எழுதியவர்: அபூ அரீஜ்
வல்லோனின் திரு நாமம் போற்றி
மொழியியலில் எல்லாச் சொற்களுக்கும் எதிர் சொற்கள் இருக்கின்றன. இரவு-பகல், காலை-மாலை, இன்று-நாளை... இது போன்று 'இம்மை' எனும் சொல்லுக்கு எதிர்ப்பதம் 'மறுமை' என்பதாகும்.
இஸ்லாம் கூறும் 'மறுமை வாழ்க்கை' பற்றி உலக அரங்கில் காலம் நெடுகிலும் வாதப்பிரதி வாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சத்தியமும் அசத்தியமும் மோதிக் கொள்ளும் பொழுது சத்தியத்தைத் தேடிக் கொண்டிருக்கும் சத்தியவாதிகளுக்கு பாலில் சக்கரை விழுந்ததைப் போன்றிருக்கும். ஏனென்றால் சத்தியம் பகுத்தறிவோடு ஒத்துப் போகக் கூடியது. அது எப்பொழுதும் ஆதாரங்களோடு அணிவகுத்து நிற்கும். தீமைப் புயலுக்கு முன்னும் நிலையாக நிற்கும் அதன் வலிமை உண்மையை உலகின் கண்களுக்கு உணர்த்த வல்லது.
தீமையை தீமை என்று தெரிந்து கொண்டும் அநேகர் அதைச் செய்வது போன்று அசத்தியத்தையும் ஏந்திப் பிடிக்கத்தான் செய்கின்றனர். அதேபோல் நன்மையான விடயங்கள் அநேகமிருக்க அவற்றை கண்டு கொள்ளாமல் இருப்பது போல், உண்மையை உணர்ந்திருந்தும் அவற்றை உதாசீனப்படுத்தும் தன்மையையும் காணமுடிகின்றது.
உண்மைதான் எப்போதும் ஜெயிக்கவல்லது. சத்தியம் நிச்சயம் தார்மீகத்தில் தலைத்து நிற்கும். இருந்தும் அந்த சத்தியத்தை ஏற்று வாழ்வோர் மிக மிகக் குறைந்தவர்களே! காரணம், எவருக்கு அல்லாஹ் நேர்வழியைக் காட்ட நாடுகிறானோ அவர்களுக்கு மட்டுமே நேர்வழியைப் பின்பற்றும் பாக்கியத்தையும் கொடுக்கின்றான்.
மறுமை உண்டா? என்ற ஐயத்திற்கு இரு கோணங்களில் பதில் காண்போம்.
மறுமை நம்பிக்கையும் - பகுத்தறிவும்.
மறுமை பற்றி இஸ்லாத்தின் மூலாதாரங்கள்.
இந்த நவீன காலத்தில் பகுத்தறிவின் செயற்பாடு அளப்பறியது. மனித நுகர்வுச் சந்தையில் பகுத்தறிவுதான் உரைகல்! முனிதனின் மட்டுப்படுத்தப்பட்ட பகுத்தறிவுக்குப் படாதவைகள் ஏராளம். பெரும்பாலான விடயங்கள் பகுத்தறிவுக்குப் படவில்லை என்றுதான் ஓரங்கட்டப்படுகின்றன. இப்படி முஸ்லிமல்லாத சகோதரர்கள் ஓரங்கட்டிய ஒரு விடயம்தான் இஸ்லாம் கூறும் 'மறுமை' நம்பிக்கையாகும்.
மறுமை வாழ்க்கையை நம்புவது பகுத்தறிவுக்கு உட்பட்டதா? அல்லது மறுபிறவிக் கோட்பாட்டை ஏற்பது பகுத்தறிவுக்கு ஏற்றதா? விடை காணப்பட வேண்டிய அம்சங்கள். மறுபிறவிக் கோட்பாடு உண்மையில் பகுத்தறிவோடு எந்தளவுக்கு முரண்படுகின்றது என்பதனை இறுதியில் விளக்கியுள்ளோம்.
