைய பாவங்கள் கடல் நுரையைப் போலிருந்தாலும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன”. ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

நரக நெருப்பை விட்டும் ஏழு வருட தூரம் நீ தூரமாக்கப்படுவதை விரும்புகிறாயா?

“எவர் அல்லாஹ்வுடைய பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முகத்தை நரக நெருப்பை விட்டும் ஏழு வருட தூரம் அல்லாஹ் தூரமாக்கி விடுகின்றான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி.

உன் மீது அல்லாஹ்தஆலா சலவாத்து சொல்வதை விரும்புகின்றாயா?

எவர் என் மீது ஒரு முறை ஸலவாத்து சொல்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத்துச் சொல்கின்றான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.

உன்னை அல்லாஹ் மேன்மைப்படுத்துவதை நீ விரும்புகின்றாயா?

“எவர் அல்லாஹ்வுக்கென்று தன்னைத் தாழ்த்திக் கொள்கின்றாரோ அவரை அல்லாஹ் மேன்மைப்படுத்துகிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.

Feb 17, 2008

மனிதப்படைப்பின் நோக்கம்

எழுதியவர்: அபூ அரீஜ்

மனிதனால் உருவாக்கப்படும் அனைத்து சாதனங்களுக்கும் அதன் நோக்கம் விலாவாரியாக பேசப்படுகின்றது. இன்றைய விஞ்ஞான உலகில் தினமும் ஒவ்வொரு புதிய பொருள் கண்டுபிடிக்கப்படுவதையும் அதன் நோக்கம் பற்றி பேசப்படுவதையும் தினசரி ஊடகங்கள் நம் சிந்தனைக்கு கொண்டு வரத்தான் செய்கின்றன. ஆனால் மனிதன் படைக்கப்பட்ட நோக்கம் பற்றி மட்டும் ஏன் தான் இந்த மனித இனம் சிந்திக்காமல் இருக்கின்றதோ நமக்குத் தெரியவில்லை!

இன்னும் ஒரு விடயம் என்னவென்றால், ஏதாவது ஒரு பொருள் உருவாக்கப்பட்டு அதன் எதிர்பார்ப்பு அல்லது நோக்கம் நிறைவேறாத போது அது ஓரங்கட்டப்படுவதையும் நாம் கண்டு கொண்டுதானிருக்கிறோம். எனவே நிச்சயமாக மனிதப்படைப்பிற்க்கு ஒரு உயர்ந்த நோக்கம் இருக்கத்தான் வேண்டும் என்பதனை உலக நடப்புக்களே நமக்கு உணர்த்துகின்றன.

உலக மதங்கள் மனிதப் படைப்பின் நோக்கம் பற்றி பல்வேறுபட்ட காரணங்களைக் கூறுகின்றன. உதாரணமாக சில மதங்களின் கோட்பாடுகள், கடவுள் ் விளையாடுவதற்காகத் தான் மனிதனைப் படைத்ததாகக் கூறுகின்றது. இதைத்தான் 'கடவுள் இரண்டு பொம்மையைச் செய்தான் தான் விளையாட; அவையிரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச் செய்தன தான் விளையாட' என்று ஒரு தமிழ்க் கவிஞன் பாடியிருக்கிறார். இவ்வாறு தான் ஒவ்வொரு மதமும், சித்தாந்தமும் பல்வேறுபட்ட கருத்துக்களைக் கூறிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இஸ்லாம் மட்டுமே மனிதன் ஏன் படைக்கப்பட்டான்? என்ற கேள்விக்கு பின் வரும் ஓர் உயர்ந்த நோக்கத்தைக் குறிப்பிடுகின்றது.

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)

என மனிதனைப் படைத்த அல்லாஹ், மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை இவ்வாறு கூறுகிறான்.

ஒவ்வொரு மனிதனது சிந்தனையும், எண்ண ஓட்டங்களும் வேறு படுவதாலும், அடிக்கடி அவனது சிந்தனை மாறுபடுவதாலும், கால ஓட்டத்தினால் உலகில் பற்பல மாற்றங்கள் உருவாதலினாலும் மனிதனுக்கு ஒரு நடுநிலையான, தொடர்ச்சியான வழிகாட்டுதல் எப்போதும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதனால் மனிதனைப் படைத்த அல்லாஹ் அந்த மனிதன் வழி தவறாமல் இருப்பதற்காக எல்லாக் காலங்களிலும் தனது தூதர்களை அச்சமூகங்களில் இருந்து தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தனது இறைச் செய்திகளைக் கொடுத்து அனுப்பி நேர்வழி காட்டி இருக்கிறான்.

இந்த சங்கிலித் தொடரான வழிகாட்டுதல் இல்லாமல் போகின்ற போதுதான் மனிதன் மிருகத்தைவிட மோசமான நிலைக்குப் போவதையும், மிருகத்தை விட கீழ்த்தரமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதையும் பார்க்கின்றோம். இதனைக் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் கலாச்சாரம், நவீனம், புதுமை என்ற பெயர்களில் சில கூட்டத்தினரையும், அதே போன்று பிறந்தது போலவே வாழ்வோம் என்ற கொள்கையில் நிர்வாண கோலமாக வாழ்ந்து கொண்டு எயிட்ஸ் நோயைத் தோற்றுவிக்கும் HIV கிருமிகளை உலகுக்கு ஏற்றுமதி செய்து கொண்டு வாழ்வதையும் பார்க்கின்றோம். சகிக்க முடியாத இந்த வாழ்க்கை முறை சமூகத்தை சாக்கடைக்குக் கொண்டு செல்கின்றன. இது ஒரு எடுத்துக் காட்டு ஆகும்.

மனிதன் உலக வாழ்க்கையிலும் உயர்ந்த நிலையில் வாழ்ந்து மறுமையிலும் உயர்ந்த வாழ்க்கையாகிய சுவனச் சோலையைச் சுவீகரித்துக் கொண்டவனாக மாற வேண்டும் என்பதுதான் அல்லாஹ்வின் நோக்கமாகும்.

மனிதன் ஏன் படைக்கப்பட்டான்? என்ற கேள்வியை மக்கள் மன்றத்தில் வைத்தோமானால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பல்வேறுபட்ட கோணங்களில் பதில்களை முன் வைப்பார்கள்.

அதேபோன்று மனிதனுக்கு மட்டும் ஆறறிவு கொடுக்கப்பட்ட நோக்கம் என்ன? என்று கேட்டால் அதற்கும் பல்வேறுபட்ட காரணங்களையும் நோக்கங்களையும் மனிதன் கூறுவான். உதாரணமாக, இந்த உலகில் மிகவும் அழகாக வீடு, வாசல்களை உண்டாக்கி வாழ அல்லது வாழ்க்கை முடியும் வரைக்கும் நல்ல நல்ல உணவுகளைக் கண்டு பிடித்து உண்டு உயிர் வாழ அல்லது பற்பல சாதனைகளை நிகழ்த்த என்று அடுக்கிக் கொண்டே போவார்கள். உண்மையில் மனிதன் நிதானமாக, நடுநிலைத் தன்மையோடு சிந்தித்தால், இது போன்ற காரணங்கள் அனைத்தும் முழுமையற்ற, மேலோட்டமான காரணங்களாகும் என்பதனை உணர்ந்து கொள்வான். ஏனெனில் மேற்கூறப்பட்ட காரணங்களை உள்ளடக்கிய அனைத்துப் பணிகளையும் மனிதனல்லாத மிருகங்கள், பட்சிகள், ஊர்வன போன்ற அனைத்தும் தினமும் செய்து கொண்டுதான் இருக்கின்றன. இது போக சில படைப்பினங்கள் மனிதனை விடவும் மிக நேர்த்தியாக, பிறர் உதவியில்லாமல் தமது காரியங்களையும் முறையாக நிவர்த்தி செய்து கொள்வதையும் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம்.

உதாரணமாக, பறவைகளில் தூக்கனாங் குருவியைப் போல் நம்மால் மிகமிக நுற்பமாக கூடு கட்டவே முடியாது! அதன் கூடு மெல்லிய நாறுகளினால் பின்னப்பட்டது, காற்றில் ஆடியவாறே தொங்கிக் கொண்டிருக்கும். மழையில் கூட நனையாது! எத்தனை ஆரோக்கியமான அறைகள்! முட்டையிட்டு அடைகாப்பதற்கு ஏற்ற முறையில் ஒரு தனியறை, முன் வாயிலறை, ஆண் குருவிக்கு வேறு அறை! இது மட்டுமா இரவு நேரங்களில் சூடற்ற குளிர்ந்த மின்விளக்குகள்! மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து வந்து கூட்டினுல் ஒட்டி வைத்து விடும், அது இறந்து விட்டால் வேறொன்றைப் பிடித்து வந்து ஒட்டி வைத்து விட்டு இறந்து போன பூச்சியை அகற்றி விடும். மனிதன் கூட தற்போது தான் மின் விளக்குகளைக் கண்டுபிடித்தான்.

இவ்வாறு அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன, பிறர் தேவையற்று தத்தமது தேவைகளை நிறை வேற்றுவனவாகத்தான் இருக்கின்றன. மனிதன் மட்டும் தான் மிகவும் பலவீனமுள்ளவனாகவும், பிறர் உதவியில் தங்கியிருப்பவனாகவும் காலத்தைக் கடத்துகின்றான்.

எனவே, நாம் கட்டாயம் சரியாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். உதாரணமாக, ஒரு சாதாரன பேனா வாங்கப் போனாலும் கூட நன்றாக நமது மூளையை உபயோகித்துத்தான் அந்தப் பேனாவை வாங்குகின்றோம். இந்தப் பேனா சிறந்ததா அல்லது மற்றதுவா?, இந்த நாட்டு உற்பத்தி சிறந்ததா அல்லது அந்நாட்டு உற்பத்தி சிறந்ததா?, கருப்பு நல்லதா நீலமா? என்று எத்தனை எத்தனை கேள்விகளைக் கேட்டு வியாபாரியைக் குடைகிறோம். அத்தோடு எழுதிப் பார்ப்பதற்கும் தவறுவதில்லை. சில நேரங்களில் அந்தப் பேனா எழுதாமல் போனால் கடைக்காரனை திட்டி விடுகிறோம்.

ஒரு பேனாவுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் கூட, நமக்கும் ஏக தெய்வத்திற்கும் இடையே இருக்கும் நிஜமான தொடர்பு பற்றித் தெறிந்து கொள்வதற்குக் கொடுப்பதில்லையே என்று நினைக்கும் போதுதான் வேதனையாக இருக்கின்றது.

நாம் சாதாரன ஒரு பொருள் வாங்குவதில் காட்டும் அக்கரையை விட பன்மடங்கு அக்கரையை நம் விடயத்திலும், நம் மதம் குறித்த விடயத்திலும், நாம் எதற்காப் படைக்கப் பட்டோம் என்ற கேள்விக்கு சரியான விடை காண்பதிலும் நாம் ஒவ்வொருவரும் ஆர்வம் காட்ட வேண்டும். இது ஒவ்வொரு புத்தி சுவாதீனமுள்ள ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும்.

நாம் மேலே குறிப்பிட்டுக் காட்டியுள்ள 'ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.' –(51:56) என்ற அல்-குர்ஆன் வசனமானது மிகவும் ஆழமான கருத்தை உள்ளடக்கியுள்ளது.

மேலோட்டமாக இவ்வசனத்தை வாசிக்கும் ஒருவர், தொழுகை, நோம்பு, ஸகாத்து, ஹஜ் போன்ற இன்னும் இதர வணக்கங்களிலேயே நம் காலத்தைக் கடத்தினால் ஏனைய விடயங்களில் நாம் ஈடுபடுவதில்லையா? உழைக்க வேண்டாமா? உண்ண வேண்டாமா? உறங்க வேண்டாமா? குடும்பம் நடத்த முடியாதா? போன்ற கேள்விகளைக் கேற்கலாம். அப்படியானால் இவ்வசனத்தின் கருத்துத்தான் என்ன?

அதாவது வணக்கம் என்பதனை சுருங்கக் கூறின், அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களை கவனத்திற் கொண்டு நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாகும். அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழி காட்டுதல்களுக்கமைய நம் ஐம்பெரும் கடமைகள் முதல் தினசரி வாழ்க்கை அம்சங்களும் அமையுமாக இருந்தால் அவையனைத்தும் வணக்கமாகவே கருதப்படும். எனவே ஒரு உண்மையான இறை அடியான் உறங்குவதும் வணக்கமே. ஏனெனில் அவன் தூங்கும் போதும் நபிகளாரின் நடை முறைகளைக் கவனத்தில் கொண்டு தான் உறங்குவான், அப்போது தூக்கமும் வணக்கமாக மாறி விடுகின்றன.

ஆக, மனிதப்படைப்பின் முழு நோக்கம், அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அனைத்து செயல்களிலும் இறை திருப்தியை மட்டும் கவனத்திற் கொண்டு, அண்ணலாரின் அடிச்சுவடுகளைப் பேணி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதேயாகும்.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைக் பின்பற்றி வாழ்ந்து மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Feb 16, 2008

புறக்கணிக்கப்பட்ட சலாம்

M.அன்வர்தீன், அல்-காஃப்ஜி, சவுதி அரேபியா (புது ஆத்தூர்)

இந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் உருவாக்கி அவற்றிலே மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகத் தந்துள்ளான். அவற்றில் ஒன்று தான் முகமன் (சலாம்) கூறுதல் ஆகும்.

