May 14, 2008

நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?

அனைத்து புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே!

அல்-குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கவில்லை என்றே அறியமுடிகின்றது. மறைவான விஷயங்கள் பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததெல்லாம் அல்லாஹ்வினால் வஹிமூலம் அவர்களுக்கு அருளப்பட்டதே தவிர வேறில்லை.

அல்லாஹ் கூறுகிறான்: -

(நபியே!) நீர் கூறும்: ‘என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.’ இன்னும் நீர் கூறும்: ‘குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்-குர்ஆன் 6:50)

(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.’ (அல்-குர்ஆன் 7:188)

வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைபொருள்கள் (இரகசியங்கள் பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது; அவனிடமே எல்லாக் கருமங்களும் (முடிவு காண) மீளும். ஆகவே அவனையே வணங்குங்கள்; அவன் மீதே (பரஞ்சாட்டி) உறுதியான நம்பிக்கை வையுங்கள் - நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை. (அல்-குர்ஆன் 11:123)

(இன்னும்) நீர் கூறுவீராக: ‘அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.’ (அல்-குர்ஆன் 27:65)

மேற்கண்ட திருமறையின் தெள்ளத் தெளிவான வசனங்களின் அடிப்படையில் மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் என்றும், அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அவன் வஹி மூலம் அறிவித்துக் கொடுத்ததைத் தவிர வேறென்றும் தெரியாது என்பது தெளிவாகின்றது.

அல்லாஹ் கூறுகிறான்:-

(நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (அல்-குர்ஆன் 3:44)

(நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்). (அல்-குர்ஆன் 11:49)

72:21 கூறுவீராக: ‘நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ, செய்ய சக்தி பெற மாட்டேன்.’

72:22 கூறுவீராக: ‘நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் ஒருவரும் என்னைப் பாதுகாக்க மாட்டார்; இன்னும், அவனையன்றி ஒதுங்குந் தலத்தையும் நான் காணமுடியாது.

72:23 ‘அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பார்’ என (நபியே!) நீர் கூறும்.

72:24 அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) அவர்கள் பார்க்கும் போது, எவருடைய உதவியாளர்கள் மிக பலஹீனமானவர்கள் என்பதையும்; எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர்கள் என்பதையும் விரைவில் அறிந்து கொள்வார்கள்.

72:25 (நபியே!) நீர் கூறும்: ‘உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருப்பது (அவ்வேதனை) சமீபமா, அல்லது என்னுடைய இறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தியிருக்கிறானா என்பதை நான் அறியேன்.

72:26 ‘(அவன் தான்) மறைவானாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான். (அல்-குர்ஆன் 72:21-26)

எனவே சகோதர சகோதரிகளே, மேற்கண்ட குர்ஆன் வசனங்களுக்கு எதிராக ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்கும் அனைத்து மறைவான விஷயங்களும் தெரியும் என்று கூறுவாரானால் அது அடிப்படையற்ற பொய்யான வார்த்தைகளாகும். குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் அதற்கு எவ்வித ஆதாரமுமில்லை என்பதை உணரவேண்டும்.