இஸ்லாம் புதிய மார்க்கமன்று: -
அன்பிற்கினிய கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே! இஸ்லாம் மார்க்கம் என்பது மேற்கத்திய உலகத்தில் பெரும்பாலோர் எண்ணியிருப்பது போல, அல்லது முஸ்லிம் அல்லாத மாற்று மத சகோதர சகோதரிகள் நினைப்பது போல முஹம்மது நபி (ஸல்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட புதிய மார்க்கமன்று. முதல் இறைத்தூதர் ஆதாம் (அலை) அவர்கள் முதற்கொண்டு நோவா (அலை), ஆப்ரஹாம் (அலை), மோஸஸ் (அலை), தாவிது (அலை), சுலைமான் (அலை), இயேசு (அலை) போன்ற இறைத்தூதர்களின் வரிசையில் வந்த இறைவனின் இறுதித் தூதர் தான் முஹம்மது (ஸல்) அவர்கள் ஆவார்கள்.
மனிதக் கரங்களால் மாசுபட்ட முந்தைய வேதங்கள்: -
இறைவன் முந்தைய இறை தூதர்களுக்கு அருளியது போன்றே முஹம்முது நபி (ஸல்) அவர்களுக்கும் தனது இறுதி வேதத்தைஅருளினான். முந்தைய நபிமார்களுக்கு அனுப்பப்பட்ட வேதங்கள் அனைத்திலும் மனிதக் கரங்கள் ஊடுருவி சுய இலாபங்களுக்காகவும், தம்முடைய சிற்றறிவுக்கு ஏற்றவாறும் மனிதர்கள் இறைவனின் வேத வசனங்களோடு தம் சொந்தக் கற்பனைகளையும் சேர்த்து அவற்றை இறைவனின் வசனங்கள் என்று மக்களிடம் கூறிவரலாயினர். இதையே இறைவனின் இறுதிவேதமான அல்-குர்ஆன் கூறுகிறது: -
அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்! (அல்-குர்ஆன் 2:79)
இறைவனால் பாதுகாக்கப்படும் அல்-குர்ஆன்: -
முந்தைய வேதங்கள் மனிதக் கரங்களினால் மாசுபட்டதினால் இறைவன் அருளிய இறுதிவேதத்தைத் தாமே பாதுகாப்பதாக கூறுகிறான் நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (அல்-குர்ஆன் 15:9)
எதிர்கொள்ள முடியாத இறைவனின் சவால்: -
இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை. (அல்-குர்ஆன் 10:37)
இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: ‘நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!’ என்று. (அல்-குர்ஆன் 10:37-38)
அல்லது ‘இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்’ என்று அவர்கள் கூறுகிறார்கள்? ‘(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்-குர்ஆன் 11:13)
(நபியே! நீர் இதைக் கூறும் போது:) ‘இதனை இவர் இட்டுக் கட்டிச் சொல்கிறார்’ என்று கூறுகிறார்களா? (அதற்கு) நீர் கூறும்: ‘நான் இதனை இட்டுக் கட்டிச் சொல்லியிருந்தால், என் மீதே என் குற்றம் சாரும்; நீங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து நான் நீங்கியவன் ஆவேன்.’ (அல்குர்ஆன் 11:35)
முரண்பாடுகளற்ற அல்-குர்ஆன்: -
இறைவனிடமிருந்து வந்ததால்தான் தன்னுள் முரண்பாடு இல்லை என்று மனித குலத்துக்கு திருக்குர்ஆன் அறைகூவல் விடுகிறது.
அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82 )
இந்தக் கட்டுரையின் நோக்கம்: -
நபி (ஸல்) அவர்களின் காலம் முதற்கொண்டு இன்றளவும் கிறிஸ்தவ மிஷனரிகளால் பரப்பப்படும் முக்கியமான குற்றச்சாட்டு என்னவெனில் அல்-குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்பதாகும். இதற்கு காரணம் என்னவெனில் பைபிளில் காணப்படும் அநேக வரலாற்று நிகழ்ச்சிகள் அல்-குர்ஆனிலும் காணப்படுவதாகும். ஆனால் அந்த வரலாற்று நிகழ்ச்சியைக் கூறும் விதத்தில் அல்-குர்ஆனும் பைபிளும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றது என்பதை மறந்து விடுகின்றனர். அல்லது வேண்டுமென்றே மறைத்து விடுகின்றனர்.
உதாரணமாக, முந்தைய நபிமார்களை இறைவனின் திருப்தியைப் பெற்ற நல்லடியார்கள் என அல்-குர்ஆன் கூறுகிறது.
ஆனால் பைபிள் அந்த இறைத் தூதர்களை இழிவு படுத்தும் முகமாக அவர்களை விபச்சராரம் புரிந்ததாகக் கூறுகிறது.
இந்த கட்டுரையின் நோக்கம் யாரையும் மனதால் நோவினைப் படுத்துவதற்கன்று. மாறாக இந்தக் கட்டுரை, “மேற்கத்திய ஊடகம் மற்றும் கிறிஸ்தவ மிஷனரிகளால் தொடர்ந்து செய்யப்படும் பொய்பிரச்சாரத்தினால் அல்-குர்ஆன் மற்றும் இஸ்லாத்தைப் பற்றித் தவறான எண்ணம் கொண்டுள்ள கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு, அல்-குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதன்று; மாறாக அகில உலகின் இரட்சகனான அல்லாஹ்விடமிருந்து முஹம்மது நபி (ஸ்) அவர்களுக்கு மனித குலம் முழுமைக்கும் நேர்வழிகாட்டுவதற்காக அருளப்பட்ட அருள்மறை என்பதை தெளிவுபடுத்துவதற்காக கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் சமயம் பற்றி ஆராயப்படும் ஒரு ஒப்பாய்வாகும்”.
இந்தக் கட்டுரையில் காணப்படும் பைபிள் ஆதாரங்கள் யாவும் இணைய தளங்களில் கிறிஸ்தவர்களால் வெளியிடப்பட்டிருக்கும் பைபிளிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.
இஸ்லாத்தின் ஆதாரங்கள் யாவும் அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ் எனப்படும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.
இதில் தவறுகள் இருந்தால், தகுந்த ஆதாரஙகளோடு குறிப்பிட்டால் திருத்திக்கொள்வோம் என்பதைப் பணிவுடன் கூறிக்கொள்கிறோம்.
அடுத்து : 1) கிறிஸ்தவம் Vs இஸ்லாம் : பகுதி 2 – பெண்ணுரிமை