இன்றைய காலக்கட்டங்களில், நம்மிடையே ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சலாம் கூறுதல் என்பது மிக அரிதாகிவிட்டது. அப்படியே சொன்னாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு பார்த்து சலாம் கூறி வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் சலாம் கூறுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், '(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6236

முழுமையாக ஸலாம் கூறுவதன் சிறப்பு: -

சிலர் சலாம் கூறும் போது புரியும் படியாகவோ அல்லது முழுமையாகவோ கூறுவதில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் சகாபாக்களிடம் அமர்ந்திருக்கும் போது ஒரு சஹாபி வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் என்றார். நபி (ஸல்) அவர்கள் பத்து என்று கூறினார்கள். சிறிது நேரம் சென்ற பிறகு மற்றொரு சஹாபி வந்து அஸ்ஸலாமு அலைலக்கும் வரஹ்மத்துல்லாஹி என்று கூறியபோது, நபி (ஸல்) அவர்கள் இருபது என்றார்கள். மற்றொரு சஹாபி வந்து அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு என்று கூறிய போது, நபி (ஸல்) அவர்கள் முப்பது என்று கூறினார்கள். சஹாபாக்கள் ஆர்வமிகுதியால் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்ட போது, முதலில் சலாம் கூறியவருக்கு பத்து நன்மைகள், இரண்டாவது சலாம் கூறியவருக்கு இருபது நன்மைகள், முன்றாவது சலாம் கூறியவருக்கு முப்பது நன்மைகள் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.

'சலாம்' எனும் முகமனைப் பரப்ப வேண்டும்: -

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வருகிறது: -

உங்களிடையே ஸலாத்தைக் கொண்டு பரப்புங்கள். சலாம் சொல்வதால் இரு உள்ளங்களுக்கு இடையே இணக்கம் ஏற்படுகிறது.

நோயாளியிடம் நலம் விசாரிக்கும்படியும், ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லும்படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -உங்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக என) பதில் சொல்லும்படியும், (உன்னை நம்பிச்) சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், 'சலாம்' எனும் முகமனைப் பரப்பும்படியும், விருந்து அழைப்பை ஏற்கும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப்(ரலி) , ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5175)

வீடுகளில் நுழையும் முன் சலாம் கூறுவதன் அவசியம்: -

நம்முடைய வீட்டிலோ அல்லது பிறருடைய வீட்டிலோ நுழையும்போது நம்மில் எத்தனை பேர் சலாம் சொல்லி நுழையக் கூடியவர்களாக இருக்கிறோம்?. பிறருடைய வீட்டில் நுழையும் போது சமையல் வாசனை முக்கைத் துளைத்தவுடன் இன்று என்ன பிரியானி சமையலா? என்று கேட்வாறு உள்ளே நுழைகிறோம். ஆனால் இஸலாம் வலியுறுத்திக் கூறும் சலாம் சொல்வதில்லை அல்லது மறந்து விடுகிறோம்.

அத்தியாயம் 24, ஸூரத்துந் நூர் (பேரொளி), வசனம் 27 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).

நபி(ஸல்) அவர்கள் (சபையோருக்கு அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் (மக்கள் நன்கு விளங்கிக் கொள்வதற்காக) அதனை மூன்று முறை திரும்பச் சொல்வார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6244

கணவன் மனைவிக்கும், பெரியவர் சிறியவருக்கும் சலாம் கூறுதல்: -

கணவன் மனைவிக்கும், பெரியவர் சிறியவருக்கும் சலாம் கூறக் கூடாது என்ற தவறான எண்ணம் நம்மிடையே காணப்படுகிறது. இது தவறானதாகும். நபி (ஸல்) அவர்கள் வீட்டிலே நுழையுமுன் மனைவிகளுக்கும், சிறியவர்களுக்கும் முந்திக்கொண்டு சலாம் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6231

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறுதல்: -

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறலாமா அல்லது அவர்களுடைய சலாத்திற்கு பதில் கூறலாமா? என்பதில் ஒரு சில அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், பெரும்பாலான அறிஞர்கள் மாற்றுமத சகோதர, சகோதரிகளுக்கும் சலாம் கூறுவதை ஆதரிக்கின்றார்கள்.

அத்தியாயம் 4, ஸூரத்துன்னிஸாவு (பெண்கள், வசனம் 86 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

இந்த வசனத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் என்று அல்லாஹ் குறிப்பிடவில்லை. மேலும் மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கும் சலாம் கூறுவதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தின் பால் நல்லெண்ணம் கொண்டவர்களாக ஆகுவதற்குரிய சந்தர்ப்பமும் சகோதரத்துவமும் அதிகரிக்கும்.

மற்ற முகமன் கூறுவதிலுள்ள சிக்கல்கள்: -

இன்றைய காலக்கட்டத்தில் வழக்கத்தில் வணக்கம், நல்ல காலை பொழுது அல்லது நல்ல மாலைப் பொழுது, காலை, மாலை வணக்கம் போன்ற பலவிதமான முகமன்கள் இருக்கின்றன. அவைகளை எல்லா நேரங்களிலும் அல்லது எல்லா சூழ் நிலைகளிலும் பொருந்தக் கூடியதா என்றால் நிச்சயமாக இல்லை. ஒருவருடைய மனைவியோ அல்லது வேறு உறவினரோ இறந்து அவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்ற வேளையில் அவரிடம் சென்று Good Morning அல்லது Good Evenining என்று கூறினால் அது எப்படி அவரை கேலிக்குரியதாக்கும் என நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு மனிதர்களால் உருவாக்கப்பட்ட முகமன்கள் அனைத்தும் குறையுடைதாகவே இருக்கிறது.

ஆனால் அனைத்தும் அறிந்தவனான அல்லாஹ் நமக்கு கற்றுத்தந்த இந்த அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) என்ற இந்த முகமன் காலை, மாலை, இரவு போன்ற எந்த நேரத்திலும், துக்கம், இன்பம் போன்ற எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவருக்கு கூறுவதற்கு மிகப் பொருத்தமானதாக இருக்கிறது.

எனவே சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வால் அருளப்பட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட சலாத்தை நாம் ஒவ்வொருவரும் மற்றவரிடம் பரப்பி நம்முடைய உள்ளங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வல்ல அல்லாஹ் அருள்புரிவானாகவும்.

பலவாறான தொழுகை முறை வழக்கத்திலிருக்க சரியான தொழுகை முறையை அறிவது எப்படி?

கேள்வி: -

முஸ்லீம்களில் ஹனஃபி, ஷாபி, மற்றும் தவ்ஹீது வாதிகள் என பலவாறாகத் தொழுகை நடத்துகிறார்களே? சரியான தொழுகை முறையை அறிவது எப்படி?


பதில்: -
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: -

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. அல்குர்ஆன் (33:21)

மேலும் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு தொழுகையின் முறை குறித்து வழிகாட்டிச் சென்று இருக்கிறார்கள்.

'என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்'

எனவே சகோதர சகோதரிகளே, மேற்கண்ட திருமறை வசனம் மற்றும் நபிமொழி நமக்கு உணர்த்துவது என்னவென்றால்: -

1) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழகிய முன் மாதிரி இருக்கிறது.
2) எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையே நம் வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் குறிப்பாக வணக்க வழிபாடுகளில் முக்கியமாகப் பின்பற்ற வேண்டும்.
3) நபி (ஸல்) அவர்களின் கூறியதற்கிணங்க அவர்கள் இறைவனை எவ்வாறு தொழுதார்களோ அவ்வாறே நாம் தொழ வேண்டும்.

முதலில் நாம் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகளைப் சரியான முறையில் பேணி நடந்ததில் இந்த உலகத்தில் நபி (ஸல்) அவர்களை மிஞ்சியவர்கள் யாரும் இருக்க முடியாது.

எனவே ஒருவர் தொழுகையின் செயல்களான தக்பீர் கூறி கையை உயர்த்துதல், கை கட்டுதல், குர்ஆன் ஓதுதல், ருகூவு செய்தல், சஜ்தா செய்தல், இருப்புகளில் இருத்தல் மற்றும் அவைகளில் ஓத வேண்டிய துஆக்கள் போன்றவைகளை ஆய்வு செய்து தமது இந்த செயல்கள் நபி (ஸல்) அவர்களின் செயல் முறைகளுக்கு உட்பட்டது தானா? தாம் செய்யும் இந்த செயல்முறைகளுக்கு நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம் இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும். இந்த செயல்களை அவர் எத்தனை தலைமுறைகளாகப் பின்பற்றி வந்திருந்தாலும் சரியே!. அவைகள் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளுக்கு உட்பட்டிருந்தால் நிச்சயமாக தொடர வேண்டும். இல்லையெனில் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு நபி (ஸல்) அவர்களின் வழிமுறை என்ன என்பதை தேட வேண்டும்.

இறைவனருளால் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நபி வழித்தொகுப்புகள் எளிய தமிழில் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் நபி வழியில் எவ்வாறு தொழவேண்டும் என ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துவிட்டன.

மேலும் 'நபி (ஸல்) அவர்களின் தொழுகை முறை எவ்வாறிருந்தது' என ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் பல இணைய தளங்களில் இலவசமாக தமிழில் வெளியிட்டிருக்கிறார்கள்.

எனவே இன்றைய காலகட்டத்தில் ஒருவர் நபி (ஸல்) அவர்களின் தொழுகை முறையை எளிதில் அறிந்துக் கொள்வதற்குரிய அனைத்து சாத்தியக் கூறுகளும் இருக்கின்றது.

மரியாதைக்குரிய நான்கு இமாம்கள்: -

மரியாதைக்குரிய நான்கு இமாம்களும் தங்களுக்கு கிடைக்கப் பெற்ற செய்திகளின் அடிப்படையிலே கூறியிருக்கிறார்கள். நான்கு இமாம்கள் பின்பற்றிய வழிமுறைகளிலும் தொழுகையின் அடிப்படைக் கடமைகளான கிப்லாவை முன்னோக்குதல், தக்பீர் கூறுதல், நிலை நிற்றல், சூரத்துல ஃபாத்திஹா ஓதுதல், ருகூவு செய்தல், சஜ்தா செய்தல் போன்றவற்றில் பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை. அனைத்து இமாம்களின் கருத்துக்களும் ஒருமித்ததாகவே இருக்கிறது.

இருப்பினும் தொழுகையின் மற்ற செயல்களான கையை எங்கே கட்டுவது, சூரா பாத்திஹாவிற்குப் பிறகு சப்தமிட்டு ஆமீன் கூறுவது அல்லது மெதுவாக கூறுவது, இருப்புகளில் விரல் அசைத்தல், தொழுகையில் ஓதக்கூடிய துஆக்கள் போன்வற்றில் அவர்களுக்கிடையே சிறிய வேறுபாடுகள் காணப்படுகிறது.

இச்சிறிய வேறுபாடுகளைக் களைந்துக் கொள்ள அந்த்தந்த இமாம்களைப் பின்பற்றுபவர்கள் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை ஆராய்வாரேயானால் அவற்றிலிருந்து இன்ஷா அல்லாஹ் தெளிவு பெறுவார்.

எனவே மிகச்சரியான முறையில் தொழ விரும்பும் ஒருவர் தம்முடைய தொழுகையின் அனைத்து செயல்களையும் 'என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்' என்ற நபிமொழிக்கேற்ப அமைத்துக் கொள்ள வேண்டும். எனவே அவர் அனைத்து வழி முறைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு நபி (ஸல்) அவர்களின் வணக்க முறைகள் எவ்வாறு இருந்தது என்பதை அறிந்துக் கொண்டு அதையே தம்முடைய வணக்க முறைகளாக தேர்ந்தெடுத்துக் கொள்வதே மிக சரியான வழியாகும்.

அல்லாஹ் நம் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் தொழுத முறையில் தொழக் கூடியவர்களாக ஆக்கியருள்வானாகவும். ஆமீன்.

மன்னிக்கப்படாத பாவம் : உதாரணம்-1 (பாகம்-4)

உதாரணம்-1: -

ஒருவர் சிங்கப்பூரிலிருந்து கொண்டு அல்லது உலகின் வேறு எந்த மூலையில் இருந்துக் கொண்டோ நாகூரில் அடக்கமாகியிருப்பதாக் கூறப்படும் ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ்விடம் யா ஷாகுல் ஹமீது பாதுஷாவே என்னுடைய இன்ன தேவையை நீங்கள் நிறைவேற்றித் தந்தால் நான் தங்களின் இடத்திற்கு வருகை தந்து தங்களுக்கு காணிக்கை செலுத்துகிறேன் என நேர்ச்சை செய்வதாக வைத்துக் கொள்வோம்.

