Jul 7, 2008

கிறிஸ்தவம் Vs இஸ்லாம் - பெண்ணுரிமை பகுதி : 4 பெண் கல்வியின் முக்கியத்தும்

தங்களின் மதத்தைப் பரப்புகிறோம் எனக் கூறிக்கொண்டு தங்களின் மதத்தின் மேன்மைகளைப் பற்றிக் கூறுவதை விட்டு விட்டு இஸ்லாமிய மார்க்கத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசி வருகின்றனர் கிறிஸ்தவ மிஷனரிகள். இவ்வாறு இவர்களால் புனைந்துரைக்கப்பட்ட அவதூறுகளில் முக்கியமானது ‘இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி கொடுமைப் படுத்துகிறது’ என்பதாகும். இது குறித்து நாம் இந்தக் கட்டுரையின் முந்தைய இரு பகுதிகளில் விளக்கி வந்தோம். இதன் தொடர்ச்சியாக மிஷனரிகளின் கூற்றுக்கு மறுப்பு அளிக்கும் விதத்திலும் அதே நேரத்தில் மக்களுக்கு பெண்களின் உரிமைகள் குறித்து பைபிள் என்ன கூறுகிறது என தெளிவு படுத்துவதற்காகவும் இதனை விளக்குகிறோம்.

பெண்கள் கல்வி கற்பது குறித்து பைபிள்: -

சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது. அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே. (பைபிள் புதிய ஏற்பாடு, I கொரிந்தியர், 14 வது அதிகாரம், வசனங்கள் 34-35)

அதாவது,

- சபைகளில் பெண்கள் பேசக் கூடாது! அதற்கு அவர்களுக்கு அதிகாரமும் இல்லை.

- பெண்கள் எந்த ஒன்றைக் கற்றுக் கொள்ள விரும்பினாலும் தத்தம் வீட்டில் தம் புருஷருடத்தில் மட்டும் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

பெண்கள் கல்வி குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

“கல்வியைக் கற்பது முஸ்லிமான ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்”. அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக், ஆதாரம் சுனன் திர்மிதி, ஹதீஸ் எண் : 218

இஸ்லாமிய மார்க்கத்திலே கல்வியைப் பயில்வதிலே ஆண்களுக்கென்று ஒரு சட்டமும் பெண்களுக்கென்று ஒரு சட்டமும் இல்லை. ஆண் பெண் இரு பாலாரும் கல்வியைக் கற்க வேண்டியது கடமை என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.

பல பேர் அடங்கியிருக்கக் கூடிய சபைகளில் பெண்கள் நபி (ஸல்)அவர்களிடம் கேள்விகள் பல கேட்டு நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்த எத்தனையோ ஹதீஸ்கள் இருக்கின்றது. மேலும் இன்றளவும் நடைபெறும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளின் இறுதியில் நடைபெறும் கேள்வி-பதில் நிகழ்ச்சிகளில் முஸ்லிமான பெண்களுக்கு மட்டுமல்லாமல் கிறிஸ்தவ பெண்கள் உட்பட அனைத்து மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டு அவர்களுக்கு பதில் அளிப்பதன் மூலம் அவர்களுடைய அறிவு தாகமும் தீர்த்து வைக்கப்படுகின்றது.

ஆனால் ‘இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வீட்டிலேயே முடக்கி வைத்திருக்கிறது’ என்று குற்றம் சுமத்துகின்ற கிறிஸ்தவ மிஷனரிகள், இயற்கை நடைமுறைக்கு ஒத்துவராத, பின்பற்றி நடப்பதற்கு தகுதியில்லாத, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக ‘சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்’ என்று தங்களுடைய பைபிள் குறிப்பிடுவதை ஏனோ மறந்து விடுகின்றனர்.