Jul 22, 2008
இஸ்லாம் - கேள்வி, பதில்கள் :அல்-குர்ஆன் (For learners) பகுதி 2
“அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்”. (33:59)
Q52) அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு தீர்ப்பளிக்காதவர்கள் யார் என குர்ஆன் கூறுகிறது?
“எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொணடு தீர்ப்பளிக்க வில்லையோ, அவர்கள் நிச்சயமாக காபிர்கள் தாம்” அல் மாயிதா(5:44)
Q53) மார்க்கத்தில் பல பிரிவுகள் குறித்து குர்ஆன் கூறுவது என்ன?
“இறைவனின் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும் யார் தங்களுக்குள் பிரிவையுண்டு பண்ணிக் கொண்டு மாறுபாடாகி விடடார்களோ அவர்களைப் போன்று ஆகிவிடாதீர்கள். அத்தகையோருக்கு கடுமையான வேதனையுண்டு” ஆல இம்ரான்(3:105)
Q54) கருக்கலைப்பு, குடும்பக்கட்டுப்பாடு குறித்து இறைவன் கூறுவது என்ன?
“வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொலைச் செய்யாதீர்கள்: நாமே உங்களுக்கும் ஆகாரமளிக்கின்றோம்: அவர்களுக்கும் அளிப்போம்” அல் அன் ஆம்(6:151) மற்றும் பனீ இஸ்ராயீல்(17:31)
Q55) வானவர்களுக்கு இறக்கைகள் உண்டா?
வானவர்களுக்கு இறக்கைகள் உண்டு. 35:1 (அல் ஃபாத்திர்)
Q56) ஏழு இரவுகள் எட்டு பகல்களும் தொடர்ந்தார்போல் எந்த சமூகத்திற்கு வேதனை இறக்கப்பட்டது?
ஆது சமுகத்தாருக்கு. (69:6,7) (அல் ஹாக்கா)
Q57) முஃமினான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது குறித்து குர்ஆன் என்ன கூறுகிறது?
‘எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள பேதைப் பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்: இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு’ அந் நூர்(24:23)
Q58) இறைவனால் பெயர் சூட்டப்படட நபிமார்கள் யாவர்?
யஹ்யா (அலை). மர்யம்(19:7), ஆல இம்ரான்(3:39) மற்றும் ஈஸா (அலை) (3:45)
Q59) குர்ஆனில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வரும் வானவர்கள் பெயர் என்ன?
மாலிக் (அலை) அஜ் ஜுக்ருஃப்(43:77) மற்றும் மீக்காயீல் (அலை) அல்பகரா(2:98)
Q60) ஹுதமா என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்?
ஹுதமா-எரிந்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பு: அது உடலில் பட்டதும் இதயங்களில் பாயும்: ஹுமஜா (104-4,5,6,7)
Q61) ஹாவியா என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்?
ஹாவியா-அது சுட்டு எரிக்கும் நரகத்தின் தீக்கிடங்காகும். அல் காரிஆ(102-8,9,10,11)
Q62) ஜக்கூம் என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்?
ஜக்கூம்-இது நரகத்தில் உள்ள கள்ளி மரமாகும்: நரகவாசிகளின் விருந்தாகும்: அம்மரம் நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும்: அதன் பாளைகள் சைத்தான்களின் தலைகளைப் போல் இருக்கும். அஸ் ஸாஃப்ஃபாத்(37:61-66) மற்றும் அத் துகான்(44:43-46), 56:52
Q63) திருக்குர்ஆனில் உள்ள மிகப்பெரிய ஆயத்து எது?
அல்பகரா(2:282)
Q64) சிலந்திப் பூச்சிக்கு உதாரணமாக அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்? ஏன்?
சிலந்திப் பூச்சிக்கு உதாரணமாக அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குப் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்பவர்களை குர்ஆனில் கூறுகிறான். மேலும் இந்த வசனத்தில் சிலந்திப் பூச்சியின் வீடு வீடுகளில் எல்லாம் மிக மிக பலஹீனமாகயிருப்பதைப் போல், இவர்கள் தங்களுக்கு பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்கள் (அவுலியாக்கள், ஷைய்கு மார்கள், பீர் மார்கள், மஸ்தான்கள்) போன்றவர்களும் உங்களுக்கு உதவ முடியாத அளவுக்கு மிக மிக பலஹீனமானவர்களே! என்பதை தெளிவு படுத்துகிறான்.(அன் கபூத்(29:41)
Q65) கழுதைக்கு உதாரணமாக அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்?
கழுதைக்கு உதாரணமாக, தவ்ராத் வேதம் கொடுக்கப் பெற்றும் அதன்படி நடக்காதவர்களை குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான். (அல் குர்ஆன் ஜும்ஆ(62:5). மேலும் வெறுக்கத்தக்க குரல் வளம் உடையோருக்கும் கழுதையைஉதாரணமாக கூறுகிறான். (31:19)
Q66) தீமையான செயல் புரிபவர்கள் மரண தருவாயில் பாவ மன்னிப்பு கோருவது குறித்து இறைவன் கூறுவது என்ன?
“இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, ‘நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்’ என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். ” 4:18 (அந் நிஸா)
Q67) உங்களுக்கு தெரியாத ஐந்து விஷயங்கள் என்று சூரத்துல் லுக்மான் முலம் இறைவன் குறிப்பிடுபவை எவை?
1) கியாம நாள் 2) மழை இறங்குவது 3) கர்பங்களில் உள்ளவை 4) நாளைய தினம் தான் சம்பாதிப்பதை 5) எந்த பூமியில் தாம் இறப்போம். லுக்மான்(31:34)
Q68) அஸ்ஸப்ஃவுல் மஸானி என அழைக்கப்படும் சூரா எது?
நபி (ஸல்) அவர்கள் சூரத்துல் பாத்திஹாவிற்கு அஸ்ஸப்ஃவுல் மஸானி (திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்) எனப் பெயரிட்டுள்ளார்கள் (ஆதாரம் :புகாரி)
Q69) குர்ஆனின் இதயம் என சிறப்பிக்கப்பட்ட சூரா எது?
சூரத்துல் யாசின் (36 வது அத்தியாயம்)
Q70) பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டா?
“பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்” அந் நிஸா (4:7)
Q71) தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஜக்காத் கொடுக்காதவர் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது?
“எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!. (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) ‘இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்’ (என்று கூறப்படும்). தவ்பா (9:34,35)
Q72) லுக்மான (அலை) அவர்கள் தம் புதல்வருக்கு அறிவுரை கூறுகையில் எந்த செயலை செய்தால் அது மிகப்பெரும் அநியாயமாகும் என்று கூறினார்கள்?
இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக). (31:13)
Q73) ஈமான் கொண்டவர்களை சோதிப்பதாக அல்லாஹ் கூறுபவற்றுல் சிலதைக் கூறுக!
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக (2:155)
Q74) நன்மையான மற்றும் தீமையான காரியங்களுக்கு சிபாரிசு செய்பவர்களுக்கு கிடைக்கும் கூலி என்ன?
எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். (4:85)
Q75) கலந்தாலோசனை செய்வது குறித்து குர்ஆன் கூறுவது என்ன?
ஈமான் கொண்ட முஃமின்கள் தங்கள் காரியங்களை தங்களிடையே கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும். ஆதாரம் :(42:36-38) மற்றும் 3:159
Q76) கேலி செய்தல் (பரிகாசம் செய்தல், கிண்டல் செய்தல்) குறித்து குர்ஆன் கூறுவது என்ன?
கேலி செய்தல் (பரிகசிப்பது, கின்டல் செய்வது) அறிவீனர்களின் செயல். ஆதாரம் : (2:67)
Q77) யஃகூபு (அலை) தம் குமாரர்களுக்கு செய்த வஸிய்யத்து (உபதேசம்) என்ன?
”என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.’ யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்; ‘எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?’ எனக் கேட்டதற்கு, ‘உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம்; அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்’ எனக் கூறினர். (2:132-133)
Q78) ஈஸா (அலை) அவர்களின் சீடர்களான ஹவாரிய்யூன்கள் செய்த பிரார்த்தனை என்ன?
“எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.) (3:53)
Q79) பெற்றோருக்காக என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் என குர்ஆன் கூறுகிறது?
இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (17:24)
Q80) ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழையமாட்டார்கள் என எவர்களைக் குறித்து இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்?
எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம். (7:40)
Q81) நரகத்திற்கு எத்தனை வாசல்கள் இருப்பதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்?
“அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்” (15:44)
Q82) சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் உவமைகளாக இறைவன் தன் திருமறையில் எதைக் கூறுகின்றான்?
அவன்தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன அவ்வெள்ளம் நுரையை மேலே சமந்து செல்கிறது (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் அதைப் போல் நுரை உண்டாகின்றது இவ்வாறு சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான்; அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்துபோய் விடுகிறது ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது இவ்வாறே அல்லாஹ் உமமைகளைக் கூறுகிறான். (13:17)
Q83) இறைவன் மன்னிக்காத மிகப்பெரும் பாவம் எது என அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்?
ஷிர்க் (இணைவைத்தல்) (4:116)
Q84) அஹ்ஸாப் போரின் போது நாற்புறமும் பல்லாயிரக்கணக்கான எதிரிகளால் சுழப்பட்டிருந்த முஸ்லிம்களை எவ்வாறு காப்பாற்றியதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்?
முஃமின்களே! உங்கள் மீதும் அல்லாஹ் புரிந்திருக்கும் அருட் கொடையை நினைத்துப் பாருங்கள்; உங்களிடம் (எதிரிகளின்) படைகள் வந்த போது (புயல்) காற்றையும், நீங்கள் (கண்களால்) பார்க்கவியலா (வானவர்களின்) படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம்; மேலும், நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கிறான். (33:9)
Q85) ஷைத்தான்களின் சகோதரர்கள் என யாரைக் குறித்து குர்ஆன் கூறுகிறது?
நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். (17:27)
Q86) புண்ணியம் என்றால் என்ன என்பதற்கு இறைவன் தன் திருமறையில் கூறும் விளக்கம் என்ன?
புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்). (2:177)
Q87) யூனூஸ் நபி (அலை) அவர்கள் மீன் வயிற்றினுள் இருக்கும் போது இறைவனிடம் செய்த பிரார்த்தனையைக் கூறுக.
அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து ‘உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்’ என்று பிரார்த்தித்தார்.
Q88) தீயோர்களின் பதிவேடு குறித்து குர்ஆன் கூறுவது என்ன?
ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது. ‘ஸிஜ்ஜீன்’ என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்? அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும். பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள். வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார். நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், ‘அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே’ என்று கூறுகின்றான். அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன. (தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள். பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள். ‘எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது’ என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும். (83:7-17)
Q89) நல்லோர்களின் பதிவேடு குறித்து குர்ஆன் கூறுவது என்ன?
“நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் ‘இல்லிய்யீ’னில் இருக்கிறது. ‘இல்லிய்யுன்’ என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்? (அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும். (அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள். நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) ‘நயீம்’ என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள். அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர். (பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான(போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். அதன் முத்திரை கஸ்தூரியாகும்; எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும். இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுமுள்ளதாகும். அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முர்புகள் அருந்துவார்கள். (18-28)
Q90) வட்டி வாங்குபவர்களுக்கான தண்டனை குறித்து குர்ஆன் கூறுவது என்ன?
“யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (2:275)
Q91) கல்வி ஞானம் கொடுக்கப்பட்டவர்களின் இதயத்தில் குர்ஆன் பாதுகாக்கப்படுகிறது என இறைவன் கூறும் வசனம் எது?
“எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது” (29:49)
Q92) அபூபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தில் எந்த ஸஹாபியின் பொறுப்பில் எழுத்து வடிவில் முழுமையான குர்ஆனாக தொகுக்கும் பணி ஓப்படைக்கப்பட்டது?
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் முழு குர்ஆனையும் எழுத்து வடிவில் தொகுக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.
அவ்வப்போது அல்லாஹ் இறக்கியருளும் வஹியை நபி (ஸல்) அவர்கள் உடனே எழுதி வைத்துக் கொள்ளுமாறு தம் தோழர்களுக்கு கட்டளையிடுவார்கள். இவ்வாறு இறைச்செய்தியை எழுதுவதற்காக நபி (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்டவர்களில் அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி ரலி), முஆவியா (ரலி), அபான் பின் ஸயீத் (ரலி), காலித் பின் வலித் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி) மற்றும் ஸாபித் பின் கைஸ் (ரலி) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தோல்பட்டைகளிலும், மரப்பட்டைகளிலும், எலும்புகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும் குர்ஆன் எழுதி வைத்து பாதுகாக்கப்பட்டது. இவ்வாறு எழுதி வைத்து பாதுகாக்கப்பட்டவைகள் நபி(ஸல்) அவர்களின் வீட்டில் வைத்து பாதுகாக்ப்பட்டிருந்தது. அபூபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தில் முழு குர்ஆனையும் மனனம் செய்திருந்த ஸைத் பின் ஸாபித் (ரலி) பொறுப்பில் எழுத்து வடிவில் முழுமையான குர்ஆனாக தொகுக்கும் பணி ஓப்படைக்கப்பட்டு, அவர்கள் அப்பணியை செவ்வனே நிறைவேற்றினார்கள். (ஆதாரம் : புகாரி)
Q93) ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களால் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்ட முழு குர்ஆன், உஸ்மான் (ரலி) அவர்களால் தற்போதுள்ள அமைப்பில் தொகுக்ப்படும் வரையிலும் யார் யார் பொறுப்பில் இருந்தது?
முதலில் அபூபக்கர் (ரலி) அவர்கள் பொறுப்பிலும், அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அது உமர் (ரலி) அவர்களின் பொறுப்பிலும், அவர்களின் மரணத்திற்குப் பின்னர் உமர் (ரலி) அவர்களின் மகளும், நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான ஹப்ஸா (ரலி) அவர்களிடத்திலும் இருந்தது.
பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஹப்ஸா (ரலி) அவர்களிடத்தில் இருந்த அந்த மூலப்பிரதியிலிருந்து பல பிரதிகளைத் தொகுத்து உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்கள். அவற்றுல் ஒன்று தான் ரஷ்யாவின் தாஸ்கண்ட் நகரத்திலும் மற்றொன்று துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திலும் இருக்கும் அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
Q94) உஸ்மான் (ரலி) அவர்களால் பல பிரதிகளாக குர்ஆன் தொகுக்ப்படுவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றவர்கள் யாவர்?
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தோல்பட்டைகளிலும், மரப்பட்டைகளிலும், எலும்புகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும் குர்ஆன் எழுதி வைத்து பாதுகாக்கப்பட்ட குர்ஆனை அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் எழுத்து வடிவில் முழுமையான குர்ஆனாக அமைப்பதற்காக பொறுப்பேற்ற ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களே உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் பல பிரதிகளாக குர்ஆன் தொகுக்ப்படுவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் தலைமை வகித்தார்கள்.
இவருடைய தலைமையிலான இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த மற்ற நபித்தோழர்கள் அப்துல்லாஹ் பின் ஜூபைர் (ரலி), ஸயித் பின் அல் ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அல் ஹாரிஸ் (ரலி) போன்றோர்களாவார்கள்.
Q95) ‘குர்ஆனின் தாய்’ என நபி (ஸல்) அவர்களால் பெயரிடப்பட்ட சூரா எது?
அல்-பாத்திஹா
Q96) நபி (ஸல்) அவர்களுக்கு கட்டுப்படுவதன் அவசியம் குறித்து குர்ஆன் கூறும் வசனங்களில் மூன்றைக் கூறுக:
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள். (47:33)
“(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்” (59:7)
(நபியே!) நீர் கூறும்: ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (3:31)
Q97) இஸ்லாம் அல்லாத மற்ற மார்க்கங்களைப் பின்பற்றுவது குறித்து குர்ஆன் கூறுவது என்ன?
இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (3:85)
Q98) அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களை (ஷிர்க் செய்பவர்களை) திருமணம் செய்வது குறித்து குர்ஆன் கூறும் அறிவுரை என்ன?
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (2:221)
Q99) ஸலாம் கூறப்பட்டால் அதற்கு பதில் கூறவேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தும் குர்ஆன் வசனம் எது?
உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். (4:86)
Q100) செய்த தருமங்களைச் சொல்லிக்காட்டுவதற்கு குர்ஆன் கூறும் உவமை என்ன?
“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை. (2:264)
Jul 16, 2008
இஸ்லாம் - கேள்வி, பதில்கள் : அல்-குர்ஆன் (For Children and Beginners) பகுதி 1
ஓதுதல்! (that which is recited; or that which is dictated in memory form)
2) குர்ஆன் யாரால் அருளப்பட்டது?
அகிலங்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்டது
3) குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?
லைலத்துல் கத்ர் இரவில்
4) குர்ஆன் யார் மூலமாக அருளப்பட்டது
கண்ணியமிக்க வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலமாக.
5) குர்ஆன் எந்த தூதருக்கு அருளப்பட்டது?
இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு.
6) முதன் முதலாக குர்ஆன் எந்த இடத்தில் வைத்து அருளப்பட்டது?
மக்காவிலுள்ள ஹிரா குகையில் அருளப்பட்டது
7) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது?
அபூபக்கர் (ரலி) அவர்களின்ஆட்சிக்காலத்தில்
8.) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் முதன் முதலாக பிரதியெடுக்கப்பட்டது?
உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்.
9) கலிபா உதுமான் அவர்களின் காலத்தில் பிரதியெடுக்கப்பட்ட குர்ஆன் தற்போது எங்கிருக்கிறது?
ஒன்று தாஸ்கண்டிலும், மற்றொன்று துர்கியின் இஸ்தான்புல் அருங்காட்சியகத்தில் உள்ளது.
11) அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் யார் என குர்ஆன் கூறுகிறது?
தக்வா (இறையச்சம்) உடையவர்கள்
12) குர்ஆனில் மிகப்பெரிய அத்தியாயம் எது?
சூரத்துல் பகரா (இரண்டாவது அத்தியாயம்)
13) குர்ஆனில் மிகச் சிறிய அத்தியாயம் எது?
சூரத்துல் கவ்ஸர் (108 வது அத்தியாயம்)
14) குர்ஆனை பாதுகாப்பது யார் பொறுப்பில் உள்ளது?
அதை இறக்கிய இறைவனே அதன் பாதுகாவலன் ஆவான்.
15) நபி (ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் முதன் முதலாக குர்ஆன் அருளப்பட்டது?
40 ஆவது வயதில்
16) குர்ஆனுக்கு இருக்கும் மற்ற பெயர்களில் சிலவற்றைக் கூறுக:
அல்-ஃபுர்கான், அல்-கிதாப், அத்-திக்ர், அல்-நூர், அல்-ஹூதா
17) இறைவன் நம்மோடு இருக்கிறான் என கூறிய நபி யார்?
முஹம்மது (ஸல்) அத் தவ்பா(9:40)
18) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?
ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாது. அஸ் ஸபா(34:14) மற்றும் அல் ஜின்னு(72:10)
19) குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி என சிறப்பித்துக் கூறப்பட்ட சூரா எது?
சூரத்துல் இக்லாஸ் (112 வது அத்தியாயம்)
20) குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் இருக்கிறது?
114 அத்தியாயங்கள்
21) நபி முஸா (அலை) அவர்களோடு இறைவன் பேசிய பள்ளத்தாக்கின் பெயர் என்ன?