இந்த இடத்தில் நாம் இவருடைய வேண்டுதலை ஆய்வு செய்தோமேயானால் இவர் பல வகைகளில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவராகிறார். அவைகளாளாவன: -

1) வணக்க வழிபாடுகளில் இணை வைப்பது: -

அல்லாஹ்விடம் மாத்திரமே செய்ய வேண்டிய பிரார்த்தனையை , துஆவை ஷாகுல் ஹமீது அவுலியாவிடம் செய்தல்

அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டிய நேர்ச்சையை ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கு செய்தல்

2) அல்லாஹ்வுடைய பண்புகளில், ஆற்றல்களில் இணை வைப்பது: -

அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளாகிய எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் (அஸ் ஸமீவுன்) மற்றும் ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் (பஷீரன்) என்ற பண்புகள், ஆற்றல்கள் ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் இருப்பதாகக் கருதுவது

அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்பாகிய ஒருவரின் இதயத்தில் உள்ள இரகசியத்தை அறியும் சக்தி உடையவன் என்ற பண்பை, ஆற்றலை ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் இருப்பதாகக் கருதி அவரும் மனிதர்களின் இதயங்களிலுள்ளவற்றையெல்லாம் அறிகிறார் என நம்புவது

அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்பாகிய பிரார்த்தனையை செவிமெடுத்து அதை நிறைவேற்றித் தரும் ஆற்றல் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் இருப்பதாக கருதுவது.

சகோதர, சகோதரிகளே இங்கு நாம் கவனமாக சிந்திக்க வேண்டும். ஏனெனில் அறிந்தோ அல்லது அறியாமலோ சர்வ சாதாரணமாக நம்மில் சிலர் செய்கின்ற இந்த வேண்டுதலில் இத்தனை வகையான ஷிர்க் நிறைந்துள்ளது. ஒருவர் மேற்கண்ட உதாரணத்தில் உள்ள பிரார்த்தனை (துஆ) செய்தல் மற்றும் நேர்ச்சை செய்தல் போன்ற வணக்கங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டியவை என்றும், மேற்கண்ட உதாரணத்தில் கூறப்பட்ட பண்புகள் அல்லாஹ்வுக்கு மற்றுமே உரித்தானது என்றும் உணர்ந்துக் கொண்டால் அவர் இன்ஷா அல்லாஹ் இத்தகைய இணை வைத்தல்களிலிருந்து தவிர்ந்துக் கொள்வார். இவற்றை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஒளியில் ஆராய்வோம்.

துஆ (பிரார்த்தனை) செய்வதும் ஒரு வணக்கமே!: -

அல்லாஹ் கூறுகிறான்: -

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; 'நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்' என்று கூறுவீராக (அல் குர்ஆன் 2:186)

உங்கள் இறைவன் கூறுகிறான்: 'என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள். (அல் குர்ஆன் 40:60)

மேலும் அல் குர்ஆனின் வசனங்கள் 2:286, 7:55, 18:28, 35:14, 72:18 அனைத்தும் அல்லாஹ்விடமே பிரார்த்தனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

பிரார்த்தனை (துஆ) ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் -ரலி, நூல்:அபூதாவூத், திர்மிதி)

மேற்கண்ட வசனங்கள் மற்றும் நபி மொழியில் இருந்து நாம் பெறும் தெளிவுகள் யாவை எனில்: -

துஆ ஒரு வணக்கமாகும்.

அல்லாஹ் சமீபமாக இருக்கிறான்.

பிரார்த்தனைக்கு விடையளிக்கிறான்.

அல்லாஹ்விடமே பிரார்த்திக்க (துஆ) செய்ய வேண்டும்

எனவே மேற்கண்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் நமது தேவைகளை அல்லாஹ்விடமே பிரார்த்திக்க வேண்டும். ஷாகுல் ஹமீது அவுலியாவிடமோ அல்லது வேறு எந்த வலியிடமோ, நபியிடமோ பிரார்த்தித்தால் அது ஷிர்க் எனப்படும் மன்னிக்கபடாத மாபெரும் பாவமாகும்.

நேர்ச்சை செய்வதும் ஒரு வணக்கமேயாகும்: -

நேர்ச்சை செய்வது ஒரு வணக்கம் என்பதற்கு பின்வரும் குர்ஆன் வசனங்கள் சான்றுகளாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: -

இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர். (அல் குர்ஆன் 2:270)

அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும். (அல் குர்ஆன் 76:7)

எனவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் நேர்ச்சை என்பதுவும் ஒரு வணக்கமே. அதை அல்லஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டும். அதைவிடுத்து ஷாகுல் ஹமீது அவுலியா மற்றும் இன்னும் பிற அவுலியாவுக்குச் செய்தோமேயானால் அது ஷிர்க் என்னும் இணை வைத்தலைச் சேரும்.

எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் அல்லாஹ் மட்டுமே: -
ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் அல்லாஹ் மட்டுமே: -

திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக அஸ் ஸமீவுன் என கூறுகிறான். இதற்கு ஒருவர் எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும், எத்தகையை சூழலில் இருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் வல்லமை, ஆற்றல் பெற்றவன் என பொருள்படும். மேலும் ஒரே நேரத்தில் பல கோடி நபர்கள் அழைத்தாலும் அவர்களின் அழைப்பையும் கேட்கக் கூடியவன் எனவும் பொருள்படும். இந்த பண்பு, ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் இல்லை.

மேலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக பஷீரன் என கூறுகிறான். இதற்கு அல்லாஹ் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியவன் என பொருள்படும். அதாவது ஒருவர் எங்கிருந்துக் கொண்டும் மேலும் எத்தகைய சூழலில் இருந்துக் கொண்டும் அழைத்தாலும் அவரைப் பார்க்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் அவன் அவனுடைய படைப்பினங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடிய ஆற்றல் உள்ளவனாகவும் இருக்கிறான். இந்த ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் இல்லை.

யாராவது ஒருவர் தாம் சிங்கப்பூரிலிருந்து ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ்வை அழைக்கும் போதும், அதே நேரத்தில் உலகில் வேறு எந்த இடத்திலிருந்துக் கொண்டும் அழைக்கக் கூடிய பல்லாயிரக்கணக்காணோர்களைப் பார்த்து அவர்களின் அழைப்பைச் செவிமெடுக்கிறார் என நம்புவது அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய அஸ் ஸமீவுன் மற்றும் பஷீரன் என்ற நாமங்களை, பண்புகளை இறைவனல்லாத ஷாகுல் ஹமீது அவுலியாக்கு இணை கற்பிப்பது போலாகும்.

அவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கேட்கும் தன்மையையும் (அஸ் ஸமீவுன்) மற்றும் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்கக்கூடியவன் (பஷீரன்) என்ற தன்மையையும் அல்லாஹ்வுக்கு மட்டுமல்லாமல் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் இருப்பதாக நம்மி அல்லாஹ்வின் அந்தப் பண்புகளில், ஆற்றல்களில் இணை வைத்தவராவார்.

அல்லாஹ் கூறுகிறான்: -

எவரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், "அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்." (அல் குர்ஆன் 4:134)

இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே: -

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: -
மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் - நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன் (அல்குர்ஆன் 67:13)

நம் மனதில் உள்ள நம்முடைய தேவைகளை அல்லது எண்ணங்களை நாம் வெளியே சொன்னால் தவிர மற்றவர்களால் அறிந்து கொள்ள இயலாது என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ் மட்டும் நாம் மனதிற்குள் நினைப்பதையும் வெளிப்படையாகப் பேசுவதையும் அறிகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: -
அன்றியும், அல்லாஹ் நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் அறிகிறான். (அல் குர்ஆன் 16:19)

வெளிப்படையாக (நீங்கள் பேசும்) பேச்சையும் அவன் நிச்சயமாக அறிகிறான்; நீங்கள் (இதயத்தில்) மறைத்து வைப்பதையும் அவன் (நிச்சயமாக) அறிகிறான் (அல் குர்ஆன் 21:110)

மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில்: -

உள்ளங்களில் மறைத்து வைப்பதை அறிபவனும்,

இதயங்களிலுள்ள இரகசியத்தை அறிபவனும்,

மனிதர்களின் மனதில் உள்ள தேவைகளை அறிபவனும்

அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பது உறுதியாகிறது. ஆனால் ஒருவர் இந்தப் பண்புகள், ஆற்றல்கள் ஷாகுல் ஹமீது அவுலியாவிற்கும் உண்டு அதனால் அவர் சிங்ப்பூரிலிந்து கேட்கும் அவரது தேவைகளை அல்லது அவருடைய மனதில் எண்ணியிருக்கும் நாட்டங்களை ஷாகுல் ஹமீது அவுலியா நிறைவேற்றித் தருகிறார் என நம்பிக்கை கொண்டு அதன்படி செயல்படுவாராயின் நிச்சயமாக அவர் அல்லாஹ், தனக்கு மட்டுமே இருக்கக் கூடியதாக கூறும் அந்தப் பண்புகளை, ஆற்றல்களை அவர் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் பங்கிடுவதன் மூலம் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவராக கருதப்படுவார்.

இவ்வாறு அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்: -

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் - இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (அல் குர்ஆன் 29:42)

மேலும், இதய இரகசியங்களை அறிந்தவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று பல வசனங்கள் கூறுகின்றன. இது பற்றிய விளக்கத்தை 'இதய இரகசியத்தை அறிபவன் அல்லாஹ்வே' என்ற தலைப்பில் பார்க்கவும்.

பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே: -

நாம் எங்கிருந்துக் கொண்டு துஆ (பிரார்த்தனை) கேட்டாலும், எத்தகைய சூழ்நிலைகளில் இருந்துக் கொண்டு அழைத்தாலும் நம்முடைய அழைப்பச் செவியேற்று அதற்கு பதிலளிப்பவன், அந்த தேவைகளை நிறைவேற்றுபவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.

அல்லாஹ் கூறுகிறான்: -

உங்கள் இறைவன் கூறுகிறான்: 'என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.' (அல் குர்ஆன் 40:60)

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; 'நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்' என்று கூறுவீராக. (அல் குர்ஆன் 2:186)

'உங்கள் இணை (தெய்வங்)களை அழையுங்கள்' என்று (அவர்களுக்குச்) சொல்லப்படும். அவர்களை இவர்கள் அழைப்பார்கள்; ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள்; மேலும், அவர்கள் வேதனையைக் காண்பார்கள். அவர்கள் நேர்வழியில் சென்றிருந்தால் (இந்நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்). (அல் குர்ஆன் 28:64)

நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள். (அல் குர்ஆன் 35:14)

உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை. (அல் குர்ஆன் 13:14)

'எனக்கு இணையானவர்கள் என எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள்' என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்.' (அல் குர்ஆன் 18:52)

எனவே எனதருமை சகோதர சகோதரிகளே மேற்காணும் வசனங்களின் மூலம் நாம் பெறும் படிப்பினைகளப் பற்றி சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த வசனங்களின் மூலம் நாம் பெறும் தெளிவுகள் யாவை எனில்: -

பிரார்த்திப்பவரின் பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே

அல்லாஹ்விடம் மாத்திரமே பிரார்த்தனை செய்யவேண்டும்

அல்லாஹ்வைத்தவிர மற்றவர்களிடம் பிரார்த்தனை செய்தால் அவர்களால் அந்தப் பிரார்த்தனையைச் செவியேற்க இயலாது.

கியாம நாள் வரை அவர்களை அழைத்தாலும் அவர்களால் பதிலளிக்க இயலாது

கியாம நானில் அல்லாஹ்வுக்கு இணை வைத்ததை அவர்கள் நிராகரித்து விடுவார்கள்.

அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்பவருக்குத்தான் அல்லாஹ் நேர்வழி காட்டுவான்.

எனவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் ஒருவர் பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே என நம்பிக்கை கொண்டு அவனிடமே பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆனால் ஷாகுல் ஹமீது அவுலியாவும் நம்முடைய பிரார்த்தனையைச் செவிமெடுத்து நமக்கு பதிலளித்து நம்முடைய தேவைகளைப் பெற்றுத்தருகிறார் என நம்பிக்கைக் கொண்டால் அது ஷிர்க் என்னும் இணை வைத்தலைத் தவிர வேறொன்றுமில்லை.


அடுத்து....

மன்னிக்கப்படாத பாவம் : ஷிர்குல் அக்பர் ஒரு விளக்கம் (பாகம்-3)

இந்த சிறிய ஆய்வுக்கட்டுரையில் ஷிர்குல் அக்பர் என்று சொல்லப்படக்கூடிய மாபெரும் இணைவைத்தல் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் ஆராய்வோம்.

ஷிர்குல் அக்பர் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்படவேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்கு அல்லாதவர்களுக்கு செய்வதும், அல்லாஹ்வுடைய பண்புகளை ஆற்றல்களை பிறருக்கு இருப்பதாக கருதுவதும் என பார்த்தோம்.