இறைவனின் படைப்புகளில் மனிதனுக்கு மட்டும்தான் சிந்தித்து செயலாற்றும் திறன் வழங்கப்பட்டுள்ளது. உங்கள் சிந்தனையைத் தூண்டும் சில கேள்விகளை உங்கள் மன்றத்தில் வைக்கிறோம் அவற்றிற்கு விடை காணுங்கள் இஸ்லாம் கூறும் மறுமை வாழ்க்கையின் உண்மை நிலையை அது உங்களுக்கு உணர்த்தும்.
'இம்மை' எனும் சொல்லுக்கு எதிர்ப்பதம் 'மறுமை' என்றால் அதன் உண்மையான அர்த்தம் தான் என்ன?
மனிதன் வாழ நினைக்கிறான் ஆனால் வாழ்க்கையின் வசந்தங்கள் கைகூடு முன்னே அவன் வாழ்க்கை முடிந்து விடுகின்றது. அழிவிலா வசந்தங்கள் இவ்வுலகில் கைகூடாத போது அது எங்குதான் சாத்தியம்?
நூறு சதவிகிதம் என்று எழுதிப் பார்த்திருக்கிறோம். காகிதங்களில் கண்டிருக்கிறோம். ஆனால் நூறு சதவிகிதம் என்பது அதிகமான விடயங்களில் ஏட்டுச் சுரக்காய்தான். இவ்வுலகில் சாத்தியப்படாத போது அது எவ்வுலகில் கிடைக்கும்?
மனிதனது தலை நரைக்கலாம். ஆனால் அவனது எண்ணங்களும், ஆசைகளும் நரைப்பது கிடையாது. அதனால்தான் வயது ஏற ஏற அநேகர் வாழ்க்கையின் வசந்தங்களையெல்லாம் கண்டுவிடத் துடிப்பது போன்று இன்னும் பல வருடங்கள் மரணமற்று வாழ விரும்புகின்றனர். ஆனால் மனித இயல்பும், இறைவனின் நியதியும் அவற்றிற்கு இடம் கொடுப்பதில்லை. அப்படியாயின் நரைக்காத இளமையும், மரணமற்ற வாழ்க்கையும் எங்குதான் சாத்தியப்படும்?
இவ்வுலகில் அனைத்திற்கும் ஆரம்பம் இருப்பது போல் முடிவும் இருக்கின்றது. அப்படியானால் முடிவே அற்ற ஒன்றை எங்குதான் காண்பது?
நல்லவர்கள் பலர் துன்பத்தில் துவழுவது போல் கெட்டவர்கள் பலர் இன்பத்தில் மிதக்கின்றனர். இப்படியே அவர்களது வாழ்க்கையும் அஸ்தமித்து விடுகிறது. உலக வாழ்க்கையில் பலரால் உணரப்படாத இந்த விந்தைக்கு இவ்வுலகில் அர்த்தம் காணப்படாத போது எந்த உலகில் தான் விடை காணப்படும்?
சிறையில் வாடும் அனைவரும் குற்றவாளிகளும் அல்லர். சிறைக்கு வெளியே வாழும் அனைவரும் சுத்தவாளிகளும் அல்லர். இவ்வுலகில் இவர்களது நிஜம் உணரப்படாத போது எவ்வுலகில் அவர்களது சுயரூபம் வெளிக்காட்டப்படும்?
இந்த சடவாத உலக நீதிமன்றங்கள் எல்லாம் நீதி தேவதையின் இரு கண்களையும் கறுப்புத் துணியால் கட்டிவிட்டுத்தான் (போலி) நீதி வழங்குகின்றன! இப்படியே இவ்வுலகம் முடிவடைந்து விட்டால் அநீதியிழைக்கப்பட்டவர்களுக்கு எங்குதான் நீதி கிடைக்கும்?
