Jun 3, 2008

பூமிக்கும், வானத்திற்கும் இடைப்பட்டவைகள்!

நாம் வாழும் பூமிக்கும், நமக்கு மேலே பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயமாகிய வாணவெளிக்கும் இடையில் பல்வேறு வாயுக்களைத் தன்னகத்தே அடங்கிய காற்று மண்டலம் இருக்கிறது. இந்த காற்று மண்டலம் இல்லையென்றால் இந்த பூமியில் எந்தவொரு உயிரினமும் வாழ முடியாது. இந்த காற்று மண்டலம் பல்வேறு அடுக்குகளாக அமைந்துள்ளதாக தற்கால அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சூரியனிலிருந்து இடைவிடாமல் பூமியை நோக்கி வீசிக்கொண்டிருக்கும், மனிதர்களுக்குப் பல்வேறு கேடுகளை விளைவிக்கக் கூடிய அழிவுக் கதிர்களான புற ஊதாக்கதிர்கள் பூமியின் மேற்பரப்பையும் அதில் வசிக்கும் உயிரினங்களையும் தாக்காமல் தடுத்துக்கொண்டிருக்கும் ஓசோன் என்ற வாயு மண்டலமும் இந்த காற்று மண்டலத்தில் தான் உள்ளது.

இதைத் தவிர சூரியனிலிருந்து அவ்வப்போது பூமியை நோக்கி வீசும் படு பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய வெப்பக் கதிர்களையுடைய சூரியப் புயல் பூமியைத் தாக்கா வண்ணம் பூமிக்கு ஒரு கூரையாக அமைந்து பாதுகாத்துக் கொண்டிருக்கும் பூமியின் காந்த மண்டலமும் பூமிக்கும் வாணத்திற்கும் இடையே தான் அமைந்துள்ளது.

இவைகளை சமீபத்தில் தான் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். இவைகளை சாதாரணமாக வெறும் கண்களால் பார்த்தால் பார்க்க முடியாது. ஆனால் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டுள்ள இக்கால கட்டத்தில் நாம் பல்வேறு நவீன கருவிகளின் உதவியுடன் பூமிக்கும் வாண்வெளக்கும் இடையில் இவைகள் இருப்பதை அறிய முடிகிறது.

ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இவைகளைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது என்று கூறினால் நமக்கு ஆச்சரியாகத் தோன்றுகிறதல்லவா!

ஆம். அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் அவனுடைய படைப்பினங்களின் மேல் கொண்டுள்ள அளவற்ற கருணையினால் அவர்களுக்கு நேர்வழி காட்ட அவனருளிய சத்திய திரு வேதத்திலே இந்த பூமிக்கும் வாணத்திற்கும் இடையேயும் அவனுடைய படைப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறான். இறைவன் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதோடு அல்லாமல் இவை இரண்டிற்கும் இடையில் பல வாயுக்களை உள்ளடக்கிய காற்று மண்டலத்தையும், காந்த மண்டலம் மற்றும் நாம் அறியாதவைகளைப் படைத்திருக்கின்றான்.

அல்லாஹ் கூறுகிறான் : -

“அவன் பெரும் பாக்கியம் உடையவன்: வானங்கள், பூமி இவை இரண்டிற்குமிடையே உள்ளவை ஆகியவற்றின் ஆட்சி அவனுக்குடையதே. அவனிடம் தான் (இறுதி) வேளைக்குரிய ஞானமும் இருக்கின்றது. மேலும் அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்” (அல்குர்ஆன்: 43:85)

“நீங்கள் உறுதியுடையவர்களாக இருப்பின் வானங்கள், பூமி இவ்விரண்டிற்கும் இடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்)” (அல்குர்ஆன்: 46:3)

இதைப்போல இன்னும் பல வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான். பார்க்கவும்: 78:7, 26:24, 37:5, 38:10, 38:27, 38:66.

இவைகள், திருமறை ஓர் இறைமறை என்பதற்கு மேலும் ஒரு சான்றாகும்!

அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்!