நம்முடைய சமுதாயத்தில் உள்ளவர்களில் பலர் இஸ்லாத்தின் மூல மந்திரமான 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்பதன் பொருள் அறியாமல் தான் இந்த ஷிர்க் என்ற கொடிய பாவத்தில் சிக்கி உழல்கின்றனர். வணக்கம் என்றால் என்ன என்று கேட்டால் அவர்கள் கூறுவது தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் என்பார்கள். வணக்கம் என்பது இவைகள் மட்டுமன்று. அல்லாஹ்வும் அவனது தூதரும் (ஸல்) எவைகளையெல்லாம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்ய வேண்டுமென்று கட்டளையிட்டு இருக்கிறார்களோ அவைகள் அனைத்தும் வணக்கமாகும். அவற்றை அல்லாஹ்வை விடுத்து மற்றவருக்கு செய்தால் அவைகளும் ஷிர்கின் வகையைச் சேர்ந்ததாகும்.

உதாரணமாக பின்வரும் அனைத்தும் வணக்கத்தின் வகைகளாகும். அவைகளை அல்லாஹ்வுக்கு மட்டுமே நாம் செய்ய வேண்டும்.

- துஆ (பிரார்த்தனை) செய்தல்
- ருகூவு / சஜ்தா செய்தல்
- அழைத்து உதவி தேடுதல்
- பாதுகாவல் தேடுதல்
- நேர்ச்சை செய்தல்
- தவாபு செய்தல்
- சத்தியம் செய்தல்
- குர்பானி கொடுத்தல்
- ஆதரவு / தவக்குல் வைத்தல்
- அல்லாஹ்வைப் போல் பிறரை நேசித்தல்

ஒருவர் மேற்கண்ட அனைத்து செயல்களுமே வணக்கத்தின் வகைகள் என்று அறிந்துக் கொள்வாராயின் இன்ஷா அல்லாஹ் அவர் இந்த வணக்க முறைகளை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்வதிலிருந்தும் தவிர்ந்துக் கொள்வார். ஆனால் இவைகளும் வணக்கமே என்று புரிந்துக் கொள்வதில் தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர்.

மேலும் ஒருவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக்கூடிய பண்புகள் மற்றும் ஆற்றல்கள் யாவை என அறிந்துக் கொள்வராயின் அவற்றில் இணை வைப்பதிலிருந்தும் தவிர்ந்துக் கொள்வார் இன்ஷா அல்லாஹ்.

இந்த சிறிய ஆய்வுக் கட்டுரையில் ஒரு சில உதாரணங்களின் மூலம் எவ்வாறெல்லாம் மக்கள் அல்லாஹ்வுக்கு அறிந்தோ அல்லது அறியாமையினாலோ இணை கற்பிக்கின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.

அடுத்து....

மன்னிக்கப்படாத பாவம் : ஷிர்க் என்றால் என்ன (பாகம்-2)

ஷிர்க் என்றால் என்ன?

ஷிர்க் என்பது தவ்ஹீத் (அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்) என்பதற்கு நேர்மாற்றமான அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலாகும்.

அதாவது ஷிர்க் என்பது,

- அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாத பிறருக்கு செய்வது

- அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய ஆற்றல்களில் சிலவற்றை அல்லாஹ் அல்லாத பிறருக்கும் இருப்பதாக கருதுவது

ஆகியவையாகும்.

ஷிர்கின் வகைகள்: -

ஷிர்கில் மூன்று வகைகள் உள்ளன. அவைகளாவன: -
1. பெரிய ஷிர்க்
2. சிறிய ஷிர்க்
3. மறைமுக ஷிர்க்

பெரிய ஷிர்க் என்றால் என்ன?அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்படவேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாதவைகளுக்கு செய்வது பெரிய ஷிர்க் ஆகும்.

சிறிய ஷிர்க் என்றால் என்ன?

அல்லாஹ்வுக்காக செய்யவேண்டும் என்ற நோக்கமில்லாமல் பிறர் பார்த்து பாராட்ட வேண்டும் என்று கருதி வணங்குவது அல்லது

பிறர் தம்மை தவறாக நினைத்து விடக் கூடாது என்பதற்காகவோ அல்லாஹ்வை வணங்குவது

இவ்வாறு வணக்கம் புரிவது சிறிய ஷிர்க் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் சிறிய ஷிர்க் குறித்து மக்களை எச்சரித்துள்ளார்கள்.

மறைவான ஷிர்க் என்றால் என்ன?

மறைவான ஷிர்க் என்பது அல்லாஹ் நம்மீது விதித்துள்ள கட்டளைகளை ஏற்று அதன் மீது திருப்தி கொண்டு அதன்படி செயல்படாமல் அவற்றை அலட்சியம் செய்வதாகும்.

அடுத்து....

மன்னிக்கப்படாத பாவம் : இணை வைத்தலின் தீமைகள் (பாகம்-1)

அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.

வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாரும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள் மீதும், நம் மீதும் மற்றும் கியாம நாள் வரை அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடிய முஸ்லிம்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக. ஆமீன்.

அன்பான சகோதர சகோதரிகளே, அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்: -

'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்' (அல்குர்ஆன் 4:116)

இந்த வசனத்தில் அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான் என்று கூறியிருப்பதை சற்று கவனத்துடன் ஆராயவேண்டும். ஏனென்றால் இறைவனின் மன்னிப்பே கிடைக்காத இணைவைப்பது என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொண்டு அவற்றிலிருந்து முற்றிலுமாக தவிர்ந்து இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.

இணைவைக்கும் ஒருவருக்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்காததோடு மட்டுமில்லாமல் அவர் தம்முடைய வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் அழிந்து நிரந்தர நரகத்திற்கு வழிவகுக்கும்.

இணைவைத்தலின் தீமைகள்: -

1) ஒருவர் தம் வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் பாழாகிவிடும்
2) இறைவன் இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்
3) இணை வைத்தவனின் கதி மிகவும் மோசமானது
4) இறைவனுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம்.

நல்லமல்களை அழித்துவிடும் ஷிர்க்: -

அல்லாஹ் கூறுகிறான்: -

இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும். (அல்குர்ஆன் 6:88)

அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், 'நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்' (என்பதுவேயாகும்). ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக! (அல்குர்ஆன் 39:65 & 66)


இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்: -

அல்லாஹ் கூறுகிறான்: -

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்குர்ஆன் 4:48 )

இணை வைத்தவனின் கதி: -

அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)

இறைவனுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம்.

அல்லாஹ் கூறுகிறான்: -

“...எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )

இந்த அளவிற்கு படுபயங்கரமான இணைவைத்தல் என்பது பற்றி நாம் முழுவதுமாக அறிந்திருக்க வில்லையானால் அவற்றிலிருந்நு பரிபூரணமாக தவிர்திருப்பது என்பது இயலாத காரியம். எனவே ஷிர்க் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை என்பவை பற்றி இந்த சிறிய ஆய்வுக் கட்டுரையில் ஆராய்வோம்.

இன்று நமது சமுதாயத்தில் இணைவைப்பது (ஷிர்க்) என்றால் என்ன என்று கேட்டால் மிக எளிதாக கிடைக்கும் பதில் 'சிலைகளை வணங்குவது' என்றே நம்மில் பெரும்பாலோர் கூறுவர். இவ்வாறு இவர்கள் கூறுவதற்கு காரணம் இணை வைப்பது என்றால் என்ன என்பதைப் பற்றிய அறியாமையே ஆகும்.

அடுத்து....

Feb 5, 2008

இறையச்சத்தை அதிகப்படுத்துவது எவ்வாறு?

அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.

வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாரும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறோம். அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள் மீதும், நம் மீதும் மற்றும் கியாம நாள் வரை அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடிய முஸ்லிம்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக. ஆமீன்.

செல்வம் சேர்த்தல், அழகான பெண்களை அடைவது, குழந்தைச் செல்வங்கள் பெறுவது மற்றும் நிரந்தரமற்ற இந்த உலகத்தின் பிற இன்பங்கள் போன்றவற்றின் மீது அதிக ஆசை வைப்பது இவைகள் தான் பெரும்பாலான சதாரண மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய ஆசைகளாகும். இவைகளை வெறுத்து ஒதுக்குவதை இஸ்லாம் கூற வில்லை. ஆனால் இவைகளை அடைவதே தனது வாழ்வின் இலட்சியம் என பலர் தமது வாழ்நாள் முழுக்க செலவழித்து அவைகளை அடைவதற்காக எதை எதையோ இழந்து, குறிப்பாக தமது வாழ்நாட்களின் பெரும் பகுதியையும், கை கால் ஆரோக்கியமாக இருக்கும் இளமையையும் இழந்து விடுகின்றனர். ஒரு மனித படைப்பின் நோக்கம் இது மட்டுமா என்றால் நிச்சயமாக இல்லை சகோதர, சகோதரிகளே!


நம்மைப் படைத்த இறைவனுக்கு பயந்து, அவனையே வணங்கி, அவனுடைய திருப்தியை பெற வேண்டி நல்ல அமல்கள் புரிவது என்பதுதான் ஒவ்வொருவருடைய வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும். அந்தக் குறிக்கோளை அடைவதற்காக அவர் கடுமையாக முயற்சி செய்து உழைக்க வேண்டும். அதற்குண்டான பயிற்சியை தனது ஆத்மாவிற்கு அவர் கொடுக்க வேண்டும். அது தான் நம்மை படைத்த அகில உலக இரட்சகனாகிய அல்லாஹ் இந்த மனித சமுதாயத்தின் மீது ஏற்படுத்தியிருக்கின்ற தேர்வு (பரிட்சை) ஆகும். இந்த தேர்வில் நாம் அனைவரும் வெற்றி பெற வேண்டியது மறுமை வாழ்விற்கு மிக மிக அவசியமாகிறது.

நம்மில் எத்தனை பேர் நிரந்தரமற்ற இந்த மாய உலகத்தின் மீதுள்ள அதீத ஆசைகளைக் கட்டுப்படுத்தி, அதற்குப் பதிலாக மறுமையில் அல்லாஹ்வின் வாக்குறுதியான நிரந்தரமான சுவனபதியின் சோலைகளையும், இறைவனின் திருப்தியையும் பெறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?

யார் ஒருவர் அல்லாஹ்வுக்கு பயப்படுவதைத் தேர்ந்தெடுத்து, ஆசைகளைக் குறைப்பதன் மூலம் தனது ஆத்மாவைக் கட்டுப்படுத்தி, தனது மனோஇச்சைகளையும் கட்டுப்படுத்தி, தனது விருப்பு வெறுப்புகளை அல்லாஹ்வின் கட்டளைகளுக்கிணங்க ஆக்குகிறாரோ அவர் தான் அல்லாஹ் விதித்த தேர்வில் வெற்றி பெற்றவராவார்.

ஆனால் யார் ஒருவர், நிரந்தரமற்ற இந்த உலக வாழ்வைத் தேர்ந்தெடுத்து, அழியக் கூடிய உலகின் ஆடம்பரங்கள் மற்றும் இன்பங்கள் இவற்றின் பின்னால் சென்று, தனது மனோ இச்சைகளுக்குக் கட்டுப்பட்டு நம்மைப் படைத்த இறைவனுக்குக் கட்டுப்பட மறுக்கிறாறோ அவர் தமக்கு அல்லாஹ்வால் விதிக்கப்பட்ட தேர்வில் தோல்வி அடைந்தவராவார்.

அத்தியாயம் 79, ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), வசனங்கள் 34-41 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

79:34 எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,

79:35 அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.

79:36 அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.

79:37 எனவே, எவன் வரம்பை மீறினானோ-

79:38 இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-

79:39 அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.

79:40 எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,

79:41 நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.


இறையச்சத்தை (தக்வா) அதிகப்படுத்துவது எவ்வாறு?

ஒருவர் தன்னுடைய இறையச்சத்தை (தக்வாவை) அதிகப்படுத்துவதற்கு முன்னால் அவர் அறிந்துக் கொள்ள வேண்டியவைகளாவன: -

நம்மைப் படைத்த இறைவன் யார்?

எதற்காக இப்பேரண்டத்தையும் மற்றும் அதில் உள்ளவற்றையும் படைத்தான்?

எதற்காக நம்மைப் படைத்திருக்கிறான்?

இறைவனை திருப்தி படுத்தக் கூடிய செயல்கள் யாவை?

இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய செயல்கள் யாவை?

இறைவன் அவனுடைய கட்டளைகளை ஏற்று நடக்கக் கூடியவர்களுக்கு வாக்களித்திருக்கும் நன்மைகள் யாவை?

இறைவனுடைய கட்டளைகளை மீறி நடப்பவர்களுக்கு அவன் தரப்போகும் தண்டனைகள் யாவை?

என்பன போன்ற வினாக்களுக்கான விடைகளைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

நம்மைப் படைத்த இறைவன் அனைத்திற்கும் வல்லமையும் ஆற்றலும் படைத்தவன் மட்டுமல்லாது மிக்க கருணையாளனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். அல்லாஹ் மனிதனைப் படைத்து மேற்கண்ட வினாக்களுக்கு அவனாகவே விடைத் தேடிக் கொள்ளுமாறு அவனைத் தன்னந் தனியாக விட்டு விடவில்லை. மாறாக அல்லாஹ் மேற்கூறிய அனைத்து வினாக்களுக்கும் உரிய பதில்களை, தெளிவுகளை மனித குலத்திற்கு வழிகாட்டியாக அவன் அருளிய திருக்குர்ஆனிலே தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறான்.