துவா பள்ளத்தாக்கு. அந் நாஜிஆத்(79:16), தாஹா(20:12). இது தூர் மலையின் அடிவாரத்தில் உள்ளது. (19:52)
22) அல்-குர்ஆனை மனனம் செய்த முதல் மனிதர் யார்?
முஹம்மது நபி (ஸல்) அவர்கள்
23) நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் குர்ஆனில் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது?
முஹம்மது (ஸல்) என நான்கு முறையும், அஹ்மது என ஒரு முறையும் இடம் பெற்றுள்ளது.
24) இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் இறையில்லம் எது என குர்ஆன் கூறுகிறது?
கஃபா
25) எதிர்கால சந்ததியினருக்கு அத்தாட்சியாக விட்டு வைக்கப்பட்டுள்ளவற்றில் இரண்டைக் கூறுக:
நூஹ் (அலை) அவர்களின் கப்பல் (54:15), மற்றும் பிர்அவ்னின் உடல் (10:92)
26) நூஹ் நபியின் கப்பல் எங்கு ஒதுங்கியது என குர்ஆன் கூறுகிறது?
ஜூதி மலையில் (11:44 )
27) குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே ஒரு ஸஹாபியின் பெயர் என்ன?
ஜைத் பின் ஹாரித் (ரலி) அஹ்ஜாப் (33:37)
28) ஷைத்தான் எந்த இனத்தைச் சேர்ந்தவன் என குர்ஆன் குறிப்பிடுகிறது?
ஜின் இனம்
29) இஸ்ராயிலின் வழித்தோன்றல்களுக்கு கடமையாக்கப்பட்ட வணக்கங்கள் என குர்ஆன் குறிப்பிடுபவை எவைகளை?
தொழுகை மற்றும் ஜக்காத்
30) ‘பிஸ்மில்லாஹ்’ கூறி ஆரம்பம் செய்யப்படாத சூரா எது?
சூரத்துத் தவ்பா
31) ‘பிஸ்மில்லாஹ்’ இரண்டு முறை வரும் சூரா எது?
சூரத்துந் நம்ல் -எறும்புகள் (27:30)
32) குர்ஆன் முழுவதுவதுமாக இறக்கியருளப்பட எத்தனை வருடங்கள் ஆனது?
23 வருடங்கள்
33) தொழுகையில் அவசியம் ஓதப்பட வேண்டிய சூரா எது?
அல்-பாத்திஹா
34) துஆ (பிரார்த்தனை) என குறிப்பிடப்படும் சூரா எது?
அல்-பாத்திஹா
35) திருமறையின் தோற்றுவாய் என குறிப்பிடப்படும் சூரா எது?
அல்-பாத்திஹா
36) குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரே ஒரு பெண்மணி யார்?
மர்யம் (அலை)
37) நபிமார்களின் பெயரால் எத்தனை சூராக்கள் இருக்கின்றன?
6 சூராக்கள் (யூனுஸ், ஹூத், யூசுப், இப்ராஹீம், நூஹ், முஹம்மது (ஸல்))
38) ஆயத்துல் குர்ஸி குர்ஆனில் எந்த பாகத்தில், சூராவில் உள்ளது?
மூன்றாவாது பாகத்தின் ஆரம்பத்தில், இரண்டாவது அத்தியாயத்தின் 255 ஆவது வசனம்.
39) அல்-குர்ஆனில் இறைவனின் திருநாமங்களாக எத்தனை பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது?
99 பெயர்கள்
40) மதினா வேறெந்த பெயரில் குர்ஆனில் குறிப்பிடப்படுகிறது?
யத்ரிப் (33:13)
41) பனி இஸ்ராயில் என யாரை குர்ஆன் குறிப்பிடுகிறது?
யாகூப் (அலை) அவர்களின் சந்ததியினர்களை
42) ஈமான் கொணடவர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் தன் திருமறையில் கூறும் இரு பெணமணிகள் யாவர்?
பிர்அவ்னின் மனைவி (66:11), இம்ரானின் புதல்வி மர்யம் (அலை) (66:12)
43) காபிர்களுக்கு உதாரணமாக இறைவன் தன் திருமறையில் கூறும் இரு பெண்கள் யாவர்?
நூஹ் (அலை) அவாகளின் மனைவி (66:10), லூத் (அலை) அவர்களின் மனைவி (66:10)
அல்லாஹ் நூஹ் நபியின் மனைவியை காபிர் என்று கூறியிருக்க, நம்மவர்கள் திருமண துஆக்களில் நூஹ் நபியின் மனைவி போல் வாழ்க என்று வாழ்த்துகிறார்கள். நூஹ் நபிக்கு பாரிஸா என்று நல்ல மனைவியும் இருந்ததாக இதற்கு ஒரு கடடுக் கதையையும் கூறுகிறார்கள். இது குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஆதாரமில்லாத வெறும் யூதக் கடடுக்கதைகளாகும்.
44) உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்?
அல்லாஹ்வை நினைவு கூறுவதன் முலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன. (13:28)
45) நபி ஈஸா (அலை) அவாகள் செய்ததாக இறைவன் குறிப்பிடும் அற்புதங்கள் யாவை?
1) குழந்தையில் பேசியது, 2) களிமண்ணினால் பறவையை செய்து, இறைவனின் அனுமதியைக் கொண்டு உயிர் கொடுத்தல், 3) பிறவிக் குருடனுக்குப் பார்வையளித்தல், 4) வெண்குஷ்ட ரோகியைக் குணப்படுத்துதல், 5) இறந்தவரை அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு உயிர் பெறச் செய்தல் (5:110), 6) பிறா உண்பதை வீடடில் உள்ளவற்றை பார்க்காமலே அறிவித்தல் (3:49)
46) சுவனத்தில் இருக்காது என்று இறைவன் குறிப்பிடுவது எவை?
1) பசி, 2) நிர்வானம், 3) தாகம், 4) வெயில் (20:118,119)
47) வீரமுள்ள செயல் என குர்ஆன் எதைக் கூறுகிறது?
எவரேனும் (பிறர் செய்யும் தீங்கை) பொறுத்துக் கொண்டு மன்னித்து விடடால் அது மிக உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (42:43), (31:17), (3:186)
48) நபி முஸா (அலை) அவர்கள் கற்பாறையில் அடித்த போது எத்தனை நீர் ஊற்றுக்கள் பீறிட்டு எழுந்ததாக இறைவன் கூறுகிறான்?
பன்னிரணடு நீர் ஊற்றுகள் பீறிடடு எழுந்தது. (2:60) & (7:160)
49) தொழாதவர்களுக்காக இறைவன் சித்தப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயர் என்ன?
ஸகர் என்ற நரகம். அல் முத்தஸ்ஸிர்(74:41,42,43)
50) இறைவன் என்னோடு இருக்கிறான் என்று கூறிய நபி யார்?
முஸா (அலை) அஷ் ஷுஃரா(26:62)
Mar 25, 2008
என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பலனில்லையே! ஏன்?
தொகுப்பு: நிர்வாகி
பொதுவான கேள்வி: -
நான் ஐவேளை தொழுது வருகிறேன்! பர்லான மற்றும் சுன்னத்தான நோன்பு முதலிய கடமைகளை தவறாமல் செய்து வருகிறேன். இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகிறேன்! ஆனால் என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பலனில்லையே! அப்படியானால் என்னுடைய பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லையா?
பதில்: -
பொதுவாக முஃமின்களுடைய துஆவை (பிரார்த்தனையை) மூன்று வகையாக பிரிக்கலாம். அவைகள்: -
- ஹராமான செயல்களிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்கும் ஒரு முஃமினுடைய துஆ
- ஹராமான செயல்களில் மூழ்கியுள்ள ஒருவரின் துஆ
- அநீதியிழைக்கப்பட்டவரின் துஆ.
1) ஹராமான செயல்களிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்கும் ஒரு முஃமினுடைய துஆ: -
ஒரு முஃமினைப் பொறுத்தவரைக்கும் அவர் எந்நேரமும் இறைநம்பிக்கையுடன் இறைவனிடம் பிரார்த்தித்வராக இருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. அநேக குர்ஆன் வசனங்களும் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களும் பிரார்த்தனை செய்வதன் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன.
பிரார்த்தனையின் முக்கியத்துவம்: -
அல்லாஹ் கூறுகிறான்: -
"(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; 'நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்' என்று கூறுவீராக. அல்-குர்ஆன் (2:186) "
'என்னிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.' (அல்குர்ஆன் 40:60)
மேற்கூறிய இந்த வசனங்கள் பிரார்த்தனையின் முக்கியத்துவம் குறித்துக் கூறும் வசனங்களாகும். ஏனெனில் பிரார்த்தனை சிறந்த வணக்கங்களில் ஒன்றாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
பிரார்த்தனை (துஆ) ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் -ரலி, நூல்:அபூதாவூத், திர்மிதி)
பிரார்த்தனைகளுக்கு அல்லாஹ் நிச்சயம் பதிலளிக்கிறான்: -
அல்லாஹ்வை பேணுதலான முறைப்படி வணங்கும் ஒரு உண்மையான முஃமின் தன்னுடைய இறைவனிடம் கேட்டால் அந்தப் பிரார்த்தனைக்குப் பதிலளிப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
பாவம் சம்பந்தப்படாத இரத்த பந்தத்தை துண்டிக்காத விஷயத்தில் எந்த ஒரு முஸ்லிமாவது பிரார்த்தனை செய்தால் அல்லாஹ் அவனுக்கு மூன்றில் ஒன்றை கொடுக்காமலில்லை. அவனின் பிரார்த்தனையை உடன் ஏற்றுக் கொள்கின்றான். அல்லது அதனுடைய நன்மையை மறுமைக்காக சேகரித்து வைக்கின்றான். அல்லது அப்பிரார்த்தனையைப் போன்று (அவனுக்கு நேரவிருந்த) ஒரு ஆபத்தை தடுத்து விடுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அப்படியானால் நாம் அதிகம் பிரார்த்தனை செய்வோமே என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், கேட்பதை விட அல்லாஹ் அதிகமாக பதிலளிக்க தயாராக இருக்கிறான்' எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரி, ஆதாரம்: திர்மிதி
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: -
துன்பத்திற்குள்ளான நிலையிலும் கவலையிலும் இருக்கும் அல்லாஹ்வின் அடியான் ஒருவன் இந்த துஆவை கேட்டால் அவருடைய துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.
"யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உனது அடிமை, உனது அடிமையின் மகன், மற்றும் உனது அடிமைப் பெண்ணின் மகன். எனது நெற்றிப்பிடி உன் கையில் உள்ளது. அதனை உனது சட்டத்தின்படி நீ செயல்படுத்துகிறாய். எனக்கு நீதமான தீர்ப்பு வழங்குகிறாய். உனக்கு நீயே சூட்டிக்கொண்ட, உனது வேதத்தில் நீ இறக்கியருளிய, உனது படைப்பினங்களில் ஒருவருக்கு (நபிக்கு) நீ கற்றுக் கொடுத்த, உனது மறைவான ஞானத்தில் நீயே தேர்ந்தெடுத்துக் கொண்ட உன்னுடைய அனைத்துப் பெயர்களின் பொருட்டால் கேட்கிறேன். (இறைவா!) குர்ஆனை என் உள்ளத்தை பொலிவூட்டக் கூடியதாக, நெஞ்சின் ஒளியாக, கவலையை நீக்கக்கூடியதாக, துன்பத்தை போக்கக் கூடியதாக ஆக்குவாயாக!"
இந்த வார்த்தைகளடங்கிய துஆ ஏற்றுக்கொள்ளப்படும். அல்லாஹ் அவருடைய துயரங்களை நீக்கிவிட்டு அதற்குப் பகரமாக இன்பங்களையும் மகிழ்ச்சியையும் அளிப்பான். ஆதாரம்: அஹ்மத்
உயர்ந்தவனாகிய உங்களின் இரட்சகன் வெட்கமுள்ளவன், சங்கையானவன் அவனிடம் இரு கைகளையும் உயர்த்தினால் (பிரார்த்தித்தால்) அவ்விரண்டையும் வெறுமையாக திருப்பி விட அவன் வெட்கப்படுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: சல்மான் (ரலி)
மூவரின் துவா அல்லாஹ்வினால் நிராகரிக்கப் படாது. பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு செய்யும் துஆ; நோன்பாளியின் துஆ; பிரயாணத்தில் இருக்கும் பயணியின் துஆ.' ஆதாரம்: திர்மிதி
"மூவரின் துஆக்கள் எப்போதும் (அல்லாஹ்வினால்) நிராகரிக்கப்படுவதில்லை. அவர்கள்: ஒருவர் தமது நோன்பு துறக்கும்போது கேட்கும் துஆ; நீதியான ஆட்சியாளரின் துஆ; அநியாயம் இழைக்கப்பட்டவரின் துஆ" ஆதாரம்: திர்மிதி
பிரார்த்தனை செய்ய சிறந்த நேரங்கள்: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
இரவின் பாதியோ அல்லது மூன்றில் இரண்டு பகுதியோ கடந்து விட்ட பின் அல்லாஹுத்தஆலா பூமியின் வானத்திற்கு இறங்குகிறான். பிறகு, கேட்கக் கூடியவர்களுக்கு கொடுக்கப்படும், பிரார்த்திப்பவர்களுக்கு பதிலளிக்கப்படும். பாவ மன்னிப்புத் தேடுபவர்களுக்கு பாவம் மன்னிக்கப்படும் என்று அதிகாலை உதயமாகும் வரைக்கும் அல்லாஹ் கூறிக்கொண்டிருக்கிறான். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்.
ஒவ்வொரு இரவின் ஒரு பகுதியிலும் கேட்கப்படும் துஆ: -
"இரவின் பகுதியில் ஒரு நேரம் இருக்கிறது அந்நேரத்தில் எந்த முஸ்லிமும் இந்த உலகத்தின் விஷயத்தில் அல்லது மறுமையின் விஷயத்தில் கேட்டு அது அளிக்கப்படாமல் இருப்பது இல்லை; இது ஒவ்வொரு இரவிலும் இருக்கிறது." ஆதாரம்: முஸ்லிம்.
பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் கேட்கப்படும் துஆ: -
'பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் துஆக்கள் நிராகரிக்கப்படுவது இல்லை.' அறிவிப்பவர்: அனஸ் (ரலி) ஆதாரம்: அஹ்மத், அபுதாவூத்.
சஜ்தாவின் போது இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நேரமாகும்: -
'ஓர் அடியான் தன்னுடைய இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நிலை ஸஜ்தாவில் இருக்கும் போதே ஆகும். ஆகையால் அந்நிலையில் அல்லாஹ்விடம் அதிகமாக துஆ செய்து தமது தேவைகளை கேளுங்கள். ஆதாரம்: முஸ்லிம், அபூதாவுத்
(பிரார்த்தனை) துஆ செய்யும் ஒழுங்கு முறைகள்: -
'நீங்கள் யாராயினும் பிரார்த்தனைப் புரிந்தால் அல்லாஹ்வைப் புகழ்ந்து ஆரம்பிக்கட்டும். பின்னர் இறைத்தூதர் (ஸல்) மீது ஸலவாத்துச் சொல்லட்டும். பின்னர் அவர் விரும்பியதைக் கேட்டு பிரார்த்திக்கட்டும்' என்றார்கள். அறிவிப்பவர்: பலாலா இப்னு உபைத் (ரலி) ஆதார நூல்கள்: முஸ்னத் அஹ்மத். ஸுனன் அபூதாவூத். ஸுனன் திர்மிதி.
அவசரக்கார மனிதன்: -
நம்மில் சிலருக்கு, நான் தொடர்ந்து ஐவேளை தொழுது வருகிறேன், நோன்பு வைக்கின்றேன், கடமையான மற்றும் சுன்னத்தான அமல்களையெல்லாம் செய்கின்றேன், ஆனால் என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பலனில்லையே ஏன என்ற சந்தேகம் எழலாம்.
பொதுவாக மனிதன் அறியாமையின் காரணமாக அவசரக்காரனாக இருக்கிறான். சில நேரங்களில் ஒன்றை அவன் நல்லது எனக் கருதி அது தனக்கு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் என எண்ணுவான். ஆனால் அது அவனுக்குக் கிடைக்கப்பெறுமாயின் அதுவே அவனுடைய இந்த உலக வாழ்வின் மிகப்பெறும் சோதனையாகவும் வேதனையாகவும் மாறிவிடுகிறது. ஏன் மறுமை வாழ்வுக்காக அவனுடைய செயல்பாடுகளையே பாதித்துவிடும் அளவுக்கு அது அமைந்து விடுகிறது.
அனைத்தையும் அறிந்தவனான அல்லாஹ் மட்டுமே அவனுடைய அடிமைகள் ஒவ்வொருடைய தேவையையும் நன்கறிந்தவனாகவும், அவர்களுக்கு எது தேவை மற்றும் எது தேவையில்லை எனவும் அறிந்தவனாக இருக்கிறான். எனவே நாம் அல்லாஹ்விடம் துஆ செய்யும் போது ' நாம் கேட்கும் ஒன்று நமக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பலனளிக்குமாயின் அதை நல்குமாறும், அவ்வாறில்லையெனில் அதற்குப் பகரமாக அதைவிடச் சிறந்த ஒன்றை நல்குமாறும் கேட்கவேண்டும். ஏனெனில் எது நல்லது அல்லது எது கெட்டது என்பது நமக்குத் தெரியாது; ஆனால் நம்மைப் படைத்த அல்லாஹ்விற்கே நம்மை விட பரிபூரணமாக தெரியும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 17:11)
மேலும் ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தம் என நினைக்கிறேன். அதாவது ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யத் தவறக் கூடாது. மனிதனாகிய அனைவரும் அல்லாஹ்வின் பால் தேவையுள்ளவர்கள். அல்லாஹ்மட்டும் தான் தேவையற்றவன்.
தேவைகளைக் கேட்கும் ஒருவன் கண்டிப்பாக ஒரு விஷயத்தைக் கவணத்தில் கொள்ள வேண்டும். அதாவது நாம் அடிமைகள், அல்லாஹ் நமது எஜமான். நாம் எஜமானிடத்தில் கேட்கும் போதெல்லாம் எஜமான் உடனேயே நமக்கு தரவேண்டும் என எதிர்பார்ப்பது நம்மிடம் இருக்கும் குறையாகும். அல்லாஹ்வைப் பொருத்தவரை தனது அடியான் விஷயத்தில் அதிக அக்கறையுள்ளவன். அதனால் பிரார்த்தனை செய்யுமாறு கூறிவிட்டு அப்பிரார்த்தனைக்கு பதில் கொடுப்பதில் சில போது தாமதங்களை ஏற்படுத்துகிறான். காரணம், நாம் ஒன்றைக் கேட்போம் அதனை உடனேயே தந்துவிட்டால் சிலபோது அதுவே நம்மை சிரமத்திற்கு உள்ளாக்கி விடலாம். ஏனென்றால் அதனால் ஏற்படும் எதிர்கால விளைவுகள் பற்றி நாம் அறிய மாட்டோம். ஆனால் அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
உதாரணமாக, ஒருவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவர் மீதும் தந்தைக்கு பாசம் இருக்கின்றது. ஏதாவதொரு பொருளை அனைவரும் கேட்கிறார்கள், அப்பொருளை பெற்றுக் கொடுக்கும் சக்தியும் தந்தைக்கு உண்டு. ஆனால் அனைவருக்கும் அதனைப் பெற்றுக் கொடுக்க மாட்டார். காரணம் யாருக்கு கொடுக்க முடியும் யாருக்குக் கொடுக்கக் கூடாது என்பது குழந்தைகளை விட தந்தைக்கு நன்கு தெறியும். இதே போல் தான் அல்லாஹ் நம் விஷயங்களைப் பொறுத்த வரை நம்மை விட நன்கு அறிந்துள்ளான்.
