M. அன்வர்தீன், அல்-காஃப்ஜி, சவுதி அரேபியா (புது ஆத்தூர்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அல்லாஹ் மனித சமுதாயத்தைப் படைத்து அவர்களுக்கு வழி காட்டுவதற்காகப் பல நபி மார்களை அனுப்பி வேத நூல்களையும் இறக்கி வைத்தான். ஆனால் வேதங்கள் கொண்டு வந்த நபிமார்களுக்கு பின்னால் வந்த சமுதாயத்தினர் அந்த வேத நூல்களில் தங்களின் சொந்தக் கருத்துக்களையும் தாமாக கற்பனை செய்து சில செய்திகளையும் சேர்த்து அந்த வேதங்களின் புனிதத் தன்மையைக் கெடுத்து விட்டனர். இவ்வாறே உலகில் வேத நூல்கள் என்று இன்று கூறப்படக் கூடியவற்றில் மனிதக் கரங்கள் ஊடுருவாத எந்த நூல்களும் இல்லை.
ஆனால் ஒரே ஒரு வேத நூலாகிய அல்குர்ஆன் மட்டும் அது அருளப்பட்டு சுமார் 1425 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த வித சிறு மாற்றமும் இல்லாமல் அது அருளப்பட்டவாறே பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதை வரலாறு அறியும். ஏனெனில் இதற்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களில் எல்லாம் மனிதக் கரங்கள் ஊடுருவி மாசுபட்டு விட்டதால், இந்த அல்குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை அதை இறக்கியருளிய அல்லாஹ்வே ஏற்றுக்கொண்டுள்ளான்.
உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டுவதற்காக ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய திருக்குர்ஆன் மூலம் அல்லாஹ் எத்தனையோ மக்களுக்கு நேர்வழி காட்டியிருக்கிறான். சஹாபாக்கள் காலம் முதற்கொண்டு இன்றைய காலக்கட்டம் வரை எண்ணற்ற மக்களுக்கு சத்தியத்தை திருக்குர்ஆன் போதித்துக் கொண்டிருக்கிறது. இன்ஷா அல்லாஹ் இது கியாம நாள் வரையிலும் தொடரும்.
அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 16 வசனம் 89 -ல் கூறுகிறான்: -
"மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்."
அல்லாஹ் திருக்குர்ஆன் நேர்வழி காட்டுகிறது என்றும், இதை பின்பற்றுபவர்களுக்கு சுவனபதி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறுகிறது என்றும் கூறுகிறான். இப்படிப்பட்ட இந்த சத்தியத் திருமறையை நாம் எப்படி அணுகுகிறோம் என்று பார்த்தால், நிச்சயமாக நாம் நஷ்டவாளியாகத்தான் இருக்கிறோம். சஹாபாக்கள் திருக்குர்ஆனை அணுகிய விதத்தைப் பார்த்தால் அது நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
நபி (ஸல்) அவர்களை கொல்வதற்காக வாளுடன் சென்று கொண்டிருந்த உமர் (ரலி) அவர்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்ததே அல்குர்ஆன் தான் என்பது நமக்கு நன்கு தெரிந்த விஷயம். கோபமாக சென்ற உமர் (ரலி) அவர்களை வழிமறித்த ஒருவர் முதலில் இஸ்லாத்தை தழுவிய உமது சகோதரி வீட்டாரை கவனியும் என்று கூற அவர் கோபத்துடன் தம் சகோதரியின் வீடு நோக்கிச் சென்று அங்கு சில வாக்குவாதங்களுக்குப் பிறகு தம் சகோதரி வசமிருந்த திருக்குர்ஆனின் சூரத்துல் தாஹாவின் வசனங்களை ஓதியபோது அது அவருல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த நேராக நபி (ஸல்) அவர்களிடம் சென்று இஸ்லாத்தை தழுவினார் என்று படித்திருக்கிறோம்.
மேலும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் நடந்த மற்றுமொரு சம்பவம் நம் அனைவருக்கும் ஒரு படிப்பினையாகும்.மஹர் தொகை அதிகமாகிக் கொண்டே போனதால் ஏழைகள் திருமணம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்ட போது உமர் (ரலி) அவர்கள் மஹர் தொகைக்கு உச்ச வரம்பை நிர்ணயித்து அதை மக்களின் முன்னிலையில் அறிவித்தார்கள். அப்போது வயதான மூதாட்டி எழுந்து உமரே உங்களை நாங்கள் நன்கு அறிவோம்,உங்களின் இந்த அறிவிப்பு குர்ஆனிலோ அல்லது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலோ உள்ளதா என வினவ உமர் (ரலி) அவர்கள் இல்லை என பதிலளிக்கிறார்கள். உடனே அந்த மூதாட்டி திருக்குர்ஆனின் வசனமாகிய
"நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா? (அல்குர்ஆன் 4:20)
என்பதை ஓதிக் காண்பிக்கிறார்கள். இந்த குர்ஆன் வசனம் உமர் (ரலி) அவர்களின் அறிவிப்புக்கு மாற்றாமாக இருந்ததால் அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. இந்த மூதாட்டி இல்லையெனில் நான் அழிந்திருப்பேன் என்று கூறி, அவர் அறிவித்த முடிவை திரும்பப் பெற்றுக்கொள்கிறார்.
குர்ஆனின் வசனத்தைக் கேட்ட உடனே உமர் (ரலி) அவர்களின் இதயம் நடுங்கியது.
