உதாரணம்-1: -
ஒருவர் சிங்கப்பூரிலிருந்து கொண்டு அல்லது உலகின் வேறு எந்த மூலையில் இருந்துக் கொண்டோ நாகூரில் அடக்கமாகியிருப்பதாக் கூறப்படும் ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ்விடம் யா ஷாகுல் ஹமீது பாதுஷாவே என்னுடைய இன்ன தேவையை நீங்கள் நிறைவேற்றித் தந்தால் நான் தங்களின் இடத்திற்கு வருகை தந்து தங்களுக்கு காணிக்கை செலுத்துகிறேன் என நேர்ச்சை செய்வதாக வைத்துக் கொள்வோம்.
இந்த இடத்தில் நாம் இவருடைய வேண்டுதலை ஆய்வு செய்தோமேயானால் இவர் பல வகைகளில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவராகிறார். அவைகளாளாவன: -
1) வணக்க வழிபாடுகளில் இணை வைப்பது: -
அல்லாஹ்விடம் மாத்திரமே செய்ய வேண்டிய பிரார்த்தனையை , துஆவை ஷாகுல் ஹமீது அவுலியாவிடம் செய்தல்
அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டிய நேர்ச்சையை ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கு செய்தல்
2) அல்லாஹ்வுடைய பண்புகளில், ஆற்றல்களில் இணை வைப்பது: -
அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளாகிய எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் (அஸ் ஸமீவுன்) மற்றும் ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் (பஷீரன்) என்ற பண்புகள், ஆற்றல்கள் ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் இருப்பதாகக் கருதுவது
அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்பாகிய ஒருவரின் இதயத்தில் உள்ள இரகசியத்தை அறியும் சக்தி உடையவன் என்ற பண்பை, ஆற்றலை ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் இருப்பதாகக் கருதி அவரும் மனிதர்களின் இதயங்களிலுள்ளவற்றையெல்லாம் அறிகிறார் என நம்புவது
அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்பாகிய பிரார்த்தனையை செவிமெடுத்து அதை நிறைவேற்றித் தரும் ஆற்றல் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் இருப்பதாக கருதுவது.
சகோதர, சகோதரிகளே இங்கு நாம் கவனமாக சிந்திக்க வேண்டும். ஏனெனில் அறிந்தோ அல்லது அறியாமலோ சர்வ சாதாரணமாக நம்மில் சிலர் செய்கின்ற இந்த வேண்டுதலில் இத்தனை வகையான ஷிர்க் நிறைந்துள்ளது. ஒருவர் மேற்கண்ட உதாரணத்தில் உள்ள பிரார்த்தனை (துஆ) செய்தல் மற்றும் நேர்ச்சை செய்தல் போன்ற வணக்கங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டியவை என்றும், மேற்கண்ட உதாரணத்தில் கூறப்பட்ட பண்புகள் அல்லாஹ்வுக்கு மற்றுமே உரித்தானது என்றும் உணர்ந்துக் கொண்டால் அவர் இன்ஷா அல்லாஹ் இத்தகைய இணை வைத்தல்களிலிருந்து தவிர்ந்துக் கொள்வார். இவற்றை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஒளியில் ஆராய்வோம்.
துஆ (பிரார்த்தனை) செய்வதும் ஒரு வணக்கமே!: -
அல்லாஹ் கூறுகிறான்: -
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; 'நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்' என்று கூறுவீராக (அல் குர்ஆன் 2:186)
உங்கள் இறைவன் கூறுகிறான்: 'என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள். (அல் குர்ஆன் 40:60)
மேலும் அல் குர்ஆனின் வசனங்கள் 2:286, 7:55, 18:28, 35:14, 72:18 அனைத்தும் அல்லாஹ்விடமே பிரார்த்தனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
பிரார்த்தனை (துஆ) ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் -ரலி, நூல்:அபூதாவூத், திர்மிதி)
மேற்கண்ட வசனங்கள் மற்றும் நபி மொழியில் இருந்து நாம் பெறும் தெளிவுகள் யாவை எனில்: -
துஆ ஒரு வணக்கமாகும்.
அல்லாஹ் சமீபமாக இருக்கிறான்.
பிரார்த்தனைக்கு விடையளிக்கிறான்.