எனவே நமது பிரார்த்தனைகளுக்கான பதிலை உடனேயே காண நினைப்பது நமது பண்பு. அப்பிரார்த்தனைக்கான பதிலை தரவேண்டிய நேரத்தில் தருவது அல்லாஹ்வின் பண்பாகும் என்பதனை உணர்ந்து கொள்ள தவறக் கூடாது.
எனவே நாம் அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையில் நம்பிக்கையிழக்காமலும் நம்முடைய துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லையே என பொறுமையிழக்காமலும் அல்லாஹ்வையே முற்றிலும் ஈமான் கொண்டு அவனையே முற்றிலுமாக சார்ந்து அவனிடமே நம்முடைய பொறுப்புகளை விட்டுவிட வேண்டும்.
மேலும் நாம் அவன் நம்முடைய பிரார்த்தனைகளைக் கேட்டுக் கொண்டான் என்றும் நாம் கேட்ட பிரார்த்தனைகள் நமக்கு இவ்வுலகிலோ அல்லது மறுமையிலோ நமக்குப் பலனளிக்குமாயின் அதை நமக்கு அல்லாஹ் நாடினால் தருவான் என்றும் அல்லது ஈருலகிலும் பலனளிக்கும் அதைவிடச் சிறந்த ஒன்றை நமக்குத் தருவான் என்றும் நாம் உறுதியாக நம்பிக்கைக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்லதைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லை; ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான். (அல்-குர்ஆன் 41:49)
அன்றியும், மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அவன் (நன்றியுணர்வின்றி) நம்மைப் புறக்கணித்து, விலகிச் செல்கிறான் - ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனை செய்(பவனா)கின்றான். (அல்-குர்ஆன் 41:51)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா (ரலி, அவர்கள் அறிவிக்கிறார்கள்: -
பொறுமையை இழக்காமலும், மேலும் 'நான் பிரார்த்தனை புரிந்தேன் ஆனால் என்னுடைய பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை' என்று கூறாத நிலையிலும் உங்களுடைய துஆ ஏற்றுக்கொள்ளப்படும்'
அல்லாஹ்வின் வாக்கு என்றுமே உண்மையானது: -
அல்லாஹ் கூறுகிறான்: -
பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம். (அல்-குர்ஆன் 37:75)
அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; இன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் யார்? (அல்-குர்ஆன் 4:122)
எனவே அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவனது இறுதி வேதத்தையும் நம்பும் ஒருவர் உறுதியான நம்பிக்கையுடன் ஏதாவது ஒரு வகையில் அல்லாஹ் நிச்சயம் நமது பிரார்த்தனைக்கு பதிலளிப்பான் என்ற நம்பிக்கையில் அவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
2) ஹராமான செயல்களில் மூழ்கியுள்ள ஒருவரின் துஆ: -
ஹராமான செயல்களில் மூழ்கியுள்ள ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை பெரும் பாலும் துஆக்கள் அங்கீகரிக்கப்பட வாய்ப்பில்லை என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
''ஒரு நீண்ட பயனத்தில் ஒருவன் இருக்கிறான். அவனுடைய தலை பரட்டையாகவும், அவன் புழுதியினால் அழுக்கடைந்தவனாகவும் இருக்கும் நிலையில் வானத்தை நோக்கி தம் இரு கரங்களையும் உயர்த்தியவனாக, இறைவா! இறைவா! எனப்பிரார்த்திக்கின்றான். (ஆனால்) அவனது உணவும் ஹராமாகும், குடிப்பவையும் ஹராமாகும், அவனது ஆடையும் ஹராமாகும், அவனோ ஹராத்திலேயே தோய்ந்துள்ளான் (இந்நிலையில்) அவனது பிரார்த்தனை எங்ஙணம் ஏற்றுக் கொள்ளப்படும்". என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். – ஆதாரம்: முஸ்லிம்.
எனவே எமது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமாயின் இந்நிபந்தனைகளை கட்டாயம் கவணத்திற் கொள்ள வேண்டும். வட்டி, கள்ளக் கடத்தல், திருட்டு, மோசடி, பிறர் சொத்தை அபகரித்தல், ஹராமானவற்றை விற்றல், அதனோடு தொடர்பாயிருத்தல், ஹராமானவற்றை உண்ணுதல், பருகுதல்... போன்ற அனைத்து வகையான ஹராமான செயல்களில் இருந்தும் விலகியவர்களாக எல்லா நேரத்திலும் அல்லாஹ்வை அஞ்சியவர்களாக வாழ்ந்து அவனிடம் கையேந்தினால் நிச்சயமாக ஒருபோதும் நமது பிரார்த்தனைகளை மறுக்க மாட்டான்.
அளவுக்கு மீறி பாவம் செய்திருப்பினும் மன்னிக்கக் கூடியவனாக அல்லாஹ் இருக்கிறான்: -
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 39, வசனங்கள் 53-54 ல் கூறுகிறான்: -
'என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்' (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
எனவே நான் பாவங்கள் அதிகம் செய்த பாவியாக இருக்கிறேன் என்று பாவத்திலேயே மீண்டும் மூழ்கியிருக்காமல் உடனடியாக இந்த பாவச் செயல்களிலிருந்து மீண்டு, இந்த பாவச் செயல்களை திரும்பவும் செய்ய மாட்டேன் என்ற உறுதியுடன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரிய பிறகு தொடர்ந்து நற்கருமங்களைச் செய்தவர்களாக அல்லாஹ்விடம் தமது தேவைகளைப் பிரார்த்தித்தால் இன்ஷா அல்லாஹ் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவான்.
யா அல்லாஹ்! தூய்மையான இறைவிசுவாசிகளாக எம்மை வாழ வைப்பாயாக.
3) அநீதியிழைக்கப்பட்டவனின் துஆ: -
ஹராமான செயல்களோடு தொடர்புள்ள ஒருவனாக இருந்தாலும் (நிராகரிப்பாளனாகக் கூட இருக்கலாம்) அப்பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். யாரும் யாருக்கும் எக்காரணம் கொண்டும் அநீதியிழைக்கக் கூடாது. எனவே தான் அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை தங்குதடையின்றி அல்லாஹ்வை சென்றடைகின்றன என்பதனை ஒரு சந்தர்ப்பத்தில் கீழ்வருமாறு கூறிக்காட்டினார்கள்.
முஆத் (ரழி) அவர்களை யமனுக்கு அனுப்பும் போது "அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை விஷயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்! எனென்றால் அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் திரை கிடையாது" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
முடிவுரை: -
அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் மற்றும் முஸ்லிமான அனைவருக்கும் உறுதியான ஈமானைத் தந்து, நம்மை ஹராமான செயல்களிலிருந்து விலகியிருப்பவர்களாக ஆக்கி, அனைவருக்கும் நன்மை செய்யக் கூடியவர்களாக ஆக்கியருள்வானாகவும். மேலும் சிறந்த வணக்கங்களில் ஒன்றாகிய பிரார்த்தனையை அல்லாஹ்விடம் மட்டுமே தொடர்ந்து செய்து அவனின் அளப்பற்ற அருளைப் பெறக் கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாகவும்.
Mar 19, 2008
தொழுகையின் கடமையான செயல்களை அவசரமாகச் செய்தால் தொழுகை கூடுமா?
கேள்வி: -
3) தொழுகையின் கடமையான செயல்களை விரைவாகச் செய்தால் தொழுகை கூடுமா?
பதில்: -
ஒருவர் தொழும் போது அவர் தம்மைப் படைத்த அல்லாஹ்வுக்கு முன்னிலையில் நிற்பதாக உணர்ந்து அவனுக்கு முற்றிலும் பணிந்தவராக மிகுந்த உள்ளச்சத்துடன் தொழ முயற்ச்சிக்கும் போது அவருடைய தொழுகை தானாகவே பணிவுள்ளதாக, உண்மையானதாக அமையும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒருநாள் மக்கள் முன்வந்திருந்தார்கள். அப்போது ஒருவர் (வாகனமேதுமின்றி) நடந்துவந்து, 'இறைத்தூதர் அவர்களே!' 'இஹ்ஸான்' என்றால் என்ன?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் வணங்குவதாகும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கிறான் (எனும் உணர்வுடன் அவனை வணங்குவதாகும்.)' என்று பதிலளித்தார்கள். (நீண்ட ஹதீஸின் சுருக்கம்) ஆதாரம்: புகாரி.
ஒருவர் மெதுவாகவும் நிதானமாகவும் தொழும் போது தான் அவர் அல்லாஹ்வின் சன்னிதானத்தின் முன் நின்று அவனை பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வுடனும், பணிவுடனும் உள்ளச்சத்துடனும் அவனை வணங்க முடியும்.
மாறாக ஒருவர் அவசர அவசரமாக தொழுதால் மேற்கூறிய உணர்வுகளில் தொழ இயலாததோடல்லாமல் ஒருவர் தன் மீது சுமத்தப்பட்டிருக்கின்ற கடமையை நிறைவேற்றுவதற்காக வெறுமனே செய்கின்ற சடங்கைப் போலாகும்.
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தொழுகையில் உள்ளச்சத்துடன் தொழவேண்டிய அவசியம் குறித்துக் கூறுகிறான்.
"ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்" (அல்-குர்ஆன் 23:1-2)
மேலும் நபி (ஸல்) அவர்கள் வேகமாக தொழும் ஒருவரைப் பார்த்து அவரை திரும்பவும் தொழுமாறு கட்டளையிட்டார்கள்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் (அந்த நேரத்தில்) பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது முடித்ததும்) நபி(ஸல்) அவர்களுக்கு அவர் ஸலாம் கூறினார். நபி(ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பின்பு 'திரும்பவும் நீர் தொழுவீராக? நீர் தொழவே இல்லை" என்றும் கூறினார்கள்.