அத்தியாயம் 2, ஸூரத்துல் பகரா (பசு மாடு), வசனங்கள் 2-5 ல் அல்லாஹ் கூறுகிறான்:

2:2 இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.

2:3 (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.


2:4 (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.

2:5 இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.


எனவே, ஒருவர் தன்னைப் படைத்த இறைவனையும், தனது நிரந்தரமற்ற இந்த குறுகிய உலக வாழ்வின் சோதனைகளைப் பற்றியும் அறிந்துக் கொள்வதற்கு மிகச்சிறந்த வழி என்னவென்றால்: -

அவர் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அந்த வல்ல இறைவன் மனிதர்களின் மீது கருணைக் கொண்டு அவர்களுக்கு நேர்வழி காட்ட இறக்கி வைத்த அருள் மறையாம் திருமறை அல்குர்ஆனை பொருள் உணர்ந்து படித்து, புரிந்துக் கொண்டு, அது கூறும் வாழ்வியல் நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, அவற்றைப் பின்பற்றி நடப்பதுவேயாகும்.

இவ்வாறு நாம் அல்குர்ஆனை முழுமையாகப் பின்பற்றி நடப்பது என்று முடிவு செய்து, அதன்படி நடந்தால், நம்பிக்கை மற்றும் இந்த உலக வாழ்வின் சோதனைகள் ஆகியவற்றுக்கான அனைத்துக் கேள்விகளுக்குமான தெளிவான விடைகள் நமக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியவரும். அனைத்தையும் அறிந்தவனான அல்லாஹ் இதையே இறை நம்பிக்கையாளர்களிடமிருந்து எதிர்பார்க்கிறான்.

இவ்வாறு நாம்,

நம்மைப் படைத்த இறைவன் யார் என்றும்,

இறைவன் நம்மைப் படைத்திருப்பதற்கான நோக்கத்தையும் அறிந்து,

இறைவன் வாக்களித்திருக்கும் என்றும் அழியாத சுவனபதியின் நிரந்தரமான வாழ்வை பெறுவதற்காக,

நம்முடைய விருப்பு வெறுப்புகளை அல்லாஹ்வின் கட்டளைகளுக்கினங்க அமைத்துக் கொள்வோமேயானால், நம்முடைய முழு வாழ்க்கையின் உன்னதமான இலட்சியம், குறிக்கோள் சுவனபதியை அடைவதை நோக்கியே மாறும். இன்ஷா அல்லாஹ்.

இவ்வாறு, நாம் நமது வாழ்வின் உன்னதமான இலட்சியமாக சுவனபதியை அடைவதையும், அல்லாஹ் மறுமையில் அளிக்க விருக்கும் அளப்பரிய செல்வங்களைப் பெறுவதையும் அமைத்துக் கொண்ட பிறகு, நமக்கு நிரந்தரமற்ற இந்த உலக வாழ்வின் ஆடம்பரங்களும், செல்வங்களும், இன்பங்களும், ஆசைகளும் மதிப்பற்றவைகளாகவும் முக்கியத்துவம் இல்லாதவைகளாகவும் ஆகிவிடும். நம்முடைய முழு முயற்சிகளும் தவிர்க்க இயலாத மறுமையை நோக்கியே அமையும்.

இந்த நிலையையே, அதாவது, ஒவ்வொருவரும் தவிர்க்க இயலாமல் மறுமையின் ஒரே நீதிபதியாகிய, ஒரே இறைவனாகிய அந்த அல்லாஹ் ஸுப்ஹானத்தஆலாவின் முன்னிலையில் நிற்பதை அஞ்சக் கூடியவர்களாக இருப்பதையே "இறையச்சம்" அல்லது "பயபக்தி" என அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.

இந்த இறையச்சமே, நம்முடைய வாழ்நாளில் நற்கருமங்கள் செய்வதற்குத் தூண்டி, அதிக நம்மைகளைக் கிடைக்கச் செய்து, அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத்தந்து, மறுமையில் நமக்கு இறைவன் வாக்களித்த சுவர்க்கத்தைப் பெற்றுத் தரும். இன்ஷா அல்லாஹ்.

இந்த இறையச்சமே, நம்மை அல்லாஹ்வுக்கு கோபத்தை உருவாக்குகிற செயல்களைச் செய்வதை விட்டும் தடுத்துவிடும். இன்ஷா அல்லாஹ்.

தக்வா (இறையச்சம்) என்பது: -

அல்லாஹ்வுக்கு விருப்பமில்லாத, அவனுக்கு கோபத்தை ஏற்படுத்துகிற எந்தவொரு செயலைச் செய்வதில் இருந்தும் தவிர்ந்து இருப்பதும்,

அல்லாஹ் மற்றும் அவனது திருத்தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டிருக்கின்ற நற்கருமங்களைச் செய்வதும் ஆகும்.

தக்வா (இறையச்சம்) என்பது: -

நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நொடிப்்பொழுதையும், தவிர்க்க இயலாத மறுமை நாளில் நாம் நம்மைப் படைத்த இறைவனின் முன்னிலையில் நிறுத்தப்படுவோம் என்று உறுதியாக நம்புவதும்,

நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் இறைவனுக்கு கணக்கு கூறக் கூடியவர்களாக நாம் இருக்கிறோம் என்றும் உறுதியாக நம்புவதும் ஆகும்.

தக்வா (இறையச்சம்) என்பது: -

ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு முன்னால், அந்தச் செயலைச் செய்தால் இறைவன் திருப்தியுறுவானா அல்லது கோபமடைவானா என ஆராய்ந்து தீர்மானிப்பதாகும்.

அந்தச் செயலைச் செய்தால் இறைவன் திருப்தியுறுவான் என கருதினால் அதை முழு மனதோடு இறை திருப்திக்காக மட்டுமே செய்வதாகும்.

அந்தச் செயலைச் செய்தால் இறைவன் கோபமடைவான் என கருதினால் அதைச் செய்வதை விட்டும் உடனடியாக தவிர்ந்துக் கொள்வதாகும்.

தக்வா (இறையச்சம்) என்பது: -

நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அவைதற்காக என்ற எண்ணத்தின் அடிப்படையிலே நற்கருமங்கள் புரிவதும்

நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நொடிப்்பொழுதிலும் அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்துகிற எந்த ஒரு செயலை விட்டும் தவிர்ந்திருப்பதும் ஆகும்.

நாம் அல்குர்ஆனை படித்துப் பார்த்தால், இறைவன் சுவனபதியை வாக்களிக்கும் பல இடங்களில் தக்வாவை (இறையச்சத்தை)ப் பற்றியும் கூறுவதைப் பார்க்கலாம்.

அத்தியாயம் 3, ஸூரத்துல்ஆல இம்ரான்;(இம்ரானின் சந்ததிகள்), வசனம் 133ல் அல்லாஹ் கூறுகிறான்: -

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.


அத்தியாயம் 50, ஸூரத்து ஃகாஃப், வசனங்கள் 31-33 ல் அல்லாஹ் கூறுகிறான்:-

50:31 (அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும்.

50:32 'இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதா(ன சுவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது).'

50:33 எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது).


அத்தியாயம் 52, ஸூரத்துத் தூர் (மலை), வசனங்கள் 17-18 ல் அல்லாஹ் கூறுகிறான்:

52:17 நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள்.

52:18 அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.

அத்தியாயம் 68, ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), வசனம் 34 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

68:34 நிச்சயமாக, பயபக்தியுடையோருக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் (பாக்கியமுடைய) சுவனச் சோலைகள் உண்டு.

அத்தியாயம் 16, ஸூரத்துந் நஹ்ல் (தேனி), வசனம் 31 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

16:31 என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய சுவனபதிகளில் அவர்கள் நுழைவார்கள்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கே அவர்கள் விரும்புவதெல்லாம் கிடைக்கும். இவ்வாறே பயபக்தியுடையோருக்கு அல்லாஹ் நற்கூலியளிக்கிறான்.

அத்தியாயம் 2, ஸூரத்துல் ஃபுர்ஃகான்(பிரித்தறிவித்தல்), வசனங்கள் 15-16 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

25:15 அ(த்தகைய நரகமான)து நல்லதா? அல்லது பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நித்திய சுவர்க்கம் நல்லதா? அது அவர்களுக்கு நற்கூலியாகவும், அவர்கள் போய்ச் சேருமிடமாகவும் இருக்கும்' என்று (அவர்களிம் நபியே!) நீர் கூறும்.

25:16 'அதில் அவர்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும்; (அதில்) அவர்கள் நிரந்தரமாகத் தங்குவார்கள் - இதுவே உமது இறைவனிடம் வேண்டிப் பெறக்கூடிய வாக்குறுதியாக இருக்கும்.'


ஆகையால், சகோதர, சகோதரிகளே நாம் மீண்டும் நினைவு கூர்வோம்: - நம்மைப் படைத்த இறைவனைப் பற்றிய பயம், அச்சம் பயபக்தி நம் உள்ளத்தில் இடம்பெறுவதற்கு, நம்முடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இறையச்சத்துடன் கூடிய வாழ்வு நெறியை மேற்கொள்வதற்குரிய மிகச் சிறந்த வழி என்னவென்றால்: -

அது அல்லாஹ்வின் அருள்மறையாம் திருக்குர்ஆனை பொருள் உணர்ந்து படித்து, புரிந்துக் கொண்டு, அவன் குர்ஆனில் கூறியிருக்கின்ற வாழ்வு நெறிமுறைகளுக்கு முழுவதும் கட்டுப்பட்டு, அவற்றைப் பின்பற்றி நடந்து, நம்முடைய முழு விருப்பு வெறுப்புகளை அல்லாஹ் தன் திரு மறையில் அருளிய கட்டளைகளுக்கிணங்க மாற்றி அமைத்துக் கொள்வதேயாகும்.

அல்லாஹ்வே நமது சாட்சி, யார் சிரத்தையுடன் அல்லாஹ்வுடைய வேதமாகிய திருக்குர்ஆனுக்கு முழுவதும் கட்டுப்பட்டு நடக்கிறாரோ, இன்ஷா அல்லாஹ் அவர் தமது வாழ்நாட்களை அல்லாஹ்வை அதிகமாக வணங்குவதிலும், தொழுகையை நிலை நாட்டுவதிலும், ஜக்காத் கொடுப்பதிலும், ஹஜ் செய்வதிலும், சகோதரத்துவத்தைப் பேணுவதிலும் செலவழிப்பார். மேலும் அவரது ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் திப்பொருத்தத்தை நாடியே இருக்கும்.

அல்லாஹ் ஸுபுஹானத்தஆலா உங்களுக்கும், எங்களுக்கும் மற்றும் முஃமினான ஆண் பெண் அனைவருக்கும் கருணை புரிந்து, அவனது திருப்தியுடன் சுவனபதியைப் பெற்றுத்தரவல்ல அவனது இந்த நேரான பாதையைத் தேர்ந்தெடுக்கும் மன உறுதியைத் தந்து, அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்துகின்ற அனைத்துச் செயல்களிலிருந்தும் தவிர்ந்திருக்கக் கூடிய மன வலிமையத் தந்தருள்வானாகவும். ஆமீன்

Feb 3, 2008

இறை நேசர்களிடம் உதவி தேடுதல் - குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று சாட்சி கூறகிறேன்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாராகவும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறேன்.
.
பொதுவாக இறைவனோடு மற்றவர்களையும் அதாவது பெரியார்களையும், ஷெய்ஹு மார்களையும், பீர்களையும், அவ்லியாக்களையும், இறைநேசர்களையும் பிராத்திப்பவர்கள் பின்வரும் காரணங்களில் சிலவற்றையோ அல்லது இவற்றில் ஏதேனும் ஒரு காரணத்தையோ கூறுவர். அவைகள் யாவை எனில்,

1. நீதிபதியிடம் வாதாடுவதற்காக ஒரு வக்கீல் தேவையல்லவா? அதுபோல் நாங்கள் அவ்லியாக்களிடம் அல்லாஹ்விடம் வாதாடுவதற்காக முறையிடுகிறோம்.
2. நாங்கள் கேட்பெதல்லாம் கிடைக்கிறது. அதனால் தான் தொடர்ந்து கேட்கிறோம்.

3. நாங்கள் பாவங்கள் செய்த பாவிகளாக இருக்கின்றோம். அதனால் பாவமே செய்யாத இறைவனுக்கு நெருக்கமான நல்லடியார்கள் அல்லாஹ்விடம் எங்களின் தேவைகளைக் கேட்டுப் பெற்றுத் தருவார்கள்

4. நல்லடியார்கள் கேட்கும் துஆ இறைவனால் மறுக்கப்படமாட்டாது. அதனால் அவர்கள் மூலம் இறைவனிடம் கேட்கிறோம்

5. மார்க்கத்தில் சிறிதளவு விபரமுள்ள இன்னும் சிலர் நாங்கள் அவ்லியாக்களிடம் நேரடியாகப் பிரார்த்திக்கவில்லை, மாறாக இறைவனிடமே அந்த அவ்லியாக்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகிறோம் என்கின்றனர்

6. நாங்கள் ஒன்றும் புதிதாக இதைச் செய்யவில்லை. எங்கள் முன்னோர்களும், மூதாதையர்களும் அவ்லியாக்களிடம் முறையிட்டுத் தானே தேவைகளைப் பெற்றுவந்தர்கள். அவர்கள் என்ன ஒன்றும் விளங்காதவர்களா?