சில குற்றங்களுக்கு எவ்வளவுதான் முயன்றாலும் முழுமையான தண்டனைகள் வழங்க முடியாது. அது இவ்வுலகில் சாத்தியமும் இல்லை. உதாரணமாக, ஒரு கொலை செய்தவனுக்கும், நூறு கொலை செய்தவனுக்கும் உயர்ந்த பட்ச தண்டனையாக தூக்குத் தண்டனைதான் வழங்க முடியும். அல்லது ஆயுல் தண்டனை கொடுக்கலாம். உண்மையில் இது ரொம்ப ரொம்ப அநியாயமாகும். இவ்விடயத்தில் இவ்வுலகில் சரியான நீதி செலுத்த முடியாத பட்சத்தில் அது எங்குதான் சாத்தியம்?
பிறப்பது வாழ்வதற்கே என்று சடவாத உலகம் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அதேநேரம் பல குழந்தைகள் அம்மா என்று சொல்லப் பழகு முன்னரே இவ்வாழ்க்கைக்கு பிரியாவிடை கொடுத்து விடுகின்றது. இவர்களுக்கும் இயற்கைத் தத்துவத்தின் நீதி கிடைப்பதெங்கே?
உலகம் அழிவை நோக்கி புறப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று பொதுவாக மக்களும், உலகம் அழியும் தருணம் வெகு தொலைவில் இல்லை என்று விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் அண்மைக்காலமாக இஸ்லாத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த ஆரம்பித்து விட்டன. உலகம் அழிக்கப்பட்டு விட்டால்....???
கேள்விகளே மனிதனின் ஐயங்களை நிவர்த்தி செய்ய வல்லது. அதனால் தான் அல்-குர்ஆன் கேள்வி கேட்டு உங்கள் ஐயங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள் என பிரகடனப்படுத்துகின்றது.
'நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்'. (அல்-குர்ஆன்)
எனவே நாம் மேலே உதாரணத்திற்காக குறிப்பிட்டுள்ள கேள்விகள் போன்ற சிந்தனையைத் தூண்டக் கூடிய அம்சங்கள் நமக்கு மறுமை வாழ்க்கை நிச்சயம் உண்டு என்பதை அறிவுபூர்வமாக உணர்த்துகிறது.
சத்தியத்தை உணர்ந்து கொள்ள, சத்தியத்தை நிலைநாட்ட, சமாதானத்தை இவ்வுலகில் விதைக்க நம்மைப்படைத்த இறைவன் நமக்கு பகுத்தறிவைத் தந்தான். ஆனால் பலர் தமக்குக் கொடுக்கப்பட்ட அந்த பகுத்தறிவினாலேயே தாமும் கெட்டு பிறiரையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். வெருமனே முன்பின் யோசிக்காமல், ஆதார பூர்வமாக எந்தவொரு விடயத்தையும் அனுகாமல், நான் என்ற அகங்காரத்தால் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள தனது பகுத்தறிவை வைத்துக் கொண்டு அனைத்திற்கும் தீர்வுகாண, முடிவெடுக்க நினைப்பது தவறு. ஏனென்றால் அனேகம் பேர் தமது பகுத்தறிவை மட்டும் நீதிபதியாக்கிக் கொண்டு சட்டம் வகுத்துக் கொள்கின்ற போது நினைத்ததற்குப் புறம்பாக பல விடயங்கள் நடந்து போகின்றன. அவர்கள் எந்த பகுத்தறிவை உதவிக்கழைக்கிறார்களோ அந்த பகுத்தறிவே அவர்களை படுகுழியில் தள்ளி விடுவதை நாளாந்தம் நாம் கண்டு கொண்டிருக்கின்றோம்.
மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் அனைத்துத் தன்மைகளும் மட்டுப்படுத்தப்பட்டவைகள்தாம். பார்வைப் புலன், கேள்வி, தொடுகை, நுகர்ச்சி போன்ற எதுவாக இருப்பினும் ஒரு எல்லை வரை தான் தனது பனியைச் செய்யும். அதற்கு மேல் வேறு துனைகளுடன் தான் தன் பனியைத் தொடரும். இது தான் மனிதனின் நிலை. இதே போன்றது தான் நம் பகுத்தறிவும்.