அந்த மனிதர் முன்பு தொழுதது போன்றே மீண்டும் தொழுதுவிட்டு வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். 'திரும்பவும் தொழுவீராக! நீர் தொழவே இல்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இவ்வாறு மூன்று முறை நடந்தது). அதன் பிறகு அந்த மனிதர் 'சத்தியமார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை! எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்!' என்று கேட்டார்.
"நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறும்! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதும்! பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தாச் செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே உம்முடைய எல்லாத் தொழுகையிலும் செய்து வருவீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.
நமது சகோதர சகோதரிகளில் சிலர் செய்யும் தவறு என்னவெனில் ருகூவிலிருந்து எழுந்ததும் அவசர அவசரமாக சஜ்தாவிற்குச் செல்கின்றனர். அதே போல் இரண்டு சஜ்தாக்களுக்களும் இடையில் இடைவெளியில்லாமல் அவசரமாக இரண்டு சஜ்தாக்களையும் செய்கின்றனர். இவ்வாறு செய்பவர்கள் மேற் கூறப்பட்ட நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையான "நீர் தொழவே இல்லை" என்பதனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். தொழுதும் தொழாத பாவிகளைப்போல் இல்லாமல் முறையாக தொழுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்.
அல்லாஹ் நம்மனைவருக்கும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறைப்படி தொழுகையை நிறைவேற்றுவதற்கு அருள் புரிவானாகவும்.
Feb 24, 2008
தொழாதவனின் நோன்பு, தர்மம் போன்ற நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா?
கேள்வி: -
தொழாதவனின் நோன்பு, தர்மம் போன்ற நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா?
பதில்: -
ஐங்காலத் தொழுகையை நிறைவேற்றுவது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் இருபாலர் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்: -
"நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது" (அல்-குர்ஆன் 4:103)
மேலும் இத்தொழுகையானது இஸ்லாத்தின் தூண்களில் இரண்டாம் இடத்தைப் பெருகின்றது. எக்காரணத்தாலும் தொழுகையை விடுவதற்கு இஸ்லாத்தில் இடமே கிடையாது. எந்தளவுக்கென்றால் யுத்தக்களத்திலும் கூட தொழுகையை நிறைவேற்றியாக வேண்டும். ஒழுச் செய்வதற்குத் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் தயம்மும் செய்யுமாறு ஏவப்பட்டுள்ளது. இது போன்ற இன்னும் பல காரணங்களால் பெரும்பாலான உலமாக்கள், 'வேண்டுமென்றே தொழுகையை விடுவது ஒருவனை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி விடும்' எனக் கூறியுள்ளனர். எனவே தவ்பாச் செய்து மீளுவது கடமையாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
"அவர்கள் தவ்பாச் செய்து (திருந்தி) தொழுகையை நிலைநாட்டி, ஜக்காத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள்" (அல்-குர்ஆன் 9:5)
மேலும் அல்லாஹ் கூறுகையில்: -
"அவர்கள் தவ்பாச் செய்து (திருந்தி), தொழுகையை நிலைநாட்டி, ஜக்காத்தும் கொடுத்தால் அவர்கள், மார்க்கத்தில் உங்கள் சகோதரர்களே" (அல்-குர்ஆன் 9:11)
எனவே இஸ்லாமிய சகோதரத்துவம் தொழுகை மூலமாக நிலைப்பது போன்று, தொழுகையை விடுவதன் காரணமாக அது இல்லாமல் போவதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
"நிராகரிப்புக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையே. எவன் அதனை விடுகின்றானோ நிராகரித்தவனாகின்றான்" (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)
அபு தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: -"எவனிடம் தொழுகை இல்லையோ அவனிடம் ஈமான் இல்லை"
ஒருவன் நோன்பு நோற்கிறான், ஆனால் தொழுவதில்லை. இவன் நிலை என்ன?
தொழாதவனுடைய நோன்பு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஏனென்றால் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டான் என்று ஒருவன் தீர்ப்பளித்தால் அவன் குற்றவாளியா? என இப்னு உதைமீன் (ரஹ்) அவர்களிடம் வினவப்பட்ட போது, பின்வருமாறு பதிலளித்தார்கள்: -
நோன்பு நோற்றாலும் தொழாததன் காரணத்தால் அத்தீர்ப்பு சரியானதே. ஏனென்றால் தொழுகையானது இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றாகும். தொழுகையில்லாமல் இஸ்லாம் நிலைபெறாது. எனவே தொழுகையை விட்டவன் நிராகரிப்பவனாகின்றான். மேலும் நிராகரிப்பாளனின் நோன்போ, தர்மமோ ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
அல்லாஹ் கூறுகிறான்: -
"அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை" (அல் குர்ஆன் 9:54)
மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தொழுகையற்ற நோன்பானது எவ்விதப் பயனும் அளிப்பதில்லை என்பது தெளிவாகின்றது. எனவே முதலாவதாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டுவிட்டு அடுத்ததாக தொழுகையை நிலைநாட்ட வேண்டும்.
Feb 16, 2008
பலவாறான தொழுகை முறை வழக்கத்திலிருக்க சரியான தொழுகை முறையை அறிவது எப்படி?
முஸ்லீம்களில் ஹனஃபி, ஷாபி, மற்றும் தவ்ஹீது வாதிகள் என பலவாறாகத் தொழுகை நடத்துகிறார்களே? சரியான தொழுகை முறையை அறிவது எப்படி?
பதில்: -
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: -
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. அல்குர்ஆன் (33:21)
மேலும் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு தொழுகையின் முறை குறித்து வழிகாட்டிச் சென்று இருக்கிறார்கள்.
'என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்'
எனவே சகோதர சகோதரிகளே, மேற்கண்ட திருமறை வசனம் மற்றும் நபிமொழி நமக்கு உணர்த்துவது என்னவென்றால்: -
1) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழகிய முன் மாதிரி இருக்கிறது.
2) எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையே நம் வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் குறிப்பாக வணக்க வழிபாடுகளில் முக்கியமாகப் பின்பற்ற வேண்டும்.
3) நபி (ஸல்) அவர்களின் கூறியதற்கிணங்க அவர்கள் இறைவனை எவ்வாறு தொழுதார்களோ அவ்வாறே நாம் தொழ வேண்டும்.
முதலில் நாம் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகளைப் சரியான முறையில் பேணி நடந்ததில் இந்த உலகத்தில் நபி (ஸல்) அவர்களை மிஞ்சியவர்கள் யாரும் இருக்க முடியாது.
எனவே ஒருவர் தொழுகையின் செயல்களான தக்பீர் கூறி கையை உயர்த்துதல், கை கட்டுதல், குர்ஆன் ஓதுதல், ருகூவு செய்தல், சஜ்தா செய்தல், இருப்புகளில் இருத்தல் மற்றும் அவைகளில் ஓத வேண்டிய துஆக்கள் போன்றவைகளை ஆய்வு செய்து தமது இந்த செயல்கள் நபி (ஸல்) அவர்களின் செயல் முறைகளுக்கு உட்பட்டது தானா? தாம் செய்யும் இந்த செயல்முறைகளுக்கு நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம் இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும். இந்த செயல்களை அவர் எத்தனை தலைமுறைகளாகப் பின்பற்றி வந்திருந்தாலும் சரியே!. அவைகள் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளுக்கு உட்பட்டிருந்தால் நிச்சயமாக தொடர வேண்டும். இல்லையெனில் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு நபி (ஸல்) அவர்களின் வழிமுறை என்ன என்பதை தேட வேண்டும்.
இறைவனருளால் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நபி வழித்தொகுப்புகள் எளிய தமிழில் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் நபி வழியில் எவ்வாறு தொழவேண்டும் என ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துவிட்டன.
மேலும் 'நபி (ஸல்) அவர்களின் தொழுகை முறை எவ்வாறிருந்தது' என ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் பல இணைய தளங்களில் இலவசமாக தமிழில் வெளியிட்டிருக்கிறார்கள்.
எனவே இன்றைய காலகட்டத்தில் ஒருவர் நபி (ஸல்) அவர்களின் தொழுகை முறையை எளிதில் அறிந்துக் கொள்வதற்குரிய அனைத்து சாத்தியக் கூறுகளும் இருக்கின்றது.
மரியாதைக்குரிய நான்கு இமாம்கள்: -
மரியாதைக்குரிய நான்கு இமாம்களும் தங்களுக்கு கிடைக்கப் பெற்ற செய்திகளின் அடிப்படையிலே கூறியிருக்கிறார்கள். நான்கு இமாம்கள் பின்பற்றிய வழிமுறைகளிலும் தொழுகையின் அடிப்படைக் கடமைகளான கிப்லாவை முன்னோக்குதல், தக்பீர் கூறுதல், நிலை நிற்றல், சூரத்துல ஃபாத்திஹா ஓதுதல், ருகூவு செய்தல், சஜ்தா செய்தல் போன்றவற்றில் பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை. அனைத்து இமாம்களின் கருத்துக்களும் ஒருமித்ததாகவே இருக்கிறது.
இருப்பினும் தொழுகையின் மற்ற செயல்களான கையை எங்கே கட்டுவது, சூரா பாத்திஹாவிற்குப் பிறகு சப்தமிட்டு ஆமீன் கூறுவது அல்லது மெதுவாக கூறுவது, இருப்புகளில் விரல் அசைத்தல், தொழுகையில் ஓதக்கூடிய துஆக்கள் போன்வற்றில் அவர்களுக்கிடையே சிறிய வேறுபாடுகள் காணப்படுகிறது.
இச்சிறிய வேறுபாடுகளைக் களைந்துக் கொள்ள அந்த்தந்த இமாம்களைப் பின்பற்றுபவர்கள் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை ஆராய்வாரேயானால் அவற்றிலிருந்து இன்ஷா அல்லாஹ் தெளிவு பெறுவார்.