7. எங்கள் ஆலிம்களும் மற்றும் ஹஜ்ரத் மார்களும் இதைச் செய்கிறார்களே, அவர்களும் தவறு செய்கிறார்களா?

அல்லாஹ் தன்திருமறையில் அல்லாஹ் ஒருவனையே வணங்கவேண்டும் என்றும், அவன் ஒருவனிடமே உதவிதேட வேண்டும் என்றும் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியிருக்க கப்ரு வணக்கமுறைகளை ஆதரிப்போர் எடுத்து வைக்கும் மேற்கூறப்பட்ட வாதங்களை குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் ஆராய்வோம்.

1) இறைவனுக்கு உவமை மனிதர்களில் உள்ள நீதிபதியா?

இறைநேசர்களிடம் கையேந்தி நிற்கும் முஸ்லிம்களில் சிலர் அவர்களுடைய அறியாமையினால், நாம் நீதிபதியிடம் வாதாடுவதற்கு நமக்கு ஒரு வக்கீல் தேவையில்லையா? அல்லது ஒரு பெரிய அமைச்சரிடம் நமது தேவையை கேட்டுப் பெறுவதற்கு அவருக்கு நெருக்கமானவரை பரிந்துரை செய்வதற்காக நியமிப்பதில்லையா? அது போலத்தான் நாங்களும் இறைவனிடம் வாதாடி, கேட்டுப் பெறுவதற்காக இறைவனுக்கு நெருக்கமான இறைநேசர்கள் மூலம் வேண்டுகிறோம் என்று கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது இஸ்லாத்தை பற்றி அவர்கள் ஓரளவுக்கு கூட அறியாமல் இருப்பதே காரணம் ஆகும். நீதிபதி நாம் குற்றம் செய்தவாகளா அல்லது நிரபராதியா என்பதை நமக்காக வாதாடும் வக்கீல் எடுத்து வைக்கும் சாட்சியங்களை வைத்தே அறிந்து கொள்வார். அதுவும் சாட்சியங்கள் சரிவர நிருபிக்கப்படாவிட்டால் நிரபராதிக்குக் கூட தண்டணையளிக்கும் எத்தனையோ நீதிபதிகள் இருக்கிறார்கள்.

இது இப்படியிருக்க அகிலங்களையெல்லாம் படைத்து பரிவக்குவப்படுத்தி பாதுகாத்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு நமது தேவைகள் என்ன என்பது தெரியாதா? இதயங்களில் உள்ள இரகசியங்களை அறிபவனாக அல்லாஹ் இருக்கிறான் என்று தன்னுடைய திருமறையிலே பல இடங்களில் இறைவன் கூறுகின்றானே!!!

"வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் அறிகிறான்; நீங்கள் இரகசியமாக்கி வைப்பதையும், பகிரங்கமாக்கி வைப்பதையும் அவன் அறிகிறான்; மேலும், இருதயங்களிலுள்ளவற்றை யெல்லாம் அல்லாஹ் அறிகிறான்"(அல்குர்ஆன் 64:4).

இன்னும் பல வசனங்களில் 11:5, 67:13, 28:69, 2:284 அல்லாஹ் மட்டுமே இதயங்களிலுள்ள இரகசியங்களை அறிகிறான் என்றும் மற்ற யாரும் அவற்றை அறிய முடியாது என்றும் கூறுகின்றானே!. நாம் கூறாமலே நமது தேவைகளை அறிந்திருக்கும் இறைவனுக்கு, கேவலம் மனிதர்களிலுள்ள ஒரு வக்கீலோ அல்லது அதிகாயோ எடுத்துச் சொன்னால் தவிர அறிந்துக் கொள்ள முடியாமல் இருக்கின்ற நீதிபதியையும், அமைச்சரையும் நாம் எப்படி உதாரணங்களாக கூறமுடியும்?. இது இறைவனின் கண்ணியத்தைக் குறைவாக கருதுவதாகாதா? இறைவனுக்கு நீதிபதியையும், அமைச்சரையும் உதாரணங்களாக கூறி அல்லாஹ்விற்கு உவமைகளை ஏற்படுத்தி இணைவைத்த மாபாதகம் ஆகாதா? இவ்வாறு இறைவனுக்கு உதாரணங்களைக் கூறுபவர்களை அல்லாஹ் கடுமையான எச்சரிக்கின்றான்:

"ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்¢ ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள்"(அல்குர்ஆன் 16:74)

ஆகவே அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறுவது இந்த திருமறை வசனத்தை மீறிய மாபெரும் குற்றமாகாதா? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே. அல்லாஹ் தன்திருமறையில் அல்லாஹ்வையே அழையுங்கள் என்றும், அவன் பிரார்த்தனை புரிபவர்களின் பிரார்த்தனையைச் செவியேற்கிறான் என்றும் ஆனால் உங்களால் அழைக்கப்படுபவர்களால் பதிலளிக்க முடியாது என்று பல இடங்களில் வலியுறுத்திக் கூறுகின்றான்.

"நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!"(அல் குர்ஆன் 7:194)

2) நாங்கள் கேட்பதெல்லாம் கிடைக்கிறது:-

இதுவும் அறியாமையினால் கூறப்படும் அர்த்தமற்ற வாதமாகும். நாம் பிற சமுதாயத்து மக்களிடம் அவர்கள் குல தெய்வம் என்று ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தெய்வத்தை வழிபடுவதைக் காணலாம். அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால், எங்கள் குலதெய்வம் சக்திவாய்ந்தது, அது நாங்கள் கேட்பதையெல்லாம் கொடுக்கிறது. அதனால் தான் நாங்கள் அதை தொடர்ந்து வழிபடுகிறோம் எனக் கூறுவர். இன்னும் சிலர் அத்தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக அத்தெய்வங்களின் உண்டியலில் கோடிக்கணக்கில் காணிக்கைகளைச் செலுத்துவர். அவர்கள் கூறுவது போன்று அவர்கள் வேண்டிக்கொண்டவைகளில் சில நடைபெறுவதால் தான் அவர்கள் அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கின்றனர். இதைப் போலவே நமது சமுதாயத்து மக்களில் சிலர் அவரவர் நம்பிக்கைகளுக்கு ஏற்ப பிடித்தமான அவ்லியாக்களை எடுத்துக் கொண்டு அவர்களை தங்களின் குல அவ்லியாகவாக? ஆக்கி வைத்துக் கொள்கின்றனர். பிற சமுதாயத்தவர்கள் கூறுவதைப் போல இந்த அவ்லியாக்களும் எங்களின் தேவைகளை எல்லாம் நிறைவேற்றித் தருகின்றனர் எனக் கூறுகின்றனர். நிச்சயமாக இவைகள் எல்லாம் ஷைத்தானின் தீய சூழ்ச்சிகளாகும். அந்த அவ்லியாக்களிடம் நர்ச்சை செய்தால் நிறைவேறுவது போல பிற சமுதயத்து வழிபாட்டுத்தலங்கிலும் நோச்சை செய்தாலும் தான் அவர்களுக்கு சில நாட்டங்கள் நிறை வேறுகின்றன. அதற்காக அங்கேயும் செல்வார்களா?

ஒவ்வொரு காரியமும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என அல்லாஹ் கூறுகிறான். நமக்கு நடக்கும் நல்லவைகளும், கெட்டவைகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்று நாம் நம்பிக்கை கொள்வோமேயானால் இணைவைக்கும் இது போன்ற செயல்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவான்.

3) வரம்பு மீறிய பாவிகளையும் மன்னிப்பவன் அல்லாஹ்வே:-

நாங்கள் பாவங்கள் பல செய்த பாவிகள், ஆகவே எங்களின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே பாவங்களே செய்யாத இறை நேசசெல்வர்களிடம் எங்களின் தேவைகளைக் கூறினால் அவர் எங்களுக்காக இறைவனிடம் பரிந்துரைத்து எங்களின் தேவைகளைப் பெற்றுத்தருவார்கள் எனக்கூறுகின்றனர் கப்ரு வணக்க முறைகளை ஆதரிக்கும் முஸ்லிம்களில் சிலர். இதுவும் இஸ்லாத்தின் அடிப்படையைப் புரிந்துக் கொள்ளாதவர்களின் வாதமாகும். நாம் பாவங்கள் நிறைய செய்தவர்களாக இருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் என்று ஒவ்வொரு செயலின் துவக்கத்திலும் கூறிடும் நாம் அதன் பொருளை புரிந்துக் கொள்வதில்லை. அல்லாஹ் மிகப்பெரும் கருணையுடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான் என்று திருமறையின் பல இடங்களில் கூறுகின்றான்.

அல்லாஹ் கூறுகிறான்:-

'என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்' (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 39:53)

மேற்கண்ட வசனத்தில், ஒருவர் எவ்வளவு தான் பாவங்கள் செய்திருப்பினும், அவர் அல்லாஹ்வுக்கே முற்றிலும் வழிபட்டு தம் பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பதாகக் கூறுகின்றான். ஆனால் பாவம் செய்தவருடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்று கூறுவது மேற்கண்ட வசனத்தை நிராகரித்தல் ஆகாதா? சிந்தியுங்கள் சகோதர சகோதாகளே!

4) நல்லடியார்களின் பிரார்த்தனை இறைவனால் மறுக்கப்படாது. அதனால் அவர்கள் மூலமாகக் கேட்கிறோம்:-

இது கப்ரு வணக்க முறைகளை ஆதரிக்கும் இன்னும் சிலரின் வாதமாகும். முதலில் நாம் சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ளவேண்டும். பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் இறைவனின் விருப்பம். அதில் இறைவனை கட்டாயப்படுத்த யாராலும் முடியாது. நபி (ஸல்) அவர்களுக்கே அவர்கள் விரும்பியது சில நேரங்களில் கிடைக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் தம் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் இஸ்லாத்தை எப்படியாயினும் ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்று ஆவலாக இருந்தாகள். ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் வேறொன்றாக இருந்ததால் இறுதி வரை நபி (ஸல்) அவர்களின் விருப்பத்தை இறைவன் நிறைவேற்றித்தரவில்லை என்று வரலாறுகளில் படித்திருக்கின்றோம். இது ஒருபுறம் இருக்க அமல் செய்ய யாரால் முடியும் என்பதைச் சற்று சிந்திக்க வேண்டும். ஒருவர் உயிருடன் இருக்கும் வரையில் தான் அவரால் பார்க்கவும், கேட்கவும், அமல் செய்யவும் முடியும். அவர் இறந்து விட்டால் அவரால் எந்த ஒரு அமலையும் செய்யமுடியாது. அவருக்கும் இவ்வுலகத்திற்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. இதை திருமறை வசனங்களும், ஹதீதுகளும் உறுதி செய்கின்றன. எனவே அமல்களில் ஒன்றாகிய பிரார்த்தனையை நமக்காக இறைவனிடம் என்றோ இறந்துவிட்ட நல்லடியார்கள் செய்கின்றார்கள் என்றால் அது பின்வரும் குர்ஆன், ஹதீஸ்களுக்கு முற்றிலும் எதிரான கருத்தாகும்.