பகுத்தறிவு தவிர்ந்த ஏனைய புலன்களின் பலவீனத் தன்மையை இலகுவில் புரிந்து கொள்ளும் மனிதன் தனது பகுத்தறிவின் யதார்த்த நிலையையும், அதன் பலவீனத் தன்மையையும் இலகுவில் புறிந்து கொள்வதில்லை. இந்த நிலையை நன்கறிந்த அல்லாஹ் காலத்தின் தேவைக்கேற்ப தனது தூதர்களை அனுப்பி வழிகாட்டியுள்ளான்.
இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாக்குகளும், அல்-குர்ஆனும் பல இடங்களில் இறுதி நாள் பற்றியும், மறுமை நாள் பற்றியும் வெவ்வேறு அடைமொழிகளுடன் குறிப்பிடுகின்றன. அதேபோன்று அந்த நாள், அந்த நாளைத் தொடர்ந்து வரும் நிகழ்வுகள் அதேபோல் அதன் பின் இருக்கும் மறுமை நாள் பற்றியெல்லாம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் மனிதர்களான அனைவரும் அந்த நாளைப் பயந்து இறைவன் கூறிய பிரகாரம் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும்.
மறுமை பற்றி அல்-குர்ஆன்:-
1) (17:49-51), (29:20), (30:27), (31:28), (36:79) ஆகிய வசனங்கள் மனிதனை அல்லாஹ் அழித்து விட்டு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவான் என்பதனை ஐயமற விளக்குகின்றன. ஒன்றுமே இல்லாமல் இருந்த மனிதனை தன் வல்லமையினால் உண்டாக்கியவன், நம்மை அழித்துவிட்டு மீண்டும் எம்மை உயிப்பிப்பது ஒன்றும் அசாத்தியமான காரியம் கிடையாது.
மனிதனுக்குக் கூட ஒன்றை உருவாக்கி அதனை இல்லாமல் செய்து விட்டு அதே போன்ற ஒன்றை மீண்டும் உருவாக்குவது சிரமமான ஒன்றும் கிடையாது. ஒரு பொருளை முதலில் உருவாக்குவதுதான் கடினம். ஆனால் அல்லாஹ் ஆகு என்றால் ஆகிவிடும் சக்தி படைத்தவன். அப்படியான சக்தியுள்ளவன்தான் இறைவனாக இருக்க சாத்தியமானவன். மனிதனுக்கே சர்வசாதாரனமான இப்படியான விடயங்களில் சக்தியுள்ளபோது சர்வசக்தனான வல்லநாயன் விடயத்தில் ஐயம் கொள்வது தகுமா?!
2) (21:1), (21:97), (33:63), (42:17), (42:18), (54:1) போன்ற வசனங்கள் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறுவதன் மூலம் நாம் எந்நேரமும் அந்த நாளுக்காக தயாராக இருந்து கொள்ள வேண்டும் என்பதனை உணர்த்துகின்றது.
அந்த நாள் நாம் கண்மூடித் திறப்பதற்குள் திடீரென ஏற்படும் என்பதையும் அல்-குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. உதாரணமாக: (6:31), (7:187) போன்ற வசங்கள் அல்-குர்ஆனில் பல இடங்களில் காணப்படுகின்றன. (அல்-குர்ஆனைப் படிக்கவும்).
3) மறுமை நாள் மிகவும் கடுமையான நாள் என்பதனையும் எல்லோரும் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படுவோம் என்பதனையும் பல வடிவங்களில் அல்-குர்ஆன் விவரிக்கின்றது.
யாவரும் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படும் நாள். (2:148), (2:281), (3:9)...
தாம் விதைத்ததை அறுவடை செய்யும் நாள். (3:30), (3:115), (4:40)...
தம் செல்வக் குழந்தைகள் கூட எமக்கு உதவ முடியாத நாள். (3:116), (26:88)...
பாலூட்டும் தாய் கூட தம் குழந்தையை மறக்கும் நாள். (22:2)...