எனவே மிகச்சரியான முறையில் தொழ விரும்பும் ஒருவர் தம்முடைய தொழுகையின் அனைத்து செயல்களையும் 'என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்' என்ற நபிமொழிக்கேற்ப அமைத்துக் கொள்ள வேண்டும். எனவே அவர் அனைத்து வழி முறைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு நபி (ஸல்) அவர்களின் வணக்க முறைகள் எவ்வாறு இருந்தது என்பதை அறிந்துக் கொண்டு அதையே தம்முடைய வணக்க முறைகளாக தேர்ந்தெடுத்துக் கொள்வதே மிக சரியான வழியாகும்.
அல்லாஹ் நம் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் தொழுத முறையில் தொழக் கூடியவர்களாக ஆக்கியருள்வானாகவும். ஆமீன்.
Feb 3, 2008
முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அனிந்தே வெளியில் செல்ல வேண்டும்?
இனி முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதன் அவசியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் யார்வை என்று பாப்போம். இஸ்லாத்திற்கு முந்தைய காலக்கட்டங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு, போகப் பொருளாகவும், அடிமைகளாகவும், விபச்சாரிகளாகவுமே பயன்படுத்தப்பட்டனர். பன்டைய காலந்தொட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வரையிலும் இஸ்லாமிய பெண்களல்லாத மற்ற பெண்கள் சமுதயத்தில் கேவலமானவர்களாகவும், சொத்துரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் போகப்பொருளாகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தனர். இவ்வாறு பெண்கள் பல்வேறு இன்னல்களையும், துன்பங்களையும், கொடுமைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்த வேளையில், இஸ்லாம் மட்டுமே பெண்களை: -
கண்ணியப் படுத்தி கௌரவித்தது
சொத்துரிமை வழங்கியது
சமுதாயத்தில் அந்தஸ்தோடு வாழ வழிவகுத்தது.
முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதன் அவசியம்:-
பெண்கள் ஹிஜாப் அணிவதற்கான அவசியத்தையும் யார் யார் முன்னிலையில் ஹிஜாப் அணியவேண்டும் என்பதையும் அல்லாஹ் தன் திருமறையில் விளக்குகின்றான்.
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக:
அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்;
தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்;
தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது;
இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;
மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது;
மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்;
மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்குர்அன் 24:31)
பெண்கள் ஏன் பர்தா (ஹிஜாப்) அணிய வேண்டும்?
பெண்கள் பர்தா அணிவதற்கான காரணத்தையும் அல்லாஹ்வே விளக்குகின்றான்.
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக;
அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்.
மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். (அல் குஆன் 33:59)
பெண்கள் பர்தா அணிவதனால் ஏற்படும் நன்மைகள்:
மேற்கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ் பர்தா அணிவதன் பயன்களாக கூறுகிறான்: -
பெண்கள் பர்தா அணிவதால் சமுதாயத்தில் கண்ணியமானவர்களாக அறியப்படுகின்றார்கள்.
தீயவர்களின் தொல்லைகள், கேடுகளிலிருந்து தவிர்ந்துக் கொள்கிறார்கள்.
இவ்விரண்டு நன்மைகளுக்கும் டாக்டர் ஜாகிர் நாயக் கூறும் உதாரணம் மிகவும் பொறுத்தமானதாகும்.
நன்கு சம அழகுள்ள இரு இரட்டைபிறவி சகோதரிகள் கடைவீதியில் நடந்து செல்வதாக வைத்துக் கொள்வோம். ஒரு பெண் இஸ்லாமிய முறைப்படி உடையணிந்திருக்கிறாள். மற்றொரு பெண் உடலின் பாகங்களை வெளிக்காட்டும் மேற்கத்திய அடையான குட்டை பாவாடை அணிந்திருக்கின்றாள். இப்போது இவ்விரு பெண்களில் கடைத்தெருவில் இருக்கும் சிலரால் கேலிக்கும், கிண்டலுக்கும், தொல்லைக்கும் ஆளாவது இஸ்லாமிய உடையணிந்திருக்கும் பெண்ணா? அல்லது குட்டை பாவாடையணிந்திருக்கும் பெண்ணா? நிச்சயமாக குட்டை பாவாடையணிந்தவள் தான் கேவலத்திற்கு உள்ளாவாள். ஏனென்றாள் அவளுடைய ஆடை கடைத்தெருவிலிருக்கும் சிலரின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களை அவ்வாறு தவறு செய்யத் தூண்டுகிறது. பெண்களின் பாதுகாப்பிற்காக எவ்வளவு அற்புதமான திட்டத்தையல்லவா திருமறை கூறியிருக்கிறது.
பெண்கள் பர்தா அணிவது பாலியல் குற்றங்களை முற்றிலுமாகத் தடுக்கின்றது.
பெண்ணியவாதிகள் மலிந்து காணப்படும் மேற்கத்திய நாடுகளில் தான் இன்றைய காலகட்டத்தில் விபச்சாரம் கொடி கட்டிப் பறப்பதையும், மேலும் கற்பழிப்பு, கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிறைந்திருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம் இன்று உலகிலேயே பாலியல் பலாத்காரம் அதிகம் நடக்கும் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. இதற்கு அடுத்ததாக பிரான்ஸ் நாடு இருக்கின்றது. இங்கெல்லாம் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதற்குக் காரணம் ஆண்களை கிளர்ச்சியூட்டும் உடைகளை பெண்கள் அணிவதாலேயாகும் என்று ஆய்வறிக்கைகள் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றன.
இதற்கு நேர் மாற்றமாக பெண்களை பர்தா அணிய வைத்து கொடுமைப் படுத்துகிறார்கள் என மேற்கத்திய செய்தி ஊடகங்களினால் விளம்பரப்படுத்தப்படும் நாடான சவூதி அரேபியாவில் பாலியல் குற்றங்கள் அறவே நடைபெறுவதில்லை என்று அதே ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இதற்கு காரணம், முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்தே வெளியில் செல்ல வேண்டும் என்ற சட்டமும் மற்றும் பாலியல் குற்றங்களுக்கான கடுமையார்ன ஷரீஅத் சட்டமும் அமலில் இருப்பதேயாகும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
நாம் உண்மையான முஃமின்களா?
கேள்வி: -
நம்முடைய முஸ்லிம் சகோதரர் ஒருவர் பின்வருமாறு கேள்வி கேட்கிறார்: -
ஒவ்வொரு முஸ்லிமும் பெரும்பாலும் தான் ஒரு முஃமின் (இறை நம்பிக்கையாளர்) என்று கருதியே இறைவன் மீது நம்பிக்கை கொள்கிறார். ஆனால் நமக்கு முஃமின் என்பதன் பொருள் தெரியுமா?
நாம் முஃமின்களாக இருந்தால், யூதர்களும், கிறிஸ்தவர்களும் மற்றும் ஹிந்துக்களும் நம்மை விட எண்ணிக்கையில் அதிகமாகவும், தொழில் நுட்பத்தில் முன்னேறியவர்களாகவும் இருக்கிறார்களே!!!
இறைவனைப் பற்றிய சிந்தனைகளை விட அவர்களுடைய எண்ணிக்கை மற்றும் , வலிமையைப் பற்றிய சிந்தனை தான் நமது எண்ணத்தை ஆட்டிப்படைக்கிறதே!
அவர்கள் நம்மைவிட விலிமை மிக்கவர்களாக இருப்பதால் அவர்களை நாம் வெற்றி கொள்ள முடியாது என்ற சிந்தனை நமக்கு மேலோங்குகிறதே!!
இந்நிலையில், நாம் வல்லமை மிக்க இறைவனின் நம்பிக்கயாளர்கள் தானா?
பதில்: -
இறைவனின் பெயரால், அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு (சிலைகளோ, மனிதர்களோ, சமாதிகளோ, நபிமார்களோ, இமாம்களோ, குருவோ) யாருமில்லை என்று சாட்சி கூறகிறேன்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாரும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறேன்.
என தருமை சகோதரரே, நாம் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்து, நமது பொறுப்புகளை அவனிடமே பறைசாற்றி, அவனையே முற்றிலும் சார்ந்திருந்து அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுடைய கட்டளைகளை பற்றிப் படித்துக்கொண்டு அவைகளுக்குக் கீழ்படிந்து நடப்போமேயானால் அல்லாஹ் இஸ்லாம் மார்க்கத்தை உலகில் உள்ள மற்ற மதங்களை விட மேலோங்கச் செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறான்.
அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 9, ஸூரத்துத் தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்) வசனம் 33 ல் கூறுகிறான்: -
"அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)" (அல்குர்ஆன் 9:33)
அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 58. ஸூரத்துல் முஜாதலா (தர்க்கித்தல்) வசனம் 22 ல் கூறுகிறான்: -
“அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்”
கடந்த கால வரலாற்றையும் நாம் சற்று உற்று நோக்கவேண்டும். இஸ்லாத்தின் ஆரம்பக்காலக் கட்டங்களிலிந்து ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமே தேர்ந்தெடுக்கப் பட்ட மார்க்கமாக, பலரால் விரும்பக் கூடிய மார்க்கமாக இருந்து வந்திருக்கிறது. கடந்த ஒரு சில நூற்றாண்டுகளாகத் தான் இணை வைப்பாளர்கள் முஸ்லிம்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு, முஸ்லிம்களையும், முஸ்லிம் நாடுகளையும் அவர்களுடைய ஆதிக்கம், அவர்களுடைய உலக வங்கி, மற்றும் அவர்களின் வட்டி சார்ந்த நிறுவனங்களின் கீழ் அடிமைகளாக வைத்திருக்கிறார்கள்.
ஏன் இப்படி? அதுதான் உங்களுடையதும் மற்றும் ஒவ்வொரு முஃமினின் சிந்தனையிலும் எழக்கூடிய கேள்வி.