அவர்கள் இறந்தவாகளே உயிருள்ளவர்கள் அல்லர் என்று அல்லாஹ் கூறுகின்றான்:-

"அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்" (அல் குர்ஆன் 16:20-21)

இறந்தவர்களுக்கும் இவ்வுலகத்தினருக்குமிடையில் ஒரு திரையிருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்:-


"அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன" (அல் குர்ஆன் 39:42)

"அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: 'என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!' என்று கூறுவான். 'நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக' (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது" (அல் குர்ஆன் 23:99-100)

இறந்த நல்லடியார்களால் நம் தேவைகளைக் கேட்க முடியாது என்று அல்லாஹ் கூறுகின்றான்:-

"நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது; - அவ்வாறே செவிடர்களையும் - அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும்போது - (உம்) அழைப்பைக் கேட்கும் படிச் செய்ய முடியாது" (அல் குர்ஆன் 27:80)

"குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள். (அவ்வாறே) இருளும் ஒளியும் (சமமாகா). (அவ்வாறே) நிழலும் வெயிலும் (சமமாகா). அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், கப்ருகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை." (அல்குர்ஆன் 35:19-22)

இந்த வசனத்தில் ;உயிருள்ளவர்களும் இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள்'் என்று கூறிய இறைவன், உயிருள்ளவாகளில் தாம் நாடியவாகளைச் செவியுறச்செய்து நேர்வழிப்படுத்துவதாகக் கூறுகின்றான். மேலும் 'கப்ருகளில் உள்ள இறந்தவர்ளளைச் செவியுற செய்பராக நீ இல்லை' என்று இறைவன் கூறுவதன் மூலம் இறந்தவர்களால் செவியேற்க முடியாது என்று திட்டவட்டமாக அல்லாஹ் கூறிவிட்டான். மேலும் அவன் கூறுகையில்,

"நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்." (அல்குர்ஆன் 35:14)

"நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான் அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்" (அல்குர்ஆன் 7:196-197)

"நல்லடியார்களைப் பாதுகாவலாகளாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அல்லாஹ் கூறுகின்றான்-

"நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம் ) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்." (அல்குர்ஆன் 18:102)

நல்லடியார்களால் பரிந்து பேசமுடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்:-

"அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! 'அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா?' (என்று.)" (அல்குர்ஆன் 39:43)

நல்லடியார்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள், அவர்களால் நம் அழைப்பைச் செவியுற முடியாது:-

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

உங்களில் யாரேனும் மரணித்து விட்டால் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் அவருக்கு எடுத்துக் காட்டப்படும். சுவர்க்கவாசியாக இருந்தால் சுவாக்கத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். கியாமத்து நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இதுதான் உனது தங்குமிடம் என்று அவரிடம் கூறப்படும் (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

நல்ல மனிதராக இருந்தால், நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டு வருகிறேன் என்று அந்த நல்ல மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள், இந்த இடத்திலிருத்து உன்னை இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக என்று கூறுவார்கள்.. தீய மனிதராக இருந்தால் அவனது இடத்திலிருந்து இறைவன் அவனை எழுப்பும் வரை வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் (ஆதாரம்: திர்மிதி ஹதீஸ் சுருக்கம்)

என் குடும்பத்தாரிடம் போய் நல்லுபதேசம் செய்துவிட்டு வருகிறேன் என்று அந்த நல்லவர் வானவர்களிடம் அனுமதி கேட்கும் போது அனுமதி மறுக்கப்படுகிறது. அப்படியிருக்க அந்த ஆத்மா பர்ஸக் உலகிலிருந்து இவ்வுலகிற்கு வர வானவர்கள் அனுமதிப்பார்களா? நிச்சயமாக மாட்டார்கள். எனவே அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் மரணித்த நல்லடியார்களின் ஆத்மா இருக்கும் போது, நல்லடியார்கள் அவர்களுடைய கப்ர்களில் இருந்துக் கொண்டே வெளியில் உயிருடன் இருப்பவர்கள் தம் மனதிற்குள் கேட்கும் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றித் தருகிறார்கள், அல்லது அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுகின்றார்கள் என்று நம்புகின்றவர்கள் மேற்கண்ட ஹதீஸை நிராகரித்தவர் போல் ஆகமாட்டாரா?
.
நல்லடியார்கள் அல்லாஹ்விடம் சிபாசு செய்வார்கள் என கூறுபவர்களுக்கு அல்லாஹ் கூறுகின்றான்:-

"அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், 'அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை' (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.' (அல் குர்ஆன் 39:3)

இங்கே சிலர் கூறலாம், நாங்கள் அவர்களை வணங்கவில்லையே, அந்த நல்லடியார்களிடம் இறைவனிடம் எங்களின் கோரிக்கைகளைப் பெற்றுத்தாருங்கள் என்று தானே பிராத்திக்கிறோம் இந்த வசனம் எப்படி எங்களுக்குப் பொருந்தும்? என்று கேட்கலாம். நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனையும் ஒரு வணக்கமாகும் என்று கூறியிருக்கிறார்கள். அல்லாஹ்வும் தன்னுடைய திருமறையிலே பல்வேறு இடங்களில் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்று கூறுவதன் மூலம் பிரார்த்தனையும் ஒரு வணக்கம் என்றே கூறுகின்றான்.

இது போன்ற இன்னும் ஏராளமான வசனங்களில் (பார்க்க : 17:56-57, 34:22, 10:106, 6:71, 7:191, 7:192, 10:107, 27:62) இருந்து நாம் விளங்குவது என்னவென்றால்,

இறந்தவர்களால் பிரார்த்தனை செய்யமுடியாது (16:20-21)
இறந்தவர்களால் சிபாசு, பரிந்துரை செய்யமுடியாது (39:3, 10:18)
இறந்தவர்கள் எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பது கூட அவர்களுக்குத் தொயாது (16:20-21)
இறந்தவர்களின் உயிரை அல்லாஹ் தன்னிடத்திலே நிறுத்திக் கொள்கின்றான். (39:42)
இறந்தவர்களுக்கும் இவ்வுலகத்தில் உள்ளவர்களுக்கும் பர்ஸக் என்னும் திரையிருக்கிறது (23:99-100)
இறந்த நல்லடியார்கள் புது மணமகணைப் போல் உறங்கிக் கொண்டிருக்கின்றனர் (ஹதீஸ்)
அல்லாஹ்வையன்றி யாரை பிரார்த்திக்கின்றோமோ அவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவி செய்துகொள்ள சக்தி பெறமாட்டார்கள். (7:196-197)
அவர்கள் உங்கள் பிரார்த்தனையைச் செவியேற்கமாட்டார்கள் (35:13-15)
இறந்த நல்லடியார்களால் பதிலளிக்க முடியாது (17:56-57)
அவர்களுக்கு அணுஅளவு அதிகாரமும் இல்லை (35:13-15)
அல்லாஹ்வின் அடியார்களை பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளக் கூடாது (18:102)
அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே (7:194)
அல்லாஹ் அல்லர்தவர்களை அழைக்கக்கூடாது (10:106, 6:71, 23:117)
அல்லாஹ்வின் இல்லங்களில் நல்லடியார்களை அழைக்கக்கூடாது (72:18)
எனவே என்றோ இறந்துவிட்ட நல்லடியார்கள் பிராத்தித்தால் அது இறைவனால் அங்கீகரிக்கப்படும் என்று ஒருவர் நம்பி அந்த நல்லடியார்களின் கப்ரில் கையேந்தி நின்றால் நிச்சயமாக அவர் மேற்கூறுப்பட்ட வசனங்களை நிராகரித்ததோடல்லாமல் இறைவனுக்கு இணை வைத்த மகா பாவியாகிவிடுவார். அல்லாஹ் நம்மனைவரையும் காப்பாற்றுவானாக.

ஷுஹதாக்கள் என்றும் உயிர் வாழும் தியாகிகளாயிற்றே!!!
இன்னும் சிலர் இந்த வசனங்கள் எல்லாம் சாதாரண மனிதாகளைக் குறிக்கின்றது. ஆனால் அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த ஷுஹதாக்கள் உயிரோடு இருப்பதாக குர்ஆன் கூறுகிறதே! ஆப்படியானால் குர்ஆன் கூறும் அந்த வசனத்தின் பொருள் என்ன என்று கேட்கின்றனர்.

அல்லாஹ் கூறுகின்றான்.

"அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை அவர்கள் மரணித்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள் அப்படியல்ல அவர்கள் உயிருள்ளவர்கள் எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்'(அல்-குர்ஆன்: 2:154)

'அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்." (அல்குர்ஆன் 3:169)

இந்த வசனத்திற்கு விளக்கமாக அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் ஸஹீஹ் முஸ்லிமில் பின்வரும் ஹதீஸை அறிவிக்கின்றாகள்.
மஸ்ருக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: -: இவ்வசனம் குறித்து அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் வினவினோம்: அதற்கு அவர்கள் கூறினாகள்: அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றி நாங்கள் கேட்டோம்: அப்போது அண்ணலார் பின் வருமாறு விளக்கினார்கள்:

அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் உடலுக்குள் இருக்கும். அவைகள் அர்ஷில் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூடுகளுக்குள் இருக்கும். சுவர்க்த்தில் அவை நினைத்தபடி சுற்றித்திரிந்து விட்டு அந்த கூட்டுக்குள் வந்து சேரும். அவற்றைப் பார்த்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்கள் இறைவன் கேட்பான். இனி எங்களுக்கு என்ன தேவையிருக்கிறது? நாங்களோ சுவர்க்கத்தில் விரும்பிய இடங்களிலெல்லாம் கனிவகைகளை உண்டு வருகிறோம் என்று அவர்கள் கூறுவர். இவ்வாறு இறைவன் மூன்று முறை அவர்களிடம் கேட்பான். தாங்கள் ஏதாவது ஒன்றை இறைவனிடம் கேட்காமல் விடப்படமாட்டோம் என்பதை உணர்ந்துக் கொள்ளும் அவர்கள், இறைவா எங்கள் உயிர்கள் எங்கள் உடல்களில் மீட்கப்பட வேண்டும்: மீண்டும் ஒரு முறை உன்னுடைய பாதையில் நாங்கள் உயிர் நீக்க வேண்டும் என்று கூறுவர். அவர்களுக்கு வேறு எந்த தேவையும் கிடையாது என்பதை காணும் இறைவன் அவர்களை (வேறொன்றும் கேட்காமல்) விட்டுவிடுவான் முஸ்லிம் ஹதீஸ் எண் 4651

இதுதான அந்த ஆயத்தின் விளக்கம். ஆனால் நம்மில் சிலர், ஷஹீதுகள் கப்ரின் உள்ளே உயிரோடு இருக்கிறார்கள்: அவர்களிடம் நம் தேவைகளை கேட்டால் அவர்கள் அதை செவியுற்று, அத்தேவைகளை நிறைவேற்றி வைக்கிறார்கள் என்று தவறாக எண்ணி, கூட்டம் கூட்டமாக கப்ருகளை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மேற்கண்ட ஹதீஸை படித்து சிந்தித்து தெளிவு பெற வேண்டுகிறோம்.

5) அவ்லியாக்களின் பொருட்டால் தேவைகளைக் கேட்குதல்:-

மார்க்கத்தில் ஓரளவுக்கு விபரமுள்ள இன்னும் சிலர் அவ்லியாக்களிடம் நேரடியாகக் கேட்டுப் பெறுவதுதான் பாவம். ஆனால் நாங்கள் அவ்லியாக்களிடம் நேரடியாகப் பிரார்த்திக்கவில்லை, மாறாக இறைவனிடமே அந்த அவ்லியாக்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றி தருமாறு வேண்டுகிறோம் என்கின்றனர். நல்ல மனிதராக வாழ்ந்து மறைந்த குறிப்பிட்ட ஒருவருடைய பொருட்டால் தம் தேவைகளை நிறைவேற்றித்தருமாறு இறைவனிடம் வேண்டும் ஒருவர் பின்வரும் குற்றங்களைச் செய்தவா போலாகிறார்.

1) மரணித்த ஒருவரைப் பார்த்து இவர் சுவர்க்கவாதி என கூறுவது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமான மரணித்தவர் இறைவனின் திருப்தியை பெற்று மரணித்தாரா அல்லது இறைவனின் அதிருப்தியைப் பெற்று மரணித்தாரா என்ற இரகசியத்தை அறிந்தவர் போலாகிறார்.

ஒருவர் மரணமடையும் போது அவர் முஸ்லீமாக மரணித்தாரா அல்லது முஸ்லிமல்லாதவராக மரணித்தாரா என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் அறிந்துகொள்ள முடியாது. நபி (ஸல்) அவர்களின் உம்மத்துகளில் சுவர்க்கவாதி என்று நபி (ஸல்) அவர்களால் கூறுப்பட்டவர்கள் அஸ்ரத்துல் முபஸ்ஸரா என்று சொல்லப்படக் கூடிய பத்து நபித்தோழர்கள் ஆவர். இவாகளைத் தவிர மற்றெவரையும் அவர் சுவர்க்கவாதி என்றோ அல்லது நரகவாதி என்றோ கூறக்கூடாது என்று நபி (ஸல்) அவர்களின் கட்டளையிருக்க ஒருவரைப்பார்த்து இவர் இறைவனுக்கு நெருக்கமானவர், அவர் பொருட்டால் இறைவனிடம் பிரார்த்தித்தால் இறைவனால் மறுக்கமுடியாது என்று கூறுவது ஏராளமான குர்ஆன் வசனங்களுக்கும் ஹதீஸ்களுக்கும் எதிராவைகளாகும். இங்கே ஓரு சிறிய உதாரணத்தைக் கூற விரும்புகிறேன். உஹது போரின் போது காயம்பட்ட நபி (ஸல்) அவர்கள், தம்முடைய நபியைக் காயப்படுத்திய சமூகம் எப்படி வெற்றியடையும்? என்று கூறினார்கள். அப்போது இறைவன் பின்வரும் திருமறையின் வசனத்தை இறக்கினான். (நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை. அவன் அவர்களை மன்னித்து விடலாம்¢ அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம் - நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதின் காரணமாக. (அல்குர்ஆன் 3:128)

சகோதர, சகோதரிகளே சற்று சிந்தியுங்கள். உலகத்தார்களுக்கெல்லாம் நேர்வழிகாட்டுவதற்காக அனுப்பப்பட்ட உத்தம திருநபி (ஸல்) அவர்களுக்கே அதுவும் அவர்களைக் காயப்படுத்தியவர்களைப் பார்த்து கூறியதற்கே அவ்வாறு கூறுவதற்கு எத்தகைய அதிகாரமும் இல்லை என இறைவன் கூறியிருக்கும் போது நமக்கு ஒருவரைப் பார்த்து இவர் சுவர்க்கவாதி என்றும் மேலும் அவர் இறைவனுக்கு நெருக்கமானவர் என்றும் எப்படி கூற முடியும்?