எவரும் எவருக்கும் எள்ளலவும் உதவ முடியாத நாள். (2:48), (2:123), (2:254), (26:88)...
இறுதி நாள் பற்றியும் இறுதி நாளின் பின் ஏற்படும் மறுமை நிகழ்வுகள் பற்றியும் அல்-குர்ஆன் ஏராளமான இடங்களில் பலவகையான அடைமொழிகளை உபயோகித்து எம் சிந்தனையைத் தூண்டிக் கொண்டிருக்கின்றது. அல்-குர்ஆன் கூறும் விடயங்கள் வெரும் புரான இதிகாசங்களைப் போன்ற தன்று. மாறாக அனைத்தையும் படைத்தவனின் ஊர்ஜித வாக்குகளாகும். எனவே எந்தவொரு விடயத்தையும் தட்டிக் கழிக்காது நம்பி செயல்படுவோமாக.
மறுமை பற்றி அண்ணலாரின் பொன் மொழிகள்: -
1) 'இறைநம்பிக்கை கொண்டு அதில் அக்கிரமத்தைக் கலக்காதவர்களுக்கே (இம்மையிலும் மறுமையிலும்) அச்சமற்ற நிலை உண்டு. மேலும் அவர்களே நேர்வழி பெற்றவர்களுமாவார்' (திருக்குர்ஆன் 06:82) என்ற இறைவசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள் 'நம்மில் யார் அக்கிரமம் செய்யாமலிருக்க முடியும்?' எனக் கேட்டனர். அப்போதுஇ 'நிச்சயமாக (அல்லாஹ்வுக்கு எவரையும்) இணையாக்குவதுதான் மிகப் பெரும் அக்கிரமம்' (திருக்குர்ஆன் 31:13) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.(புகாரி)
2) நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து 'ஈமான் என்றால் என்ன?' என்று கேட்டதற்கு 'ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது' எனக் கூறினார்கள்... (புகாரி)
3) 'எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். 'கல்வி குறைந்து போய் விடுவதும் அறியாமை வெளிப்படுவதும் வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பதும் ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வகிக்கும் ஒரே ஆண் என்ற நிலமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுதியாவதும் ஆண்கள் குறைந்து விடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறக் கேட்டிருக்கிறேன்' என அனஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி)
4) 'ஓர் இரவில் தூக்கத்திலிருந்து எழுந்த நபி(ஸல்) அவர்கள் (அச்சரியமாக) 'அல்லாஹ் தூய்மையானவன்! இந்த இரவில்தான் எத்தனை சோதனைகள் இறக்கப்பட்டிருக்கின்றன. திறந்து விடப்பட்ட அருட்பேறுகள்தான் என்னென்ன?' என்று கூறிவிட்டு, 'தம் அறைகளில் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களை (தம் மனைவிமார்களை இறை வணக்கத்திற்காக தூக்கத்தை விட்டும்) எழுப்புங்கள். ஏனெனில், இவ்வுலகில் ஆடை அணிந்தவர்களாகயிருக்கும், எத்தனையோ பெண்கள் மறுமையில் நிர்வாணமாக இருப்பார்கள்' என்று கூறினார்கள்' என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
இவ்வாறு ஏறாளமான நபி மொழிகள் மறுமையில் நடை பெறக் கூடிய செய்திகளை நமக்கு கூறுவதிலிருந்து நிச்சயம் மறுமை நாள் என்ற ஒன்று இருக்கிறது என்பதனைத் தெளிவு படுத்துகின்றது.
மறுமை பற்றி நபிவாக்கிலிருந்து தெரிந்து கொள்ள ஆதாரபூர்வமான ஆயிரக்கணக்கான செய்திகள் இருக்கின்றன. ஆர்வத்தோடு தேடுங்கள்.... படியுங்கள்.... அல்லாஹ் நம் அனைவரது மறுமை வாழ்க்கையையும் சிறப்பாக ஆக்கி வைப்பானாக.