அல்லாஹ்விடமே பிரார்த்திக்க (துஆ) செய்ய வேண்டும்
எனவே மேற்கண்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் நமது தேவைகளை அல்லாஹ்விடமே பிரார்த்திக்க வேண்டும். ஷாகுல் ஹமீது அவுலியாவிடமோ அல்லது வேறு எந்த வலியிடமோ, நபியிடமோ பிரார்த்தித்தால் அது ஷிர்க் எனப்படும் மன்னிக்கபடாத மாபெரும் பாவமாகும்.
நேர்ச்சை செய்வதும் ஒரு வணக்கமேயாகும்: -
நேர்ச்சை செய்வது ஒரு வணக்கம் என்பதற்கு பின்வரும் குர்ஆன் வசனங்கள் சான்றுகளாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர். (அல் குர்ஆன் 2:270)
அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும். (அல் குர்ஆன் 76:7)
எனவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் நேர்ச்சை என்பதுவும் ஒரு வணக்கமே. அதை அல்லஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டும். அதைவிடுத்து ஷாகுல் ஹமீது அவுலியா மற்றும் இன்னும் பிற அவுலியாவுக்குச் செய்தோமேயானால் அது ஷிர்க் என்னும் இணை வைத்தலைச் சேரும்.
எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் அல்லாஹ் மட்டுமே: -
ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் அல்லாஹ் மட்டுமே: -
திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக அஸ் ஸமீவுன் என கூறுகிறான். இதற்கு ஒருவர் எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும், எத்தகையை சூழலில் இருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் வல்லமை, ஆற்றல் பெற்றவன் என பொருள்படும். மேலும் ஒரே நேரத்தில் பல கோடி நபர்கள் அழைத்தாலும் அவர்களின் அழைப்பையும் கேட்கக் கூடியவன் எனவும் பொருள்படும். இந்த பண்பு, ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் இல்லை.
மேலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக பஷீரன் என கூறுகிறான். இதற்கு அல்லாஹ் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியவன் என பொருள்படும். அதாவது ஒருவர் எங்கிருந்துக் கொண்டும் மேலும் எத்தகைய சூழலில் இருந்துக் கொண்டும் அழைத்தாலும் அவரைப் பார்க்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் அவன் அவனுடைய படைப்பினங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடிய ஆற்றல் உள்ளவனாகவும் இருக்கிறான். இந்த ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் இல்லை.
யாராவது ஒருவர் தாம் சிங்கப்பூரிலிருந்து ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ்வை அழைக்கும் போதும், அதே நேரத்தில் உலகில் வேறு எந்த இடத்திலிருந்துக் கொண்டும் அழைக்கக் கூடிய பல்லாயிரக்கணக்காணோர்களைப் பார்த்து அவர்களின் அழைப்பைச் செவிமெடுக்கிறார் என நம்புவது அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய அஸ் ஸமீவுன் மற்றும் பஷீரன் என்ற நாமங்களை, பண்புகளை இறைவனல்லாத ஷாகுல் ஹமீது அவுலியாக்கு இணை கற்பிப்பது போலாகும்.
அவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கேட்கும் தன்மையையும் (அஸ் ஸமீவுன்) மற்றும் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்கக்கூடியவன் (பஷீரன்) என்ற தன்மையையும் அல்லாஹ்வுக்கு மட்டுமல்லாமல் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் இருப்பதாக நம்மி அல்லாஹ்வின் அந்தப் பண்புகளில், ஆற்றல்களில் இணை வைத்தவராவார்.