முஸ்லிம்களாக வாழ்ந்து வழிதவறிய எத்தனையோ கூட்டத்தார்களைப் பற்றி திருமறையின் வாயிலாகவும், ஹதீஸ்கள் மூலமாகவும் படித்திருக்கிறோம். முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அதிலிருந்து வழிதவறிவிடாமல் இருக்கவும், மேலும் முஸ்லிம்களாகவே மரணிப்பதற்கும் இறைவனிடம் பிராத்திக்க திருமறையின் வசனங்கள் நமக்கு வலியுறுத்துகிறது.

'எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!' (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) (அல்குர்ஆன் 3:8)

2) மரணித்த ஒருவரின் பொருட்டால் தேவையைக் கேட்பது இறைவனுக்கு அவரிடம் ஏதோ தேவையிருப்பது போல கருவதாகும்.

மேலும் நல்லடியார்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றுவாயாக என்று இறைவனிடம் கேட்டால் அந்த நல்லடியாரிடம் இறைவனுக்குத் ஏதோ தேவையிருப்பது போலவும், அதனால் அவன் வேறுவழியில்லாமல் தரவேண்டியதிருக்கிறது என்றும் பொருளாகாதா? இது அல்லாஹ் யாரிடத்திலும் எந்த தேவையுமற்றவன் என்ற திருமறையின் வசனங்களுக்கு (அல் குர்ஆன் 35:15 மற்றும் 112:2) முரனாக உள்ளதே!

3) மரணித்த ஒருவரின் பொருட்டால் தேவையைக் கேட்பது கியாமத் நாளின்அதிபதியாகிய தீப்புக் கூறும் இறைவனின் இடத்தில் அமர்வதற்குச் சமமாகும்

மேலும் யாருடைய பொருட்டால் கேட்கின்றோமோ அவர்கள் மரணிக்கும் தருவாயில் இறைவனின் உவப்பை, திருப்தியைப் பெற்றவர்களாக மரணித்தவர்களா அல்லது இறைவனின் வெறுப்பை பெற்றவர்களாக மரணித்தார்களா? என்பது நமக்கு திட்டவட்டமாக எப்படி தெரியும்? யார் நேர்வழி பெற்றவர்கள், யார் வழிதவறியவர்கள் என்று கியாமத் நாளில் அல்லவா நமக்குத் தெரியும்? அதை இங்கேயே நாம் தீமானிப்பது கியாம நாளின் நீதிபதியாகிய அல்லாஹ்வின் இடத்தில் அமர்வதற்குச் சமமாகாதா? நவூபில்லாஹி மின்ஹா. யாருடைய பொருட்டால் நாம் கேட்கின்றோமோ அவர் இறைவனின் திருப்தியைப் பெற்றிருக்காமல் மாறாக கோபத்தைப் பெற்றவராகயிருந்தால் அவ்வாறு துஆ கேட்ட நம்கதி என்னவாகும்? ஏனென்றால் இறந்த அந்த அடியார் இறைவனின் திருப்தியைப் பெற்று அவனுக்கு மிக நெருக்கமாகி விட்டார் என்பதை திட்டவட்டமாக யாராலும் கூற முடியாது. அவ்வாறு கூறமுடியும் என்று யாராவது கூறினால், இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமான, எவர்கள் நல்லடியார்கள், எவர்கள் பாவிகள் என்ற இரகசியத்தை அவர்களும் அறிந்திருப்பதாகக் கூறி இறைவனின் வல்லமையில் பங்குகேட்டு அவனுடைய இடத்தில் அமர்வதற்குச் சமமாகும். இவ்வாறு எண்ணம் கொள்வது இணை வைத்தல் என்னும் இறைவனால் மன்னிக்கப்பட முடியாத மாபெரும் குற்றமாகாதா? அல்லாஹ் நம்மனைவரையும் இவ்வாறு எண்ணம் கொள்வதிலிருந்து காப்பாற்றுவானாகவும்.

அல்லாஹ் கூறுகிறான்:-

"நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்" (அல்குர்ஆன் 2:22)

மேலும், நமக்கு உறுதியாக திட்டவட்டமாகத் தெரியாத எந்த விஷயங்களையும் பின்பற்ற வேண்டாம் என்று அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகிறான்.

"எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்." (அல் குர்ஆன் 17:36)

சரி, அப்படியானால் நீங்கள் அவ்லியாக்களே, இறை நேசர்களே இல்லையென்று கூறுகிறீர்களா என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். இறைவனின் நேசர்களின் இலக்கணங்களைப் பற்றி அல்லாஹ்வே தன் திருமறையில் பல இடங்களில் கூறுகிறான். நாம் மேற்கூறப்பட்ட குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் மூலம் கூறுவது என்ன வென்றால்: -

- இறந்தவர்களால் கேட்கவும், பரிந்து பேசவும்முடியாது.
- அவர்களிடம் கேட்பது அல்லது அவர்களின் பொருட்டால் கேட்பது கூடாது.
- நமது எல்லாத்தேவைகளையும் அல்லாஹ்விடமே கேட்டுப் பெறுதல் வேண்டும்.

இறைவன் கூறுகிறான்:

'என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.'. (அல்குர்ஆன் 40:60)

எனவே யாருடைய பொருட்டால் நாம் இறைவனிடம் கேட்கின்றோமோ அவர் இறைவனின் உவப்பைப் பெற்றவரா அல்லது இல்லையா என்பது நமக்குத் திட்டவட்டமாகத் தொயாததாலும், மேலும் இவ்விசயம் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயமாவதாலும் நாம் அவ்வாறு கேட்பதிலிருந்து தவிர்ந்துக் கொண்டு, திருமறையில் அல்லாஹ் கூறியிருப்பது போல் அவனிடமே எல்லாத் தேவைகளையும் கேட்டு, அவனையே சாந்திருப்போமாக.

6) முன்னோகள் செய்தது மார்க்கமாகி விடாது:-

ஒரு சிலருக்குத் தெளிவு ஏற்பட்டாலும் அவரை ஷைத்தான் இவ்வாறு குழப்புவான் தலைமுறை தலைமுறையாக நமது முன்னோர்களும், தாய் தந்தையரும் நல்லடியார்களிடம் பிராத்தித்து வந்திருக்கிறார்களே, அவர்கள் செய்தவை அத்தனையும் தவறானவையா? அவர்கள் எல்லோரும் பாவிகளா? அவர்கள் எல்லோரும் நரகத்திற்குத் தான் செல்வார்களா? இவாகள் என்ன புதுக்குழப்பத்தை உண்டு பண்ணுகிறார்கள்? என்று ஷைத்தான் சிலரின் இதயத்தில் முன்னோர்கள் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தி, அவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீதுகள் கூறியவற்றை உதாசீனப்படுத்திவிட்டு, அவர்களின் முன்னோர்களுடைய பாதையை பின்பற்றுமாறு செய்துவிடுகின்றான். முன்னோர்கள் செய்தது எல்லாம் மார்க்கமாகி விடாது. குர்ஆன், ஹதீது கூறுவதே மார்க்கமாகும். இவ்வாறு முன்னோர்கள் செய்தார்களே, நாமும் செய்தால் என்ன தவறு என்று கேட்பவர்களுக்கு அல்லாஹ்வே தன்னுடைய திருமறையில் பதிலளிக்கின்றான்:

"மேலும், 'அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் 'அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்' என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?" (அல் குர்ஆன் 2:170)

இந்த வசனமும் இன்னும் எராளமான வசனங்கள், பார்க்கவும் 7:27-30, 31:21, 37:69-70, 43:22-24, 10:78, 21:53, 37:69, 21:52-54, 11:87, 14:10, 11:109, 5:104, 7:28 போன்ற யாவும் நாம் நமது முதாதையர்களையோ, தாய் தந்தையரையோ பின்பற்றக் கூடாது என்றும் அல்லாஹ்வின் திருமறையையும், அவனுடைய தூதரின் வழிகாட்டுதலையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. எனவே எங்களின் முன்னோர்கள் நல்லடியார்களிடம் பிரார்த்தித்தாகள், அதனால் நாங்களும் அவர்களிடம் பிரார்த்திக்கின்றோம் என்று எவரேனும் கூறினால் அது நிச்சயமாக வழிகேடேயாகும். ஏனென்றால் அவர்கள் சென்று போன சமுதாயம். அவர்கள் செய்தது பற்றி நீங்கள் வினவப்படமாட்டீகள் என்பது அல்லாஹ்வின் கூற்றாகும். (அல் குர்ஆன் 2:134)

7) ஆலிம்கள் செய்வதெல்லாம் ஆகுமானதாகிவிடுமா?

இன்னும் சிலர் இதைப்பற்றி எந்த ஒரு ஆலிமும் ஒன்றும் கூறியதில்லையே, நீங்கள் தானே புதிதாக கூறுகிறீகள்! அவர்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது? என்று கேட்கின்றனா. இஸ்லாத்தின் அடிப்படையை நன்கு கற்றறிந்த அறிஞர்-ஆலிம் எவரும் இத்தீமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருந்ததில்லை. இறைவனுக்கு இணைவைக்கும் மாபாதக செயலாகிய நல்லடியார்களிடம் கையேந்துவதை ஆரம்பக்கால முதற்கொண்டே இறைவனுக்கு பயந்த மார்க்க அறிஞர்கள் வண்மையாகக் கண்டித்து வருகின்றார்கள். இன்றளவும் கண்டித்தும் வருகின்றார்கள். இஸ்லாத்தின் மற்ற சில அம்சங்களில் வேண்டுமானால் ஆலிம்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருக்கலாமே தவிர ஈமானுக்கு வேட்டு வைக்கும் கப்ரு வணக்கத்தைப் பற்றிய தெளிவுகளில் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை நன்கு கற்றுணர்ந்த அறிஞாகளிடம் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவர்கள் ஒருமித்த குரலாக இத்தீயச் செயல்களை எதிர்க்கவே செய்கின்றனர். ஆனால் கப்ரு வணக்கமுறைகளை ஆதரிப்போன் கைகளில் அதிகாரமும், பொருளாதாரமும் இருப்பதால் அவர்கள், அந்த கப்ரு வணக்க முறைகளுக்கு எதிரான ஆலிம்களின் குரல்கள் மக்களைச் சென்றடையாமல் தடுக்கின்றனர்.

ஆனால் ஆலிம்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் ஒரு சில சொற்பமானவர்களே, அதிகாரமும், பொருளாதாரமும் மிகுந்த கப்ரு வணங்கிகளிடமிருந்து அற்ப உலக ஆதாயம் பெறும் பொருட்டு, நல்லடியார்களிடம் நேரடியாகக் கேட்டுப்பெறுவதில் எந்தத்தவறும் இல்லை என்று கூறி, நல்லடியார்களின் கப்ருகளில் நடைபெறும் மாக்கத்திற்கு விரோதமான கூடு, கொடியேத்தம், சந்தனம் பூசுதல், மேளதாளம் போன்ற அனாச்சாரங்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். மேலும் இவர்களே முஸ்லிம்களிடையே புரையோடிப்போய் இருக்கும் இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து வகையான பித்அத்தான காரியங்களுக்கும், மூடப்பழக்க வழக்கங்களுக்கும் ஆதரவு தெரிவித்து தங்களின் வயிற்றைக் கழுவிக் கொள்கின்றனர். இவர்களைக் குறித்து அல்லாஹ் தன் திருமறையிலே கடுமையாக எச்சரிக்கின்றான்.

"நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்." (அல்குர்ஆன் 2:42)

"நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்." (அல் குர்ஆன் 2:159)

மார்க்கத்தின் மீது பொய்யை ஏற்றிச் சொல்வது தீமைகளில் மிக மோசமானதும், பொய்யின் வகைகளில் மிக கொடியதும் ஆகும். அதற்கு கூலி நரகமே என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அறிவிப்பவர் : ஆபூஹுரைரா ரலி, ஆதார நூல்: புகாரி

எனவே சமுதாய மக்களுக்கு மார்க்க அறிவைப் புகட்டி சமுதாயத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பிலுள்ள சமுதாயத்தின் கண்களான உலமாப்பெருமக்கள் அல்லாஹ்வும், ரஸுலும் நமக்குக் காட்டித்தந்த உண்மையான இஸ்லாத்தை எதற்கும், எவருக்கும் பயப்படாமல் துணிந்துக்கூறி, நாளை மறுமையில் அல்லாஹ் அளிக்கவிருக்கும் அளப்பரிய செல்வங்களைப் பெற்றிட வேண்டுகிறோம். அல்லாஹ் அவர்களுக்கு இத்தகைய ஆற்றலைத்தந்து மார்க்கச் சேவை செய்வதன் மூலம் ஈருலகிலும் நற்பேருகளை பெற வல்ல இறைவனிடம் பிராத்திப்போம்.

முடிவுரை:
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறும் முழுமையான ஈமானைத் தந்து, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் கையேந்தி நிற்காமல் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக. ஆமீன்.