“எல்லா மார்க்கங்களையும் விட இஸ்லாத்தை மிகைக்குமாறு செய்வேன்” என்ற அல்லாஹ்வின் வாக்கு உண்மைதானா? ஆமாம் சகோதரரே! அல்லாஹ்வின் வாக்கு முற்றிலும் உண்மை. நாம் தான் நம்முடைய அமல்களிலும், செயல்களிலும் குறைபாடுகளையுடைய முஸ்லிம்களாக, முஃமின்களாக இருக்கிறோம்.
நாம் இன்று மிகவும் வலிமையிழந்தவர்களாக இருப்பதற்கும், அவமானப்படுத்தப் படுவதற்கும், நம் சகோதர, சகோதரிகள் சித்திரவதைக்குள்ளாக்கப் படுவதற்கும், நம் கண்கள் முன்னே படுகொலை செய்யப்பட்டு சிதைக்கப் படுவதற்கும், நம்முடைய முஸ்லிம் நாடுகள் கொள்ளையடிக்கப்பட்டு, இறை நிராகரிப்பாளர்களின் (முஷ்ரிக்குகளின்) விருப்பத்திற்கேற்ப கைப்பற்றப்படுவதற்கும், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தும் ஒன்றும் கூற முடியாமல் சக்தியற்றவர்களாக இருப்பதற்கும் காரணம் என்ன வெனில்:-
நாம் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழி காட்டுதல்களை கைவிட்டு விட்டு முஷ்ரிக்குகளை அவர்களின் ஒவ்வொரு செயல்களிலும் பின்பற்ற முயற்சிப்பதுதான். நம்முடைய வலிமையை நாமே முறித்து நிறம், மொழி, குலம், கோத்திரங்கள், பிரிவுகள், நாடுகள் ஆகியவைகளின் அடிப்படைகளில் பிரிந்து சின்னா பின்னமாகி இருக்கிறோம். மேலும் ஒரு உம்மத்தாக இருந்து ஒரே இறைவனை வணங்க வேண்டிய முஸ்லிம் சமுதாயம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து ஆட்சி அதிகாரத்திற்காகவும், செல்வத்திற்காகவும் மற்றும் பதவி சுகத்திற்காகவும் நமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றோம். நாம் நிரந்தரம் இல்லாத இந்த உலகத்தின் கவர்ச்சியிலும், ஆடம்பரத்திலும் மயங்கி இதை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸில் வருகிறது: -
“முஃமின்கள் இந்த உலக வாழ்வை நேசித்து மரணத்தை வெறுக்கும் போது, அல்லாஹ் எதிரிகளுக்கு முஸ்லிம்களின் மீதுள்ள பயத்தை போக்கிவிட்டு, முஸ்லிம்களின் உள்ளத்தில் எதிரிகளைப் பற்றிய பயத்தைப் போட்டுவிடுவான்”
நிச்சயமாக இது தான் நடந்திருக்கிறது.
ஆனால்,
முஸ்லிம்கள் ஒன்றுபடும் நாளில்,
நிரந்தரமற்ற இந்த உலகத்தின் ஆடம்பர வாழ்க்கையை விட மறுமையை அதிகமாக நேசிக்கும் போது,
தற்போதைய அவமானத்தை விட மரணத்தை விரும்பும் போது,
மனம் திருந்தி அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு அவைகளை பின்பற்றி நடக்க ஆரம்பிக்கும் போது,
ஒரே இறைவணை மட்டும் வணங்கக் கூடிய உண்மையான முஸ்லிம்களாக மாறும் போது,
அல்லாஹ்வின் கட்டளைகளை, சட்டங்களை இந்த உலகத்தில் மேலோங்கச் செய்ய முயற்சிக்கும் போது …
அப்போது அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றி முஸ்லிம்கள் இழந்த தங்களின் கவுரவத்தை மீட்க உதவி செய்வான்.
ஆகையால், இன்று ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்னவெனில்,
- மனம் திருந்தி அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு கட்டளைக்கும் கட்டுப்பட்டு நடப்பது.
- தன்னால் முடிந்த அனைத்து செயல்களையும் செய்து பிரிந்து பல்வேறு கூறுகளாக போன இந்த சமுதாயத்தை ஒன்று சேர்க்க முயற்சிப்பது
இது தான் இந்த உலகில் அல்லாஹ்வின் சட்ட திட்டங்கள் மேலோங்கச் செய்யப்பட நாம் அளிக்கும் நம்முடைய பங்களிப்பாகும்.
இஸ்லாம் நமக்கு என்ன செய்திருக்கிறது என்று கேட்காமல், நாம் இஸ்லாத்திற்காக என்ன செய்திருக்கிறோம் என்று நமக்கு நாமே கேட்கவேண்டும். நம்முடைய மனசாட்சி கூறும் உண்மை நமக்கு விருப்பமானதாக இல்லாமல் இருந்தால், நம்மை படைத்த அல்லாஹ்வுக்கு பணிந்து ஸுஜுது செய்தவர்களாக பாவமன்னிப்பு கோரவேண்டும். நாம் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை இவ்வுலகில் நிலை நிறுத்த, நம்முடைய சக்திக்கேற்றவாறு பாடுபடுவேன் என்று அல்லாஹ்விடம் உறுதியான உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டும். மேலும் இதை முதலில் நம்மிலிருந்தும் பின்னர் நமது குடும்பத்தார்களிடமிருந்தும் ஆரம்பம் செய்யவேண்டும்….
ஆமாம், இதற்கு 50 ஆண்டுகள் அல்லது 200 ஆண்டுகள் அல்லது ஏன் 500 ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் அல்லாஹ்வின் வாக்குறுதி நிலையானது, உண்மையானது, என்றுமே மாறாதது. நாம் இவ்வுலக வாழ்வைவிட மறுமை வாழ்விற்கு முக்கியத்துவம் தந்து, மரணத்தை வெறுப்பதை விட நேசிக்க ஆரம்பித்து, முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயலாற்றினால் இன்ஷா அல்லாஹ் இவ்வுலகில் உள்ள அனைத்து மதங்களையும் விட இஸ்லாம் மார்க்கமே மேலோங்கி நிற்கும். நானும், நீங்களும் மற்றும் ஒவ்வொரு முஸ்லிமும் அந்த நிலையை அடையும் நாளில் அல்லாஹ் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவான்.
அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 24, ஸூரத்துத் நூர் (பேரொலி), வசனங்கள் 55-57 ல் கூறுகிறான்: -
"உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; 'அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;' இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்
(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்¢ இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்.
நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம். இன்னும் அவர்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புத்தான்; திடமாக அது மிகக் கெட்ட சேரும் இடமாகும்."
யா அல்லாஹ், எங்களுக்கு உதவி செய்து எங்களின் பாவங்களை மன்னித்து எங்களுக்கு நேர்வழி காட்டுவாயாக.
யா அல்லாஹ், இந்த உலகில் இஸ்லாத்தை மேலோங்கி நிற்கச் செய்யவும் மேலும் உன்னுடைய வாக்குகளை, சட்டத்திட்டங்களை எல்லாவற்றையும் விட மேலோங்கி நிற்கச் செய்ய நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களுக்கு உதவி செய்வாயாக.
யா அல்லாஹ் தனித்தனியாகவோ, கூட்டாகவோ அல்லது சமுதாயமாகவோ உன்னுயை திருக்குர்ஆனில் கூறப்பட்ட ஒவ்வொரு சட்ட திட்டங்களையும் புரிந்துக் கொண்டு நடப்பதற்கு எங்களுக்கு வழிகாட்டுவாயாக.
யா அல்லாஹ் புனித குர்ஆனின் வசனங்களைப் புரிந்து கொள்வதற்காக எங்களின் இதய கதவுகளைத் திறப்பாயாக.
யா அல்லாஹ், இஸ்லாத்தின் எதிரிகளுடைய சூழ்ச்சிகளுக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக.
யா அல்லாஹ், இஸ்லாத்தின் எதிரிகளைப் பற்றிய எங்களின் இதயங்களிலுள்ள பயத்தை நீக்கி உன்னைப் பற்றிய பயத்தையும், உன் மீதுள்ள நேசத்தையும் எங்களின் உள்ளங்களில் விதைப்பாயாக.
யா அல்லாஹ், நிரந்தரமற்ற இந்த உலக வாழ்வை விட மறுமை வாழ்வை தேர்ந்தெடுப்பதற்கு எங்களுக்க உதவி செய்து வழிகாட்டுவாயாக.
யா அல்லாஹ், எங்களுக்கு உதவி செய்து, வழிகாட்டி, எங்களின் பாவங்களை மன்னித்து, நிராகரிப்பாளர்களுக்கு எதிராக எங்களுக்க வெற்றியைத் தந்தருள்வாயாக.
யா அல்லாஹ், எங்களுக்கு உன்னுடைய பாதையில் வெற்றியையோ அல்லது உன் வழியில் ஷஹீதுடைய மரணத்தையோ தந்தருள்வாயாக என்று உன்னிடம் மன்றாடிக் கேட்கிறோம்.
யா அல்லாஹ், எங்கள் மீது கருணை காட்டி இஸ்லாத்தின் உம்மத்துக்களை ஒரே உம்மத்தாக ஆக்கியருள்வாயாக. ஆமீன்.
அல்லாஹ் எனக்கும், உங்களுக்கும் கருணை புரிந்து நம் அனைவருக்கும் இஸ்லாத்தின் நேரான பாதையைக் காட்டுவானாகவும்.
இதில் ஏதேனும் உண்மைகள் மற்றும் பலன்கள் இருப்பின் அது அல்லாஹ்வின் உதவியைக் கொண்டும் அவனது வழிகாட்டுதலைக் கொண்டும் தான். ஏதேனும் தவறுகள் இருப்பின் அது என்னுடையது. அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவனாகவும் வல்லமை மிக்கோனாகவும் இருக்கிறான்.
தங்களின் இஸ்லாமிய சகோதரன்,
புர்ஹான்,
www.islamhelpline.com