அல்லாஹ் கூறுகிறான்: -
"உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். (அல்குர்ஆன் 8:2)
இப்படியாக சஹாபாக்கள் குர்ஆனை அணுகிய விதமாக பல உதாரணங்களைக் கூறிக்கொண்டே போகலாம்.அப்படிப்பட்ட அல்லாஹ்வின் திருமறையை நாம் எப்படி அணுகுகிறோம் என்று பார்த்தால் மிக வேதனையாக இருக்கிறது. குர்ஆனை எடுத்து அதை மதிக்கிறதாக நினைத்து முத்தம் கொடுப்பதும், பட்டுத் துணியிலே சுற்றி பத்திரமாக பரணிலே வைத்து யாராவது மரணமடைந்தால் அவர்களுக்கு யாசீன் சூராவை ஓதுவதும், இவ்வாறாகத் தான் நாம் அணுகும் விதமாக உள்ளது.
அல்லாஹ் அந்த யாசீன் சூராவிலேயே "
"(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது' (சூரா யாசின், வசனம் 70)
என்று கூறுகிறான். திருகுர்ஆனை ஓதுவதுடன் பொருள் அறிந்து ஓதினால் இது போன்ற தவறுகளிலிருந்து நாம் தவிர்ந்துக் கொள்ளலாம்.
நாம் தினமும் எத்தனையோ வீணான புத்தகங்களைப் படிப்பதற்காக நேரத்தைச் செலவிடுகிறோம். ஆனால் ஓதினால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மை என்று நபி (ஸல்) அவர்களால் கூறப்பட்ட குர்்ஆனை நம்மில் எத்தனை பேர் தினமும் ஓதக் கூடியவர்களாக இருக்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸ் புகாரி மற்றும் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.
"யார் ஒருவர் குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு ஒரு நன்மை. ஒரு நன்மை என்பது அதைப் போன்று பத்து மடங்கு. 'அலிப்' 'லாம்' 'மீம்' என்பது ஒரு எழுத்து இல்லை. 'அலிஃப்' ஒரு எழுத்து, 'லாம்' ஒரு எழுத்து, 'மீம்' ஒரு எழுத்து"
நாம் வாழும் நிரந்தரமற்ற இந்த உலகத்தில் வேலை மற்றும் ஒரு சில காரியங்களை அடைவதற்காக ஒரு அறிமுகமான நபரின் சிபாரிசுக்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால் மறுமை நாளில் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யக் கூடிய குர்ஆனை திரும்பிக் கூட பார்ப்பதில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஸஹீஹான ஹதீஸில் வருகிறது
"குர்ஆனும், நோன்பும் மறுமை நாளில் பரிந்துரை செய்யும்" என்று.
மற்ற கடமையான வணக்கங்களைச் செய்வதற்கு பல தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது.
தொழுகையை எடுத்துக் கொண்டால் ஒழு செய்து, பள்ளிக்குச் சென்று தொழுகைக்காக நேரத்தை ஒதுக்கி தொழ வேண்டும்.
ஜகாத், ஹஜ் போன்ற அமல்கள் செய்வதற்கு நாம் ஈட்டிய செல்வத்தைச் செலவு செய்து நன்மை சேர்க்க வேண்டும்.
ஆனால் குர்ஆன் ஓதுவதற்கு பணம் அதிகம் செலவழிக்கத் தேவையில்லை. குர்ஆன் இலகுவாக கிடைக்கிறது. நம்முடைய ஓய்வு நேரங்களில் வீட்டிலே, பள்ளிவாசலிலே அல்லது வேறு எங்கு வேண்டுமானாலும் ஓதி நன்மையைச் சம்பாதித்துக் கொள்ளலாம்.
மற்ற எந்த ஒரு அமலுக்கும் இல்லாத ஒரு சிறப்பம்சம் திருக்குர்ஆனுக்கு உண்டு.
தொழுகையை நாம் தொழுதால் தான் நமக்கு நன்மை உண்டு. மற்றவர் தொழுத தொழுகைக்காக நமக்கு நன்மை கிடைக்காது.
அதேபோல ,
நோன்பு வைத்தவருக்குத் தான் நன்மை கிடைக்கும்.
ஹஜ் செய்தவருக்குத் தான் நன்மை கிடைக்கும்.
ஆனால்,
குர்ஆனை நாம் ஓதினாலும் நமக்கு நன்மை கிடைக்கும், பிறர் ஓதக் கேட்டாலும் நமக்கு நன்மை கிடைக்கும். CD யில் போட்டு ஓதக் கேட்டாலும் நன்மை கிடைக்கும். குர்ஆனை எப்படி ஓதக் கேட்டாலும் நன்மை கிடைக்கும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
"குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் - (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 7:204)
குர்ஆன் ஓதத் தெரிந்தும் ஓதாதவர்கள், அல்லது ஓதத் தெரியாதவர்கள் மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிகவும் நஷ்டமடைந்தவர்களாவார்கள்.
ஆகையால் நன்மையை வாரி வழங்கக் கூடிய திருக்குர்ஆனை நாமும் பொருள் உணர்ந்து கற்றுக் கொண்டு பிறருக்கும் கற்றுக் கொடுக்கக் கூடியவர்களாக வேண்டும். மறுமையில் சுவர்க்கத்திற்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யக் கூடிய இந்தக் குர்ஆனை நாம் அனுதினமும் ஓதி அத்தகைய நற்பேற்றினைப் பெற்றிட வல்ல அல்லாஹ் அருள் பாலிப்பானாகவும். ஆமீன்.