அல்லாஹ் கூறுகிறான்: -
எவரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், "அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்." (அல் குர்ஆன் 4:134)
இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே: -
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: -
மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் - நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன் (அல்குர்ஆன் 67:13)
நம் மனதில் உள்ள நம்முடைய தேவைகளை அல்லது எண்ணங்களை நாம் வெளியே சொன்னால் தவிர மற்றவர்களால் அறிந்து கொள்ள இயலாது என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ் மட்டும் நாம் மனதிற்குள் நினைப்பதையும் வெளிப்படையாகப் பேசுவதையும் அறிகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: -
அன்றியும், அல்லாஹ் நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் அறிகிறான். (அல் குர்ஆன் 16:19)
வெளிப்படையாக (நீங்கள் பேசும்) பேச்சையும் அவன் நிச்சயமாக அறிகிறான்; நீங்கள் (இதயத்தில்) மறைத்து வைப்பதையும் அவன் (நிச்சயமாக) அறிகிறான் (அல் குர்ஆன் 21:110)
மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில்: -
உள்ளங்களில் மறைத்து வைப்பதை அறிபவனும்,
இதயங்களிலுள்ள இரகசியத்தை அறிபவனும்,
மனிதர்களின் மனதில் உள்ள தேவைகளை அறிபவனும்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பது உறுதியாகிறது. ஆனால் ஒருவர் இந்தப் பண்புகள், ஆற்றல்கள் ஷாகுல் ஹமீது அவுலியாவிற்கும் உண்டு அதனால் அவர் சிங்ப்பூரிலிந்து கேட்கும் அவரது தேவைகளை அல்லது அவருடைய மனதில் எண்ணியிருக்கும் நாட்டங்களை ஷாகுல் ஹமீது அவுலியா நிறைவேற்றித் தருகிறார் என நம்பிக்கை கொண்டு அதன்படி செயல்படுவாராயின் நிச்சயமாக அவர் அல்லாஹ், தனக்கு மட்டுமே இருக்கக் கூடியதாக கூறும் அந்தப் பண்புகளை, ஆற்றல்களை அவர் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் பங்கிடுவதன் மூலம் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவராக கருதப்படுவார்.
இவ்வாறு அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்: -
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் - இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (அல் குர்ஆன் 29:42)
மேலும், இதய இரகசியங்களை அறிந்தவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று பல வசனங்கள் கூறுகின்றன. இது பற்றிய விளக்கத்தை 'இதய இரகசியத்தை அறிபவன் அல்லாஹ்வே' என்ற தலைப்பில் பார்க்கவும்.
பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே: -
நாம் எங்கிருந்துக் கொண்டு துஆ (பிரார்த்தனை) கேட்டாலும், எத்தகைய சூழ்நிலைகளில் இருந்துக் கொண்டு அழைத்தாலும் நம்முடைய அழைப்பச் செவியேற்று அதற்கு பதிலளிப்பவன், அந்த தேவைகளை நிறைவேற்றுபவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
அல்லாஹ் கூறுகிறான்: -
உங்கள் இறைவன் கூறுகிறான்: 'என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.' (அல் குர்ஆன் 40:60)
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; 'நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்' என்று கூறுவீராக. (அல் குர்ஆன் 2:186)
'உங்கள் இணை (தெய்வங்)களை அழையுங்கள்' என்று (அவர்களுக்குச்) சொல்லப்படும். அவர்களை இவர்கள் அழைப்பார்கள்; ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள்; மேலும், அவர்கள் வேதனையைக் காண்பார்கள். அவர்கள் நேர்வழியில் சென்றிருந்தால் (இந்நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்). (அல் குர்ஆன் 28:64)
நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள். (அல் குர்ஆன் 35:14)
உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை. (அல் குர்ஆன் 13:14)
'எனக்கு இணையானவர்கள் என எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள்' என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்.' (அல் குர்ஆன் 18:52)
எனவே எனதருமை சகோதர சகோதரிகளே மேற்காணும் வசனங்களின் மூலம் நாம் பெறும் படிப்பினைகளப் பற்றி சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்த வசனங்களின் மூலம் நாம் பெறும் தெளிவுகள் யாவை எனில்: -
பிரார்த்திப்பவரின் பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே
அல்லாஹ்விடம் மாத்திரமே பிரார்த்தனை செய்யவேண்டும்
அல்லாஹ்வைத்தவிர மற்றவர்களிடம் பிரார்த்தனை செய்தால் அவர்களால் அந்தப் பிரார்த்தனையைச் செவியேற்க இயலாது.
கியாம நாள் வரை அவர்களை அழைத்தாலும் அவர்களால் பதிலளிக்க இயலாது
கியாம நானில் அல்லாஹ்வுக்கு இணை வைத்ததை அவர்கள் நிராகரித்து விடுவார்கள்.
அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்பவருக்குத்தான் அல்லாஹ் நேர்வழி காட்டுவான்.
எனவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் ஒருவர் பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே என நம்பிக்கை கொண்டு அவனிடமே பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆனால் ஷாகுல் ஹமீது அவுலியாவும் நம்முடைய பிரார்த்தனையைச் செவிமெடுத்து நமக்கு பதிலளித்து நம்முடைய தேவைகளைப் பெற்றுத்தருகிறார் என நம்பிக்கைக் கொண்டால் அது ஷிர்க் என்னும் இணை வைத்தலைத் தவிர வேறொன்றுமில்லை.
அடுத்து....